சென்னையில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

பாக்ஸ்கான் நிறுனத்தில் வேலை செய்து வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களுக்குக் கொடுக்கப்படும் மோசமான உணவு, உறைவிடம் மற்றும் பிற பிரச்சனைகளால் உந்தப்பட்டு நெடுஞ்சாலையில் இறங்கி போராடினார்கள். அரசின் அடக்குமுறையையும் அச்சுறுத்தல்களையும் மீறி, பெரும் எண்ணிக்கையில் பெண்கள் முன்னின்று போராடிய இந்தத் தொழிலாளர்களுடைய போராட்டம் டிசம்பர் 17 மாலையில் தொடங்கி, சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையை 18 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தை முடக்கியது. சாலையின் இரு பக்கங்களிலும் பல கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு வாகனங்கள் தடைபட்டு நின்றன.

தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, மிகவும் குறைவான ஊதியத்தில் கடுமையாகச் சுரண்டப்படுவதோடு, தொழிலாளர்கள் மிகவும் நெருக்கடியான அறைகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் அடைத்து வைத்து தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் மோசமான தரமற்ற உணவு கொடுக்கப்படுகிறது.

மோசமான உணவின் காரணமாக நூற்றுக் கணக்கான தொழிலாளர்களுக்கு டிசம்பர் 17 அன்று மாலையில் வாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. மோசமாக பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சிலர் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களுடைய நிலை குறித்து கவலையடைந்த பிற தொழிலாளர்கள் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினர்.

நன்றி, TOI

சிரிபெரும்புதூர் பகுதியில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், தாய்வான் நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு பல நாடுகளிலும் செயல்பட்டு வரும் பெரிய பன்னாட்டு நிறுவனமாகும். இது ஐ-போன் மற்றும் பிற கைபேசிகளையும், அவற்றிற்கான பாகங்களையும் உற்பத்தி செய்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை – பெருமளவில் பெண்களை வேலைக்கு வைத்திருக்கும் இந்த நிறுவனம் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் வைத்து, கடுமையாகச் சுரண்டி கொள்ளை இலாபம் அடித்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தரமற்ற உணவின் காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நெடுஞ்சாலையில் இறங்கிப் போராடினர். அவர்கள் மீது காவல் துறையும், அரசு அதிகாரிகளும், ஆளும் வர்க்கத்தின் அரசியல்வாதிகளும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இருந்துங்கூட விடாப்பிடியாக நெடுஞ்சாலையை விட்டு விலகாமல் தொழிலாளர்கள் 18-20 மணி நேரம் தொடர்ந்து போராடினர். “பாக்ஸ்கான் ஒழிக! தொழிலாளர்களைச் சுரண்டும் பாக்ஸ்கான் நிறுவனத்தை இழுத்து மூடு! பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?”, என்பன போன்ற முழக்கங்களைத் தொழிலாளர்கள் தொடர்ந்து எழுப்பினர்.

அரசு அதிகாரிகளும் காவல்துறையும் வலுக்கட்டாயமாகவும், தாக்குதல் நடத்தியும் தொழிலாளர்களை அகற்றி ஒரு வழியாகப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போல பேசி வரும் தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் தமிழகப் பெண்களும் இளைஞர்களும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்தும், வாழ்க்கைக்கே உத்திரவாதமில்லாமல் ஆடு மாடுகளைப் போல நடத்தப்படுவது குறித்தும் பாக்ஸ்கான் நிறுவனத்தைக் கேள்வி கேட்காதது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மிகவும் மனிதாபிமானற்ற சூழ்நிலையில் தொழிலாளர்களை வைத்திருப்பதற்கும், சட்டங்களுக்குப் புறம்பாக நிரந்தரமற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்து கடுமையாகச் சுரண்டி வருவதற்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் உயர்அதிகாரிகளை கேள்வி எழுப்பவோ, கைது செய்யவோ முன்வராத தமிழக அரசும், காவல் துறையும், வேறு வழியின்றி சாலையில் இறங்கிப் போராடியதற்காக நூற்றுக் கணக்கான தொழிலாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாக வந்த பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் தோழர் வளர்மதி உட்பட பலரையும் கைது செய்து அவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களைத் துன்புறுத்தி வருகிறது. போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடைய வேலையும் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. போராடிய தொழிலாளர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளை பின்வாங்குவதோடு அனைவருடைய வேலைகளையும் நிரந்தரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலாளித்துவ அரசியல் அமைப்பில் கட்சிகள் ஆளும் கட்சி – எதிர்க்கட்சியென இடம் மாறலாம், ஆனால் மாறாமல் நீடிப்பது முதலாளித்துவச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தான் என்பதை இந்த ஆர்பாட்டம் மீண்டும் உறுதி செய்கிறது.

ஈவுஇரக்கமின்றி தொழிலாளர்களைச் சுரண்டிவரும் பாக்ஸ்கான் நிறுவனத்தையும், அதற்கு ஆதரவாக செயல்படும் அரசாங்கத்தையும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, தங்களுடைய உரிமைகளைக் கோரியும், நியாயமான வேலை – தங்குமிட வசதிகள் கோரியும் வீதியில் இறங்கிப் போராடிய பாக்ஸ்கான் தொழிலாளர்களை போற்றி அவர்களுக்கு ஆதரவளிக்கிறது. தங்களுடைய ஒற்றுமையைக் கட்டி வலுப்படுத்தி, அனைத்து உரிமைகளுக்கான போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *