விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான பாதை

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, டிசம்பர் 13, 2021

தில்லியின் எல்லைகளில் ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மூன்று விவசாயி விரோதச் சட்டங்கள் நீக்கப்பட்டதையும், விவசாயிகளுடைய மற்ற கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எழுத்து பூர்வமாக அளித்த உறுதிமொழியையும் தொடர்ந்து, தில்லியின் எல்லைகளிலிருந்து திரும்பிச் செல்வதென ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) டிசம்பர் 9 அன்று முடிவெடுத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எப்படி உத்தரவாதம் அளிக்கலாம் என்பதை பரிந்துரை செய்ய ஒரு குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்வதாக அரசு உறுதியளிக்கிறது.

மக்கள் கோரிக்கையை சமாளிக்க ஒரு குழுவை அமைப்பது என்பது, முன்னாள் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஆளும் வர்க்கத்தின் பழைய தந்திரம் என்பதை அரசியல் விழிப்புணர்வுள்ள விவசாயிகள் நன்கு அறிவார்கள். இது, ஆளும் வர்க்கம் போராட்டக்காரர்களை சோர்வடையச் செய்து, அவர்களின் சில தலைவர்களை தங்களோடு இணைத்துக் கொண்டு, மக்களின் போராட்ட ஒற்றுமையை உடைக்கும் ஒரு முறையாகும். அத்தகைய குழுவில் சில விவசாய சங்கத் தலைவர்களைச் சேர்ப்பதன் மூலம் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று பொருளல்ல.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சனநாயகம் என்று அழைக்கப்படும் இந்தியக் குடியரசு, டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட ஒரு பூதாகரமான பணக்கார சிறுபான்மையினருக்கு சேவை செய்து வருகிறது. இந்த ஏகபோக குடும்பங்கள் தான் ஒவ்வொரு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலையும் அமைக்கின்றன. மத்தியிலும், மாநிலங்களிலும் அரசாங்கத்தை நடத்துவதற்கு பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு கட்சியும் முதலாளி வர்க்கத்தை வளப்படுத்தவும், இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கவும் உழைத்து வருகின்றன.

அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியை நமது நாட்டின் விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். தடியடிகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை எதிர்கொண்டு, கொளுத்தும் கோடை வெயிலையும், கடும் குளிரையும், கொட்டும் மழையையும் தாங்கிக்கொண்டு, இவ்வளவு நீண்ட வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி விட்டு, அவர்கள் தங்கள் தலைவிதியை அரசாங்கத்திடமோ அல்லது அதன் குழுக்களிடமோ விட்டுவிட முடியாது. எதிர்கால நடவடிக்கையைத் தீர்மானிக்க, இதுவரை நடந்த போராட்டம் எதைச் சாதித்தது என்றும், எதைச் சாதிக்கவில்லை என்றும் சரியாகத் தொகுத்துப் பார்ப்பது அவசியமாகும்.

ஒரு வருடத்திற்கும் மேலாக தில்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்திய பிறகு, முன்பு இருந்த அதே பிரச்சினைகளை எதிர்கொள்ள இப்போது விவசாயிகள் தத்தம் கிராமங்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். முதலாளித்துவ நிறுவனங்களால் வழங்கப்படும் இடுபொருட்களின் விலை உயர்வுகளை அவர்கள் தொடர்ந்து சந்தித்து வருவார்கள். இயற்கையின் நிச்சயமற்ற தன்மையையும், பற்றாக்குறையான, நம்பகத்தன்மையற்ற நீர்ப்பாசன விநியோகத்தை அவர்கள் தொடர்ந்து எதிர்கொள்வார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அழிவுகரமான குறைந்த விலையில் விற்க வேண்டிய கட்டாயம் தொடரும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவது தொடரும்.

விவசாயம் தொடர்பான அரசின் கொள்கையின் போக்கிலும் நோக்கத்திலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. தனியார் ஏகபோக நிறுவனங்களுக்கான இடத்தை விரிவுபடுத்தும் வகையில், பொது கொள்முதல் மற்றும் பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

ஓராண்டு நீடித்த போராட்டத்தால் கிடைத்திருக்கும் பலன், உழைக்கும் மக்களின் அரசியல் விழிப்புணர்வு உயர்ந்துள்ளது. தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்களுடைய ஒரே எதிரியான பெரும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவதை உணர்ந்துள்ளனர். தாராளமய, தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக ஒற்றுமை அதிகரித்து வருகிறது. மேலும் மேலும் அதிகமான தொழிலாளர்களும், விவசாயிகளும் அரசியல் அமைப்பு மற்றும் சனநாயகம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். முடிவெடுக்கும் அதிகாரம் மக்கள் கைகளில் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து வருகின்றனர். பெரும் தொழில் நிறுவனங்களால் எடுக்கப்படும் முடிவுகள், அமைச்சரவையால் செயல்படுத்தப்படுகின்றன. பெரும் தொழில் நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளை சட்டமாக மாற்றும் ரப்பர் ஸ்டாம்பாக பாராளுமன்றம் செயல்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக, இந்த அரசியல் அமைப்பு அதிக அளவில் மதிப்பிழந்து, வெட்ட வெளிச்சமாகி வருகிறது. 2016-ல் பணமதிப்பு நீக்கம், 2019 நவம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2020-ல் திடீரென கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அவர்கள் கிராமங்களுக்கு இடம் பெயர நேரிட்டது மூலம் தொழிலாளர்களைப் பற்றி அக்கறையற்ற மனப்பான்மை வெளிப்பட்டது, பொது முடக்கத்திற்கு மத்தியில் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்கள் கொண்டு வரப்பட்டது – என இவை அனைத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பார்வையில் அமைப்பை மதிப்பிழக்கச் செய்துள்ளன.

பாராளுமன்ற சனநாயகம் முற்றிலும் மதிப்பிழந்து விடுவதையும், தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒரு புரட்சிகர மாற்றை நோக்கித் திரும்புவதையும் ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. அரசாங்கத்தை நடத்துவதில் அவ்வப்போது இடம் மாறும் இரண்டு கட்சிகள் அல்லது கூட்டணிகளுடன் நாடாளுமன்ற அமைப்பு முதலாளி வர்க்கத்திற்கு சிறப்பாக செயல்படுகிறது. உழைக்கும் மக்களை ஏமாற்றக்கூடிய நம்பகமான பாராளுமன்ற எதிர்க்கட்சி இல்லாததை ஆளும் வர்க்கம் உணர்ந்திருக்கிறது. தில்லியின் எல்லைகளுக்கு விவசாயிகள் வந்ததிலிருந்து, பாஜக-வுக்கு மாற்றாக நம்பகமான நாடாளுமன்ற எதிர்க் கட்சியை வளர்ப்பதற்கான தங்கள் திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆட்சியாளர்கள் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்த முயன்றனர். அதை நிறைவேற்றிக் கொண்ட நிலையில், சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, ஒரு ஒப்பந்தத்தை போட்டு, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தனர். இந்த ஒப்பந்தந்தைத்தான் ஆளும் வர்க்கமும் அதன் அரசியல்வாதிகளும் “சனநாயகத்தின் வெற்றி” என்று சித்தரிக்கின்றனர்.

1970 களில் “சனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான” இயக்கத்தின் அனுபவம் மற்றும் சமீபத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் உட்பட வரலாற்று அனுபவம், தற்போதுள்ள அமைப்பில் தேர்தல் மூலம் கொண்டு வரப்படும் அதிகாரத்திலுள்ள கட்சியின் மாற்றம், உழைக்கும் மக்களின் நிலைமைகளில் தரமான எந்த மாற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. தேர்தல் மூலம் ஒரு கட்சியை மாற்றி வேறொரு கட்சியைக் கொண்டு வந்தால், தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று தொழிலாளர்களும் விவசாயிகளும் எதிர்பார்ப்பது பயனற்றதாகும்.

விவசாயிகளின் போராட்டம், பாதுகாப்பான வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தங்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளைத் தீர்மானிப்பதில் தங்களுடைய கருத்திற்கும் ஒரு பங்கு இருக்க வேண்டுமென்ற மக்களுடைய போராட்டத்தின் ஒரு அங்கமாகும் இது. உழைக்கும் பெரும்பான்மை மக்களை முடிவெடுப்பவர்களாக மாற்றும் வகையில், தற்போதுள்ள அமைப்பையும் அரசியல் செயல்முறையையும் மாற்றும் கண்ணோட்டத்தோடும், நோக்கத்துடனும் இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியின் கீழ் மட்டுமே ஏகபோக முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக,  விவசாயம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் மனித தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாற்றியமைக்கப்படும்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் உடனடிப் பணியானது, வகுப்புவாத அடிப்படையிலோ அல்லது தேர்தல் போட்டி மூலமாகவோ அவர்களைப் பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளிலிருந்தும் தங்களுடைய போராட்ட ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொள்வதாகும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசியல் ஒற்றுமையை கட்டியெழுப்புவதும், வலுப்படுத்துவதும், தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதற்கும், பொருளாதாரத்தை சோசலிசத்தை நோக்கி மாற்றியமைப்பதற்கும் அவர்களது சொந்த திட்டத்தையொட்டி தொழிலாளர்கள் – விவசாயிகளுடைய அரசியல் ஒற்றுமையை கட்டி வலுப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *