விவசாயிகள் போராட்டம் எதிர் கொள்ளும் கேள்விகள் குறித்து

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின்
பொதுச் செயலாளர் தோழர் லால் சிங் அவர்கள் தொழிலாளர் ஒற்றுமைக் குரலுக்கு அளித்த நேர்முகம்

தொழிலாளர் ஒற்றுமைக் குரல் (தொ.ஒ.கு) : கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தில்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தோழரே, விவசாயிகள் போராட்டம் குறித்து உங்களுடைய மதிப்பீடு என்ன?

லால் சிங் : இந்த இயக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நாடெங்கிலும் உள்ள ஏழை முதல் பணக்காரர்கள் வரையிலான பெரும்பாலான விவசாயிகள் ஒன்றிணைந்துள்ளனர். ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிராகவும், இந்த நிறுவனங்களுக்குச் சேவை செய்து வரும் அரசாங்கத்திற்கு எதிராகவும் விவசாயிகள் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், உடனடி கோரிக்கைகளை ஒட்டி ஒன்றுபட்டுள்ளன. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.

அவர்களின் உடனடி கோரிக்கைகளில் முதன்மையானது, 2020-இல் இயற்றப்பட்ட மூன்று மத்திய வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதாகும். இந்தச் சட்டங்களில் ஒன்று, தற்போதுள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மாற்றி, தனியார் சந்தைகளாகவும், முதலாளித்துவ நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதாகவும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்றொரு சட்டம், ஒப்பந்த விவசாயத்தை விரிவுபடுத்துவதற்காக கொண்டு வரப்படுவதாகும். விவசாய விளைபொருட்களுக்கான சந்தையும், ஒப்பந்த விவசாய உடன்படிக்கைகள் ஆகிய இரண்டும் இதுவரை மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன. தற்போதுள்ள இந்த அனைத்து மாநில சட்டங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு மத்திய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. மூன்றாவது சட்டம், தனியார் நிறுவனங்கள் சேமித்து வைத்திருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் அளவு பற்றிய அனைத்து வரம்புகளையும் நீக்குவதற்காக, மத்திய அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தைத் திருத்துகிறது.

டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற இந்திய ஏகபோகக் குழுக்கள் மற்றும் அமேசான், வால் மார்ட், நெஸ்லே, கார்கில் மற்றும் பிற வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் கோடிஸ்வர உடமையாளர்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இந்தச் சட்டங்கள் இயற்றப்படுவதன் மூலம், அவர்களுடைய நீண்டகால நோக்கமும் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. விவசாய வணிகத்திலும், சேமிப்பிலும் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு இருக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாகும்.

இந்திய மற்றும் சர்வதேச ஏகபோக முதலாளிகள், நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்த விவசாயிடமிருந்தும் எந்தப் பயிரையும் எந்த விலையிலும், அவர்கள் தீர்மானிக்கும் எந்த ஒரு தனியார் சந்தைக் கூடத்திலும் வாங்குவதற்கான சுதந்திரத்தை விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பும் எந்த விவசாயப் பொருளையும் சட்டப்பூர்வமாக பதுக்கி வைக்க அவர்கள் உரிமை கோருகிறார்கள். சந்தையைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவு பங்கைப் பெறுவதே அவர்களின் நோக்கமாகும். அவர்கள் மிகப் பெரிய அளவில் உணவுப் பொருட்களை வாங்குபவர்களாகவும், பதுக்கி வைப்பவர்களாகவும், விற்பவர்களாகவும் ஆக விரும்புகிறார்கள். அதன் மூலம், உணவை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் சில்லறை சந்தையில் வாங்குபவர்கள் என இருதரப்பினரையும் அவர்கள் விருப்பம்போல கொள்ளையடிக்க முடியும்.

ஏகபோக முதலாளி வர்க்க பேராசையை நிறைவேற்றுவதற்காக, மூன்று மத்திய சட்டங்களை இயற்றி இருப்பது விவசாயிகளின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். பல இலட்சக்கணக்கான விவசாயிகளை முற்றிலுமாக அழிப்பதன் மூலம் ஒரு சில பெரும் பணக்கார இந்தியர்களையும் வெளிநாட்டினரையும் கொழுக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் விவசாயிகள் மீது, அவர்களின் சம்மதம் இல்லாமலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிராகவும் திணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களை இரத்து செய்யக் கோருவதன் மூலம், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டங்களைத் தீர்மானிப்பதில் தங்களுக்கு உரிமை வேண்டுமென கோருகின்றனர்.

இந்த சட்டங்களால் அச்சுறுத்தப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல. விவசாயிகளின் நிகர வருமானம் மேலும் குறையும் வாய்ப்பு, விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துகிறது. உணவு கொள்முதல் மற்றும் விநியோகத்தில் அரசின் பங்கைக் குறைப்பதும், தனியார் நிறுவனங்களின் பங்கை விரிவுபடுத்துவதும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் உணவுப் பொருட்களுக்குக் கொடுக்க வேண்டிய விலையை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். ஏகபோக நிறுவனங்களுக்கு வணிகத்தை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கான வர்த்தகர்கள் உள்ளனர். மொத்தத்தில், மிகச் சிறுபான்மையான பெரும் பணக்கார ஏகபோக முதலாளிகள் ஆதாயமடையும் அதே நேரத்தில், மிகப் பெரும்பான்மையான மக்கள் மிகப்பெருமளவில் இழக்க நேரிடும்.

விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாவது உடனடி கோரிக்கை, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா விவசாய விளைபொருட்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விடக் குறையாத விலையில் வாங்கப்படுவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வேண்டும் என்பதும் அவ்வாறு அறிவிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு இலாபகரமான அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும். குறைந்தபட்ச ஆதரவு விலை பல பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டாலும், தாங்கள் விற்கும் விளைபொருட்களுக்குக் கிடைக்கும் விலையைப் பொறுத்தவரை, பெரும்பாலான விவசாயிகளுக்குப்  போதுமான அரசு பாதுகாப்பு இல்லை என்ற யதார்த்தத்தை இந்தக் கோரிக்கை பிரதிபலிக்கிறது.

தற்போதைய அமைப்பில், கோதுமை மற்றும் நெல்லுக்கு மட்டுமே கொள்முதல் விலையில் அரசு ஓரளவு ஆதரவளிக்கிறது. இந்திய உணவுக் கழகம் இந்த இரண்டு பயிர்களை மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையில், நாட்டின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கொள்முதல் செய்கிறது. இதுவரை சில விவசாயிகளுக்கும், ஓரிரு பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு, இனி அனைத்து விவசாயிகளுக்கும், எல்லா விவசாய விளைபொருட்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோருகின்றன.

மூன்றாவது உடனடி கோரிக்கை என்னவென்றால், மின்சார விநியோகத்தை ஏகபோக முதலாளிகளுக்கு இலாபகரமான தொழிலாக மாற்றும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். இந்தச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டால், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் இரத்து செய்யப்பட்டு, அவர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் உயர வழிவகுக்கும்.

நிலத்தை உழுது நாம் உண்ணும் உணவை உற்பத்தி செய்பவர்கள் தங்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கான உரிமையைக் கோருகின்றனர். இந்த உரிமையை மத்திய அரசு நிறைவேற்ற மறுக்கிறது.

மூன்று விவசாய சட்டங்களை இரத்து செய்ய மத்திய அரசு ஏன் பிடிவாதமாக மறுக்கிறது? மத்திய அரசின் பொறுப்பில் உள்ள கட்சியான பாஜக-வின் சில குறிப்பிட்ட குணமே இதற்குக் காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் தவறாக எண்ணுகிறார்கள். இதற்குக் காரணம், இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகள் மிக நீண்ட காலமாக நிறுவ வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தச் சட்டங்களை, அரசாங்கம் இரத்து செய்வதை அவர்கள் விரும்பவில்லை.

2020 ஆம் ஆண்டில் மூன்று மத்திய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பது, ஒன்றன் பின் ஒன்றாக பல மாநிலங்களில் சட்டங்களைச் சீர்திருத்திய நீண்ட வழிமுறையின் இறுதிக் கட்டமாகும். தாங்கள் விரும்பியதை இறுதியில் அடைந்துவிட்ட நிலையில், மத்திய அரசு இந்தச் சட்டங்களைப் பின்வாங்குவதை ஏகபோக முதலாளிகள் விரும்பவில்லை. மோடி அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றி, திசைதிருப்பி, பிளவுபடுத்தி, அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை எந்த வழியிலாவது அழித்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

தில்லி எல்லைகளுக்கு விவசாயிகள் வந்து சேர்ந்ததிலிருந்து, சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அனைத்து வகையான தவறான தகவல்களாலும், அப்பட்டமான பொய்கள் மற்றும் அவதூறுகளாலும் அவர்களுடைய போராட்டத்தை இழிவுபடுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது.

பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உ.பி.யில் உள்ள பணக்கார விவசாயிகள் மட்டுமே இந்த மூன்று விவசாய சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்பது தொடர்ந்து பரப்பப்பட்டுவரும் ஒரு பொய்யாகும். உண்மை என்னவென்றால், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பிரிவு விவசாயிகளும் வேளாண்மையில் ஏகபோக முதலாளி வர்க்க திட்டத்தால் அச்சுறுத்தப்படுகின்றனர். அதனால்தான் இந்த இயக்கம் எல்லா பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

உணவு தானியக் கொள்முதலில் பூதாகரமான முதலாளித்துவ நிறுவனங்களின் ஆதிக்கம், கோதுமை மற்றும் நெல்லை இந்திய உணவுக் கழகத்திற்கு (FCI) விற்று வரும் பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த பயிர்களை தனியார் வர்த்தகர்களுக்கு விற்கும் பிற பிராந்தியங்களில் உள்ள விவசாயிகளுக்கும் கூட, குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு அளவுகோலாகச் செயல்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாமல் போனால், அவர்கள் இந்த அளவுகோலைக் கூட இழக்க நேரிடும், அவர்களின் நிலமை மோசத்திலிருந்து படு மோசமாக ஆகிவிடும்.

மற்ற பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு விதைப்புப் பருவத்திற்கும் முன்பு அரசாங்கம் அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள், அவர்களுக்கு உண்மையாக எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. ஏனெனில் அவர்களிடமிருந்து மிகக் குறைவாகவோ அல்லது எதுவுமோ பொது கொள்முதல் செய்யப்படுவதில்லை. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பயிர்களை உற்பத்தி செய்பவர்கள், பெரும்பாலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவான விலையில் தனியார் வர்த்தகர்களுக்கும் அவர்களின் முகவர்களுக்கும் விற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அனைத்து விவசாயப் பொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறையாமல் கொள்முதல் செய்வதற்கு  உத்தரவாதம் கேட்கும் கோரிக்கை, இந்த அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, விவசாயிகள் போராட்டத்தின் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் நாம் கவனித்தால், அது ஒரு ஏக்கர் நிலத்திலோ அல்லது 50 ஏக்கரிலோ பயிரிட்டு விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தளமாக இருப்பதைக் காணலாம். இந்த யதார்த்தத்தை தவறாகக் காட்டும் எல்லா முதலாளி வர்க்க பொருளாதார வல்லுநர்களும், இதழியலாளர்களும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை ஏமாற்றி பிளவுபடுத்தும் முயற்சியில் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறார்கள்.

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்பது ஆட்சியாளர்கள் தொடர்ந்து பரப்பி வரும் இரண்டாவது பெரிய பொய்யாகும். சில சமயங்களில் காலிஸ்தானிகளைப் பற்றியும், பிற நேரங்களில் பாபர் கல்சாவைப் பற்றியும் அவர்கள் பேசி வருகிறார்கள்.

“சீக்கிய பயங்கரவாத” அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படும் இந்த அதிகாரபூர்வமான பரப்புரை, பஞ்சாப் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் இழைக்கப்படும் ஒரு கொடூரமான மோசடி என்பதை வரலாறு காட்டுகிறது. “சீக்கிய பயங்கரவாத” அச்சுறுத்தல் என்றழைக்கப்படும் இப்படிப்பட்ட பொய்யான பரப்புரைகள், எப்படி பீதியை உருவாக்கி, பஞ்சாபியர்களை மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிளவுபடுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை 1980-களின் அனுபவம், தெளிவாகக் காட்டுகிறது. சீக்கிய மத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு எதிராக இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களைத் திரட்டுவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. எல்லா சீக்கியர்களும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள் ஏற்பாடு செய்து இந்துக்களை பயங்கரவாத முறையில் கொலை செய்துவிட்டு, பழியை “சீக்கிய பயங்கரவாதிகள்” மீது சுமத்தினார்கள். பஞ்சாப், தில்லி மற்றும் பிற இடங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்த சீக்கிய பயங்கரவாதம் என்ற பூதம் பயன்படுத்தப்பட்டது.

விவசாயிகள் போராட்டத்தைக் கையாள்வதில் மத்திய அரசு பயன்படுத்திவரும் பொய்ப் பரப்புரைகளும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும், 1980-களில் பயன்படுத்தப்பட்ட முறைகளை நினைவூட்டுகின்றன. இருப்பினும், 2020 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் அவதூறு பரப்புரைகள், அவர்கள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை. நாளுக்கு நாள், நாடு முழுவதும் உள்ள மக்களிடையே விவசாயிகளுக்கான அனுதாபமும் ஆதரவும் பெருகியது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிடமும் ஆதரவு வளர்ந்தது.

விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக பொதுக் கருத்தை திருப்பலாம் என்ற நம்பிக்கையுடன், மத்திய அரசு, 2021 சனவரி 26, குடியரசு தினத்தன்று விரிவான மற்றும் கொடூரமான சதித்திட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்.

குடியரசு தினத்தன்று நடந்த அராஜகத்திற்கும் வன்முறைக்கும், விவசாய டிராக்டர் பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலரைக் குற்றம் சாட்டுவதன் மூலம், அரசாங்கமும் அனைத்து தொலைக்காட்சி செய்தி ஊடகங்களும் உண்மையைத் தலைகீழாக மாற்றின. உண்மை என்னவென்றால், செங்கோட்டையைச் சுற்றி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய நிறுவனங்களாலும், தில்லி காவல்துறையாலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.

டிராக்டர் பேரணிக்கு அனுமதிக்கப்பட்ட வழிகளில் உள்ள பல சாலைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டதையும், செங்கோட்டையை நோக்கிச் செல்லும் சாலைகளில் பல டிராக்டர்கள் செல்லுமாறு காவல்துறையினர் வழிகாட்டியதையும் நேரில் கண்ட சாட்சிகள் பல உறுதிப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சித்தரிக்கப்பட்டனர். இது, முட்கம்பி வேலிகள் அமைப்பதையும், போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு இணைய சேவைகள் மற்றும் தண்ணீர் விநியோகத்தைத் துண்டிப்பதையும், தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக விருப்பம்போல சிறைப்படுத்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதையும் நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. டிராக்டர் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் காவல்துறையால் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது.

இந்த இயக்கத்தில் உறுதியும், போராட்ட குணமும் கொண்ட இளைஞர்கள் பங்கேற்காமல் இருந்திருந்தால், விவசாயிகள் தில்லியின் எல்லையை எட்டியிருக்கவே மாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இயக்கத்திற்கு, இந்த இளைஞர்கள் வலிமையான ஒரு ஆதாரமாக இருந்து வருகிறார்கள். அவர்கள், அரசின் அவதூறுப் பரப்புரைகளிலிருந்தும், துன்புறுத்தல்களிலிருந்தும் உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.

கடந்த பல மாதங்களாக, விவசாயிகளின் கோரிக்கைகளை ஆளும் வர்க்கம் வேண்டுமென்றே நிலுவையில் வைத்துள்ளது. ஊடகங்கள் விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மீது பொதுமக்களுடைய கவனத்தை வைத்திருந்த நிலையில் மத்திய அரசு, தனியார்மயமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது. ஏர் இந்தியாவை அதன் சொத்துகளின் மதிப்பை விட பன்மடங்கு மிகக் குறைவான அடிமட்ட விலைக்கு டாடா நிறுவனத்திற்கு விற்றுள்ளது. பெரும் பொதுக் கட்டமைப்பு சொத்துக்களை பணமாக்குதல் என்ற பெயரில் தனியார் இலாபம் ஈட்டுபவர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளில், இந்திய-அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதும் அடங்கும்.

நாட்கள் செல்லச் செல்ல, தில்லியின் எல்லைகளில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் சோர்வடைந்து விடுவார்கள் என்றும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களை ஏற்பாடு செய்து, அக்குற்றத்தை விவசாயிகள் மீது சாட்டுவதன் மூலம், போராடும் விவசாயிகளுக்கு எதிராக பொதுமக்களின் கருத்தைத் திருப்ப முடியும் என்றும் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. லக்கிம்பூர் கெரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கொல்லப்பட்டது, சிங்கு எல்லையில் நடந்த கொடூரமான கொலை, விவசாயிகளைக் கலைக்க வன்முறை பயன்படுத்தப்படுமென்ற அரியானா அரசின் மிரட்டல்களையும், “சீக்கிய அடிப்படைவாதிகளுக்கு” எதிரான புதுப்பிக்கப்பட்ட பரப்புரையையும் நாம் சேர்த்து வைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த விவகாரம் நீதிமன்றங்களால் பரிசீலிக்கப்படும் போது, ​​போராட்டம் நடத்தும் உரிமை விவசாயிகளுக்கு இல்லை என்ற உச்ச நீதிமன்ற குழுவின் பொருத்தமற்ற வாதமும் ஆளும் வர்க்கத் தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

மொத்தத்தில், பல மோசமான ஆபத்துக்களைத் தற்போது சந்தித்து வரும் இந்த விவசாயிகள் போராட்டத்தை முற்றிலும் நியாயமான, வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டமாக நமது கட்சி கருதுகிறது. இயக்கம் எதிர்கொள்ளும் ஆபத்துகளைத் தவிர்த்து எப்படி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது குறித்து மிகுந்த கவனமும், தீவிர சிந்தனையும் தேவை.

இந்த இயக்கத்தை மதிப்பீடு செய்கையில், ​​நமது நாட்டு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் போராடிய பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. 1857 ஆம் ஆண்டின் மாபெரும் கெதர் எழுச்சியின்  முன்னணியில் ஆங்கிலேய ராணுவத்தில் விவசாயிகளும் அவர்களது பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள், சட்டவிரோதமான ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஏராளமான ஆயுதமேந்திய கிளர்ச்சிகளின் முன்னணியில் பங்கேற்றனர்.

விவசாயிகள், நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு கல்வி அறிவு பெற்ற மகன்களும் மகள்களும் உள்ளனர். தங்களுடைய போராட்டம் தேசிய மற்றும் சர்வதேச பரிமாணத்தில் உள்ளது என்ற உண்மையை அவர்கள் அதிக அளவில் உணர்ந்து வருகின்றனர். அவர்களுடைய போராட்டம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் அச்சுறுத்தும் ஏகபோக முதலாளிகளுக்கு எதிரானதாகும்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு, தொழிற் சங்கங்கள் முழு மனதுடன் ஆதரவளித்து வருகின்றன. விவசாய சங்கங்களும், தனியார்மயமாக்கலுக்கும் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களுக்கும் எதிரான தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றன.

முதலாளி வர்க்க ஏகபோக குடும்பங்களுக்கும், அவர்களின் சமூக விரோத தாராளமய, தனியார்மயத் திட்டத்திற்கும் எதிராக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே ஒரு உறுதியான கூட்டணியை உருவாக்குவதும், பலப்படுத்துவதும் முக்கிய சவாலாகும். விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தையும், தொழிலாளி வர்க்கத்துடனான அதன் ஒற்றுமையையும் இழிவுபடுத்தவும், பிளவுபடுத்தவும், அழிக்கவும் தங்களுடைய முயற்சிகளை ஆட்சியாளர்கள் நிறுத்த மாட்டார்கள் என்பதால் இது ஒரு சவாலாகும். தொழிலாளி – விவசாயி ஒற்றுமை தங்களுக்கு உண்மையான அச்சுறுத்தலாக மாறுவதைத் தடுக்க, வாக்குச்சீட்டு மற்றும் தோட்டா உட்பட வகுப்புவாத, சாதிய வேறுபாடுகள் உள்ளிட்ட அனைத்து மோசமான சதிகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள்.

தொ.ஓ.கு : இந்த வேளாண் சட்டங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகவும், முதலாளிகளின் நீண்டகால கோரிக்கையை அவை நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டீர்கள். அதை மேலும் விளக்க முடியுமா?

லால் சிங் : இந்த மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டது, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நீண்ட செயல்முறையின் உச்ச கட்டமாகும். இது இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றுவதற்காக, விவசாய உற்பத்தி மற்றும் வர்த்தகம் தொடர்பான கொள்கைகளையும், சட்டங்களையும் சீர்திருத்தும் ஒரு வழிமுறையாகும்.

உலகமயம் மற்றும் தாராளமயமாக்கல் திட்டம், நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரசு கட்சியின் தலைமையில் இருந்த அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கின் 1991 நிதிநிலை அறிக்கை உரையில் வெளியிடப்பட்டது. இது, அரசு தலைமையிலான முதலாளித்துவ தொழில்மயமாக்கும் பழைய கொள்கைக் கட்டமைப்பின் கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதி, வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை மற்றும் அரசு ஒழுங்குபடுத்தும் வேளாண் வர்த்தகம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற இந்திய ஏகபோக முதலாளிகளின் தீர்மானத்தைக் குறித்தது.

முதல் அலை என்று குறிப்பிடப்படும் 1990 களில் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள், பெரும்பாலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கொள்கை மீது கவனம் செலுத்தியது. உலக வர்த்தக அமைப்பு அல்லது சுருக்கமாக டபிள்யூ.டி.ஓ-வின் (WTO) பரிந்துரைகளுக்கு ஏற்ப இறக்குமதி மீதான அளவுக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, சுங்க வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. பாமாயில் மற்றும் ஏராளமான இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இந்திய சந்தையில் குவியத் தொடங்கியது. இது, இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க வழிவகுத்தது. வணிகம் மற்றும் வரிக்கட்டணம் மீதான பொது உடன்பாடு ஜி.ஏ.டி.டி (GATT) மற்றும் அதன் வாரிசான உலக வர்த்தக அமைப்புடன் (WTO) அரசாங்கம் ஒத்துழைத்து வருவதற்கு எதிராக விவசாய சங்கங்கள் மக்கள் திரள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்தின.

கோதுமையையும் அரிசியையும் பொதுக் கொள்முதல் செய்வதைக் குறைக்குமாறு இந்திய அரசாங்கத்தின் மீது டபிள்யூ.டி.ஓ மூலம், அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் நெருக்குதல் கொடுத்தன. வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்கள் மலிவான கோதுமையையும், அரிசியையும் இந்திய சந்தையில் கொட்டுவதற்கு சாதகமான சூழ்நிலையை இந்திய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இது விவசாயிகளின் பரவலான அழிவுக்கு வழிவகுத்தது.

இந்திய முதலாளி வர்க்கம், வெளிநாட்டு வேளாண் வணிக நிறுவனங்களுடன் போட்டி போடத் தயாராகும் வரை, அது உள்நாட்டு விவசாய வணிகத்தின் தாராளமயமாக்கலைத் தள்ளிப் போட விரும்பியது. பொதுக் கொள்முதல் முறையைத் தகர்க்கவும், உணவு மானியத்தைக் குறைக்கவும் கூடுதல் அவகாசம் தேவை என்று பேரம் பேசுவதற்கு விவசாயிகள் நடத்திய மக்கள் திரள் போராட்டங்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

21-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இந்திய ஏகபோகக் குடும்பங்கள், 1990 களில் இருந்ததைக் காட்டிலும் மிகப் பெரிய பணக்காரர்களாக மாறிவிட்டன. அவர்கள் பல்வேறு சந்தைகளில் வெளிநாட்டு ஏகபோகங்களுடன் போட்டியிடத் தொடங்கினர். அவர்கள் விவசாய வணிகம் மற்றும் உணவுப் பொருட்களின் விற்பனைத் துறையில் நுழையத் தொடங்கினர். அதானி குழுமம் 1999 இல் அதானி-வில்மர் என்ற பெயரில் அதன் கூட்டு நிறுவனத்தை நிறுவியது. டாடாக்கள் 2003 இல் தங்களுடைய ஸ்டார் நிறுவனத்தை அமைத்தனர். முகேஷ் அம்பானி 2006 இல் ரிலையன்ஸ் ரீடெய்லைத் தொடங்கினார். ஆதித்யா பிர்லா ரீடெய்ல் 2007 இல் உருவாக்கப்பட்டது. இந்த ஏகபோக நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தை ஒருங்கிணைத்து, மிகப்பெரிய விநியோகச் சங்கிலிகளின் கட்டுப்பாட்டை நிறுவ முயற்சிக்கின்றன.

துல்லியமாக 21-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், விவசாயப் பொருட்களில் உள்நாட்டு வர்த்தகத்தை ஒட்டிய கொள்கைகள் மற்றும் சட்டங்களை சீர்திருத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை இந்திய அரசு ஊக்குவிக்கத் தொடங்கியது.

நேருவின் காலத்தில் கட்டமைக்கப்பட்ட கொள்கைகள், சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் நிறுவனங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு ஆரம்ப ஆண்டுகளில் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்தன. வால் மார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு தங்களை வளப்படுத்திக் கொண்ட இந்திய ஏகபோக முதலாளிகள் இப்போது பழைய கட்டமைப்பைத் தகர்க்க விரும்புகிறார்கள். அவர்கள் பூதாகர அளவிலான சேமிப்புக் கிடங்குகளையும் விநியோகச் சங்கிலிகளையும் நிறுவ வெளிநாட்டு ஏகபோகங்களுடன் போட்டியிடவும், கூடிச் செயல்படவும் விரும்பினர்.

பாஜக மற்றும் காங்கிரசு கட்சியின் தலைமையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்தும் குழு (ஏபிஎம்சி) சட்டங்களில் குறிப்பிட்ட சில திருத்தங்களைச் செயல்படுத்தும்படி மாநில அரசாங்கங்களை வற்புறுத்தத் தொடங்கின. இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, வாஜ்பாய் ஆட்சியில் மாதிரி திருத்தச் சட்டமும், மன்மோகன் சிங் ஆட்சியில் மாதிரி விதிகளும் உருவாக்கப்பட்டன.

இந்தத் திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்று, உணவுப் பயிர்களை கொள்முதல் செய்யும் தனியார் மொத்த வியாபாரிகள், மாநில அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (ஏபிஎம்சி) வழியாகச் செல்ல வேண்டும் என்ற தேவையை நீக்குவதாகும். அவை, முதலாளித்துவ நிறுவனங்கள், தனியார் சந்தைக் கூடங்களை உருவாக்குவதற்கும், தனியாருக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் முதலீடு செய்வதற்கும், எந்த விவசாயிடமிருந்தும் எந்தப் பொருளையும் எந்த விலையிலும் வாங்குவதற்கும் முழு சுதந்திரம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிப்பது மற்றொரு நோக்கமாக இருந்தது.

1997 முதல் 2007 வரை, உலக வங்கி பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும், கொள்கை அடிப்படையிலான கடன்களையும் வழங்கியது. இது போன்ற ஒரு உலக வங்கி திட்டத்தின் கீழ் தான், நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு, பீகார் விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்தும் குழுச் (ஏபிஎம்சி) சட்டத்தை இரத்து செய்தது, இதன் மூலம் பீகாரில் மாநில ஒழுங்குமுறை சந்தைகளை ஒரே அடியில் அழித்தது.

இவ்வாறு அனைத்து மாநிலங்களையும் தங்களுடைய வழிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி, ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறையாக இருந்தது. விவசாயிகளின் எதிர்ப்பு மட்டுமின்றி, பூதாகரமான ஏகபோக நிறுவனங்களால் வணிகத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்று அச்சமடைந்த மொத்த வியாபாரிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது.

பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் தங்கள் விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்தும் குழுச் (ஏபிஎம்சி) சட்டங்களைத் திருத்துவதற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகள் எடுத்துள்ளன. அப்போதும் கூட, திருத்தங்கள் ஒரே மாதிரியாக இல்லை. இன்னும் சில மாநிலங்களில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

இந்திய மற்றும் சர்வதேச ஏகபோக நிறுவனங்கள், இந்தச் செயல்முறையால் மென்மேலும் பொறுமை இழந்தன. அனைத்து மாநில விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்தும் குழுச் சட்டங்களையும் இரத்து செய்யும் வகையில் வேளாண் வர்த்தகம் தொடர்பான சட்டங்களை மத்திய அரசு இயற்றுவதே ஒரே அடியில் தாங்கள் விரும்புவதை அடைய உறுதியான வழி என்று அவர்கள் முடிவு செய்தனர். இந்த முடிவு 2020 இல் செயல்படுத்தப்பட்டது. இந்த மத்திய சட்டங்களை இயற்றுவதற்கான சரியான வாய்ப்பாக கொரோனா வைரஸ் சூழலில் கொண்டு வரப்பட்ட முடக்க நிலைமைகளை மோடி அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. மாநில எல்லைகளால் கட்டுப்படுத்தப்படாமல், ஆதிக்கம் செலுத்துவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் ஒரு இந்திய சந்தை வேண்டுமென்ற ஏகபோக நிறுவனங்களின் நீண்ட கால விருப்பம் இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தோழர், இந்த மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், விவசாய வணிகம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் துறையில் இந்திய மற்றும் சர்வதேச ஏகபோக முதலாளிகள் விரும்பிய சீர்திருத்தங்களை இறுதியாக சாதித்துள்ளனர் என்பதை நாம் காணலாம்.

தொ.ஒ.கு : இந்திய முதலாளி வர்க்கம், நேரு கால பழைய கொள்கைக் கட்டமைப்பை அகற்றி வருகிறது என்று நீங்கள் கூறினீர்கள். அந்த பழைய கட்டமைப்பு ஏன் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது? அது ஏன் இப்போது அகற்றப்படுகிறது?

லால் சிங் : இது ஒரு மிக முக்கியமான கேள்வி, தோழர். 1950 களில் இந்திய மற்றும் சர்வதேச முதலாளி வர்க்கம் ஏன் ஒரு குறிப்பிட்ட கொள்கைக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது என்றும், 1990 களிலிருந்து தாராளமயம், தனியார்மயம் என்ற முழக்கத்தின் கீழ் அதை ஏன் ஒழித்துக்கட்டி வருகிறது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.

சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைக் கட்டமைப்பானது அக்கால பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளால் நிர்பந்தப்படுத்தப்பட்டது. டாடாக்களும், பிர்லாக்களும் மற்றும் பிற பெரிய தொழில் நிறுவனக் குடும்பங்களும் பெரிய நிலப்பிரபுக்கள் மற்றும் மக்களை ஒடுக்குபவர்களுடன் கூட்டாக, ஒரு பெரிய நாட்டின் ஆட்சியாளர்களாக மாறிவிட்டனர். அவர்கள் ஆசியாவில் ஒரு வலிமைமிக்க தொழில் மற்றும் இராணுவ சக்தியாக மாற வேண்டும் என்ற பேராசையைக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்களிடம் இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளோ அல்லது போதுமான எஃகு மற்றும் மின்சாரமோ இல்லை. அதற்காகத் தேவைப்படும் பெரிய முதலீடுகளுக்குப் போதுமான சொந்த மூலதனம் அவர்களிடம் இல்லை. இத்தகைய நிலைமைகளில், கனரக தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பை ஒரு பொதுத் துறையாக உருவாக்குவதற்கு பொது நிதியைப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். வாகனங்கள் மற்றும் பல்வேறு உற்பத்தி செய்யப்பட்ட நுகர் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர். இதன் மூலம், அவர்களே இந்தச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி அதிகபட்ச இலாபத்தைப் பெற முடியும்.

ஜாம்ஷெட்ஜி டாடா மற்றும் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா தலைமையில் தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவால் எழுதப்பட்டு 1944-45 இல் வெளியிடப்பட்ட தொலைநோக்கு ஆவணமான பம்பாய் திட்டத்தில் இந்த முழு கட்டமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் வெளியிடப்படுவதற்கு முன்பு பிரிட்டிஷ் வைஸ்ராயால் அது சரிபார்க்கப்பட்டது.

உலக அளவில் புரட்சியின் அலை முழு வீச்சாகப் பாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்தியா சுதந்திரம் பெற்றது. சோசலிச சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கும் மதிப்பும் உச்சத்தில் இருந்தன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஒரு பெரிய சோசலிச நாடுகளின் முகாம் உருவாக்கப்பட்டிருந்தது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், தொழிலாளி வர்க்கத்தை சமாதானப்படுத்தவும், புரட்சி வெடிப்பதைத் தடுப்பதற்காகவும் சமூக-சனநாயகக் கட்சிகள் மற்றும் சமூக நலத் திட்டங்களை நம்பியிருந்தன.

உழைக்கும் பெரும்பான்மையான இந்திய மக்கள் சோசலிசத்தை விரும்பினர். இந்திய முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் மற்றும் ஆங்கிலோ-அமெரிக்க ஏகாதிபத்தியர்களும், இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் புரட்சியில் கிளர்ந்தெழுவதற்கான வாய்ப்பைக் கண்டு அஞ்சினர். இந்திய முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கான தங்களுடைய திட்டத்தை “சோசலிச பாணி சமுதாயத்தைக்” கட்டுவதற்கான ஒரு திட்டமாக காட்டி மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் வேலையை அவர்கள் பிரதமர் நேருவிடம் ஒப்படைத்தனர்.

1951-65 காலகட்டத்தை உள்ளடக்கிய முதல் மூன்று ஐந்தாண்டு காலத் திட்டங்கள், பம்பாய் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். டாடாக்கள், பிர்லாக்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் தங்கள் செல்வத்தைக் குவித்து, உற்பத்தி செய்யப்பட்ட நுகர் பொருட்களுக்கான உள்நாட்டுச் சந்தையில் ஒரு மேலாதிக்க பங்கைக் கைப்பற்றின. அவர்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் எஃகு, நிலக்கரி, மின்சாரம் போன்றவற்றை தங்குதடையின்றி வழங்கும் அரசுத் துறையால் அவர்கள் பயனடைந்தனர்.

1960-களின் இடையில், இந்தியா கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டது. நகரங்களில் உணவுக் கலவரங்கள் வெடித்தன. நிலைமையைச் சமாளிக்க இந்திய அரசு அமெரிக்காவின் உணவு உதவியை நம்பியிருக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், கோதுமை மற்றும் அரிசி உற்பத்தித் திறனை உயர்த்துவதும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த இரண்டு முக்கிய உணவு தானியங்களின் கூடுதல் கையிருப்பை உருவாக்குவதும் அவசியம் என்று ஆளும் வர்க்கம் முடிவு செய்தது. இந்த நோக்கத்துடன் பசுமைப் புரட்சி என்று அழைக்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாசன வசதியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் தரும் விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வங்கிக் கடன் வழங்குவதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கோதுமை மற்றும் அரிசியை கொள்முதல் செய்து சேமித்து வைக்கவும், அனைத்து நகரங்களிலும் பொது வினியோகக் கடைகளை அமைத்து பொது விநியோக அமைப்பு மூலம் விநியோகிக்கவும் இந்திய உணவுக் கழகம் (FCI) அமைக்கப்பட்டது.

பசுமைப் புரட்சி, முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு பல வழிகளில் சேவை செய்தது. வணிகப் பயிர்களும், விவசாயத்தில் முதலாளித்துவ முறைகளின் விரிவாக்கமும், முதலாளித்துவத் தொழிலுக்கான உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த உதவியது. வங்கி அமைப்பின் மூலம் கிராமப்புற குடும்ப சேமிப்புகளின் குவிப்பு, ஏகபோக தொழிற் குடும்பங்களுக்கு நிதி மூலதனத்தை உருவாக்க உதவியது.

ஆரம்ப ஆண்டுகளில் பசுமைப் புரட்சி, விவசாயத்திலிருந்து நிகர வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, 1971-இல் கோதுமையின் கொள்முதல் விலை, பஞ்சாபில் சராசரி உற்பத்தி செலவை விட 25 சதவீதம் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த நிலைமை நீண்ட காலம் நீடிக்கவில்லை. வேளாண் இடுபொருட்களின் விலைகள், வேளாண் விளைபொருட்களுக்காக விவசாயிகள் பெற்ற விலையை விட செங்குத்தாக உயர்ந்தன. 1976 வாக்கில், பஞ்சாபில் கோதுமை கொள்முதல் விலை, சராசரி உற்பத்தி செலவை விட 5 சதவீதம் மட்டுமே அதிகமாக இருந்தது.

விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியும், சிறிய பொருட்கள் உற்பத்தியின் வளர்ச்சியும், விவசாயிகள் மீதும், அவர்களுடைய முக்கிய கோரிக்கைகளின் தன்மையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுதந்திரத்திற்குப் பிறகு ஆரம்ப ஆண்டுகளில், அவர்களின் போராட்டமானது நிலம், அதன் உரிமை மற்றும் உடைமை பற்றிய பிரச்சினையில் கவனம் செலுத்தியது. இது பெரும் நிலப்பிரபுக்களின் நிலவுடமை மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இருந்தது. 1980-களில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மின்சாரம் மற்றும் பாசன நீர் கட்டண உயர்வுக்கு எதிராகவும், தங்கள் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலையைக் கோரியும் போராடினர்.

1980-கள் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சுதந்திர சந்தை சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படும் திட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு காலமாகும். தாராளமயம், தனியார்மயமாக்கலின் ரஷ்ய பதிப்பான கிளாஸ்னோஸ்ட் மற்றும் பெரெஸ்ட்ரோயிகா என்ற பெயரில் சோவியத் யூனியனில் முதலாளித்துவ சீர்திருத்தங்களை கோர்பச்சேவ் கட்டவிழ்த்துவிட்டார். இந்தியா, உள்நாட்டு சந்தையை இறக்குமதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்து விட வேண்டுமென, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகரித்துவரும் நெருக்குதலுக்கு ஆளானது. இதன் காரணமாக அந்த பத்தாண்டு முழுவதும் இந்திய அரசு, இறக்குமதி வரிகளையும், ரூபாயின் மதிப்பையும் படிப்படியாகக் குறைத்தது.

1991-இல் சோவியத் யூனியன் சிதறுண்டு, உலக அளவில் பெரும் திடீர் மாற்றங்களுடன் 1990-கள் துவங்கின. சோசலிசம் என்ற கருத்துக்கே எதிராகவும் தொழிலாளி வர்க்கமும், பெண்களும், மக்களும் 20 ஆம் நூற்றாண்டில் தங்களுடைய போராட்டங்கள் மூலம் பெற்றிருந்த எல்லா உரிமைகளுக்கு எதிராகவும் முன்னெப்போதும் இல்லாத அளவில் தாக்குதலை நடத்துவதில் உலக முதலாளிகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கியது.

கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் அறிவித்தனர். சந்தை சார்ந்த பொருளாதாரத்திற்கும், பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயகத்திற்கும் மாற்று இல்லை என்று அவர்கள் அறிவித்தனர். தங்கு தடையற்ற சந்தை சீர்திருத்தங்கள் என்ற பெயரில், உலகின் ஏகபோக நிறுவனங்களுக்கு தங்கள் சந்தைகளைத் திறந்துவிட வேண்டுமென அனைத்து சுதந்திர நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.

வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் சப்பானின் ஏகபோக முதலாளிகள், முன்னாள் சோவியத் முகாமில் உள்ள சந்தைகளில் ஊடுருவுவதற்கான வழிகளைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். அவர்கள் இந்தியாவின் வளமான நிலம், கடின உழைப்பாளிகள், செழிப்பான இயற்கை வளங்கள் மீதும் உணவு மற்றும் பிற பொருட்களுக்கான பெரிய உள்நாட்டு சந்தைகள் மீதும் கண் வைத்திருந்தனர்.

முந்தைய காலகட்டத்தில், சோவியத் யூனியனுடன் நெருங்கிச் செல்லுவோம் என்று அச்சுறுத்துவதன் மூலம் இந்திய முதலாளி வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்திய அழுத்தத்தைத் தடுத்து வந்தது. இப்போது அந்த சூழ்ச்சிக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இந்திய முதலாளி வர்க்கம் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டியிருந்தது.

1991-இல் தொடங்கி, இந்திய ஆளும் வர்க்கம் ஒரு சோசலிச பாணி சமுதாயத்தைக் கட்டியமைக்கும் பாசாங்குகளை வெளிப்படையாகக் கைவிட்டு விட்டு, தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது.

வெளிநாட்டுப் போட்டியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தங்கள் தொழில்துறை தளத்தைக் கட்டியெழுப்பிய இந்திய ஏகபோக நிறுவனங்கள், உலக அளவில் போட்டி போட வேண்டும் என்பதற்காக அந்தக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் இதுவென்று முடிவு செய்தனர். இந்திய அரசாங்கம், உள்நாட்டுச் சந்தையை வெளிநாட்டு மூலதன முதலீடுகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்றும், வெளிநாட்டு அரசாங்கங்கள் தத்தம் சந்தைகளை இந்திய மூலதன முதலீடுகளுக்குத் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர். தங்கள் தனிப்பட்ட பேரரசுகளைக் கட்டியெழுப்ப பொதுத்துறையைப் பயன்படுத்திய ஏகபோக நிறுவனங்கள், தங்களுடைய தனிப்பட்ட பேரரசுகளை மேலும் விரிவுபடுத்த, பொதுச் சொத்துக்களை அடிமட்ட விலையில் கைப்பற்றுவதற்கான நேரம் வந்து விட்டதாகத் தீர்மானித்தனர்.

தாராளமய, தனியார்மயமாக்கல் திட்டம், தொழிலாளர்களைச் சுரண்டுவதை மேலும் தீவிரப்படுத்தவும், சிறு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பின்மையை அதிகரிக்கவும் வழிவகுத்தது. இது விவசாயிகளின் கடன் சுமை மிகவும் அதிகரிப்பதற்கு வழிவகுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளி வருகிறது. இது பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏகபோகத்தின் அளவையும், தீவிரத்தையும், வெளிநாட்டு மூலதனத்தின் பங்கையும் அதிகரித்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் தீவிரமடைவது மட்டுமன்றி, 1990-களிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் போக்கானது முதலாளி வர்க்கத்திற்குள் முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பழைய கட்டமைப்பில் பல்வேறு சொத்துடமை மற்றும் சிறப்புரிமை பெற்றவர்களுடைய நலன்கள் ஓரளவிற்கு காக்கப்பட்டன. இப்போது அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளுமாறு விடப்பட்டுள்ளனர்.

ஏகாதிபத்திய சீர்திருத்தத் திட்டத்திற்கு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலிருந்தும், சொத்துள்ள அடுக்குகளுக்குள்ளிருந்தும் எழும் எதிர்ப்பைத் திசைதிருப்பவும், பிளவுபடுத்தவும் மற்றும் நசுக்குவதற்காகவும், ஏகபோக குடும்பங்களும் அவற்றின் நம்பிக்கைக்குரிய கட்சிகளும் மிகவும் கொடூரமான சதிகார வழிமுறைகளைப் பயன்படுத்தின. அவர்கள் அயோத்தியா மற்றும் மண்டல் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். மக்கள் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க அவர்கள் பாபர் மசூதி தகர்ப்பு, குஜராத் இனப் படுகொலைகள், பல வகுப்புவாத வன்முறைகள் மற்றும் பிற வகையான அரசு பயங்கரவாத தாக்குதல்களை ஏற்பாடு செய்து நடத்தினர்.

வகுப்புவாத வன்முறை மற்றும் பல வகையான அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதோடு, “சோசலிச பாணி சமுதாயத்தை” மக்களிடையே சந்தைப்படுத்துவதில் பயிற்றுவிக்கப்பட்ட பழைய படைப்பிரிவை மாற்றுவதற்கு ஏகபோக அமைப்புகள் புதிய அரசியல்வாதிகளை உருவாக்கியுள்ளன. ஏகபோக நிறுவனங்களின் தலைமையில் விரைவான முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்குவிக்கும் தலைவர்களையும், இந்தியாவை ஒரு ஏகாதிபத்திய பாதையில் கொண்டு செல்வதே, அனைவரும் வளர்ச்சி அடைவதற்கான வழி என்று பரப்புரை செய்பவர்களையும் ஊக்குவித்து அவர்களை முன்னணிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்து பெருமையை மீட்டெடுப்பது என்ற பெயரில், இந்த மூர்க்கத்தனமான ஏகாதிபத்திய போக்கிற்கு தலைமை தாங்க மிகவும் ஏற்ற கட்சியாக, அவர்கள் பழிக்குப் பழிவாங்கும் குறுகிய தேசிய வெறி கொண்ட பாஜக-வை வளர்த்தெடுத்துள்ளனர்.

மொத்தத்தில், 1990-களிலிருந்து கொள்கைக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாகும். தற்போதைய காலகட்டத்தில் இது, உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், சோசலிசத்திற்கு எதிராகவும், மனித மற்றும் சனநாயக உரிமைகளில் மனிதகுலத்தின் அனைத்து சாதனைகளுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியம் நடத்தும் தாக்குதலின் ஒரு அங்கமாகும். இது ஏகபோக முதலாளிகளாலும் ஏகாதிபத்திய சக்திகளாலும் முன்வைக்கப்படும் ஒரு சமூக விரோத நிகழ்ச்சி நிரலாகும்.

தொ.ஒ.கு : விவசாயிகள் போராட்டத்தின் உடனடி நோக்கமானது, தேர்தலில் பாஜக-வைத் தோற்கடிப்பதாக இருக்க வேண்டும் என்று சில கட்சிகள் வெளிப்படுத்தும் கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

லால் சிங் : வேளாண் வர்த்தகத்தை தாராளமயமாக்கும் திட்டத்தில் மும்முரமாக இருப்பது பாஜக மட்டும் தானா? இல்லை, இந்திய மற்றும் சர்வதேச ஏகபோக முதலாளிகள் தான் இந்த நிகழ்ச்சி நிரலில் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அரசாங்கத்தை நடத்துவதும், ஏகபோக முதலாளிகள் வகுத்துள்ள நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதும் பாஜக-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதலாளி வர்க்கத்திற்கு ஏகபோகக் குடும்பங்கள் தலைமை தாங்குகின்றன. விவசாயத்தில் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கான பாதையைத் திறந்துவிடும் மூன்று மத்திய சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதில் அவர்கள் தான் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைத்து பொதுச் சொத்துக்களையும் தனியார்மயமாக்க வேண்டுமென்றும், தொழிலாளி வர்க்கத்தை மேலும் ஒட்டச் சுரண்டுவதற்கு வழி வகுக்கும் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்காகவும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

140 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டின் நிகழ்ச்சி நிரலை 150-க்கும் குறைவான முதலாளி வர்க்க ஏகபோகக் குடும்பங்கள் தீர்மானிக்கின்றன. இந்த சிறுபான்மையினர், மிகப் பெரும்பான்மையான மக்கள் மீது எப்படி ஆட்சி செய்கிறார்கள்? சுரண்டப்பட்டு, ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்த பயிற்சி பெற்ற அதிகார இயந்திரம் மற்றும் ஆயுதமேந்திய வீரர்கள் மற்றும் காவல்துறையின் சிறப்பு அமைப்புகளின் மூலம் அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். மத்திய நிர்வாக அதிகாரத்தை அவர்களுடைய மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சிகள் ஒன்றின் கைகளில் ஒப்படைப்பதன் மூலம் அவர்கள் ஆட்சி செய்கிறார்கள்.

அதிகாரத்தில் உள்ள வர்க்கத்திற்கும் அரசாங்கத்தை நடத்தும் கட்சிக்கும் இடையிலான உறவு, ஒரு நிறுவனத்தின் உடமையாளருக்கும் அதன் நிர்வாகத்திற்கும் இடையிலான உறவைப் போன்றது. உடமையாளர்கள் முடிவு செய்வதை நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், உடமையாளர்கள் அதை அகற்றிவிட்டு புதிய நிர்வாகக் குழுவை நிறுவ முடியும்.

தற்போதுள்ள அரசியல் அமைப்பில், முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை நடத்துவதில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி இரண்டும் குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றன. ஏகபோக முதலாளி வர்க்க நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதும், அதேசமயம் அது மக்களுடைய நலனுக்காகவே செய்யப்படுகிறது என்று மக்களை முட்டாளாக்குவதும் தான் ஆளுங்கட்சியின் வேலையாகும். அரசாங்கம் எதைச் செய்தாலும் அதற்கு எதிராகக் கூச்சல் போடுவது தான் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் பங்காகும். அவர்கள் உழைக்கும் பெரும்பான்மையினரின் நலன்களுக்காகப் பேசுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி, அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமரக்கூடிய நாளுக்காகக் காத்திருப்பதே அவர்களின் நோக்கமாகும்.

இன்று காங்கிரசு கட்சி எப்படி பேசுகிறது என்று பாருங்கள். கடந்த ஆண்டு இயற்றப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், மன்மோகன் சிங் அரசாங்கத்தின் பத்தாண்டு காலத்தில், தாராளமய, தனியார்மயமாக்கலின் அதே நிகழ்ச்சி நிரலை காங்கிரசு கட்சி நடைமுறைப்படுத்தி வந்தது. அந்த நேரத்தில், வேளாண் வணிகத்தின் தாராளமயமாக்கல் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் எதிரானது என்று கூறி பாஜக அதை எதிர்த்து வந்தது.

ஆட்சியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஏகபோகக் குடும்பங்களின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பாஜக மற்றும் காங்கிரசு இரண்டு கட்சிகளுக்கும் தெரியும். எதிர்கட்சியாக இருக்கும் போது, ​​ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் வீரர்களைப்போல நடிக்க வேண்டும். இது தான் இவர்கள் சூளுரைக்கும் பாராளுமன்ற பாரம்பரியம் என்றழைக்கப்படுவதன் உண்மையான உள்ளடக்கமாகும்.

அரசாங்கத்தை நடத்தும் கட்சியே எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்று அடையாளம் காண்பது, உண்மையை மக்களிடம் இருந்து மறைக்கப் பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற தீங்கான மாயையை இது உருவாக்குகிறது. ஆளும் முதலாளி வர்க்கத்தின் ஏதாவது ஒரு நம்பகமான கட்சியின் பின்னால் மக்களை அணிதிரட்டுவதற்கு இது உதவுகிறது.

எனவே சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் பாஜக-வைத் தோற்கடிப்பது, விவசாயிகளை முன்னேற்றப் போகிறது என்று நினைப்பது தவறானதும் மிகவும் தீங்கானதும் ஆகும் என்பதே உங்களுடைய கேள்விக்கான பதில்.

வேளாண் வர்த்தக தாராளமயமாக்கலின் நீண்ட வரலாறு, ஏகபோக முதலாளிகள்தான் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம், பாஜக-வுக்கு எதிரானது மட்டுமல்ல. நாம் போராடும் உண்மையான எதிரி ஏகபோக குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கமாகும்.

நமது பொது எதிரிக்கு எதிராக, நமது போராட்ட ஒற்றுமையைப் பாதுகாப்பதும் மேலும் வலுப்படுத்துவதும் நமது உடனடி பணியாகும். தனியார்மயம் மற்றும் தாராளமயமாக்கலுக்கு மாற்றானது, உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதும், முதலாளி வர்க்க பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் திட்டமும் ஆகும். இந்த மாற்றுத் திட்டத்தையொட்டி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும், வலுப்படுத்தவும் வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மக்கள் திரள் எதிர்ப்புக்கள் தீவிரமடையும் போதெல்லாம், மக்களுடைய அதிருப்தியை ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய பாதையில் கொண்டு செல்ல பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் வேலை செய்கின்றன என்பதை வரலாறு காட்டுகிறது. அவர்கள் எதிர்ப்புக்களைக் குறைக்கும் ஒரு பாதுகாப்பு வால்வ் போன்ற பங்கு வகிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆபத்து தற்போது, பாஜக-விற்கு பதிலாக ஒரு மாற்று நிர்வாகக் குழுவைக் கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களின் வடிவத்தில் இருக்கிறது.

தொ.ஒ.கு : பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு வால்வு போன்ற பங்கை எவ்வாறு செயல்படுத்துகின்றன?

லால் சிங் : உங்களுக்குத் தெரியும், பிரஷர் குக்கரில், அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம், ​​பாதுகாப்பு வால்வு நீராவியை வெளியேற்றுகிறது. குக்கர் வெடித்து விடாமல் பாதுகாப்பது அதன் வேலையாகும்.

1885-ல் காங்கிரசு கட்சி உருவானபோது, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அதை ஒரு பாதுகாப்பு வால்வாகக் கருதினர். 1857-இல் நடந்தது போல் இந்த துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து மக்களும் மீண்டும் ஒன்றுபட்டு கிளர்ச்சியில் எழலாம் என்று அவர்கள் அஞ்சினர். புரட்சிகர பாதையிலிருந்து மக்களை விலக்கி வைக்க, காங்கிரசு கட்சியை அவர்கள் சார்ந்து இருந்தனர்.

ஆங்கிலேயர்களின் சுரண்டல் மற்றும் அடக்குமுறையான அமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதற்குள் தங்கள் சொந்த நிலையை மேம்படுத்தவும் விரும்பிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளால் காங்கிரசு கட்சி வழிநடத்தப்பட்டது. மாகாண சபைகளுக்கு இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை நிறுவியதன் மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் காங்கிரசு கட்சித் தலைவர்கள் இடம் பெறவும், நாட்டுப்பற்று மிக்க உரைகளை அங்கு நிகழ்த்தவும் வழிவகை செய்து கொடுத்தனர்.

தற்போதுள்ள அமைப்பில் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், ஒரு பாதுகாப்பு வால்வு போல செயல்படுவது ஒரு முக்கியமான பணியாகும். சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினரின் விடுதலை வீரர்களாக அவர்கள் தங்களைக் காட்டிக்கொள்வதன் மூலம், மக்களுடைய போராட்டங்களைச் சூழ்ச்சியாகக் கையாளவும், இந்த அமைப்புக்கு அச்சுறுத்தலாக இந்தப் போராட்டங்கள்  மாறுவதைத் தடுக்கவும் செய்கிறார்கள்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் ஆளும் வர்க்கத்தால் எவ்வாறு சூழ்ச்சியாகக் கையாளப்பட்டன என்பதற்கு வரலாறு பல எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. 1975-77 நெருக்கடிநிலை ஆட்சியின் போது மக்கள் போராட்டத்தை ஆளும் வர்க்கம் எப்படி சூழ்ச்சியாகக் கையாண்டது என்பது அத்தகைய ஒரு எடுத்துக்காட்டாகும்.

1975 சூன் 26 அன்று இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு கட்சி அரசாங்கத்தால் தேசிய நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பெரும்பான்மையான மக்களுடைய அனைத்து சனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் ஒரே அடியில் பறிக்கப்பட்டன.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மக்கள் திரள் எதிர்ப்புக்கள் உச்சத்தை எட்டியிருந்த நேரம் அது. 1974-இல் இலட்சக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் முடங்கியது. நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் பெருகின. தற்போதுள்ள அரசைத் தூக்கியெறிந்துவிட்டு, ஒரு மக்கள் சனநாயக அரசை நிறுவ வேண்டுமென 1969-இல் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுத்த அழைப்பை ஏற்று ஏராளமான இளைஞர்கள் முன்வந்தனர். இந்தப் புரட்சிகர அழைப்பின் தாக்கம் நாட்டிற்குள் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள், மாணவர்கள் மத்தியிலும் பரவியது.

நெருக்கடிநிலைப் பிரகடனத்தின் பின்னணியில் இருந்த முக்கிய நோக்கமானது, புரட்சியைத் தடுப்பதாகும். தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற பெயரில் தொழிலாளர்கள், விவசாயிகள், அனைத்து புரட்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் எதிராக பரவலான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

நெருக்கடிநிலை ஆட்சிக்கு பொது மக்களுடைய எதிர்ப்பு அதிகரித்ததால் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள், காங்கிரசு கட்சியைத் தோற்கடிப்பதற்கும் “சனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும்” ஒரு இயக்கத்தை ஆரம்பித்தன.

தொழிற்சங்கத் தலைவர்களையும், கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களையும் பெரிய அளவில் சிறையிலடைத்ததோடு கூடுதலாக, பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் பல முன்னணி அரசியல்வாதிகளையும் மத்திய அரசு சிறையிலடைத்தது. இதில் ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிஹாரி வாஜ்பாய், சரண் சிங், லால் கிருஷ்ண அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் அடங்குவர். அனைத்து மக்களின் சனநாயக உரிமைகளுக்காகப் போராடியதாகக் கூறப்படும் இந்த அரசியல்வாதிகளை போராட்ட நாயகர்களாக உயர்த்துவதற்கு இந்தக் கைதுகள் உதவின.

சனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான அந்த இயக்கத்தின் விளைவு என்ன? காங்கிரசு கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சனதா கட்சி அரசாங்கத்தை நிறுவி, முதலாளி வர்க்கம் தன்னுடைய சர்வாதிகாரத்தைத் தொடர்ந்தது. புரட்சிகர மாற்றத்திற்கான போராட்டம் திசை திருப்பப்பட்டது.

நெருக்கடி காலத்தில் சனநாயகத்தின் வெற்றி வீரர்களாக பரப்புரை செய்யப்பட்ட பல அரசியல் பிரமுகர்கள் பின்னர் முதலமைச்சர்களாக பதவியேற்றனர். சிலர் நாட்டின் பிரதமரானார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் பாஜக-வை உருவாக்கினர். இது 1980-களில் காங்கிரசு கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சியாக ஆளும் வர்க்கத்தால் கட்டப்பட்டது.

நெருக்கடிநிலைப் பிரகடனம் மற்றும் “சனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான” இயக்கத்தைத் தொடங்குவது ஆகிய இரண்டும் ஏகபோகக் குடும்பங்கள் தலைமையிலான முதலாளி வர்க்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இரண்டுமே, மக்களைத் திசைதிருப்புவது மற்றும் பிளவுபடுத்துவது ஆகிய நோக்கத்திற்கு சேவை செய்வதன் மூலம், புரட்சியைத் தடுத்தும், தற்போதைய அமைப்பை பாதுகாத்தும் இருக்கின்றன. காங்கிரசு கட்சிக்கு ஒரு சாத்தியமான மாற்றை உருவாக்கும் ஆளும் வர்க்கத்தின் குறிக்கோளுக்கு அவை சேவை செய்திருக்கின்றன.

1975-77 காலகட்டத்தின் புரட்சிகர நெருக்கடியை சமாளிக்க முதலாளி வர்க்கத்திற்கு உதவிய காரணிகளில் ஒன்று, கம்யூனிச இயக்கத்தின் பிளவுபட்ட நிலையும், அதற்குள்ளிருக்கும் பல்வேறு கட்சிகள் முதலாளித்துவ கருத்தியலோடும், அரசியலோடும் சமரசம் கொண்டிருந்ததும் ஆகும். காங்கிரசு கட்சியையும், வலது பிற்போக்குத்தனத்தை எதிர்த்துப் போராடுவதற்காகவே நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டது என்ற காங்கிரசு கட்சியின் நியாயத்தையும் சிபிஐ கட்சி ஆதரித்தது. சிபிஐ(எம்) கட்சி, சனநாயகத்தை மீட்டெடுப்போம் என்ற பெயரில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தது.

இந்த முழு அனுபவத்திலிருந்தும் ஒரு முக்கியமான படிப்பினை என்னவென்றால், முதலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சி மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்கட்சிகள் மூலம் பாராளுமன்றத்திற்குள் ஆட்சி செய்கிறது. தற்போதுள்ள சனநாயக அமைப்பு பற்றி மாயைகளை உருவாக்கும் அதன் ஏஜன்டுகளை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அமைப்புகளுக்குள் விதைத்து வளர்ப்பதன் மூலம் அது ஆட்சி செய்கிறது. நேரம் வரும்போது ஆளும் கட்சியின் இடத்தைப் பிடிக்கத் தயாராக, சாத்தியமான மாற்று என்றழைக்கப்படும் கட்சிகளை மீண்டும் மீண்டும் உருவாக்குவதன் மூலம் அது ஆட்சி செய்கிறது.

2004-இல் என்ன நடந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கத்தால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட வகுப்புவாதப் படுகொலைகள் மற்றும் பிற கொடூரமான திசைதிருப்பல்கள் இருந்தபோதிலும், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆர்பாட்டங்கள் அந்த நேரத்தில் உச்சத்தை அடைந்திருந்தன. 14-ஆவது பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்தி, வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை மாற்றி, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சியை அமைப்பதன் மூலம் ஆளும் வர்க்கம் சூழ்நிலையை எதிர் கொண்டது. “இந்தியா ஒளிர்கிறது” என்ற முழக்கத்தை மாற்றி “மனித நேயத்துடன் கூடிய சீர்திருத்தங்கள்” என்ற முழக்கம் வைக்கப்பட்டது.

ஏகபோக முதலாளிகளின் வேலைத்திட்டம், அதன் இயல்பிலேயே தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரானது என்ற உண்மையை 2004-லிருந்து ஏற்பட்ட நிகழ்வுகள் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளன. அது தேச விரோதமானதும், சமூகத்தின் பொது நலன்களுக்கு எதிரானதும் ஆகும். அப்படிப்பட்ட மனித விரோதத் திட்டமாகிய தாராளமய – தனியார்மய திட்டத்தை மனித நேயம் கொண்டதாக மாற்ற முடியாது.

தற்போது, ​​இந்திய மற்றும் சர்வதேச ஏகபோக முதலாளிகள் கொரோனா நெருக்கடியை தொடர்ந்து பயன்படுத்தித் தங்களுடைய மக்கள் விரோத செயல்திட்டத்தை முன் கொண்டு செல்வதற்கு பாஜக-வை சார்ந்துள்ளனர். அதே நேரத்தில், தற்போதைய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பெருகி வரும் எதிர்ப்பையும் அவர்கள் அறிவார்கள். உழைக்கும் பெரும்பான்மை மக்களை பாஜக-வால் இனிமேலும் ஏமாற்ற முடியாது என்ற நிலை எற்படும் நேரத்திற்கு அவர்கள் தயாராக விரும்புகிறார்கள். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக-விற்கு நம்பகமான மாற்றை அவர்கள் உருவாக்க விரும்புகிறார்கள்.

மோடி மற்றும் பாஜக-வுக்கு மாற்றாக, பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கட்சிகளும் முதலாளி வர்க்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இத்தகைய அரசியல்வாதிகளும் கட்சிகளும்
“பாஜக-வைத் தோற்கடிப்போம்”, “சனநாயகத்தைக் காப்போம்!” என்பது போன்ற முழக்கங்களை ஊக்குவிப்பதில் சுயநலமான ஆர்வம் கொண்டுள்ளனர். 2024-இல் பாஜக-வின் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவர்களுடைய இலக்கை அடைவதற்கான ஒரு படியாக விவசாயிகள் போராட்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள். புரட்சிகர மாற்றிலிருந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கத்திற்கு அவர்கள் சேவை செய்கிறார்கள்.

தொ.ஒ.கு : தோழரே, தற்போது எழுப்பப்பட்டு வரும் “சனநாயகத்தைக் காப்போம்” என்ற அழைப்பு ஆபத்தான திசைதிருப்பல் என்று கூறுகிறீர்களா?

லால் சிங் : ஆம், அதைத்தான் நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன். இந்த அறைகூவலை விடுப்பவர்கள் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறார்கள். அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு சேவை செய்யவில்லை.

மிகப் பெரும் பணக்காரர்களாக உள்ள சிறுபான்மையினரின் நலன்களைப் பாராளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதே நாம் சந்திக்கும் யதார்த்தமாகும். அது ஒரு சில ஏகபோக முதலாளிகளின் நலனுக்காகவும், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு முற்றிலும் எதிராகவும் சட்டங்களை இயற்றுகிறது. அத்தகைய இந்த அமைப்பை தொழிலாளர்களும் விவசாயிகளும் ஏன் காப்பாற்ற வேண்டும்?

ஒரு வர்க்கப் பிளவுபட்ட சமுதாயத்தில், அரசியல் அமைப்பும், அரசு நிறுவனங்களும் எப்போதும் ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலனுக்காகவே சேவை செய்யும். சனநாயகத்தைப் பற்றி கருத்தியலாக பேசுவது என்பது இந்த யதார்த்தத்தை மறைப்பதாகும்.

தற்போதைய அரசியல் அமைப்பு, முதலாளி வர்க்க சனநாயகத்தின் ஒரு வடிவமாகும். முதலாளிகளின் நலன்களுக்கு முன்னுரிமையும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களும் உரிமைகளும் முதலாளிகளின் விருப்பத்திற்கு அடிபணிந்தவையாகவும் இருக்கின்றன. முதலாளி வர்க்கத்திற்கு – அதாவது சொத்து வைத்திருப்பவர்களுக்கும், மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டித் தங்கள் தனிப்பட்ட செல்வத்தைக் குவிப்பவர்களுக்கும் இது ஒரு சனநாயக அமைப்பாகும். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற சுரண்டப்படும் மக்களுக்கு இது சர்வாதிகாரமாகும். சட்டங்களும் கொள்கைகளும், உழைக்கும் பெரும்பான்மை மக்களைக் கசக்கிப் பிழிந்து, சொத்துடமை கொண்ட சிறுபான்மையினரின் நலன்களுக்கு சேவை செய்கின்றன.

ஒரு குறிப்பிட்ட நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க ஆளும் முதலாளி வர்க்கம் தேர்தல்களைப் பயன்படுத்துகிறது. தனக்கு விசுவாசமாக இருப்பதை நிரூபித்த வரலாறு கொண்ட கட்சிகள் மட்டுமே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்ற முதலாளி வர்க்கம் அனுமதிக்கிறது.

தேர்தல்கள் மக்களை ஏமாற்றவும், திசை திருப்பவும், பிளவுபடுத்தவும் உதவுகின்றன. இதை விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி வருபவர்கள் உணர்ந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பலர், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற இருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பரப்புரை, தங்கள் இயக்கத்தின் ஒற்றுமைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளிப்படையாகவே தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த சனநாயக அமைப்பைக் காப்பாற்ற வேண்டுமென்ற அறைகூவல், முதலாளி வர்க்கத்தின் அறைகூவலாகும். தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏமாற்றி, முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தில் அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டி வைப்பதற்காக எதிர்க்கட்சிகள் எழுப்பும் அறைகூவலாகும் இது.

தற்போதுள்ள நாடாளுமன்ற சனநாயக அமைப்பு, இந்தியாவில் கூட உருவாக்கப்படவில்லை. அது பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். ஆங்கிலேய காலனியர்கள், இந்த அன்னிய அமைப்பை இந்திய மண்ணில் புகுத்தினார்கள். அவர்கள் நிறுவிய சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையான அமைப்பைப் பாதுகாக்கும் கலையில் இந்தியப் பெரு முதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் கட்சிகளுக்குப் பயிற்சி அளிக்க அவர்கள் இந்த அமைப்பைப் பயன்படுத்தினர். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய முதலாளி வர்க்கம் இந்த அமைப்பை ஏற்றுக் கொண்டு, மக்களைப் பிரித்தாள்வதற்கு அதை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டது. இத்தகைய அமைப்பை, இந்திய மக்கள் காப்பாற்றுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

ஆங்கிலேயர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் எந்த வகையான அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பைக் கட்ட வேண்டும் என்பதை இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற கொள்கையை ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு எதிரான உண்மையான நாட்டுப்பற்றாளர்களும், புரட்சிகரப் போராளிகளும் உயர்த்திப் பிடித்தனர்.

1857 கிளர்ச்சியாளர்கள், “இந்தியா நமக்கே சொந்தமானது, நாமே அதன் மன்னர்கள்!” என்று அறிவித்தனர்.

1913 இல் உருவாக்கப்பட்ட இந்துஸ்தானி கெதர் கட்சி, ஆங்கிலேய காலனிய ஆட்சியை முற்றிலுமாகத் தூக்கியெறிந்துவிட்டு, இந்திய ஐக்கிய நாடுகளின் கூட்டாட்சிக் குடியரசை நிறுவுவதே தனது நோக்கமாக அறிவித்தது.

வீரத் தியாகி பகத் சிங்கும், அவரது இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழகத்தின் தோழர்களும், அனைத்து வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளை ஒழித்துக் கட்டுவதில் உறுதிகொண்ட புதிய அரசை நிறுவுவதற்காகப் போராடினர்.

நமது புரட்சிகர தியாகிகளின் நோக்கத்திற்கு 1947-இல் துரோகமிழைக்கப்பட்டது. அரசியல் அதிகாரம் லண்டனில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது. ஆனால் அது மக்கள் கைகளுக்கு வரவில்லை. அது, பெரும் நிலப்பிரபுக்களுடன் கூட்டுச் சேர்ந்திருந்த பெரு முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. இந்திய மக்களைப் பிரித்தாளுவதற்காக ஆங்கிலேய முதலாளி வர்க்கம் உருவாக்கிய அரசைக் கட்டிக்காப்பதும், மேலும் செழுமைப்படுத்துவதும் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை பெரும் முதலாளிகள்  உணர்ந்தனர்.

சனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற அறைகூவல், ஆங்கிலேய முதலாளி வர்க்கம் நம்மீது திணித்த நிறுவனங்கள், கோட்பாடுகள் மற்றும் கண்ணோட்டங்களைப் பாதுகாப்பதற்கான அறைகூவலாகும்.

பண்டைய இந்தியாவில் இருந்த சனநாயக அமைப்புகள் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், அவர் தலைமையிலான அரசாங்கம், ஆங்கிலேய பாராளுமன்ற அமைப்பாகிய வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பை நிர்வகிக்கிறது.

பாஜக-வின் பல்வேறு தலைவர்கள் செங்கோன்மை அல்லது இந்திய அரசியல் கோட்பாடு குறித்து உதட்டளவில் பேசி வருகிறார்கள். ஆனால், அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை என்ற செங்கோன்மையின் அடிப்படைக் கொள்கையை பாஜக அரசாங்கம் மீறிவருகிறது.

அது, இந்திய தத்துவத்தை நிலைநிறுத்துவது போல் பாசாங்கு செய்து கொண்டு, காங்கிரசு கட்சி மேற்கத்திய கருத்துக்களை ஆதரித்து வருவதாக விமர்சிக்கும் அதே வேளையில், பாஜக-வும் காங்கிரசு கட்சியைப் போலவே ஆங்கிலேய-அமெரிக்க ஆட்சி முறைகளைப் பின்பற்றுகிறது. எடுத்துக்காட்டாக, “குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுமை” என்ற மோடியின் முழக்கம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதி மற்றும் பிற ஏகாதிபத்திய நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படும் தடையற்ற சந்தை என்றழைக்கப்படும் சித்தாந்தத்தின் தெளிவான வெளிப்பாடாகும்.

குறைந்தபட்ச அரசாங்கம் என்றால் அனைவருக்கும் போதுமான உணவு, உடை மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும் என்பதாகும். அரசாங்கம், பொருளாதாரத்தில் பங்கு வகிப்பதை குறைந்தபட்சமாகக் குறைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் சந்தை சக்திகள் என்று அழைக்கப்படும் சக்திகளிடம் விட்டுவிட வேண்டும், அதாவது எல்லாவற்றையும் இலாப வெறி கொண்ட ஏகபோக முதலாளிகளுக்கு விட்டுவிட வேண்டும். அதிகபட்ச ஆளுமை என்றால், உலக வங்கியின் தொழில் செய்வதை எளிதாக்கும் குறியீட்டில் இந்தியாவின் நிலையை உயர்த்துவது என்று பொருளாகும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் விலையாகக் கொடுத்து, முதலாளிகள் அதிகபட்ச இலாபத்தை அறுவடை செய்வதற்கு பொருத்தமான நிலைமைகளை உருவாக்குவது என்று அதற்குப் பொருளாகும்.

“இந்தியா நமக்கே சொந்தமானது, நாமே அதன் மன்னர்கள்” என்ற 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களின் பிரகடனம், இந்திய அரசியல் சிந்தனையிலிருந்து மிகவும் மதிப்புமிக்க கருத்தை முன்வைத்திருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை கொண்டவர்கள் என்ற கருத்து தான் இது. மக்கள் தான் அரசை உருவாக்குகிறார்கள். இந்த சிந்தனை, தனியார் சொத்துடமையையும், சிறுபான்மையான சொத்து உடமையாளர்களின் சிறப்புரிமைகளையும் பாதுகாப்பது தான் அரசு என்ற மேற்கத்திய முதலாளித்துவக் கருத்தாக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

நம்முடைய வரலாற்றில், மக்களே தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுத்த ஒரு காலம் இருந்தது. மக்களைக் குறிப்பிடும் பிரஜா என்ற சொல், அரசனை உருவாக்குபவர் என்ற பொருளில் இருப்பது, இதைக் காட்டுகிறது. ஒருவர் பிறந்த சாதியின் அடிப்படையில் அவருடைய உரிமைகளையும் கடமைகளையும் வரையறுக்கும் மன்னராட்சிகள் உருவான போது மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்தனர். சமூக உபரியானது “ஆளப் பிறந்தவர்களாகக்” கருதப்பட்ட சிறுபான்மையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்திய அரசியல் கோட்பாட்டை நாம் நவீனமயமாக்க வேண்டும், அதாவது நவீன நிலைமைகளுக்கு பொருத்தமானதாக இந்திய அரசியல் கோட்பாட்டை நாம் உயர்த்த வேண்டும். மக்கள் தெரிவு செய்து, தேர்ந்தெடுக்க வேண்டியது ஒரு அரசனையோ அல்லது அரசியையோ அல்ல. அவர்கள் ஒரு குழுவைத் தேர்ந்தெடுப்பார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்தவர்களை எந்த நேரத்திலும் திருப்பியழைக்கும் உரிமையை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, மக்கள் தங்களுடைய அதிகாரத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் குழுவிடம் ஒப்படைப்பார்கள். அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

வளமையும், பாதுகாப்பும் இன்றைய நிலைமைகளுக்கு ஏற்ப வரையறுக்கப்பட வேண்டும். உணவு, உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், மின்சாரம் மற்றும் இணைய தொடர்பு ஆகியவை மனிதத் தேவைகளில் அடங்கும். முதலாளி வர்க்க பேராசை பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கும் பட்சத்தில், அனைவருக்கும் இவற்றை உத்தரவாதப்படுத்துவது முற்றிலும் சாத்தியமாகும்.

மொத்தத்தில், நாட்டில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து முற்போக்கு சக்திகளும் எதிர்கொள்ளும் பணி, தற்போதுள்ள முதலாளி வர்க்க சனநாயக அமைப்பைக் காப்பாற்றுவதல்ல. பாட்டாளி வர்க்க சனநாயகம் என்ற ஒரு உயர்ந்த அமைப்புக்காக நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். கோட்பாட்டின் அடிப்படையிலும், நடைமுறையிலும் இறையாண்மையை மக்களுடைய கைகளில் வைக்கும் ஒரு அமைப்பிற்காக நாம் போராட வேண்டும்.

தொ.ஒ.கு : அனைத்து விவசாயிகளுக்கும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் வளமையையும் உறுதிசெய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?

லால் சிங் : விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளை, முழு பொருளாதார அமைப்பையும் மறுசீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும். எதை, எவ்வளவு உற்பத்தி செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது, எந்தெந்த துறைகளில் எவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்குவது, எவ்வளவு வேளாண் விளை பொருட்களை, என்ன விலைக்கு வாங்குவது என்பது போன்ற முடிவுகள் தற்போது ஏகபோக முதலாளி வர்க்க பேராசையை நிறைவேற்றும் நோக்கத்தால் தீர்மானிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதை மாற்றி, ஒட்டுமொத்த மக்களின் பொருள் மற்றும் பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதை அதிகரிக்கும் நோக்கத்தை இலக்காக ஆக்க வேண்டும்.

ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து உயர்த்த வேண்டியத் தேவை இருக்கிறது. இதற்கு உணவு உற்பத்தியை நாம் அதிக அளவில் அதிகரிக்க வேண்டும். நாட்டிற்கு அதிக வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அதிக சிமென்ட் மற்றும் எஃகு உற்பத்தி, அதிக நெடுஞ்சாலைகள் தேவை. எனவே, வேலைக்குச் செல்ல விரும்பும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதுமான வேலை வாய்ப்புகள் இருக்கும்.

வேளாண் விளைபொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தை சமூக உடமையாக மாற்றுவதும், சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் உடனடி நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

விவசாய இடுபொருட்கள் விற்பனையையும், அனைத்து விளை பொருட்களின் கொள்முதலையும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். மலிவு விலையில் விவசாய இடுபொருட்கள் போதுமான அளவில் விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களின் மொத்த கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகத்தையும் அவர்கள் ஒழுங்கமைக்க வேண்டும். பொதுக் கொள்முதல் அமைப்பு, தினசரி நுகர்வுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் உள்ளடக்கிய பொது விநியோக அமைப்போடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

விவசாய விளைபொருட்களின் பெரும்பகுதியை அரசாங்கம் கொள்முதல் செய்வதாக மாறியவுடன், அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையாவது கிடைப்பதை உறுதி செய்ய முடியும். பருப்பு, காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களுக்கு நகர்ப்புறத் தொழிலாளர்கள் கொடுக்கும் அதிக விலைக்கும், விவசாயிகள் பெறும் குறைந்த விலைக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளியைக் குறைக்க முடியும்.

கிராமங்களில் உள்ள விவசாய சங்கங்களும் பிற மக்கள் அமைப்புக்களும் விவசாயச் சந்தைகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நகரங்களில் உள்ள தொழிற் சங்கங்களும் பல்வேறு மக்கள் அமைப்புக்களும் நகர்ப்புற சில்லறை விற்பனை நிலையங்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால், கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். அப்போதும் கூட, சிறிய அளவு நிலத்தில் பயிர் செய்து வரும் மிகவும் ஏழை விவசாயிகள் பிழைப்பது கடினம். ஆதாயமற்ற சிறிய அளவு நிலப் பிரச்சனையை சமாளிக்க, தனிப்பட்ட விவசாயிகளுக்கு இடையேயான போட்டியை ஒத்துழைப்பாக மாற்ற வேண்டும்.

வர்த்தகத்தில் தொடங்கி, விவசாயிகள் தன்னார்வமாக தங்களுடைய நிலத்தை ஒன்று கூட்டுவதற்கு, மத்திய, மாநில அரசாங்கங்கள் கூட்டுறவுகளை உருவாக்குவதை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும். பல விவசாயிகள் தங்கள் நிலங்களை ஒன்று திரட்டி உருவாக்கும் கூட்டுப் பண்ணைகளால், விவசாய உற்பத்தி திறனும், கிராமப்புற வருமானமும் அதிகரிக்கும். கூட்டுப் பண்ணைகளை வலுப்படுத்த அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அது நவீன தொழில்நுட்பம், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலவசமாகவோ அல்லது மலிவு விலையிலோ வழங்க வேண்டும்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் முடிவெடுப்பவர்களாக மாறினால் மட்டுமே இந்த எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இந்த நடவடிக்கைகள் ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்கு எதிராக இருப்பதால் எந்த முதலாளி வர்க்க அரசாங்கமும் இவற்றை செயல்படுத்தாது.

முதலாளி வர்க்கம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கு தங்களால் இயன்றவரை முயற்சிக்கும் என்பதை நன்கு அறிந்தே, நாம் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கிளர்ந்தெழ வேண்டும். நாம் நமது வலிமையையும் போராடும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், இதனால் ஆட்சியாளர்கள் எதையாவது ஒப்புக்கொள்ள அல்லது முற்றிலும் மதிப்பிழந்து நிற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கையில், தொழிலாளர்கள் – விவசாயிகள் நாம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய வலிமை வாய்ந்த சக்தியாக மாற வேண்டும்.உழைக்கும் மக்களாகிய நாம், இந்தியாவின் எதிர்காலத்தை நம் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்க முடியும்.

உழைக்கும் மக்களாகிய நாம், இந்தியாவின் எதிர்காலத்தை நம் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்க முடியும்.

முதலாளி வர்க்க ஆட்சியின் வடிவமாக இருக்கும் தற்போதைய பாராளுமன்ற சனநாயக அமைப்பை மாற்றி ஒரு புதிய அமைப்பை, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் சனநாயகத்தை நிறுவும் முக்கிய நோக்கத்தோடு நாம் உடனடிப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

1913 இல் உருவாக்கப்பட்ட இந்துஸ்தான் கெதர் கட்சியின் விவேகமான கருத்துக்களிலிருந்தும் துணிவான செயல்களிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய படிப்பினை என்னவென்றால், இந்தியாவின் அங்கமாக இருக்கும் ஒவ்வொரு தேசம், தேசிய இனம் மற்றும் மக்களின் உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும் ஒரு நாகரீகமான இந்தியக் குடியரசு கடமைப்பட்டுள்ளது என்பதாகும். தற்போதுள்ள இந்திய ஒன்றியக் குடியரசும் அதன் அரசியலமைப்பும், ஒன்றியத்தின் ஒவ்வொரு அங்கத்தினரின் தேசிய உரிமைகளைப் பாதுகாப்பது கிடக்கட்டும், அவற்றை அங்கீகரிக்கக் கூட இல்லை.

பஞ்சாபில் உள்ள மக்களில் சிலர், பஞ்சாபைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் அனைத்து பஞ்சாபியர்களும் ஒன்றுபடுமாறு காலம் அழைப்பு விடுப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையோ தமிழர்கள், வங்காளிகள், பீகாரிகள், மராத்தியர்கள், கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், ஒடியாக்கள், குஜராத்திகள், அரியான்விகள், அசாமியர்கள், மணிப்பூரிகள், நாகர்கள் மற்றும் பிற மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று காலம் அழைப்பு விடுக்கிறது. நாம் அனைவரும் ஒரே இந்திய முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்படுகிறோம். அதே இந்திய அரசால் நாம் ஒடுக்கப்படுகிறோம். இது ஒரு பொது எதிரிக்கு எதிரான ஒரே போராட்டமாகும். அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் இன்று ஆண்டு கொண்டிருக்கும் வர்க்கத்தை நம்மால் தோற்கடிக்க முடியும்.

பஞ்சாப்பைக் காப்பாற்றுவதற்கு, நாம் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். மூலதனத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரப் போக்கு, மனித நேயமற்ற அரசியல் அதிகாரம் மற்றும் ஏகபோக முதலாளிகளின் சமூக விரோத ஏகாதிபத்திய நடவடிக்கைகளிலிருந்து இந்தியாவை நாம் காப்பாற்ற வேண்டும்.

இந்த நாட்டை உருவாக்கும் அனைத்து தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களின் ஒரு சுதந்திரமான மற்றும் சமமான ஒன்றியமாக இந்தியக் குடியரசை நாம் மறுசீரமைக்க வேண்டும். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் பிற அனைத்து கொடூரமான சட்டங்களும் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும். இறையாண்மையை மக்களுக்கு அளிப்பதையும், மனித உரிமைகளும் சனநாயக உரிமைகளும் மீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் அரசியலமைப்பை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த் தந்திரத்தில் கூட்டாளியாக இருப்பதற்கு பதிலாக, எல்லா ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளோடும் கூட்டாளியாக, தெற்காசியாவிலும் உலக அளவிலும் அமைதிக்கான காரணியாக இருக்கும் வகையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும், சர்வதேச உறவுகளையும் நாம் மறுசீரமைக்க வேண்டும்.

மொத்தத்தில், அரசு பயங்கரவாதத்துடன் சேர்ந்து வரும் தற்போதைய தாராளமய தனியார்மய திட்டத்திற்கு, உண்மையான மாற்றாக இந்திய மறுமலர்ச்சி, அவசியமென நிலைமைகள் கூவி அழைக்கின்றன.

தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் நாம் அனைவரும் முடிவெடுப்பவர்களாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவது இந்திய சமுதாயத்தை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான பாதையைத் திறக்கும்.

இந்திய மக்கள் நாம் மன்னர்களாகவும், அனைவரின் வளமைக்கும் பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் கொண்ட ஒரு புதிய இந்தியா பிறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.

தொ.ஒ.கு : தோழர், இந்த ஆர்வமூட்டும், தெளிவூட்டும், ஊக்கமளிக்கும் நேர்காணலுக்கு மிக்க நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *