உண்மையான நோக்கங்களும், பொய்யான பரப்புரைகளும் அம்பலம்
நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பு நீக்கத்தை நியாயப்படுத்துவதற்காக கூறப்பட்ட பொய்யான காரணங்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகு, முற்றிலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. அந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கங்களும் தெளிவாகி உள்ளன.
ஒரே அடியாக, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 86% (அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும்) நீக்கப்படுவதாக 2016 நவம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு அறிவிக்கப்பட்டது. மக்கள் தங்களிடம் இருந்த இந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கட்டுவதற்கு 50 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
வங்கிகளில் இருந்து ஒருவர் எடுக்கக்கூடிய பணத்தின் மீது கடுமையான வரம்புகள் விதிக்கப்பட்டன. புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், பிற நோட்டுகளும் காலந்தாழ்த்தி, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் வெளியிடப்பட்டன. கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் தங்களுடைய பழைய நோட்டுகளை வங்கிகளில் கட்டுவதற்கும் அல்லது அவசரத் தேவைகளுக்காக சிறிய தொகையைப் பெறுவதற்கும் நீண்ட வரிசையில் பல நாட்கள் நிற்க வேண்டியிருந்தது. பணம் வழங்கும் இயந்திரங்களில் (ஏடிஎம்கள்) பண நோட்டுகள் தீர்ந்துவிட்டன. இந்த நிலைமையை சமாளிக்க, மக்களின் கடுங்கோபத்தை சந்தித்தவாறு, வங்கி ஊழியர்கள் மீக நீண்ட நேரம் உழைத்தனர்.
ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்றும் அதிகரித்து வரும் ஏழை – பணக்காரன் என்ற சமத்துவமற்ற நிலைக்கு எதிரான அறப் போராட்டமாகவும், பணமதிப்பு நீக்கத்தை பிரதமர் மோடி நியாயப்படுத்தி பேசினார். ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வந்து, அதை ஏழை மற்றும் கடின உழைப்பாளிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார். இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ய வெளிநாட்டு சக்திகளால் பயன்படுத்தப்படும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதே பண மதிப்பு நீக்கத்தின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
சம்பளம் கொடுக்க கைகளில் பணம் இல்லாததால், இலட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் அப்போது வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் பண நோட்டுப் புழக்கத்தைச் சார்ந்திருந்த பல நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்பட்டன. அவசர மருத்துவ சேவைகளுக்கும் மருந்துகளுக்கும பணம் செலுத்த முடியாமல் மக்கள் பலர் இறந்தனர். நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் விதைப்புப் பருவத்திற்குத் தேவையான விவசாய இடுபொருட்களை சரியான நேரத்தில் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். தங்கள் பிழைப்புக்காக, பெரும்பான்மையான மக்கள் பண பரிவர்த்தனைகளை தொடர்ந்து சார்ந்திருக்கும் ஒரு சமூகத்தில், பண மதிப்பு நீக்கத்தின் உடனடிப் பொருளாதார தாக்கம் முற்றிலும் பேரழிவை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை, மிகப்பெரிய இந்திய ஏகபோக முதலாளித்துவ குடும்பங்களான – டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள் மற்றும் பிறரால் வரவேற்கப்பட்டது. இந்த ஏகபோக முதலாளிகள் தங்களுடைய பேரரசுகளை விரிவுபடுத்துவதற்கும், சொத்துக்களைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்வதற்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் சேவைகளை ஒழித்துக்கட்டுவதன் மூலமாகவும், விவசாயிகளின் அழிவுகளின் மூலமும் பெரும் வாய்ப்புகளைக் கண்டனர். திடீரென மக்கள் கைகளில் இருந்த பண நோட்டுக்களைப் பறித்து, கோடிக்கணக்கான மக்களை மின்னணு சார்ந்த (டிஜிட்டல்) பொருளாதாரத்தில் வலுக் கட்டாயமாக நுழைப்பது, பெரும் இலாபம் ஈட்டுவதற்கான விரைவான வழி என்று கண்டறிந்தனர். நவம்பர் 8, 2016க்குப் பிறகு ஒரு சில நாட்களுக்குள், மிகப் பெரிய ஏகபோக முதலாளிகள் மின்னணு சார்ந்த (டிஜிட்டல்) பண பரிவர்த்தனை வங்கிகளை விரைவாக அமைத்தனர்.
2016 ஆம் ஆண்டு முதல், நாடு முழுவதும் ஏராளமான மின்னணு சார்ந்த (டிஜிட்டல்) பண பரிவர்த்தனை நிறுவனங்களும் பரிவர்த்தனை வங்கிகளும் செயல்படத் தொடங்கியுள்ளன. உணவு, ஆடைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், மருந்துகள், புத்தகங்கள், போன்றன உட்பட அனைத்து வகையான பொருட்களுக்கும் மற்றும் மருத்துவ ஆலோசனை, கல்வி போன்ற பல அத்தியாவசிய சேவைகளுக்கும், வங்கி மற்றும் காப்பீடு, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் மின்னணு சார்ந்த (டிஜிட்டல்) பரிவர்த்தனைகளை செய்யுமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
மிகப்பெரிய இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளால் உந்தித் தள்ளப்பட்ட “நிதித்துறை சீர்திருத்தங்கள்” என்ற நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கு பண மதிப்பு நீக்கம் ஒரு வழிமுறையாக செயல்பட்டது என்பதை கடந்த ஐந்தாண்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மக்கள் தங்களுடைய எல்லா சேமிப்புகளை வங்கிகளில் போட்டு வைக்கவும், ரொக்கப் பணத்திலிருந்து மின்னணு சார்ந்த (டிஜிட்டல்) பரிவர்த்தனைகளுக்குச் மாறவும் கட்டாயப்படுத்தப்பட்டது, ஏகபோக நிதி மூலதனம், மக்களை மேலும் திறம்படவும் விரிவாகவும் கொள்ளையடிக்க உதவியது.
பண மதிப்பு நீக்கத்தின், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் நீண்டகால தாக்கமும், ஜிஎஸ்டியின் விளைவும் கூட்டாக வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே விரிவடையும் இடைவெளியிலும் காணலாம். 2020ல் கொரோனா நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே பொருளாதார வளர்ச்சி, மந்தநிலையை அடைந்து வருவது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆக, பண மதிப்பு நீக்கமானது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கடுமையான துன்பங்களுக்கு வழிவகுத்த அதே நேரத்தில் மிகப் பெரிய ஏகபோக முதலாளிகள் பல மடங்கு பணக்காரர்களாக வளர்வதற்கு வழி வகுத்தது என்பது தெளிவாகிறது.
பண மதிப்பு நீக்கம், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக கொண்டு வரப்பட்டது என்ற கூற்று இன்று முழுப் பொய்யாக அம்பலமாகியுள்ளது.
அரசாங்கம் மற்றும் அரசின் உயர்மட்டத்தில் தொடங்கி ஊழல் என்பது அதிகரித்து மட்டுமே இருப்பது, இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. பல பெரிய முதலாளித்துவ கடனாளிகள் திருப்பிக் கட்ட மறுக்கும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய அல்லது “சரிக் கட்டுமாறு” பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இன்று மிகப்பெரிய ஊழல்களில் இது ஒன்றாகவும், மக்கள் பணத்தை குற்றவியலான முறையில் கொள்ளையடிப்பதாகவும் உள்ளது. இது முதலாளித்துவ கடனாளிகள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் மட்டங்களுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது.
மிகப்பெரிய தனியார் முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுவதற்காக “பணமாக்கல்” என்ற பெயரில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொதுச் சொத்துகள் கொள்ளை, டாடா குழுமத்திற்கு அடிமட்ட விலையில் ஏர் இந்தியாவை விற்பது உட்பட ரயில்வே, தொலைதொடர்பு, மின்சாரம், பாதுகாப்பு, போன்ற முக்கிய பொதுத்துறை நிறுவனங்களை முழுவதுமாக விற்பனை செய்தல் – இவை அனைத்தும் அரசின் உச்ச மட்டத்தில் திட்டமிடப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்ட ஊழல் மற்றும் மக்களை கொள்ளையடித்தலின் மிக அப்பட்டமான வடிவமாகும்.
நவம்பர் 2016 நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 99.3% நோட்டுகளை மீட்டுவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 29, 2018 அன்று அறிவித்தது. பண மதிப்பு நீக்கமானது, கோடிக் கணக்கில் காட்டப்படாத மற்றும் கள்ளநோட்டுகளைக் கைப்பற்ற வழிவகுக்கும் என்ற கூற்றை இது முற்றிலும் பொய்யாக்கியது.
பண மதிப்பு நீக்க அறிவிப்பின் போது, கணக்கில் வராத சுமார் 4-5 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்டெடுப்போம் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோமென்று கூறப்பட்டதும் முற்றிலும் பொய் என்று காட்டப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் கறுப்புப் பணம் கைப்பற்றப்படும் என்றும், அதைக் கொண்டு ஒவ்வொரு ஏழையின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை!
பயங்கரவாதம் நூற்றுக்கணக்கான உயிர்களைத் தொடர்ந்து கொன்று வருகிறது. பயங்கரவாதத்தை ஆதரிப்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்கிறது, ஏனெனில் அரசு பயங்கரவாதத்தையும் அடக்குமுறையையும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவதை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பை அது ஆட்சியாளர்களுக்கு வழங்குகிறது. உலகில் பயங்கரவாதத்தின் முக்கிய ஏற்பாட்டாளரான அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்திய அரசு முக்கிய கூட்டணியில் உள்ளது. மேலும், பயங்கரவாதத்தை உலகெங்கிலும் ஆதரித்து வருபவர்கள், அதற்கான நிதியை அளிப்பதற்கு கள்ள நோட்டுகளை சார்ந்து இருப்பதில்லை, அவர்கள் பல நவீன வழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், பண மதிப்பு நீக்கம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அது ஊழலையும் பயங்கரவாதத்தையும் கூட குறைக்கவில்லை. 2016-ம் ஆண்டில் பண மதிப்பு நீக்கத்தை நியாயப்படுத்த அரசு கூறிய ஒவ்வொரு கூற்றும் முற்றிலும் பொய்யானது என்பது அம்பலமாகியுள்ளது.
நமது நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் இழப்பில் மிகப்பெரிய இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ ஏகபோகங்களை வளப்படுத்தும் நடவடிக்கை தான், பண மதிப்பு நீக்கமென்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது.