அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டிப்போம்

2021 ஜூலை 5 ஆம் தேதியன்று மும்பை மருத்துவமனையில் அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மிகுந்த கோபத்தோடு கண்டனம் செய்கிறது.

 

 

 

 

ஸ்டான் சுவாமி

அவர் மனசாட்சி கொண்ட மனிதராக இருந்ததும், பழங்குடி மக்கள் சுரண்டப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும் உறுதியோடு வெட்ட வெளிச்சமாக்கி வந்ததும், அதை எதிர்த்துப் போராடியதும், அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வந்ததுமே அவர் செய்த ஒரே “குற்றமாகும்”. அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசும் அதன் அனைத்து நிறுவனங்களுமே முழு பொறுப்பாகும்.

1937 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்த ஸ்டான் லூர்துசாமி, அருட்தந்தை ஸ்டான் சுவாமி என்று பிரபலமாக அறியப்பட்டவர் ஆவார். அவர் கிருத்துவ பாதிரியாராகி, ஜார்கண்ட் பிராந்தியத்தில் பழங்குடி மக்களின் உரிமைகள் மற்றும் மேம்பாட்டிற்கு பணியாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

‘எல்கர் பரிஷத்- பீமா கோரேகான்’ வழக்கு தொடர்பாக 2020 அக்டோபரில் அருட்தந்தை சுவாமி தேசிய புலனாய்வு நிறுவனத்தால் (NIA) கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்தார். அரசுக்கு எதிராக போர் தொடுக்கும் சதித்திட்டத்தில் பங்கேற்றதாக இந்திய அரசும் அதன் புலனாய்வு அமைப்புகளும் குற்றம் சாட்டி யுஏபிஏ கருப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அருட்தந்தை சுவாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலுமாக பொய்க் குற்றச்சாட்டுகளாகும்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதற்கான உண்மையான காரணம், “மாவோயிச அச்சுறுத்தலை ஒழித்தல்” என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான அரசு பயங்கரவாதத்திற்கும் வன்முறைகளுக்கும் பலியாகி வரும் ஜார்க்கண்டில் உள்ள ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காக அவர் நின்றார் என்பதாகும். பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்களின் சேவையில் அரசின் பங்கை அம்பலப்படுத்தி அவர் குரலெழுப்பினார். ஆதிவாசி மக்களை வன்முறையால் அவர்களுடைய இடத்தை விட்டு துரத்தி ஓடச் செய்து விட்டு, நமது மக்களின் நிலத்தையும் விலைமதிப்பற்ற வளங்களையும் அபகரிப்பதன் மூலம் பெரும் தொழில் நிறுவனங்களின் கொடூரமான பேராசையை நிறைவேற்றுவதே அரசின் உண்மையான நோக்கமாகும். ஒரு நேர்மையான மனிதராகவும், கல்வி மற்றும் சட்ட அறிவும், மனசாட்சி கொண்டவராகவும், மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவராகவும், அரசு விரும்பம்போல ஆதிவாசி மக்களைக் கைது செய்வதையும், கொலை செய்யப்படுவதையும் கேள்வி கேட்பவராகவும் இருந்ததே அரசின் எதிரியாக அவர் குறிவைக்கப்படக் காரணமாகும்.

அருட்தந்தை சுவாமி பார்கின்சோனிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது எதையும் சாதாரணமாக குடிக்க இயலாமை உட்பட பல பலவீனமான நிலைமைகளுக்கு வழிவகுத்தது. நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டகாலமாக ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகுதான் சிறை அதிகாரிகள் அவர் உரிஞ்சிக் குடிப்பதற்கு ஏற்ற ஒரு கோப்பையையும், ஒரு காகித குழலையும் பயன்படுத்த அனுமதித்தார்கள் என்பது நம் நாட்டில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

ஸ்டான் சுவாமி தன்னுடைய இருப்பிடமாகக் கருதிய ராஞ்சிக்கு திரும்பிச் செல்ல இடைக்கால பிணை கோரியிருந்தார். சிறையில் இருந்த போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரது பிணை மனு விசாரணையின் போது, பிணையைப் பெறுவதற்காக நோயால் அவரது உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துக்களை பெரிதுபடுத்தி நீதிமன்றத்தின் அனுதாபத்தைப் பெற அவர் முயற்சிப்பதாக தேசிய புலனாய்வுத் துறை கூறியது அரசின் கொடூரமான சிந்தனையைக் காட்டுகிறது.

84 வயதான இந்தப் போராளி பல்வேறு நோய்களாலும் கொரோனா தொற்று நோயாலும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அவருடைய பிணை மனுவை விசாரித்த தேசிய புலனாய்வு நிறுவனமும், நீதி மன்றங்களும், பிற அதிகாரிகளும் மருத்துவ சிகிச்சைக்காக அவரைப் பிணையில் விடுவிக்க பலமுறை மறுத்து விட்டன. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் இறுதியில் 2021 மே மாதத்தில் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த காலம் முழுவதும், பீமா கோரேகான் வழக்கில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உறுதியாக மறுத்து வந்துள்ளார். வழக்கின் 5000 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளவை, புனையப்பட்டவை என்றும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆதாரங்கள் என்றும் அடுத்தடுத்து வெளிவந்த உண்மைகள் காட்டியுள்ளன. அந்த குற்றப் பத்திரிகையிலும் கூட 10 பக்கங்களுக்கு குறைவானவற்றில் மட்டுமே அவருக்கு எதிராக எதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

எவரையும் கைது செய்து, எந்தவொரு குற்றச்சாட்டோ அல்லது விசாரணையுமின்றி காலவரையின்றி சிறையில் அடைத்து வைக்கவும், பிணை கூட மறுக்கப்படவும் கூடிய  யுஏபிஏ, என்எஸ்ஏ, பல்வேறு மாநிலங்களில் உள்ள பொது பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் அது போன்ற கொடூரமான கருப்புச் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மக்களின் உரிமைகளுக்காக போராடும் மற்ற எல்லா அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி கோருகிறது.

அருட்தந்தை ஸ்டான் சுவாமி காவலில் வைத்துக் கொல்லப்பட்டிருப்பது, மக்களுடைய மனசாட்சிக்கான உரிமையை கூட மறுக்கும் தற்போதுள்ள அரசை மாற்றி, மனசாட்சிக்கான உரிமை உட்பட, மனித, சனநாயக மற்றும் தேசிய உரிமைகளை மீற முடியாததாக உத்தரவாதம் அளிக்கும் ஒரு புதிய அரசை அமைப்பதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டுமென மனசாட்சியுள்ள அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *