இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் – தோழர் லால் சிங்கின் இரங்கல் செய்தி :
தோழர்களே,
நம்முடைய அன்பிற்குரிய தோழர் டி வில்சன் 20-10-2021 அன்று மறைந்துவிட்டார் என்ற மிகவும் துயரமான செய்தி நேற்று எங்களுக்குக் கிடைத்தது. இளமையான தனது 57 வது வயதில், குணப்படுத்த முடியாத ஒரு கொடிய நோயை எதிர்த்து அவர் ஒரு நீண்ட தீரமான போராட்டம் நடத்திய போதிலும், இறுதியில் அவரை நேசிக்கும் தோழர்கள் சூழ்ந்திருக்க அவர் இயற்கை எய்தினார்.
தங்கசாமி வில்சன், தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான உறுதி மிக்கப் போராளியாக இருந்தார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மஞ்சாலுமூடு கிராமத்தில் உள்ள ஒரு தொழிலாளி வர்க்க குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயதிலிருந்தே தொழிலாளர்களின் போராட்டங்களில் பங்கேற்றார். கம்யூனிச கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட அவர் இளம் வயதிலேயே கட்சி அமைப்பில் சேர்ந்தார்.
அவரை முதன் முதலில் சந்தித்ததை நான் தெளிவாக நினைவு கூர்கிறேன். அவர் ஒரு ஆற்றல் மிக்க, ஆர்வமுள்ள இளைஞராக இருந்தார், இந்தப் பகுதியில் கட்சியைக் கட்டுவதற்கு, மறைந்த தோழர் பி தாஸின் தலைமையில் பணியாற்றிய பல இளைஞர்களில் அவரும் ஒருவர். அவர் ஒரு ஓவியக் கலைஞராக வேலை செய்தவர். தனது திறமையை அழகான சுவர் ஓவியங்கள் மற்றும் எழுத்துக்கள் மூலம் அவர், கட்சி மற்றும் தொழிலாளர் இயக்கத்திற்கு சேவை செய்தார்.
கட்சி அவருக்கு எந்தப் பணியை வழங்கினாலும், அதை அவர் உற்சாகத்தோடு நிறைவேற்றுவார். தோழர் தாஸின் மறைவுக்குப் பிறகு, தோழர் வில்சன் கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்ற தோழர்களைத் துணிவோடு, எவ்வித ஊசலாட்டமுமின்றி உறுதியாக கட்சிப் பணியை முன்னெடுத்துச் சென்றார். அவர் கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினராகவும், அதன் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். கட்சியின் நிலைப்பாட்டையும், செய்திகளையும் அவர் வெளிப்படையாகவும் அச்சமின்றியும் மக்களிடையே எடுத்துரைத்தார். பல பாராளுமன்ற, சட்ட மன்றத் தேர்தல்களில் அவர் கட்சியின் வேட்பாளராக நின்றார். ஒரு பாறை போல அவர் தன் இறுதி மூச்சு வரை, கட்சியுடன் உறுதியாக நின்றார். அவர் உண்மையிலேயே தனது வாழ்க்கையை மனித இனத்தின் சேவைக்காக அர்ப்பணித்தார்.
வில்சன் போன்ற ஒரு மகனைப் பெற்றெடுத்ததற்காக அன்புத் தாய் ஜாய்ஸை பணிவோடு வணங்குகிறேன். நான் அங்கு வர இயலாவிட்டாலும், என் மனமும் இதயமும் உங்கள் அனைவரோடும் இருக்கிறது. வில்சனின் நெருங்கிய மற்றும் அன்புக்குரியவர்கள், அவரது தோழர்கள், அவரது சகோதரர்கள், சகோதரிகள், மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் துயரத்திலும் நான் பங்கேற்கிறேன்.
41 ஆண்டுகளுக்கு முன்பு நாம் நமது கட்சியை நிறுவியபோது, நாம் தீர்மானித்த பாதையில் உறுதியாக அணிவகுத்து செல்வோம் என்று உணர்ச்சி நிறைந்த இந்த நேரத்தில் நான் உறுதி ஏற்கிறேன். நம் கண்ணின் மணி போல நமது கட்சியைப் பாதுகாத்து பலப்படுத்துவோம். ஒருவர் மற்றொருவரை எந்த வகையிலும் சுரண்டுவதோ ஒடுக்குவதோ இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற நமது இலட்சியத்தை அடைவதற்கு ஓய்வு ஒழிவின்றி பணியாற்றுவோம்.
அன்புத் தோழர் வில்சனுக்கு செவ்வணக்கம்!
லால் சிங்
பொதுச் செயலாளர், சிஜிபிஐ
அக்டோபர் 21, 2021