அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் விவசாயிகளின் மோசமான நிலையை வெளிப்படுத்துகின்றன

பல நூற்றாண்டுகளாக விவசாயம் சமுதாயத்தின் முதுகெலும்பாக கருதப்பட்டு வந்தாலும், அதில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இப்போதெல்லாம் அது போதுமான வருவாயைக் கொடுப்பதில்லை.

2021 செப்டம்பர் 10-இல், தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள நிலைமை மதிப்பீட்டு களஆய்வு (எஸ்ஏஎஸ்), நாட்டின் விவசாயிகளின் பொருளாதார நிலைமைகள் குறித்த மிக விரிவான அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையாகும். 2019 இல் நடத்தப்பட்ட இந்த களஆய்வு, சூலை 2018 முதல் சூன் 2019 வரை 12 மாத காலத்திற்கு புள்ளிவிவரங்களை சேகரித்தது. இந்த அறிக்கை, விவசாய நெருக்கடியின் தீவிரத்தையும் விவசாய குடும்பங்களின் பரிதாப நிலைமையையும் உறுதிப்படுத்துகிறது.

2018-19 ஆம் ஆண்டில் கிராமப்புற இந்தியாவில் 17.2 கோடி குடும்பங்கள் இருந்தன என்று களஆய்வு மதிப்பிடுகிறது, அதில் 9.3 கோடி வேளாண்மைக் குடும்பங்கள் அல்லது விவசாயிகளின் குடும்பங்களாகும். மீதமுள்ள 7.9 கோடி குடும்பங்களில், 4.3 கோடி குடும்பங்கள் சாதாரண கூலி உழைப்பைச் சார்ந்திருப்பனவாகும். சுமார் 2.2 கோடி குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவராவது சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறார்கள்.

ஒரு விவசாய குடும்பம் என்பது வருடத்திற்கு ரூ 4,000-க்கு மேல் மதிப்புள்ள விவசாய சாகுபடி, கால்நடைகளை வளர்ப்பது அல்லது பிற குறிப்பிட்ட விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ள குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரையாவது கொண்டுள்ள குடும்பம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

சூலை 2018 – சூன் 2019 இல் விவசாய குடும்பங்கள் சம்பாதித்த சராசரி மாத வருமானம் ரூ. 10,200 ஆகும், இதில் ரூ. 3,800 விவசாயத்திலிருந்தும், ரூ. 4,060 ஊதிய வருமானத்திலிருந்தும் வருகிறது. இது சராசரி தொகை என்பதால், குறைந்தபட்சம் பாதி விவசாயக் குடும்பங்கள் ரூ. 10,000 க்கும் குறைவாக சம்பாதிப்பதாக பொருளாகும்.

2018-19 ஆம் ஆண்டின் புள்ளிவிவர அறிக்கையை (எஸ்ஏஎஸ்) முந்தைய 2012-13 ஆண்டின் அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், விவசாயக் குடும்பங்கள் கூலி வருவாயை மென்மேலும் சார்ந்திருப்பதைக் காட்டுகிறது. 2012/13 இல், விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானத்தில் 48 சதவிகிதம் சொந்த நிலத்திலோ, குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்திலோ பயிரிடுவதன் மூலமும், 32 சதவிகிதம் கூலி வருவாயாகவும் இருந்தது. 2018/19 இல், விவசாய வருவாயின் பங்கு 37 சதவிகிதமாக குறைந்து, கூலி வருவாயின் பங்கு 40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தில் சமுதாயத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயம், அதில் ஈடுபட்டு வருபவர்களுக்கு போதுமான வருமானத்தை அளிக்கவில்லை.

10 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவாக நிலம் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு, விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தைப் பராமரிக்க போதாது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் சம்பள வேலையோ அல்லது குறைந்தபட்சம் தினக் கூலி வேலையைத் தேட வேண்டியுள்ளது. சிறுபான்மையான பெரிய நில உரிமையாளர்களுக்கு, பெரும்பாலான வருமானம் விவசாயத்திலிருந்து தொடர்ந்து வருகிறது; ஆனால் அவர்களுக்கும் கூட, சமீபத்திய ஆண்டுகளில் விவசாயத்திலிருந்து கிடைக்கும் நிகர வருமானம் குறைந்து கொண்டே வருகிறது.

புதுதில்லியிலும் மாநிலங்களிலும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு “தொழில் செய்வதை எளிதாக்க” பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வரும் நிலையில், விவசாயிகளின் பொருளாதாரச் செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானதாகி விட்டன. இந்தத் தாங்க முடியாத நிலைமைகளை மாற்றுவதற்காக, ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *