அரசின் சொத்துக்களை பணமாக்கல் திட்டம் – தனிப்பட்ட முதலாளித்துவ லாபத்திற்காக பொதுச் சொத்துக்கள் கொள்ளை

உள்கட்டுமானத்தில் உள்ள பொதுச் சொத்துக்களை பணமாக ஆக்கும் ஒரு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23 அன்று அறிவித்தார். இதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆறு லட்சம் கோடி ரூபாயை அரசாங்கம் வசூல் செய்யும் திட்டம் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த திட்டத்தின்படி உள்கட்டுமான சொத்துக்களான சாலைகள், ரயில்வே நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின்சார வழிகள் லைன்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் தடங்கள், தொலைதொடர்பு வலைப்பின்னல், உணவு மற்றும் தானிய கிடங்குகள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் போன்றவை உட்பட உள்கட்டமைப்பு சொத்துக்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு பயன்பாட்டிற்கு விடப்படும். 30-லிருந்து 60 ஆண்டு காலத்திற்கு இந்த பொதுச் சொத்துக்களை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தனியார் நிறுவனங்கள் ஒரு தொகையை கொடுப்பார்கள். இந்த காலகட்டத்தின் போது தனிப்பட்ட லாபத்தை அடைவதற்காக முதலாளித்துவ நிறுவனங்கள் இந்த சொத்துக்களை மேலாண்மை செய்யவும், பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த குத்தகைக் காலம் முடிந்த பின்னர் இந்த முதலாளித்துவ நிறுவனங்கள் இந்த சொத்துக்களை அரசாங்கத்திற்கு திருப்பிக் கொடுப்பார்களாம்.

இந்த சொத்துக்கள் விற்கப்படவில்லை குத்தகைக்கு தான் கொடுக்கப்படுகின்றன என்பதால் இது தனியார்மயம் இல்லை என்று நிதியமைச்சர் சீதாராமன் கூறுகிறார். ஆனால் சொத்துக்கள் விற்கப்பட்டாலும் அல்லது நீண்டகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டாலும் அது பொது சொத்துக்களை தனிப்பட்ட முதலாளித்துவ லாபத்திற்கு கொடுக்கின்ற ஒரு வடிவம் ஆகும். எந்த வழியானாலும் தனியார் நிறுவனங்கள், கொடுத்த பணத்தைக் காட்டிலும் அதிக அளவில் பணத்தை திரட்டுவதற்காக இந்த வளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களிடமிருந்து அதிகம் கட்டணத்தை வசூலிப்பார்கள்.

தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 26 ஆயிரம் கிலோமீட்டர் நீள சாலைகள் இருக்கின்றன. அவை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசாங்கம் 1.6 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இந்த தனியார் நிறுவனங்கள் சாலை ஓரத்தில் உணவு விடுதிகளையும் கடைகளையும் உருவாக்குவதன் மூலமும், சாலை பயன்பாடு கட்டணங்களை வசூலிப்பதன் மூலமும் லாபம் சம்பாதிக்க முடியும்.

1.2 லட்சம் கோடி ரூபாய்களுக்கு 400 ரயில்வே நிலையங்களும், 90 பயணிகள் ரயில்களும், 741 கிலோமீட்டர் கொங்கன் ரயில்வேயும், 15 ரயில்வே அரங்குகளும், எண்ணற்ற ரயில்வே குடியிருப்பு காலனிகளும் கொடுக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ரயில் கட்டணங்களையும், பயன்பாட்டு கட்டணங்களையும் உயர்த்துவதன் மூலம் லாபம் ஈட்டுவார்கள்.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா சென்னை, போபால், வாரணாசி, வதோதரா உட்பட 25 விமான நிலையங்களை குத்தகைக்கு கொடுப்பார்கள். ஏர்போர்ட் பணமாக்கும் திட்டம் மூலம் 20 ஆயிரத்து 782 கோடி ரூபாய் பெறப்படும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்களில் விமான நிலைய தொழிலாளர்களுடைய குடியிருப்பு காலனிகளும் குத்தகைக்கு விடப்படும். டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்ட அனுபவம் காட்டுவது போல இந்த விமான நிலையங்களின் பயன்பாட்டு கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்படும்.

குத்தகைக்கு விடப்படும் பிற சொத்துக்களில் 28 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள மின்சார இணைப்பு கம்பி தடங்களும், 2.86 லட்சம் கிலோமீட்டர் பாரத் நெட் பைபர் கேபிளும், 14 ஆயிரத்து 917 பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சிக்னல் கோபுரங்களும், 8 ஆயிரத்து 154 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய்களும், ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கிடங்குகளும், இரண்டு தேசிய அரங்குகளும், தில்லியில் உள்ள 7 குடியிருப்பு காலனிகளும் அடங்கும்.

இதிலிருந்து அதிகபட்ச லாபத்தை தங்களால் சம்பாதிக்க முடியும் என்று கணக்கிட்டால் மட்டுமே தனியார் முதலாளிகள் ஒரு திட்டத்தை எடுத்துக்கொள்வார்கள். குத்தகை கட்டணத்தை மிகக்குறைவாக வைப்பதன் மூலமும், பொதுமக்களிடமிருந்து மிக அதிகமான கட்டணங்களை வசூலிக்க தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலமும் இந்த தனியார் நிறுவனங்கள் பெரும் லாபம் அடைவதை அரசாங்கம் உறுதி செய்யும். எதிர்பார்த்த லாபத்தை ஒரு நிறுவனத்தால் அடைய முடியாவிட்டால் அந்தத் தொகையை அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று அது கேட்கும்.

இந்த உள்கட்டுமான சொத்துக்களை தற்போது பராமரித்து வரும் தொழிலாளர்கள் தங்களுடைய வேலையை இழக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. இந்தத் தொழிலாளர்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு அவர்களை எவ்வித சமூகப் பாதுகாப்பும் இன்றி மிகக் குறைந்த ஊதியத்திற்கு நீண்ட நேரம் வேலை செய்யுமாறு தனியார் நிறுவனங்கள் அவர்களை கட்டாயப்படுத்தும்.

பணமாக்கும் திட்டம் என்பது தனியார்மயத்தின் இன்னொரு வடிவமே அல்லாமல் வேறு எதுவும் இல்லை. இதை தொழிலாளி வர்க்கமும் மக்களும் கண்டித்து எதிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *