செப்டம்பர் 13-லிருந்து 18 வரையிலான வாரத்தில் ஆயிரக்கணக்கான ரயில் தொழிலாளர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பரித்தனர். பணமாக்குதல் என்ற பெயரில் இந்திய ரயில்வேயின் பல்வேறு சொத்துக்களை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ரயில்வேவை தனியார்மயமாக்குவதற்கு எதிராக ரயில்வே தொழிலாளர்கள் போராட்ட வாரத்தைக் கடைபிடித்தனர்.
2021 ஆகஸ்ட் 23 அன்று அறிவிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தில், இந்திய ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்கள் 25% மாக இருக்கின்றன. இதில் 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், 741 கிமீ நீளமுள்ள கொங்கன் ரயில்வே, ரயில்வே அரங்கங்கள் மற்றும் ரயில்வே குடியிருப்புகள் அடங்கும்.
தனியார் மயமாக்கலுக்கான இந்தப் புதிய பெயரால் ரயில்வே மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள் ஏமாறவில்லை. இதன் மூலம் மிகவும் இலாபகரமான தடங்களை தனியாரிடம் ஒப்படைப்பது, பொதுத்துறை – தனியார் கூட்டு என்ற பெயரில் ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு மற்றும் பொதுச் சொத்துகளிலிருந்து தனியார் இலாபங்களை அறுவடை செய்வதற்கான பிற வழிகள் ஆகியவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்த சொத்துக்கள் மக்களுக்குச் சொந்தமானவையாகும். அவை இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையால் கட்டப்பட்டனவாகும். இப்போது இந்த பணமாக்கல் திட்டத்தில், ரயில்வே காலனிகளும் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவர்களின் வீடுகளே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
ரட்லம் ரயில்வே தொழிலாளர்கள் போராட்ட வாரத்தில் பங்கேற்பு
ரயில்வே தொழிலாளர்கள் பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் இந்த சமூக விரோத மற்றும் தேச விரோத தாக்குதலுக்கு எதிராக ரயில்வே தொழிலாளர்கள் சற்றும் பின்வாங்காமல் உறுதியாகப் போராடி வருகின்றனர். தனியார்மயமாக்கலை எந்தப் பெயரிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ரயில்வே ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அவர்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவார்கள். செப்டம்பர் 13 -18 வாரத்தில் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்கள் இதை பிரதிபலிக்கின்றன.
செப்டம்பர் 16 அன்று தானேவில் மத்திய ரயில்வே மஸ்தூர் சங்கத்தால் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. அதே நாளில், கபூர்தலாவிலுள்ள தேசிய இரயில் பெட்டி தொழிற்சாலையின் (RCF) தொழிற்சங்கம், தொழிற்சாலை வாயிலில் ஒரு பேரணியை நடத்தியது. தொழிற்சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டனர். அகில இந்திய ரயில்வே மென்ஸ் கூட்டமைப்பைச் (AIRF) சேர்ந்த மத்திய ரயில்வே ஊழியர் சங்கம் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் போராட்டங்களை ஏற்பாடு செய்தது. செப்டம்பர் 15 அன்று மதுரையில் பொதுத்துறை பிரிவு நிறுவனங்களைப் பணமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 75 ஆண்டுகளில் குடிமக்களின் வியர்வையால் கட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கையை எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் கண்டித்தனர். நினைவுச் சின்னங்களாக இருந்துவரும் நீலகிரி மலை ரயில் மற்றும் இமயமலை சிறிய ரயில் போன்ற ரயில்களைக் கூட தாரை வார்த்துக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நியூ ஜல்பைகுரியிலிருந்து டார்ஜிலிங் வரை ஒடுகின்ற சிறிய ரயில் டார்ஜிலிங் மக்களுடைய வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனின் தொழிலாளர்கள் செப்டம்பர் 15 அன்று பொதுத்துறை நிறுவனங்களைப் பணமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரயில்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை நிறுத்துவது அவசியமானதும் சாத்தியமானதும் ஆகும். இந்திய இரயில்வே தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிரான போராட்டம், ஏகபோக முதலாளித்துவ குடும்பங்களின் தலைமையிலான ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான போராட்டமாகும். தனியார்மயமாக்கும் திட்டம் முதலாளி வர்க்கத்தின் திட்டமாகும். அதை எதிர்த்து நாம் ஒற்றுமையாகப் போராட வேண்டும். ரயில்வே தொழிலாளர்களும் அவர்களின் தொழிற்சங்கங்களும், தங்களது கட்சி அல்லது தொழிற்சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் தங்களுடைய ஒற்றுமையை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும்.