இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங்கின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தோழர்களே,

2021-ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் துணிவான மற்றும் உறுதியான போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக அது இருந்திருக்கிறது.

தொழிலாளர்களின் பெருகிவரும் மக்கள் திரள் எதிர்ப்புக்கள், அவர்கள் சந்தித்து வரும் பயங்கரமான நிலைமைகள் மீது அவர்களுடைய கோபத்தையும், கடும் அதிருப்தியையும் பிரதிபலிக்கிறது. பொது முடக்கத்தின் விளைவாக பெருமளவில் வேலை இழப்புகள் மற்றும் ஊதியக் குறைப்புகளுக்கு மேல், 2020-ல் தொழிலாளர் விரோதமாகவும், முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாகவும் தொழிலாளர் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றியது. மத்திய அரசு 2021-ல் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் வேகத்தை முடுக்கி விட்டுள்ளது. தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் இரயில்வே தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கங்கள், வங்கி, காப்பீடு, மின்சாரம், தொலைதொடர்பு, பாதுகாப்பு உற்பத்தி, துறைமுகங்கள் மற்றும் பெரிய அளவிலான தொழில்துறை மற்றும் சேவைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்றுபட்டுள்ளனர். தொழிற்சங்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்தளவில் திரண்டெழுந்து ஒரு ஐக்கியப் போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

500 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒரு பொதுவான கோரிக்கைகளையொட்டி ஐக்கியப்பட்டிருப்பது ஒரு பெரிய முன்னேற்றமாகும். விவசாயத்தில் ஏகபோக முதலாளித்துவ மேலாதிக்கத்தை இலக்காகக் கொண்ட தாராளமயமாக்கல் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் உறுதியை அவர்கள் நடத்திய நீண்ட போராட்டம் காட்டுகிறது.

அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறையையும் எல்லா வகையான அரசு பயங்கரவாதத்தையும் மக்கள் எதிர்க்கின்றனர். இந்தியாவின் அங்கமாக இருக்கும் பல்வேறு தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களின் உரிமைகள் உட்பட மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகள் மீறப்படுவதை மக்கள் எதிர்க்கின்றனர்.

பெருந்திரளான தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகள் என்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக தாங்கள் போராடிவருவதை உணர்ந்துள்ளனர். ஏகபோக முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சரவை கொள்கைகளைத் தீர்மானிப்பதை அவர்களால் பார்க்க முடிகிறது. நமது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை விலையாகக் கொடுத்து, அதிகபட்ச லாபத்திற்கான ஏகபோக முதலாளிகளுடைய பேராசையை நிறைவேற்றும் நோக்கில் பாராளுமன்றம் சட்டங்களை இயற்றுகிறது.

ஒரு பொதுவான திட்டத்தையொட்டி அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாளி – விவசாயிகளின் கூட்டணியைப் பாதுகாப்பதும் மேலும் வலுப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற முதலாளி வர்க்க வேலைத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தை ஒட்டியும், மக்களை அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்து, அவர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கின்ற தற்போதைய பாராளுமன்ற அமைப்பிற்கு மாற்று அமைப்பையொட்டியும், நாம் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும்.

தோழர்களே,

முதலாளி வர்க்கத்தின் ஆட்சி முறையானது, அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கு விருப்பமான கட்சியை ஆட்சி அமைக்கத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற மாயையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சமீப ஆண்டுகளில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெருகிவரும் மக்கள் திரள் அதிருப்தியும், அத்துடன் அனைத்திந்திய அளவில் பாஜக-விற்கு ஒரு நம்பகமான மாற்று இல்லாததும், முதலாளி வர்க்க ஆட்சி முறைக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்தி நம்பகமான பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தேவையை நிறைவேற்ற ஆளும் வர்க்கம் முற்பட்டுள்ளது.

தற்போதுள்ள அமைப்பு அனைத்து வர்க்கங்களின் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற மாயையை உயிரோடு வைத்திருப்பதற்காக ஆளும் முதலாளி வர்க்கம் பல்வேறு காலகட்டங்களில் சனநாயக மாற்றுகள் என்று அழைக்கப்படுவனவற்றை ஊக்குவித்து வந்துள்ளது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை வரலாறு வழங்குகிறது. 1977 இல் நெருக்கடி நிலை நீக்கப்பட்டு, இந்திரா காந்தியின் காங்கிரசு கட்சி அரசாங்கத்தை மாற்றுவதற்காக புதிய ஜனதா கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது அத்தகைய ஒரு எடுத்துக்காட்டாகும். சனநாயகம் மீட்கப்பட்டு விட்டதாக ஆளும் வர்க்கம் கூறியது. ஒரு குறுகிய காலத்திற்கு, அவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுடைய தலைவரான சவுத்ரி சரண் சிங்கைக் கூட இந்தியாவின் பிரதமராக ஆக்கினர். ஆனால் அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏகபோக முதலாளிகள் வகுத்த நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வந்தது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை விலையாகக் கொடுத்து, பெரும் முதலாளிகளை வளப்படுத்த பொருளாதாரம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

ஆளும் முதலாளி வர்க்கம், பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற சனநாயகத்தின் நம்பகத்தன்மையை உயர்த்திக் கொள்ளவும், பாஜக-க்கு பல்வேறு மாற்றுகளைச் சோதித்துப் பார்க்கவும் விரும்புகிறது. எப்போதும் போல, மக்களின் போராட்ட ஒற்றுமையை தகர்க்க தேர்தலை பயன்படுத்த அது முயற்சிக்கும். வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆளும் வர்க்கத்தின் இத்தகைய திட்டங்களை முறியடிக்க வேண்டும்.

அனைத்து விவசாயிகளின் நலன்களுக்காக, மாநில சட்டமன்றத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை விவசாயிகள் கூட்டாக முடிவு செய்ய வேண்டும், மேலும் அனைத்து விவசாய சங்கங்களும் அந்த ஒற்றை செயல்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். வெவ்வேறு சங்கங்கள் வெவ்வேறு வழிகளைப் பின்பற்றினால், அது விவசாயிகளின் ஒட்டுமொத்த நலன்களுக்கு எதிரானதாக இருக்கும். அது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட ஒற்றுமையை பலவீனப்படுத்தி அழித்து, ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்யும்.

ஆட்சியாளர்களின் பிளவுபடுத்தும் மற்றும் ஏமாற்றுத் தந்திரங்களை முறியடிக்க, நாம் ஒரு பொதுவான திட்டத்தையொட்டி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசியல் முன்னணியை உருவாக்க வேண்டும். அது தாராளமய, தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதையும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அது இறையாண்மையை மக்கள் கைகளில் கொண்டு சேர்ப்பதாக, அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பில், இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்களின் தேசிய உரிமைகள் உட்பட மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகள் மீறப்படக் கூடாதென்பதைப் பாதுகாப்பதாக அரசும், அரசியல் சட்டமும் இருக்கும். ஏகாதிபத்தியத்திற்கும், ஆக்கிரமிப்புப் போர்கள் மற்றும் சுதந்திர நாடுகளின் உள் விவகாரங்களில் அனைத்து வகையான தலையீடுகளுக்கும் கொள்கை அடிப்படையிலான எதிர்ப்பைக் கொண்டதாக, இந்தியாவின் சர்வதேச உறவுகளை மாற்றியமைப்பதே நமது வேலைத்திட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

தோழர்களே,

நம் நாட்டில் மட்டுமின்றி உலகின் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் பெருந்திரளான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் அதிகாரத்தின் தன்மையிலும் சமூகத்தின் வளர்ச்சியின் போக்கிலும் ஒரு தரமான மாற்றத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள். உலகின் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசுகள், தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்கள் ஒரு புரட்சிகர மாற்றைத் தேடுவதைத் தடுப்பதற்காக, பெருமளவில் பொய்யான தகவல்களைப் பரப்புதல், உயிரியல் போர், அச்சத்தைப் பரப்புதல், முடக்கங்களைக் கொண்டுவருதல் மற்றும் பாராளுமன்ற மாற்றுகளை ஊக்குவிப்பது போன்ற கொடூரமான வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

2022 ஆம் ஆண்டை புரட்சிகர நம்பிக்கையுடன் வரவேற்போம். நாம் எதிர்கொள்ளும் பணிகளைத் துணிவுடனும் உறுதியுடனும் மேற்கொள்வோம். நம் அனைவருக்கும் கதிரவன் ஒளிரும் நாள் வெகு தொலைவில் இல்லை. முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து அரசியல் அதிகாரத்தை நம் கையில் எடுக்கும்போது தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கதிரவன் ஒளியூட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இன்குலாப் ஜிந்தாபாத்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *