அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டம் 2021 க்கு எதிராக இந்தியா முழுவதும் ஆர்பாட்டங்கள்

அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசரச் சட்டம் (EDSO) 2021-க்கு எதிராக சூலை 23 ஆம் தேதி அன்று தொழிற்சங்கங்களும் தொழிலாளர் அமைப்புகளும் நாடடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

சூலை 23, 2021 அன்று புது தில்லியில் இடிஎஸ்ஓ-விற்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டம்

இராணுவத் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தை (OFB) நிறுவனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக, பாதுகாப்புத் துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, சூன் 30 அன்று அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசரச் சட்டம் – இடிஎஸ்ஓ அறிவிக்கப்பட்டது. இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, சேவைகள், பராமரிப்பு மற்றும் இராணுவ நிறுவனங்களின் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களைத் தடை செய்வதற்கு இந்த அவசரச் சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது “அத்தியாவசிய இராணுவ சேவைகளின் செயல்பாடு, பாதுகாப்பு அல்லது பராமரிப்பை” உறுதிப்படுத்த காவல்துறையைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. வேலைநிறுத்தங்களில் பங்கேற்கும் தொழிலாளர்களை எந்த விசாரணையும் இன்றி பணிநீக்கம் செய்ய நிர்வாகத்திற்கு இது அதிகாரம் அளிக்கிறது. இந்த அவசரச் சட்டத்தை சட்டமாக மாற்றுவதற்கான மசோதா சூலை 22 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

அனைத்து இராணுவத் தளவாட தொழிற்சாலைகள் மற்றும் பிற இராணுவ நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் அவரவர் வேலை செய்யும் இடங்களில் எதிர்ப்பு ஆர்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா, தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களும் பிற பொதுத்துறை ஊழியர்களும் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், வேலை நிறுத்த உரிமை மீதான தாக்குதலுக்கு எதிராகவும் முன்வந்தனர்.

புது தில்லியில் பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஜந்தர் மந்தரில் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் அமைப்புகளும் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினர். ஆர்பாட்டம் நடந்த இடம், விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் “விவசாயிகள் பாராளுமன்றத்திற்கு” அருகில் இருந்தது. இந்த ஆர்பாட்டம், ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, சேவா, எல்பிஎஃப், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், ஐசிடியு, ஐஎன்டியுசி, டியுசிசி ஆகிய அமைப்புக்கள் கூட்டாக தொழிற்சங்க தட்டியின் கீழ் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், “பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதே!”, “வேலைநிறுத்த உரிமை மீதான தாக்குதல் ஒழிக!”, “மாற்றுக் கருத்து வைத்திருக்க உள்ள உரிமை மீதான தாக்குதலை எதிர்ப்போம்!”, ” புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறு!”, மற்றும் பல முழக்கங்கள் கொண்ட தட்டிகளை போராட்டக்காரர்கள் உயர்த்திப் பிடித்துப் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக போர்க்குணமிக்க முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியவர்கள், இடிஎஸ்ஓ 2021-க்கு எதிராகவும், தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை மீதான அப்பட்டமான தாக்குதலையும் வன்மையாகக் கண்டித்தனர். இரயில்வே, பாதுகாப்புத் துறை, வங்கிகள், தொலை தொடர்பு, காப்பீடு மற்றும் பொதுத்துறையின் பிற முக்கிய நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் பெரிய ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்கான ஒரு நடவடிக்கையாகவும், நமது மக்களின் நலன்களுக்கு எதிராகவும் இருப்பதால் அதை அவர்கள் கண்டனம் செய்தனர். தொழிலாளர்கள் கடுமையாகப் போராடி வென்ற உரிமைகளைப் பறிக்க முற்படும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை எடுத்துக் காட்டாக மேற்கோள் காட்டி அவர்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்கள் தனியார்மயமாக்கல் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதையும், அனைத்து தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களைச் சந்தித்து வருவதையும் வலியுறுத்தினர். தனியார்மயமாக்கலை எதிர்ப்பதற்கும், நமது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை எதிர்ப்பதற்கும் ஒரு பொதுவான போராட்டத்தில் ஒன்றுபடுமாறு நாடெங்கிலும் உள்ள எல்லா பிரிவுத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *