மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சியின் 104-வது ஆண்டுவிழா

சோசலிசம் மட்டுமே முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்புக்கு உண்மையான மாற்று

21-ஆம் நூற்றாண்டின் 20-களின் துவக்கம், கொரோனா வைரசு தொற்றுநோயாலும், மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்ட பொருளாதார செயல்பாட்டின் பொது முடக்கத்தாலும் மனித சமூகம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் தள்ளப்பட்டு இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டமும், கடன் சுமையும், வறுமையும் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளன. பெரும்பான்மையான மக்கள் சொல்லொணாத் துன்பங்களை சந்தித்து வந்த அதே நேரத்தில், உலகின் பணக்கார கோடீஸ்வரர்கள் முன்னெப்போதையும் விட வேகமாக தங்கள் செல்வத்தைப் பெருக்கியுள்ளனர். தங்களை சனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் அரசுகள், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் விலையாகக் கொடுத்து, ஏகபோக முதலாளித்துவ கோடீஸ்வரர்களுக்கு ஆதரவான சட்டங்களை இயற்றியுள்ளன.

தொழிலாளர் மற்றும் சிப்பாய்களுடைய பிரதிநிதிகளின் பெட்ரோகிராட் சோவியத்தின் கூட்டம், 1917, அக்டோபர் 25 (நவம்பர் 7)

தற்போதுள்ள முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்புக்கு மாற்று என்ன, அதை எப்படிக் கொண்டு வருவது? இந்த கேள்விக்கு ஒரு தெளிவான பதிலை 20-வது நூற்றாண்டு கொடுத்திருக்கிறது. 1917-இன் ரஷ்யப் புரட்சியும், சோவியத் யூனியனில் ஒரு சோசலிச அமைப்பை உருவாக்கியதும், கோட்பாடு மற்றும் நடைமுறையில் மாற்றை நிறுவி, நிரூபித்து காட்டியது. அது, முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பிலிருந்து உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர் விடுதலை பெற வழிவகுத்தது.

அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து சோவியத் யூனியனில் ஒரு புதிய சமூக அமைப்பும், ஒரு புது வகையான அரசு அதிகாரமும் அரசியல் வழிமுறையும் உருவானது. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாற்றத்தைக் கொண்டு வருவதில் உறுதி கொண்ட அரசியல் சக்தியாக அது இருந்தது. மனிதகுலம் இதுவரை கண்ட எந்த அரசியல் சக்தியிலிருந்தும் தர ரீதியாக வேறுபட்டதாகவும், மிகவும் உயர்ந்ததாகவும் அது இருந்தது.

பிரான்சு மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் 19 ஆம் நூற்றாண்டு கண்ட புரட்சிகளிலிருந்து ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி தரத்தில் வேறுபட்டதாக இருந்தது. அந்த முந்தைய புரட்சிகள், முதலாளித்துவ சனநாயகப் புரட்சிகளாகும், அவை சுரண்டும் ஒரு சிறுபான்மை வர்க்கத்தின் ஆட்சியை மாற்றி, மற்றொரு சுரண்டும் சிறுபான்மை வர்க்கத்தின் ஆட்சியை நிறுவுவதற்கு வழிவகுத்தன. 1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சியானது முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இதுவரை சுரண்டப்பட்டு வந்த பெரும்பான்மையினரின் ஆட்சிக்கு வழிவகுத்தது. பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் படை வீரர்களுடன் சேர்ந்து சோவியத்துகளாக அணி திரட்டப்பட்டனர். அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷவிக்) என்று அழைக்கப்படும், லெனின் தலைமையிலான முன்னணி கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்டனர்.

உலக முதலாளிகளின் ஒருங்கிணைந்த வலிமைக்கு எதிராக பிழைத்திருப்பதும் முன்னேறுவதும், சோவியத்தின் புதிய அரசியல் அதிகாரத்திற்கும், அமைப்பிற்கும் ஒரு கடுமையான எதிர்நீச்சலிடும் போராட்டமாக இருந்தது. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசையும் சோசலிச அமைப்பையும் அழிப்பதற்காக உலக ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் மீண்டும் பல முயற்சிகளை மேற்கொண்டன. அவர்கள் ஆக்கிரமிப்புப் படைகளை அனுப்பியும் உள் நாட்டிலிருந்தே நாசவேலைகளில் ஈடுபட்டும், எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். 1956-இல் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது காங்கிரசில் தொடங்கி, சோவியத் தலைமையை வர்க்கப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்புவதில் அவர்கள் வெற்றி பெற்றனர். ஒரு சீரழிவான செயல்முறை தொடங்கியது, இதன் விளைவாக பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய துறைகளில் சோசலிசம் என்ற போர்வைக்குள், முதலாளித்துவம் மீண்டும் கட்டியமைக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளை பயன்படுத்தி ஏகாதிபத்தியர்களும் அவர்களது கூட்டாளிகளும் 1991-இல் சோவியத் யூனியனை முற்றிலுமாக அழித்தொழித்தனர்.

கடந்த 30 ஆண்டுகளாக, சந்தை சார்ந்த பொருளாதாரத்திற்கும், பலகட்சி பிரதிநிதித்துவ சனநாயகத்திற்கும் மாற்று இல்லை என்று உலக முதலாளிகள் மீண்டும் மீண்டும் அறுதியிட்டுக் கூறி வருகின்றனர். ஆனால், முதலாளிகளின் தனிப்பட்ட இலாபத்தை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பு, அனைவருக்கும் வேலை வாய்ப்பையும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் வழங்க முடியாது என்பதை வாழ்க்கை அனுபவம் மீண்டும் மீண்டும் காட்டியுள்ளது. முதலாளித்துவ கோடீஸ்வரர்களின் போட்டிக் கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவதற்கான வாய்ப்புக்காக போட்டியிடும் அரசியல் அமைப்பு, பெரும் பணக்கார சிறுபான்மையினருக்கு மட்டுமே சனநாயகமாகும்.  பெரும்பான்மையான மக்கள், முடிவுகளை எடுப்பதிலிருந்து இது ஒதுக்கி வைக்கிறது.

ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்கு சக்திகளால் உலகின் முதல் சோசலிச அரசு அழிக்கப்பட்டது என்ற உண்மை, சோவியத் அனுபவத்தின் படிப்பினைகளின் முக்கியத்துவத்தை எந்த வகையிலும் மறுக்கவில்லை. தற்போதைய அமைப்பிற்கு மாற்றை கண்டுபிடிக்க ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் 1917 மகத்தான அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த அக்டோபர் புரட்சியின் 104-வது ஆண்டுவிழா, 2021 நவம்பர் 7 ஆகும்.

மகத்தான அக்டோபர் புரட்சி

1917 பிப்ரவரியில் ஒரு மக்கள் எழுச்சியால் ரஷ்ய ஜார் மன்னன் தூக்கியெறியப்பட்ட போது, ஒரு வழக்கத்திற்கு மாறான சூழ்நிலை அங்கு நிலவியது, அதை ‘இரட்டை அதிகாரம்’ என்று லெனின் அழைத்தார். முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிக அரசாங்கம் ஒரு பக்கத்தில் இருந்தது. அது, முதல் உலகப் போரில் ரஷ்யாவின் தலையீட்டை நீடிக்க விரும்பியது. மறுபுறம், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படைவீரர்கள், தங்கள் சோவியத்துகளின் பிரதிநிதிகளால் ஒழுங்கமைக்கப்பட்டு, அமைதி, நிலம் மற்றும் உணவுக்காக பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்து என்பது ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது பேரூரில் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பிரபலமான அரசியல் அமைப்பின் ஒரு வடிவமாகும். இது தொழிலாளர்களால், அவர்களது சக தொழிலாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, தொழிலாளி வர்க்கத்தின் அனுபவம் வாய்ந்த, நன்கு சோதிக்கப்பட்ட பிரதிநிதிகளின் குழுவாகும். 1905 இல் தோல்வியுற்ற மக்கள் எழுச்சியின் போது தொழிலாளர்கள், சோவியத்துகளை உருவாக்கினர். பிப்ரவரி 1917 இல், ஜார் ஆட்சியை, புரட்சிகர எழுச்சி தூக்கியெறிந்த போது, சோவியத்துகள் பற்றிய கருத்து மீண்டும் தலை தூக்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோவியத்துக்களைக் கட்டியெழுப்பி பலப்படுத்தும் முயற்சிக்கு போல்ஷவிக் கட்சி தலைமை தாங்கியது.

மக்களுடைய கொழுந்துவிட்டு எரியும் எந்த பிரச்சனைகளுக்கும் தற்காலிக முதலாளி வர்க்க அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது என்று மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்கு, போல்ஷவிக் கட்சி சோவியத்துகளின் மன்றத்தைப் பயன்படுத்தியது. அமைதி, நிலம் மற்றும் உணவுக்கு உத்தரவாதம் அளிக்க, சோவியத்துக்களில் அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் கைகளில் அரசியல் அதிகாரத்தை எடுத்துக்கொள்வது அவசியமாகும். போல்ஷவிக் கட்சியின் விடாப்பிடியான முயற்சியின் விளைவாக, அக்டோபர் 1917-இல், சோவியத்துகளின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், “அனைத்து அதிகாரமும் சோவியத்துகளுக்கே!” என்ற முழக்கத்தையொட்டி அணி திரண்டனர்.

அன்றைய ரஷ்ய நாட்காட்டியில் அக்டோபர் 25 ஆம் தேதியாக இருந்த நவம்பர் 7 இல், புரட்சிகர தொழிலாளர்களும், படைவீரர்களும், மாலுமிகளும் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றி, முதலாளி வர்க்க அரசாங்கத்தின் பிரதிநிதிகளைக் கைது செய்தனர். அவர்கள் அமைச்சரகங்கள், அரசு வங்கி மற்றும் இரயில் நிலையங்கள், தபால் மற்றும் தந்தி அலுவலகங்களை ஆக்கிரமித்தனர்.

தொழிலாளர்கள் மற்றும் போர்வீரர்களுடைய பிரதிநிதிகளின் சோவியத்துகளுடைய அனைத்து ரஷ்ய காங்கிரசு, தன்னுடைய இரண்டாவது கூட்டத்தை, நவம்பர் 7 ஆம் தேதி இரவு 10:40 மணிக்குத் தொடங்கியது. சோவியத்துகளின் காங்கிரசு, அரசியல் அதிகாரத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டதாக அறிவிக்கும், தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளின் ஒரு வேண்டுகோளுக்கு அது ஒப்புதல் அளித்தது. நவம்பர் 8 ஆம் தேதி, சோவியத்துக்களுடைய காங்கிரசு, அமைதிக்கான ஒரு ஆணையை ஏற்றுக்கொண்டதன் மூலம், முதல் உலகப் போரில் ரஷ்யாவின் பங்கேற்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. மேலும் காங்கிரசு, நிலத்தின் மீதான ஆணையை ஏற்றுக்கொண்டது, அதன் மூலம் நிலப்பிரபுக்களின் நூற்றுக்கணக்கான கோடி ஏக்கர் சாகுபடி நிலங்களைப் பறித்து, அவற்றை விவசாயிகள் குழுக்களின் கைகளில் ஒப்படைத்தது.

முதல் சில மாதங்களுக்குள் சோவியத் அரசு, பெரு முதலாளிகளின் சொத்துக்களைக் கைப்பற்றி, பெருவீத தொழில்கள், போக்குவரத்து, வங்கி மற்றும் வர்த்தகத்தை, பொது உடைமையின் கீழ் சமூக நிறுவனங்களாக மாற்றியது. அனைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் எல்லா பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியும், விநியோகமும் ஒரே திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

அதன் முதல் பத்து ஆண்டுகளில், உழைக்கும் விவசாயிகள் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து தங்கள் நிலங்களை ஒன்று திரட்டி பெரிய அளவிலான கூட்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கு சோவியத் அரசு அவர்களுக்கு ஆர்வமூட்டியது. அங்கு சுரண்டலற்ற, வேலையின்மை இல்லாத, பணவீக்கம் இல்லாத, மேலும் எந்த வகையான நெருக்கடிகளும் இல்லாத ஒரு புதிய சோசலிச பொருளாதார அமைப்பு உருவானது.

அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் பெண்களை விடுவிக்க சோவியத் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பதை நிறுவியது. சமூக உற்பத்தி, அரசியல் மற்றும் கலாச்சார விவகாரங்களில், ஆண்களுக்கு சமமாக பெண்கள் பங்கேற்பதை சாத்தியமாக்கும் வகையில் பொது உணவகங்களும் குழந்தை பராமரிப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன.

முடிவெடுக்கும் அதிகாரம்

முதலாளித்துவ வர்க்கமும் அதன் அனைத்து சித்தாந்தவாதிகளும் “பல கட்சி சனநாயகம்” என்ற அரசியல் அமைப்பு, சோவியத் அமைப்பை விட உயர்ந்தது என்று கூறுகின்றனர். சோவியத் அமைப்பை அவர்கள் “ஒரு கட்சி சர்வாதிகாரம்” என்று அழைக்கிறார்கள். ஒரு அரசியல் அமைப்பின் தரமானது, தேர்தல் வழிமுறையில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தை அவர்கள் பரப்புகிறார்கள்.

ஒரு அரசியல் அமைப்பு மக்களுக்கு சனநாயகத்தை உத்தரவாதப்படுத்துகிறதா இல்லையா என்பது அந்த அமைப்பில், முடிவெடுக்கும் அதிகாரம் யார் கைகளில் இருக்கிறது என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியா போன்ற சனநாயக நாடுகள் என்று கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசுகளில், முடிவெடுக்கும் அதிகாரமானது, மிகப் பெரிய செல்வந்தர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ள முதலாளிகளால், அவர்கள் சார்பாக ஆட்சி செய்யுமாறு ஒப்படைக்கப்பட்டுள்ள, ஒரு சிறிய குழுவான அரசியல்வாதிகளின் கைகளில் தீர்மானிக்கும் அதிகாரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. முதலாளி வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதாவது ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்கப்படும் வாக்குப்பதிவு நாளைத் தவிர ஆளுமையில் மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

சோவியத் யூனியனில், உச்ச சோவியத்தின் உறுப்பினர்கள் உட்பட, கீழ்மட்டத்திலிருந்து மிக உயர்ந்த மட்டம் வரை, தங்கள் சோவியத்துகளில் பணியாற்றுவதற்காகத் தங்கள் பிரதிநிதிகளைத் தொழிலாளர்களும், போர் வீரர்களும் மற்றும் விவசாயிகளும் தெரிவு செய்து தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் வாக்காளர்களால் திரும்ப அழைக்கப்படக் கூடியவர்கள் ஆவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குள் ஆளும் கட்சி என்றும், எதிர்க்கட்சி என்றும் எந்தப் பிரிவினையும் இல்லை. சட்டங்களை இயற்றுவதற்கும், நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கும், ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளைச் செயல்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு முழுவதும் பொறுப்பாகும்.

ஜார் அரசில் சலுகை பெற்றவர்களாக, மிக அதிக ஊதியம் பெற்று வந்த அதிகாரிகளை மாற்றி, திறமையான தொழிலாளர்களின் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒட்டுண்ணியான ஜாரின் இராணுவத்தை மாற்றி சுரண்டுபவர்களை தூக்கியெறியும் புரட்சிகரப் போராட்டத்தில் தோன்றி வளர்ந்த செஞ்சேனை வந்தது.

1936 இல், சோவியத் மக்கள் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டனர். சோவியத் சமுதாயத்தில் சுரண்டும் வர்க்கங்கள், பொருளாதார வர்க்கங்களாக இல்லை என்ற உண்மையை அது அங்கீகரித்தது. தொழிலாளர்கள் மற்றும் கூட்டுறவு விவசாயிகள் ஆகிய இரண்டு தோழமையான வர்க்கங்களையும், மக்கள் அறிவுத் துறையினரை மட்டுமே கொண்டதாக சோசலிச கட்டுமானம் ஒரு கட்டத்திற்கு முன்னேறி இருந்தது.

1936 அரசியலமைப்பு சட்டம், இதுவரை உலகில் உள்ள எல்லா அரசியல் சட்டங்களைக் காட்டிலும் மிகவும் சனநாயக மற்றும் நவீன அரசியலமைப்புச் சட்டமாக இருக்கிறது. வயது வந்த அனைவருக்கும் பொதுவான வாக்குரிமையை நிறுவியதோடு, வேட்பாளர்களை முடிவு செய்வதில் அனைத்து வாக்காளர்களின் உரிமையையும் அது அங்கீகரித்துள்ளது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களை முடிவு செய்ய நீண்ட மற்றும் தீவிர செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் குறித்து, அனைத்து வாக்காளர்களும் தத்தம் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டு, அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலைத் தீர்மானிக்க வழிவகுத்தது. அதன் பிறகுதான் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க, மக்களின் இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது.

சோவியத் அரசியல் அமைப்பை “ஒரு கட்சி சர்வாதிகாரம்” என்று அழைப்பதன் மூலம், முதலாளித்துவ செய்தித் தொடர்பாளர்கள் மையக் கருத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்புகின்றனர். முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாராளுமன்ற மற்றும் அதிபர் அமைப்புகளில், ஒரு சிறிய குழு தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது, ஆனால், சோவியத் அமைப்பில் உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் முடிவெடுக்கும் வழிமுறையில் முக்கிய பங்கு வகித்தனர் என்பது தான் மையக் கருத்தாகும். மக்களுக்கு வழிகாட்ட, கம்யூனிஸ்ட் கட்சி, தொலைநோக்கு பார்வையையும், ஒழுங்கமைக்கப்பட்ட மேம்பட்ட விழிப்புணர்வையும் வழங்கியது.

1956 ஆம் ஆண்டு சோவியத் கட்சியின் 20-ஆவது மாநாட்டில் தொடங்கிய மார்க்சியம்-லெனினிசம் மற்றும் அறிவியல் சோசலிசத்திலிருந்து விலகிச் செல்லும் போக்கு, அரசில் மக்களின் பங்கை அகற்ற வழிவகுத்தது. முடிவெடுக்கும் அதிகாரம், கட்சி மற்றும் அரசின் தலைமையிலுள்ள ஒரு திருத்தல்வாதக் குழுவின் கைகளில் குவிக்கப்பட்டது.

முடிவுரை

அரசியல் அமைப்புக்கும் பொருளாதாரத்தின் போக்கிற்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது பொருளாதாரத்தின் மூலம் யார் பயனடைகிறார்கள், யார் பயனடைவதில்லை என்பதைத் தீர்மானிக்கிறது. பொருளாதாரத்தின் போக்கு மாற வேண்டுமானால், அரசியல் அமைப்பின் தன்மையை மாற்ற வேண்டும். முடிவெடுக்கும் அதிகாரத்தை உழைக்கும் பெரும்பான்மை மக்களின் கைகளில் கொண்டு வர வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலுள்ள சிலர், தற்போதுள்ள நாடாளுமன்ற முறையை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். தற்போதுள்ள அரசு அனைத்து வர்க்கங்களின் நலன்களுக்கும் சேவை செய்ய முடியும் என்ற தீங்கான மாயையைப் பரப்புகின்றனர். ஆனால், நமது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அன்றாட அனுபவம், பாராளுமன்ற சனநாயகம் என்பது முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஒரு வடிவம் என்ற லெனினிச முடிவை உறுதிப்படுத்துகிறது. எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், யார் அமைச்சர்களாக இருந்தாலும், முதலாளித்துவ ஆட்சி பாதுகாப்பாகத் தொடர்கிறது.

முதலாளி வர்க்கத் தாக்குதலுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் இன்று நம் நாட்டில் எழுச்சி பெற்று வருகின்றன. அன்று போல்ஷவிக்குகள் செய்ததைப் போல, முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும், வலுப்படுத்தவும் வேண்டுமென கம்யூனிஸ்டுகளைக் காலம் கூவி அழைக்கிறது. முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிரான போராட்டம், சிறுபான்மையான பெரும் பணக்கார சுரண்டல் அதிபர்களின் பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *