வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையிலும், தரத்திலும் கடுமையான சரிவு

நம் நாட்டின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் மனித வாழ்வின் விளிம்பில், வருமான இழப்பை ஈடுகட்ட பணம் கொடுக்கக் கூடிய எவரிடமும் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வேலையில்லா பிரச்சனை மென்மேலும் தீவிரமடைந்து வருகிறது. அது போலவே, நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கடனாளிகளாக ஆகி வரும் பிரச்சனையும் அதிகரித்து வருகிறது.

நீண்ட வரிசையில் வேலை தேடும் இளைஞர்கள்.

இந்தியாவின் “மக்கள் தொகை விவரங்கள் சாதகமாக” இருப்பது குறித்து ஆளும் வர்க்கம் அடிக்கடி பெருமையாக பேசி வருகிறது. இது, ஒப்பீட்டளவில் இளம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள சாதகமான சூழ்நிலையாகும். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டோர் 15-64 வயதுடைய வேலை செய்யக்கூடியவர்கள் ஆவர். இது உலக சராசரியை விட மிக அதிகமானதாகும். இருப்பினும், இந்த சாதகமான நிலைமையானது இன்று முற்றிலும் வீணடிக்கப்பட்டு வருகிறது, ஏனெனில் வேலை செய்யும் வயதுடைய இந்த மக்களில் பெரும்பாலானோருக்கு எந்த வேலையையோ அல்லது சுயதொழில் செய்வதற்கான வழியையோ கிடைப்பதில்லை.

ஆளும் வர்க்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள், இந்தப் பிரச்சனைக்கு காரணமாக கொரோனா வைரசு மீது வசதியாக குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், கொரோனா வைரசு தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்னரே, பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கிடைக்கக்கூடிய எல்லா மனிதர்களுக்கும் வேலை கொடுத்து பயன்படுத்த இயலாத நிலையில் பொருளாதார அமைப்பு இருப்பதை, கடந்த 18 மாதங்களில் மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்ட பொது முடக்கங்கள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

2021 இல் இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையான 140 கோடியில், உழைக்கும் வயதுள்ள மக்கள் தொகை 94 கோடி ஆகும். இந்த உழைக்கும் வயதுள்ள மக்களில், 43.3 கோடி மக்கள் ஊதியம் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் அல்லது அத்தகைய வேலையைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். அவர்கள் தொழிலாளர் படையாக இருக்கிறார்கள். இதில், 39.7 கோடி பேர் வேலை செய்து வருபவர்களாகவும், 3.6 கோடி பேர் வேலையில்லாமலும் உள்ளனர். வேலை செய்து வருபவர்களில், சுமார் 21 கோடி பேர் சம்பளம் பெறுபவர்களாகவும், சுமார் 18.7 கோடி பேர் சுயதொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

வேலைவாய்ப்பில் வீழ்ச்சி

வேலை செய்து வருபவர்களுக்கும், வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகைக்கும் உள்ள விகிதத்தை வேலைவாய்ப்பு விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இது, கொரோனா வைரசு தொற்றுநோய் வருவதற்கு முன்பிருந்தே படிப்படியாக குறைந்து வருகிறது. இது 2018-19 இல் 46 சதவீதத்திலிருந்து 2019-20 இல் 45% ஆக குறைந்தது. ஆகஸ்ட் 2021 இல் இது 42% இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 2020 முதல் கொரோனா வைரசு தொற்றுநோயும், மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்ட முடக்கங்களும், பல இலட்சக்கணக்கான வேலைகளும், சுயதொழில் வருமான ஆதாரங்களும் அழிக்கப்படுவதற்கு வழிவகுத்தன. முதலாளித்துவ நிறுவனங்கள், வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைத்து வேலையில் இருப்பவர்களுடைய தினசரி வேலை நேரத்தை அதிகரித்துள்ளன. சிறிய அளவிலான நிறுவனங்கள் பல நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

எதிர்மறையான இந்தத் தாக்கம், குறிப்பாக பெண்களைக் கடுமையாக பாதித்துள்ளது. முடக்கத்தின் போது ஏராளமான பெண்கள் வேலை இழக்க காரணங்களில் ஒன்று, பொதுப் போக்குவரத்துப் பற்றாக்குறையாகும். மற்றொரு காரணி என்னவென்றால், ஏராளமான பெண்கள் ஆடைத் தொழிலில், உற்பத்தி செய்யும் வரிசையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று வேலை செய்கிறார்கள் என்பதாகும். இந்தத் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை முடக்கத்தின் போது முழுமையாக மூடப்பட்டன. பல மாதங்களுக்குப் பிறகும் பல தொழிற்சாலைகள் முழு உற்பத்தித் திறனுக்கு மீட்சியடையவில்லை. ஊரடங்கு காலத்தில் வீட்டு வேலை செய்யும் பல பெண்களும் வேலை இழந்தனர்.

இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோய்க்கு முன்பே இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதிகமாக இருந்தது. 2019-20 இல், 15-24 வயதுக்குட்பட்டவர்களில் 44% பேர் வேலையில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, ​​இந்த விகிதம் சுமார் 54% என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் இளம் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலையில்லாதவர்களாக மங்கிய எதிர்காலத்தை எதிர் கொள்கிறார்கள்!

2019-20ல் சுமார் 2.5 கோடியாக இருந்த, வேலையின்றி வேலை தேடுபவர்களுடைய மொத்த எண்ணிக்கை தற்போது 3.6 கோடியாக உயர்ந்துள்ளது.

தொழிலாளர் படை பங்கேற்பு சரிவு

வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மிகவும் மோசமாக இருப்பதால், பலர் தொழிலாளர் படையிலிருந்து முழுவதுமாகவே விலகி விட்டனர். அவர்கள் வேலைக்கு முயற்சிப்பதைக் கூட நிறுத்திவிட்டனர். இது தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (LPR) ஒரு சரிவைப் பிரதிபலிக்கிறது.

எல்பிஆர் (LPR) எனப்படும் தொழிலாளர் பங்கேற்பு விகிதமானது, தொழிலாளர் சக்தியின் எண்ணிக்கைக்கும், வேலை செய்யும் வயதிலுள்ள மக்கள் தொகைக்கும் உள்ள விகிதமாகும். இது, சமூக உற்பத்தி வழிமுறையில் கிடைக்கும் தொழிலாளர்களை எந்த அளவிற்கு ஒரு சமூக-பொருளாதார அமைப்புப் பயன்படுத்துகிறது என்பதற்கான அளவீடாகும். இது வேலை செய்யும் வயதுள்ள மக்கள் தொகையில் எந்த அளவிற்கு வேலை செய்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. 2016-17 முதல் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இது தற்போது 46 சதவீதமாக உள்ளது. இது ஆண்களுக்கு 70 சதவிகிதமாகவும், பெண்களுக்கு 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவும் உள்ளது.

வேலை வாய்ப்புத் தரத்தில் சரிவு

பெரிய அளவில் வேலைகளும், வாழ்வாதாரத்திற்கான ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருவது, வேலை செய்து வருபவர்களுக்கு அதிகரித்த பாதுகாப்பின்மையையும், மோசமான வேலை நிலைமைகளையும் உருவாக்குகிறது.

பெரிய மற்றும் சிறிய தனியார் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு இல்லை. பெரும்பான்மையான முதலாளித்துவ நிறுவனங்களில், வழக்கமான நிரந்தர வேலைகளிலிருந்து தற்காலிக மற்றும் குறிப்பிட்ட கால ஒப்பந்தங்களுக்கு பெரிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியார்மயமாக்கல் திட்டத்தால் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

வேலை செய்து வரும் கோடிக்கணக்கான மக்கள், வேலைக்குத் தேவைப்படுவதற்கும் அதிகமான தகுதி பெற்றவர்களாகவும், மிகக் குறைவான ஊதியம் பெறுபவர்களாகவும் உள்ளனர். அவர்கள் மிக நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள், ஆனால் கூடுதல் நேர வேலைக்கான ஊதிய அடிப்படையில் அவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதில்லை. போராடும் உரிமையைக் கூட அவர்கள் இழந்துள்ளனர்.

நமது நகரங்களில் உணவு வினியோகம் அல்லது பொருட்களை கொண்டு சென்று கொடுக்கும் (கூரியர்) சேவையை வழங்கும் தொழிலாளர்கள் மற்றும் ஓலா அல்லது உபெர் ஓட்டுனர்கள் (டிரைவர்கள்) போன்றவர்கள், வேலை பாதுகாப்பும் பிற பயன்கள் இல்லாத தொழிலாளர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆவர். அவர்களுக்கு வழக்கமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் வேலையைச் செய்ய ஆகும் செலவுகளை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருட்களைக் கொண்டு சென்று வினியோகிக்கும் டெலிவரி தொழிலாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு ஆகும் பெட்ரோல் செலவை அவர்களே செலவழிக்க வேண்டும். ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் வாகனங்களை வாங்குவதற்கு கடன் வாங்கி, அதற்கான தவணைத் தொகையை அவர்களின் சொற்ப வருமானத்தில் இருந்து செலுத்த வேண்டும். “கிக்” தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் “கூலி வேலை” செய்பவர்களுக்கும்,  “சுயதொழில்” செய்பவர்களுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்திற்கு வேலை செய்தாலும், அவர்களுக்கு எந்த ஒரு ஒப்பந்தமோ, நிலையான சம்பளமோ அல்லது எந்த விதமான சலுகைகளோ இல்லை. அவர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை நீண்ட நேரம் ஓய்வு ஒழிவின்றி மாடு போல உழைக்கிறார்கள்!

வீட்டு வருமானத்தை இரண்டு காரணிகள் பாதித்துள்ளன. ஒன்று, ஏதாவதொரு வேலையோ, அல்லது சுயதொழில் மூலம் வாழ்வாதாரத்திற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க இயலாமை. மற்றொன்று, கிடைக்கும் எந்த வேலையிலும், மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். நிலையான சம்பளத்தில் வேலை செய்யும் பலர் தங்கள் வேலைகளை இழந்து வருமானத்திற்கு வழியில்லாமல் உள்ளனர். பலருக்கு ஒப்பந்தம் அல்லது தினசரி ஊதியத்தில் பணிபுரிய ஏதாவதொரு வேலை கிடைத்தாலும், அவர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வேண்டியுள்ளது.

வீடு வீடாக சென்று வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளின் பழுதை நீக்கும் வேலையில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பொறியாளரைப் பார்ப்பதோ, அல்லது பள்ளி வேன் ஓட்டுனர், தான் கடனில் வாங்கிய இ-ரிக்ஷாவை ஓட்டி வயிற்றை நிரப்பப் போராடி வருவதையோ அல்லது ஒரு 5 நட்சத்திர விடுதியில் சமையல்காரராகப் பணிபுரிந்த ஒருவர் இப்போது தனது முந்தைய சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு பெற்றுக் கொண்டு சிறிய இடத்தில் வேலை செய்வதைப் பார்ப்பதோ அன்றாட நிகழ்வாக இருக்கிறது.

வருமான இழப்பைச் சமாளிக்க, குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பொருட்களை விற்க வேண்டும் அல்லது குடும்பங்களின் வருவாயைக் காட்டிலும் 2 முதல் 6 மடங்கு அளவிற்கு பெருமளவில் கடன் வாங்க வேண்டி உள்ளன. சமீபத்திய கோவிட்-19 வாழ்வாதாரம் பற்றிய கணக்கெடுப்பின்படி, ஏழ்மையான குடும்பங்கள் (கீழ்மட்ட 25%) அவர்களின் மாதாந்திர குடும்ப வருமானத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு கடன் சுமைகளைக் கொண்டுள்ளன. அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடமிருந்து அவர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதாவது நீண்ட காலத்திற்கு அவர்களுடைய வறுமையை இது மேலும் தீவிரமாக்கும். சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் உணவு விலைகள், ஏழைகளுக்கு வீட்டு வருமானத்தின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

பிரச்சனையின் அடிப்படை

உற்பத்தி சாதனங்களின் உடமையாளர்கள், தங்களுடைய தனிப்பட்ட இலாபத்தை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு முதலாளித்துவ உற்பத்தி இயக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உற்பத்திச் செலவாக முதலாளிகள் கருதுகின்றனர். முதலாளித்துவ இலாபத்தை அதிகரிப்பதற்கு இது அதிக அளவில் குறைக்கப்பட வேண்டும். குறைவான தொழிலாளர்களைக் கொண்டு அதிக வேலைகளைச் செய்யவும், வேலை நாளின் நேரத்தை நீட்டிக்கவும் அவர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்தி முறை, தவிர்க்க முடியாமல் வேலையில்லாதவர்களுடைய ஒரு படையை உருவாக்க வழிவகுக்கிறது, இது பொருட்களின் விற்பனையில் திடீரென அதிக தேவை ஏற்படும் போதெல்லாம் அதை உற்பத்தி செய்வதற்கு முதலாளி வர்க்கத்திற்கு ஒரு கையிருப்பாக அமைகிறது. இதை 150 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் கண்டுபிடித்தார். அவர் அதை “தயார் நிலையில் உள்ள வேலையில்லாதவர்களின் படை ” என்று அழைத்தார்.

ஏகபோக கட்டத்தில், முதலாளித்துவம் சிறிய அளவிலான தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்களை தொடர்ச்சியாகவும், அவ்வப்போதும் அழிக்க வழிவகுக்கிறது. ​​ஏகபோக முதலாளித்துவம் வளர வளர, அது உருவாக்கும் புதிய வேலைகளை விட அதிக அளவில் தற்போதுள்ள வேலைகளையும் சுயதொழில் ஆதாரங்களையும் அழிக்கிறது.

தற்போதைய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கூடுதல் காரணி என்னவென்றால், உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கு கோவிட் தொற்றுநோயை முதலாளிகள் பயன்படுத்தியுள்ளனர். தொழிலாளர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்து வேலையிலுள்ள தொழிலாளர்களை ஒவ்வொரு நாளும் அதிகமாகக் கசக்கிப் பிழிந்தெடுக்கிறார்கள்.

முடிவுரை

வேலையின்மை பிரச்சனைக்கு ஒரே நிரந்தர தீர்வு சமுதாயத்தை முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான மாற்றத்தை மேற்கொள்வதில் உள்ளது. பெரிய அளவிலான உற்பத்தி சாதனங்கள், முதலாளித்துவ தனியார் சொத்தாக இருப்பதிலிருந்து சோசலிச பொதுச் சொத்தாக மாற்றுவது, பொருளாதார முடிவுகளின் மீது தனியார் இலாப நோக்கத்தின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும். ஒரு பணக்கார சிறுபான்மையினரின் இலாபத்தை அதிகரிக்க உதவுவதிலிருந்து சமூக உற்பத்தியை, ஒட்டுமொத்த மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மாற்றியமைக்க முடியும்.

அனைத்து மக்களுடைய அதிகரித்துவரும் பொருள் மற்றும் பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்ய, அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியை மிகப் பெரிய அளவில் பெருக்குவது அவசியம். அனைவருடைய தேவைகளை நிறைவேற்றும் கூட்டு முயற்சியில், வேலைக்குக் கிடைக்கக்கூடிய, வேலை செய்யும் வயதிலுள்ள எல்லா பெண்களையும் ஆண்களையும், வேலையில் அமர்த்த முடியும். காலப்போக்கில் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்க அதிகரிக்க, முழு ​வேலை வாய்ப்பை தொடர்கின்ற அதே நேரத்தில், வேலை நாளின் நீளத்தைப் படிப்படியாகக் குறைக்கவும் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *