தோழர் தங்கசாமி வில்சன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

நமது அன்புக்குரிய தோழர் தங்கசாமி வில்சன், 2021 அக்டோபர் 20 ஆம் தேதி இயற்கை எய்தியதை பெருந் துயரத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்தியக் குழு அறிவிக்கிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த தோழர் வில்சன் சிறுவயதிலிருந்தே கம்யூனிச கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டார். கட்சி மற்றும் அதன் கொள்கையின் மீது அவருக்கு இருந்த முழு நம்பிக்கையை எதனாலும் அசைக்க முடியவில்லை. அவர் உழைக்கும் வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக விடாப்பிடியாக பணியாற்றினார். அனைத்து வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் உழைக்கும் மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனது அயராத உழைப்பின் மூலம் மக்களின் அன்பையும் நேசத்தையும் பெற்றிருந்தார்.

அவரோடு வாழ்ந்த மற்றும் பணிபுரிந்த மக்களின் துயரத்தின் வெளிப்பாடு அவரது இறுதி சவ அடக்க நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. மக்களுடைய நலனுக்காக எப்போதுமே துணிவோடு போராடிய தங்களுடைய அன்பிற்குரிய நண்பர் மற்றும் தோழருக்கு தங்கள் அன்பையும் மரியாதையையும் காட்டும் விதமாக, நூற்றுக்கணக்கான அவரது தோழர்களும், பொது மக்களும் – தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தோழரின் இறுதி நிகழ்வில் முன்வந்து பங்கேற்றனர்.

சிவப்புத் துணியால் போர்த்தி மலர் மாலைகளால் அலங்கரித்த தோழர் வில்சனின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் முன் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தினருக்கு முன்னர், நமது கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங் அனுப்பியிருந்த நெகிழ்ச்சியான இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்சியின் பல தோழர்களும் தோழர் வில்சனின் வாழ்க்கை மற்றும் கட்சிப் பணிகளைப் பற்றிய தத்தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நினைவேந்தல் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர். சிபிஐ(எம்) கட்சியின் வட்டாரக் குழுவின் தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) சார்பில் தோழர் வில்சன் உடல் மீது மலர் வளையம் வைத்து தம் அஞ்சலியைச் செலுத்தினர். மக்களுடைய உரிமைகளுக்காகவும் கம்யூனிசத்துக்காகவும் தோழர் வில்சன் மற்றும் கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் பங்களிப்பை அவர்கள் போற்றினர்.

தோழர் வில்சனின் மறைவு, கட்சிக்கும் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மத்தியக் குழு செங்கொடியைத் தாழ்த்தி, மறைந்த நமது தோழருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறது.

One comment

  1. ஆழ்ந்த இரங்கல் தோழர் வில்சன் செவ்வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *