நாகாலாந்தில் கிராம மக்களை ஆயுதப்படையினர் படுகொலை செய்ததை கண்டனம் செய்வோம்!

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்!

காலாந்து – மான் மாவட்டத்தில் டிசம்பர் 4 அன்று, மத்திய ஆயுதப் படைகளால் 14 கிராம மக்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்கள் கிராமத்திற்கு ஒரு டிரக்கில் திரும்பிக் கொண்டிருந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஆயுதப் படைகள் தாக்கினர். இதன் விளைவாக ஆறு தொழிலாளர்கள் இறந்தனர். இதை “கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை” என்று நியாயப்படுத்துவதற்காக, இராணுவத்தினர் இறந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் உடலுக்கு கிளர்ச்சியாளர்களின் சீருடையை அணிவிக்க முயன்றனர். இந்த கொடூரமான படுகொலையைக் கண்டித்து இராணுவ முகாமுக்கு வெளியே மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, ​​அவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதன் விளைவாக மேலும் எட்டு கிராம மக்கள் கொல்லப்பட்டனர்.

படுகொலைக்கு எதிராக நாகா மாணவர்கள்

உளவுத்துறையின் தவறான தகவல் காரணமாக அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆயுதப் படைகள் லாரியை நிறுத்தச் சொன்னதாகவும், அது நிறுத்தாமல் சென்றதால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த கட்டுக் கதையை நேரில் கண்ட சாட்சிகள் மறுத்துள்ளனர். மத்திய ஆயுதப்படைகள் செய்த குற்றத்தை மூடிமறைக்கும் அப்பட்டமான முயற்சியாகும் இது.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒழிக்குமாறு கோரும் அருணாச்சலப் பிரதேச மாணவர்கள்

இந்தக் கொலைகளைத் தொடர்ந்து, நாகாலாந்து மக்கள் மீண்டும் தெருக்களில் இறங்கி, அப்பாவி பொது மக்களைக் கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப் பெறக் கோரியும் போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை ஒட்டி நாகாலாந்து மக்களின் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்துள்ளன. இந்திய மக்களின் காலனிய எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 1942-ல் பிரிட்டிஷ் காலனியர்கள் இயற்றிய சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இழிவான சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாகா மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ ஆட்சியைத் திணிக்கவும், தேசிய உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தை நசுக்கவும் 1958 ஆம் ஆண்டில், நேரு அரசாங்கம், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (1958) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அப்போதிருந்தே, நாகா மக்கள் ஆயுதப்படைகளின் காலடியில் நசுக்கப்பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக அனைத்து அசாமிய மாணவர் சங்கங்கள் போராட்டம்

இந்த இழிவான சட்டம் தற்போது நாகாலாந்து, ஜம்மு – காஷ்மீர், மணிப்பூர், அசாம், மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அமலில் உள்ளது. இது அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற, மிருகத்தனமான இராணுவ ஆட்சியை சட்டப்பூர்வமாக்குகிறது. போலி எதிர் மோதல்களில் மக்கள் வழக்கமாக கொல்லப்பட்டு அவர்கள், “பயங்கரவாதிகளாக” அறிவிக்கப்படுகிறார்கள். பெண்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்யப்படுகிறார்கள். கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தப் படுகிறார்கள். மக்களின் வீடுகளும், சொத்துக்களும் – உண்மையில் முழு கிராமங்களும் – அவ்வப்போது தரைமட்டமாக்கப்படுகின்றன.

மணிப்பூரில் சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்டவர்களுடைய பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சங்கம் (EEVFAM) 2012 இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது, அது மணிப்பூரில் ஆயுதப் படைகள் நடத்திய 1528 சட்டவிரோதக் கொலைகளை ஆவணப்படுத்தியது. இதுவரை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் இந்தக் கொடிய குற்றங்களுக்காக விசாரிக்கப்படவில்லை. அவர்கள் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு அனைத்து மணிப்பூர் மாணவர் சங்கம் எதிர்ப்பு

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அறிவிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும், இராணுவ ஆட்சியானது அங்குள்ள குடிமை ஆட்சியை திறம்பட மாற்றியுள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு நடைமுறையில் எந்த அதிகாரமும் இல்லை, அவை இராணுவப் படைகளுக்கு அடிபணிந்து செயல்பட வேண்டியுள்ளன. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும், இராணுவ ஆட்சியும் மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஏகபோக குடும்பங்களுக்கு சேவை செய்கின்றன, இந்திய ஒன்றியத்திலுள்ள தேசங்கள் மற்றும் தேசிய இனங்கள் மீது பகற் கொள்ளையடிக்கும் ஆட்சியைத் திணிப்பதற்கு அவை உதவுகின்றன. பல்வேறு தேசங்கள் மற்றும் மக்களின் தேசிய உரிமைகளுக்கான போராட்டத்தை நசுக்குவதற்கு இது ஒரு கருவியாகும்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கோரும் போதெல்லாம், மத்திய அரசு அதை நிராகரிக்கிறது. இந்தச் சட்டத்தை இரத்து செய்தால், அது “ஆயுதப் படைகளின் மன உறுதியை” எதிர்மறையாக பாதிக்கும் என்பதே அவர்கள் கூறும் காரணமாகும். இந்தப் பகுதிகளில் ஆயுதப் படைகள் எதிரி சக்திகளுக்கு எதிராகக் கடினமான போரில் ஈடுபட்டிருப்பதாகவும், எனவே இந்தச் சட்டம் நியாயமானதெனவும் எண்ணம் உருவாக்கப்படுகிறது, ஆனால் உண்மையில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமானது, மக்களின் தேசிய உரிமைகளைப் பறிப்பதற்காக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது.

நாகாலாந்து, மணிப்பூர், காஷ்மீர் மற்றும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் உள்ள பிற இடங்களில் இந்திய அரசு நடத்தும் பயங்கரவாத ஆட்சிக்கு எந்த நியாயமும் இல்லை. இந்தக் காலனிய கால, சனநாயக விரோதச் சட்டம் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அதை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும். அதற்கு, அனைத்து முற்போக்கு மற்றும் சனநாயக சக்திகள் முழு மனதுடன் ஆதரவளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *