கர்னாலில் விவசாய போராளிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டனம் செய்வோம்

ஆகஸ்ட் 28 அன்று அரியானாவிலுள்ள கர்னாலுக்கு அருகிலுள்ள பாஸ்தாரா சுங்கச்சாவடியில், அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறது. அரியானா முதல்வர் உரையாற்றும் ஒரு மாநில அரசு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்னாலை நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருக்கின்றனர்.

காவல்துறை விவசாயிகளை கொடூரமாக தாக்கியதையடுத்து விவசாயிகள் நெடுஞ்சாலைகளை தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

தடியடியில் பல விவசாயிகள் மிகவும் மோசமாக காயமுற்றனர். ஒரு விவசாயி கொல்லப்பட்டார். காவல்துறையினர் விவசாயிகளை தாக்கியது மட்டுமல்லாமல், அவர்களை பயமுறுத்தும் நோக்கத்தோடு, பக்கத்திலிருந்த வயல்வெளிகளுக்கும் அவர்களை விரட்டிச் சென்றனர். காவல்துறையின் தாக்குதலில் விவசாயிகளுடைய டிராக்டர்களும் பிற வாகனங்களும் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கான விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிர்த்து விவசாயிகள் துணிவோடு போராடினர். அவர்கள் கர்னால், பானிபட் மற்றும் அம்பாலாவில் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுமாறு செய்தனர். தேசிய நெடுஞ்சாலை 44 இன் பல பகுதிகளும் முற்றுகையிடப்பட்டன. காவல்துறையினரால் கைது செய்து வைக்கப்பட்ட விவசாயிகள் விடுவிக்கப்பட்ட பின்னரே மறியல் பின் வாங்கப்பட்டது.

கைதாலில் உள்ள டைட்ராம் மோர் மற்றும் சீகாவில் உள்ள சாலைகளைத் தடுத்து விவசாயிகள் மறியல் நடத்தினர். காவல் துறையின் தடியடிக்கு எதிராக ஜாஜ்ஜாரில் விவசாயிகள், டெல்லி-ரோஹ்தக் நெடுஞ்சாலையை திக்ரி எல்லைக்கு அருகில் உள்ள ஜகோதா புறவழிச்சாலையைத் தடுத்து மறியல் செய்தனர்.

ஆகஸ்ட் 30 அன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் கர்னலில் உள்ள கரவுண்டா தானிய சந்தையில் ஒரு மகாபஞ்சாயத்தில் திரண்டனர். ஆகஸ்ட் 28 ஆம் தேதி கர்னலில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு எதிராக மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது. மகாபஞ்சாயத்தில், போராட்ட அரங்கை அடைவதற்காக கர்னாலில் விவசாயிகள் தடுப்புகளை மீறிச் செல்வதைத் தடுப்பதற்கு காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்துமாறு உத்தரவிட்ட மாநில அரசை, விவசாயப் போராட்டத்தின் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். குறிப்பாக விவசாயிகளுடைய “தலைகளை உடைக்குமாறு” காவல்துறைக்கு உத்தரவிட்ட கர்னால் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு விவசாயப் போராட்டத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

மூன்று விவசாய எதிர்ப்புச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு சட்டபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோரி கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உபி மற்றும் பிற மாநிலங்கள் முழுவதும், விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி, தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள், அண்டை பகுதிகளிலுள்ள அனைத்து மக்களின் ஆதரவையும் நடவடிக்கைகளில் பங்கேற்பையும் பெற்றுள்ளது. விவசாயிகளின் இந்தக் கோபத்தையும், வளர்ந்து வரும் மக்களின் ஒற்றுமையையும் சந்தித்துவரும் அரசு, அவர்களை அடிபணியச் செய்வதற்கு காட்டுமிராண்டித்தனமான வன்முறையைப் பயன்படுத்தி வருகிறது.

போராடி வரும் விவசாயிகள் மீது கர்னாலில் காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராகவும் தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும். தங்களுடைய வாழ்வாதாரத்தை பணயம் வைக்கும் சட்டங்களுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த விவசாயிகளுக்கு முழு உரிமை உண்டு. அவர்களின் போராட்டத்தை குற்றமாகக் கருதி நடத்த அரசுக்கு எந்த நியாயமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *