மூன்று விவசாயச் சட்டங்கள் இரத்து :

ஆளும் வர்க்கத்தின் சதித் திட்டம் குறித்து எச்சரிக்கை தேவை!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை – 22 நவம்பர், 2021

ஒரு பெரிய அரசியல் மேதையின் தோரணையில், மூன்று விவசாய சட்டங்கள் விரைவில் நீக்கப்படும் என்று நவம்பர் 19 அன்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்த மூன்று சட்டங்களின் நன்மைகள் குறித்து சில விவசாயிகளை ஏற்றுக் கொள்ள வைக்க முடியாமல் போனதற்காக, அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்தச் சட்டங்கள், ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்குப் பலனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை மறைத்து, அவை குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார். டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக முதலாளித்துவ குடும்பங்களுக்காக அவரது அரசாங்கம் தொடர்ந்து வேலை செய்து வருகையில், ​​தான் “நாட்டிற்காக” தொடர்ந்து பணியாற்றுவேனென அவர் உறுதியளித்தார்.

இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது, விவசாயிகளுடைய போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். இது சனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர்களில் சிலர் பாராட்டி வருகின்றனர். தற்போதுள்ள சனநாயக அமைப்பு, உழைக்கும் பெரும்பான்மை மக்களின் மீது முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற உண்மையை அவர்கள் மறைத்து வருகின்றனர். விவசாயச் சட்டங்களை முன்வைத்த அதே ஆளும் வர்க்கம் தான், இப்போது அவற்றை இரத்து செய்யவும் முடிவெடுத்திருக்கிறது.

பிரதமரின் சலுகையாகத் தோன்றும் இந்த அறிவிப்பும், மன்னிப்பு கோரலும் குறிப்பிட்ட அரசியல் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். விவசாய வர்த்தகத்தின் தாராளமயமாக்கலுக்கும், பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும் எதிராக விவசாயிகளின் ஒற்றுமை வளர்ந்து வருகிறது. தனியார்மயமாக்கலுக்கும், முதலாளிகளுக்கு ஆதரவான தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கும் எதிராக தொழிலாளர்களிடையே ஒற்றுமை அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒரே எதிரியான பெரும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்களுக்கென ஒரு திட்டத்தையொட்டி ஐக்கியப்பட்டு, ஒரு தனிப்பட்ட அரசியல் சக்தியாக வெளிப்படுவதைத் தடுக்க, ஆளும் வர்க்கம் குறியாக உள்ளது. பெரும்பான்மையான மக்கள், ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய பாராளுமன்றக் கட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை, அவர்கள் உறுதி செய்ய விரும்புகிறார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்யும் சூழ்ச்சியான நடவடிக்கைக்குப் பின்னால், இந்திய மற்றும் சர்வதேச ஏகபோக முதலாளிகளின் நலன்கள் அடங்கியுள்ளன. சனநாயகம் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும், ஒரு நம்பகமான நாடாளுமன்ற மாற்று எழுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இது உதவுகிறது. மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு, பாஜக செவிசாய்க்கிறது என்ற ஒரு மாயையை வலுப்படுத்தவும் இது உதவுகிறது.

சுரண்டப்படும் மக்களைப் பிளவுபடுத்துவதற்கும், திசைதிருப்புவதற்குமான பிரதான வழிமுறையானது, பாராளுமன்ற சனநாயகத்தின் அரசியல் வழிமுறையாகும். இந்த செயல்முறையானது, அதே தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதி கொண்ட, இரண்டு போட்டிக் கட்சிகள் அல்லது கட்சிக் கூட்டணிகளின் பின்னால் மக்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.

உத்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் இதர மூன்று மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மோதலை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட ஒற்றுமையை அழிப்பதற்காகப் பயன்படுத்த, ஆளும் வர்க்கம் தயாராகுகிறது.

மூன்று சட்டங்கள் இரத்து செய்யப்படுவது, அனைத்து விவசாய விளை பொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உத்தரவாதமாகக் கொள்முதல் செய்ய வேண்டுமென்ற மிகப்பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கையையோ அல்லது மின்சாரத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையையோ நிறைவு செய்யவில்லை. விவசாயிகளின் தேவைகளை தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள்ளும், பாராளுமன்ற செயல்முறையின் மூலமும் தீர்க்க முடியும் என்று மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதை இது, நோக்கமாகக் கொண்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம், உழைக்கும் மக்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இது, தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுப்பதில் தங்களுடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்ற மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். முதலாளிகளுடைய ஆட்சிக்குப் பதிலாக தொழிலாளர்கள், விவசாயிகளுடைய ஆட்சி அமையும் போதுதான் இந்தப் போராட்டத்திற்கு வெற்றி மகுடம் சூட்டப்படும். உழைக்கும் பெரும்பான்மை மக்கள் முடிவெடுப்பவர்களாக மாற்றுவதற்கு, தற்போதுள்ள அமைப்பும், அரசியல் வழிமுறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் விவசாயமும், ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ஏகபோக முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, மனிதத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாற்றியமைக்க முடியும்.

ஏகபோக முதலாளிகள் மற்றும் அவர்களின் தாராளமய, தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் உடனடிப் பணியானது, தங்களுடைய சொந்த, தனிப்பட்ட வேலைத் திட்டத்தையொட்டி அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *