பாதுகாப்புத் தொழிலாளர்களின் உரிமைகள் மீது ஒன்றிய அரசின் தாக்குதலைக் கண்டிப்போம்!

இராணுவ தளவாடத் தொழிற்சாலை வாரியத்தை (OFB) அகற்றிவிட்டு அதை 7 நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசாங்கத்தின் முடிவை கூட்டாக எதிர்ப்பதென பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தீர்மானித்திருப்பதை நமது கட்சியின் இணைய தளத்தில் சூன் 25 இல் வெளியிட்டிருந்தோம். சூன் 27 நடைபெற்ற கூட்டமைப்பின் விரிவுபடுத்தப்பட்ட கூட்டத்தில், சூலை 26 லிருந்து தொடங்கி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது குறித்த அறிவிப்பை உரிய அதிகாரிகளிடம் கொடுப்பதென முடிவெடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கூட, பாதுகாப்பு உற்பத்தித் துறையை தனியார்மயமாக்க இதேபோன்ற முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. இருப்பினும், ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் இந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. பாதுகாப்பு ஊழியர்களின் ஐக்கிய நடவடிக்கை காரணமாக கடந்த ஆறு வெவ்வேறு பாதுகாப்பு அமைச்சர்கள் இராணுவ தளவாடத் தொழிற்சாலை வாரியத்தை நிறுவனமயமாக்க மாட்டோமென எழுத்துப்பூர்வமான உறுதி கொடுக்க வேண்டியிருந்தது என்பதை மத்திய அரசு முழுமையாக அறிந்திருக்கிறது.

பாதுகாப்பு துறையை தனியார்மயமாக்கும் தன்னுடைய திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்த முறை மத்திய அரசாங்கம், அவசரம் அவசரமாக “அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் சட்டம் 2021” என்ற தலைப்பில் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பாதுகாப்பு ஊழியர்களின் எதிர்ப்பை மிருகத்தனமாக நசுக்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட இந்த அவசரச் சட்டம், பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், இராணுவத்தோடு தொடர்புடைய எந்த தொழிற்சாலையின் சேவைகள், இயக்கம் அல்லது பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை சீர்செய்வது மற்றும் அதன் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் துறை ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுத்து மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஆணை வெளியிட அதற்கு அதிகாரம் அளிக்கிறது. “இந்தச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான எந்த ஒரு வேலைநிறுத்தத்தையும் தொடங்குவதோ அல்லது அதில் பங்கேற்றாலோ அவருக்கு ஒரு வருடத்திற்கு சிறைத்தண்டனையோ அல்லது அத்துடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமுமோ விதிக்கப்படும்” என்று இந்தச் சட்டம் கூறுகிறது. மேலும் ”அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகளின் செயல்பாடு, பாதுகாப்பு அல்லது பராமரிப்பை” உறுதிப்படுத்த இந்தச் சட்டம், காவல்துறைக்கு முழு சுதந்திரமும் அளிக்கிறது. மேலும், வேலைநிறுத்த நடவடிக்கையில் பங்கேற்கும் ஒரு பணியாளரை எந்த ஒரு விசாரணையுமின்றி பணிநீக்கம் செய்ய நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த அவசரச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மற்றவர்களைத் தூண்டுவோருக்கு அல்லது அத்தகைய நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்குபவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுமென அறிவிப்பதன் மூலம் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க முன்வரும் மற்ற உழைக்கும் மக்களையும் அமைப்புகளையும் தடுக்க இந்தச் சட்டம் முயற்சிக்கிறது.

இருப்பினும், மத்திய அரசின் இந்த கொடூரமான நடவடிக்கை பாதுகாப்புத் தொழிலாளர்களின் போராட்ட மனநிலையை எந்த வகையிலும் குறைக்கவில்லை. இந்த தீர்மானத்தின் சட்டபூர்வ தன்மையை, பாதுகாப்புத் தொழிலாளர்களின் ஐந்து கூட்டமைப்புகள் கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல், தங்களுடைய எதிர்ப்பின் அடையாளமாக சூலை 8 ஐ அகில இந்திய கருப்பு தினமாகவும் கடைபிடிப்போமென என்று ஒரு கூட்டுத் தீர்மானத்தில் அறிவித்துள்ளன. அனைத்து பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்புகளும் ஒன்றிணைந்து சூலை 1 அன்று ஒரு கூட்டுத் தீர்மானத்தை வெளியிட்டுள்ளனர். “தொழிற்சங்க சட்டம் 1926 மற்றும் தொழில்துறை தகராறு சட்டம் 1947 இன் விதிகளின் கீழ் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு உரித்தான சட்டபூர்வ உரிமையைப் பறிப்பதன் மூலம் இந்திய அரசு தனது உறுதியான மற்றும் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களை எப்படி நடத்துகிறது என்பது மிகவும் வெட்கக் கேடாக இருக்கிறது” என்று அது கூறுகிறது. வேலைநிறுத்த உரிமை “உழைக்கும் மக்களின் எதிர்ப்பின் விட்டுக் கொடுக்க முடியாத ஒரு பகுதி” என்று இந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது. இந்த தீர்மானத்தில் கையொப்பமிட்டவர்களில் அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (ஏ.ஐ.டி.இ.எஃப்), இந்திய தேசிய பாதுகாப்பு தொழிலாளர் சம்மேளனம் (ஐ.என்.டி.பிள்யூ.எஃப்), பாரதிய பிராடிரக்சா மஜ்தூர் சங்கம் (பி.பி.எம்.எஸ்), தேசிய முற்போக்கு பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு (என்.பி.டி.இ.எஃப்) மற்றும் அகில இந்திய பகுஜன் பாதுகாப்பு பணியாளர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.பி.டி.இ.எஃப்) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் உள்ளனர்.

சூலை 2 அன்று மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், மத்திய அரசின் கொடூரமான அவசரச் சட்டத்தை வன்மையாகக் கண்டித்திருப்பதோடு, பாதுகாப்புத் துறை ஊழியர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது.

அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, இந்த அவசரச் சட்டம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் எனவும், மேலும் “பொது நலனுக்கு” மிகவும் அவசியமானதாகக் கருதினால் மத்திய அரசு அதன் காலத்தை மேலும் நீட்டிக்கலாம். நம் நாட்டு மக்களின் அனுபவம் என்னவென்றால், இதுபோன்ற அவசரச் சட்டங்கள் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகின்றன.

இந்த அவசரச் சட்டம், மிக மோசமான கருப்புச் சட்டங்களில் ஒன்றான “அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம், 1968 (எஸ்மா)” கொண்டு வரப்பட்ட அதே முறையில் இருக்கிறது. சில துறைகளை அத்தியாவசிய சேவைகள் என்று அறிவிப்பதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தடுக்க மத்திய அரசு கடந்த காலத்தில் அந்தச் சட்டத்தைப் பல முறை பயன்படுத்தியிருக்கிறது. இதே நோக்கத்திற்காக பல்வேறு மாநில அரசுகள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. இதற்கு மிகச் சமீபத்திய எடுத்துக் காட்டு, மாராட்டியம், உத்தரபிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநில அரசுகள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் சேவைகளை அத்தியாவசிய சேவைகள் என்று அறிவிப்பதன் மூலம் அவர்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொது சுகாதாரத்தை அத்தியாவசியமான சேவை என்று அறிவிக்கும் மத்திய அரசும் மாநில அரசுகளும் தொடர்ந்து வேண்டுமென்றே அந்த அத்தியாவசிய சேவையைப் புறக்கணித்து வந்துள்ளன. கடந்த காலங்களில் மாநில போக்குவரத்துத் தொழிலாளர்கள், இரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், பொது விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஆசிரியர்கள், ஆஷா தொழிலாளர்கள் போன்றவர்கள் எஸ்மா சட்டத்தின் இலக்காக இருந்து வந்துள்ளனர்.

மத்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசரச் சட்டம் 2021-ஐ எல்லா உழைக்கும் மக்களும் கடுமையாகக் கண்டனம் செய்ய வேண்டும். ஏகபோக முதலாளிகளுடைய இந்த மக்கள் விரோத, தேச விரோத மற்றும் சமூக விரோத தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்புத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நாம் அவர்களோடு தோளோடு தோள் சேர்ந்து நிற்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *