தமிழ்நாட்டில் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் மோசமான வாழ்வாதார பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்

இந்த ஆண்டு செப்டம்பரில், ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டிலுள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையை மூடப்போவதாக அறிவித்தது. இதனால், கிட்டத்தட்ட 4,000 நிரந்தரத் தொழிலாளர்களும் சுமார் 40,000 ஒப்பந்த அல்லது தற்காலிக தொழிலாளர்களும் வேலையிழப்பார்கள். ஃபோர்டுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுக்கும் 75 பெரிய நிறுவனங்களும், 200 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் மூடப்படும் அபாயம் உள்ளது.

சென்னையிலுள்ள ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதை எதிர்த்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

கடந்த சில மாதங்களில் அனைத்து முக்கிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளன. தமிழகத்தில் மட்டும் கடந்த 11 மாதங்களில் கிட்டத்தட்ட 80,000 முதல் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையின் புறநகரில் உள்ள திருப்பெரும்புதூர், ஒரகடம், மறைமலைநகர் மற்றும் திருவள்ளூரில் உள்ள வாகன உற்பத்தி மண்டலங்களில் பெரிய அளவில் நடைபெற்றுவரும் பணிநீக்கங்களின் விளைவாக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, இந்தியாவின் மிகப்பெரிய வாகனங்கள் உற்பத்தி மையங்களில் ஒன்றாகும், அமெரிக்காவின் வாகன தொழிற்துறையின் மையமாக விளங்கும் டெட்ராய்ட் நகரை ஒப்பிடும் வகையில் சென்னையை “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று குறிப்பிடப்படுகிறது. உலகில் உள்ள முன்னணி 10 வாகன மையங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இங்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 13 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மும்பை போன்ற நகரத்திலுள்ள மொத்த கார்களின் எண்ணிக்கையை விட 27 சதவீதம் அதிகமாகும். தொழில் துறை கணிப்பின்படி, இங்கு ஒவ்வொரு நிமிடமும் 3 கார்களும், ஒவ்வொரு இரண்டு நிமிடங்களில் 1 டிரக்கும், ஒவ்வொரு ஆறு வினாடிகளில் ஒரு மோட்டார் சைக்கிளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் வாகன உதிரிபாக உற்பத்தியில் 35 சதவிகிதமும், நாட்டின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 45 சதவிகிதமும் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது.

ஆசிய சந்தைகளில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிஎம்டபிள்யூ, அசோக் லேலண்ட், ஃபோர்டு, மகேந்திரா அண்டு மகேந்திரா, இந்துஸ்தான் மோட்டார்ஸ், மிட்சுபிஷி மற்றும் ராயல் என்பீல்டும் மற்றும் பல பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தி ஆலைகளைத் தமிழகத்தில் அமைத்துள்ளன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியாலும், பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளாலும், வாழ்வாதாரம் மற்றும் ஊதியங்களின் அதிகரித்துவரும் இழப்பினாலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) கடன் நிபந்தனைகள் கடுமையாக்கப்படுவதாலும், வாகனங்களின் விற்பனையில் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு சூலையில் வாகனங்களுடைய விற்பனை கிட்டத்தட்ட 19% சரிந்துள்ளதாகக் கூறப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளிலேயே இது மிகக் குறைவான விற்பனையாகும்.

கடந்த மாதம் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 24 சதவிகிதம் குறைந்துள்ளது. 1997-98 முதல் இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து இதுவே மிகக் கடுமையான வீழ்ச்சியாக இருக்கிறது. பயணியர் வாகனங்களின் விற்பனை மட்டும் 32% சுருங்கி, தொடர்ந்து பத்தாவது மாதமாக சரிவைச் சந்தித்து வருகிறது.

தகவல்களின்படி, டாடா மோட்டார்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, மாருதி சுசுகி, டொயோட்டா கிர்லோஸ்கர், போஷ் மற்றும் வாப்கோ போன்ற பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை 8 முதல் 20 நாட்கள் வரை மூடுவதாக அறிவித்துள்ளன, இது தொழிலாளர்களின் வருமானத்தை கடுமையாக பாதிக்கிறது.

வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும், ஏராளமான சிறிய அளவிலான தொழிற்சாலைகள், கதவடைப்பு செய்யவோ அல்லது தங்கள் தொழிலாளர்களைக் குறைக்கவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சென்னையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில், 30,000 க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் கிட்டத்தட்ட 80 சதவீத நிறுவனங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட பல நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்குத் தேவை இல்லாததால் தங்கள் ஊழியர்களை 80 சதவீதம் குறைத்துள்ளனர் அல்லது நிறுவனத்தை முழுவதுமாகவே மூடிவிட்டனர். இதன் காரணமாக மேலும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் வேலை இழப்பதாக கணிக்கப்பட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். பெரும்பாலும் முறைசாரா துறையாக உள்ள போக்குவரத்து துறை மீதான பாதிப்பை இது உள்ளடக்கவில்லை, அதில் வேலை வாய்ப்புகளும் அல்லது வேலை இல்லாமையும் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் ஆவணப்படுத்தப்படவில்லை.

இன்னும் வேலையிலுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலான நிலைமைகளிலும், அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் நிறைந்த சூழலிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். உடல் நோய் காரணமாக விடுப்பு எடுப்பது உட்பட எந்த சிறிய சாக்குப்போக்கிலும் அவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள். நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட வேவு பார்க்கும் அதிகாரிகள் தொழிற்சாலை வாயில்களிலும், தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் பேருந்துகளிலும், நிறுவனத்திற்கு வெளியே எவருடனும், ஊடகத்தாருடனும் அல்லது தொழிற்சங்கத்தினர் யாருடனும் தொழிலாளர்கள் யாரும் பேசாமல் இருப்பதை உறுதி செய்கிறார்கள். தங்களுடைய வேலை நிலைமையைப் பற்றி தொழிலாளர்கள் வெளியில் யாரிடமும் பேசினால் அவர்கள் வேலை இழப்பார்கள் என்று அச்சுறுத்தப்படுகிறார்கள்.

தினக்கூலித் தொழிலாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பயிற்சித் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலைக்கு அழைக்கப்பட்டால் மட்டுமே தொழிற்சாலைக்கு வருமாறும், இல்லையென்றால் வீடுகளிலேயே இருக்குமாறும் தொழிலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று நிர்வாகம் கூறும் நாட்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை.

அனைத்து வகையான போராட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால், உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும் போது அவர்களின் ஒப்பந்தத்தை மீண்டும் புதிப்பிக்க மாட்டோமென தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் நிலை, மிகப் பெரிய ஏகபோக முதலாளி வர்க்கத்தின் தலைமையிலான தற்போதைய முதலாளித்துவ அமைப்பின் கீழ் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரத்தின் தீவிர பாதுகாப்பின்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். முதலாளித்துவ அமைப்பிற்குள் உள்ள உள்ளார்ந்த முரண்பாடுகள் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு செல்ல காரணமாகிறது. ஒவ்வொரு நெருக்கடியின் போதும், பெரிய ஏகபோக முதலாளித்துவக் குடும்பங்கள், தங்களுடைய இலாபங்களைப் பாதுகாப்பதற்காக, பெரிய அளவில் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதிலும், எஞ்சியுள்ள குறைந்த அளவிலான தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டுவதிலும், ஊதிய வெட்டுக்களிலும் ஈடுபடுகின்றன. இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் அதிக இலாப விகிதத்தை உறுதி செய்வதற்காக வேலை செய்யும் இந்திய அரசு, தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பையும், கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளை உறுதி செய்ய முற்றிலும் இயலாதாக இருக்கிறது.

One comment

  1. இந்த வகை நெருக்கடிக்கு அனைத்து இந்திய தொழிலாளர்களின் கூட்டு மூலதனத்தைத் தவிர வேறு எதுவும் தீர்வு இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *