27 செப்டம்பர் பாரத் பந்திற்கு முழுமனதோடு ஆதரவளிப்போம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறிக்கை – செப்டம்பர் 8, 2021

விவசாய சங்கங்களின் ஐக்கிய முன்னணியாகிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா 27 செப்டம்பர் 2021 அன்று அனைத்திந்திய முழு கதவடைப்பை – பாரத் பந்த் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது. பாராளுமன்றம் அங்கீகரித்த 3 விவசாய விரோத சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து ஓராண்டு நிறைவடைந்ததை அந்த நாள் குறிக்கிறது. தில்லியின் எல்லைகளில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை விவசாயிகள் தொடங்கி பத்து மாதங்கள் நிறைவடைந்ததையும் அது குறிக்கிறது.

சிங்கு எல்லையில் ஆகஸ்ட் 25 – 26 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட தேசிய கருத்தரங்கில் அனைத்திந்திய கதவடைப்பு – பாரத் பந்த் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த கருத்தரங்கில் 22 பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  விவசாய சங்கங்களின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தியா, பெரும் தொழில் நிறுவனங்களின் கைகளில் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமன்றி தொழிலாளிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆதிவாசி மக்களுடைய வாழ்வாதாரங்களையும் பாதிக்கும் என்று கருத்தரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானம் கூறுகிறது. கருத்தரங்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்ட மானிடைசேஷன் திட்டம் உட்பட பொது சொத்துகள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும், தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களுக்கு எதிராகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது எனவும் அது கூறியிருக்கிறது.

வேளாண் வணிகத்தையும், வேளாண் பொருட்களின் சேமிப்புகளையும் இந்திய மற்றும் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் 3 விவசாய விரோத சட்டங்களைப் பின் வாங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். குறைந்த பட்ச ஆதார விலைக்குக் கீழே எந்த ஒரு விவசாயியும் தன்னுடைய விளைபொருட்களை விற்குமாறு கட்டாயப்படுத்தப்படாமல் இருப்பதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். மேலும் இந்த குறைந்த பட்ச ஆதார விலையானது விவசாயிகளுக்கு லாபம் அளிக்கக்கூடிய அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு உற்பத்தி விலையை மிகவும் அதிகரித்து அவர்களை அழிக்கக் கூடிய மின்சார திருத்தச்சட்டம் 2020 ஐ பின்வாங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோருகின்றனர்.

கடந்த 10 மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலையும், கடுமையான குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தில்லியின் எல்லைகளில் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். இருந்தும்கூட அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு விடாப்பிடியாக மறுத்து வருகிறது. இந்த இயக்கத்தை நம்பிக்கை இழக்கச் செய்யவும் அதனுடைய அணிகளைப் பிளவுபடுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்ற விவசாயிகளிடையே உறுதியை இந்த சூழ்ச்சிகளால் அசைக்க முடியவில்லை.

விவசாய போராட்டத்தின் கோரிக்கைகள், நாடெங்கிலும் உள்ள தொழிற்சங்கங்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்றிருக்கின்றன.

நமது நாட்டில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டமானது சுரண்டும் ஒரு சிறுபான்மையினருக்கும், சுரண்டப்படும் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் டாடாக்கள், அம்பானிகள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கம் நிற்கிறது. இன்னொரு பக்கம் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் எல்லா பெற உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்கிறார்கள்.

செப்டம்பர் 27 அனைத்திந்திய கதவடைப்பு பாரத் பந்திற்கு தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் தன் முழு ஆதரவையும் தெரிவிக்கிறது.

இந்திய விவசாயிகளுடைய போராட்டம் வெல்க!

தொழிலாளி, விவசாயிகளின் ஒற்றுமை வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *