பாபரி மசூதி இடிக்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்த நினைவு நாளில், எதிர்ப்புக் கூட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்ததையொட்டி 2021 டிசம்பர் 6 அன்று, பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புக்களும் கூட்டாக பாராளுமன்றத்தில் ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தினர். நம்மைப் பிளவுபடுத்தும் ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக நமது மக்களின் ஒற்றுமையை இந்தக் கூட்டம் உயர்த்திப் பிடித்தது. நம் மக்களுக்கு எதிராக இத்தகைய கொடூரமான குற்றங்களை நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்கவும், நியாயம் கேட்கவும் போராட்டத்தைத் தொடர வேண்டுமென்ற தன் உறுதியை அது வெளியிட்டது.

மேடையை அலங்கரித்த முக்கிய பலகையில் “பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரும் போராட்டம் தொடர்கிறது!”, “அமைதியையும் ஒற்றுமையையும் உறுதி செய்ய இதுவே ஒரே வழி!”, “ஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதுமான தாக்குதல்!” ஆகிய முழக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. இவை எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் உணர்வை சுருக்கமாகக் கூறுகின்றன. “அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறையும், அரசு பயங்கரவாதமும் ஒழிக!”, “நம் மக்களின் ஒற்றுமையைக் காப்போம்!”, “குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கு!” போன்ற வாசகங்கள் அடங்கிய முழக்கத் தட்டிகள் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன.

மக்களாட்சி இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி, இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, சிபிஐ (எம்எல்) – புதிய பாட்டாளி,  சனநாயகத்திற்கான குடிமக்கள், பியுசிஎல் (தில்லி), ஹிந்த் நௌஜவான் ஏக்தா சபா, ஜமாத்– இ – இஸ்லாமிய ஹிந்த், லோக் பக்ஷா, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், என்.சி.எச்.ஆர்.ஓ (NCHRO), பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, புரோகாமி மகிளா சங்கதன், சீக்கிய மன்றம், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு, ஐக்கிய முஸ்லீம்கள் முன்னணி, அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இ முஷாவரத், அனைத்திந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில், ஏபிசிஆர் APCR (தில்லி), தலித் குரல் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகிய அமைப்புகள் கூட்டாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஏஐஎப்டியு AIFTU, இன்குலாபி மஸ்தூர் கேந்திரா மற்றும் மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பங்கேற்ற பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றினர்.

29 ஆண்டுகளுக்கு முன்பு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, ​​இந்திய மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கமும், அதன் அரசியல் கட்சிகளான காங்கிரசு, பாஜக போன்றன இழைத்த இந்த கொடூரமான குற்றத்தை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி வன்மையாகக் கண்டித்தது. அப்போதிலிருந்தே, இந்த வரலாற்று நினைவுச் சின்னத்தை இடித்துத் தகர்த்த குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சிஜிபிஐ (CGPI) தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

பாபர் மசூதி தகர்ப்பை அப்போதிருந்த காங்கிரசு தலைமையிலான மத்திய அரசும், பாஜக தலைமையிலான உ.பி. அரசும் இணைந்து மேற்பார்வை செய்ததை நமது கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. இந்திய அரசை கட்டுப்படுத்தி, ஆதிக்கம் செலுத்தும் ஏகபோக முதலாளித்துவக் குடும்பங்கள், இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தவும், தாராளமய தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையை அழிக்கவும், பாபரி மசூதியை இடித்துத் தகர்ப்பதற்கும் ஏற்பாடு செய்தன. பாபரி மசூதி தகர்க்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து 1992-1993 இல் மும்பையில் நடைபெற்ற வகுப்புவாத படுகொலைகளையும் ஏற்பாடு செய்த காங்கிரசு, பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் தான் குற்றவாளிகள். ஆனால், இத்தனை வருடங்களாகியும் அவர்களில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இழைக்கப்பட்ட குற்றங்களின் பின்னணியில் ஆளும் வர்க்கம் இருந்ததையும், இந்தக் கட்சிகள் வெறுமனே ஆளும் வர்க்கத்தின் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தவைதான் என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. நமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றத்தை மறைக்கவும், குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யவும் செயலாக்கத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை என இந்திய அரசின் அனைத்து அமைப்புகளும் கூட்டாக வேலை செய்தன.

29 ஆண்டுகளுக்கு முன்பு, பாபர் மசூதி தகர்க்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்த வகுப்புவாதப் படுகொலைகளும், அரசியல் குற்றமயமாக ஆக்கப்பட்டு வருவதையும், அரசியல் அதிகாரத்தில் இருந்து மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதையும் பிரதிபலிக்கிறது என்பதை நமது கட்சி சுட்டிக்காட்டியது. அரசியல் குற்றமயமாக ஆக்கப்பட்டு வருவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், மக்கள் ஓரங்கட்டப்படுவதற்கு முடிவு கட்டுவதற்கும், தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களின் கைகளில் வைப்பதற்கும் அரசியல் அமைப்பிலும், வழிமுறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம்.

வகுப்புவாதத்திற்கும் வகுப்புவாத வன்முறைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட கட்சி காரணம் அல்ல என்பதை கம்யூனிஸ்டு கெதர் கட்சி மக்களுக்கு விளக்கி வருகிறது. ஆளும் வர்க்கமே அதற்குக் காரணமாகும். அரசாங்கத்தை நடத்தும் கட்சி, ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக, ஆளும் வர்க்கத்தால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு நிர்வாகக் குழு மட்டுமே ஆகும்.

எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதும், இனப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்துவதும், நமது ஆட்சியாளர்களுக்கு விருப்பமான ஆட்சி முறையாகும். அதன் நோக்கமானது, நமது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான அனைத்து பக்கத் தாக்குதல்களுக்கும் எதிரான நமது மக்களின் ஒற்றுமையைத் தகர்ப்பதும், ஏகபோக முதலாளிகளின் தாராளமய, தனியார்மயமாக்கும் நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதும் ஆகும்.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தாராளமய, தனியார்மயமாக்கல் என்ற ஏகபோக முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரித்து வைத்துப் பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆளும் வர்க்கத்திற்கும், பாஜக மற்றும் காங்கிரசு கட்சி உட்பட அதன் நம்பிக்கைக்குரிய கட்சிகளுக்கு எதிராகவும் கொண்டு செல்லப்பட வேண்டும். உழைக்கும் பெரும்பான்மை மக்களின் மீது உள்ள, முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாக்கும் அரசுக்கு எதிராக அது இயக்கப்பட வேண்டும்.

மத அடையாளத்தின் அடிப்படையில் குறிவைக்கப்படும் மக்கள், அவர்களுடைய வாழ்க்கையையும், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களை அணிதிரட்டிக் கொள்ள எல்லா உரிமையும் உண்டு. அவர்களை வகுப்புவாதிகள் என்று அழைப்பது என்பது, குற்றம் இழைப்பவர்களைக் குறை கூறாமல் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவதாகும்.

வகுப்புவாத வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தை, முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து அதனிடத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் நடத்தப்பட வேண்டும். தொழிலாளர்களும் விவசாயிகளும் முடிவெடுப்பவர்களாகவும், சமுதாயத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்களாகவும் இருக்கும் ஒரு புதிய அரசை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அப்படிப்பட்டதொரு அரசு, சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பொதுவான மற்றும் மீற முடியாத உரிமையாக கருத்துரிமையை மதிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் இருக்கும். யாருடைய கருத்துரிமையையோ அல்லது வேறு எந்த மனித உரிமையையோ மீறும் எந்தவொரு தனிநபரும், குழுவும் அல்லது கட்சியும் உடனடியாக விசாரிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவதை அத்தகைய அரசு உறுதி செய்யும்.

வகுப்புவாதக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரும், அரசு நிர்வாகத்தில் எந்தப் பதவியில் இருந்தாலும், மக்களின் வாழ்வுரிமை மற்றும் மனசாட்சிக்கான உரிமையைப் பாதுகாக்கத் தவறியதற்காக பொறுப்பேற்கச் செய்து, தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைத்து பேச்சாளர்களும் சுட்டிக்காட்டினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நமது மக்களின் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பியதோடு, அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறையையும், அரசு பயங்கரவாதத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தைத் தொடர்வதென்ற உறுதியோடு கூட்டம் நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *