இந்தியக் குடியரசின் கோரமான முகத்தை வெட்டவெளிச்சமாக்கிய தேசிய நெருக்கடிநிலை அறிவிப்பின் 46 வது ஆண்டு

தேசிய நெருக்கடிநிலை பிரகடனத்தின் 46 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் மத்திய குழு டெல்லியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அவசர கால படிப்பினைகள் குறித்தும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஒரு உற்சாகமான விவாதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங் தொடங்கி வைத்தார். அவரது விளக்கக் காட்சியின் முக்கிய கருத்துக்கள் கீழே வெளியிடப்படுகிறது:

46 ஆண்டுகளுக்கு முன்பு சூன் 25-26 நள்ளிரவில், அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அரசியலமைப்புச் சட்டத்தின் 352-வது பிரிவின் கீழ் “தேசிய நெருக்கடி நிலையை” அறிவித்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட காரணம் என்னவென்றால், உள்நாட்டு கலவரங்கள் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பதாகும்.

ஒரே அடியாக, அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் மக்கள் இழந்தனர். தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் தடைசெய்யப்பட்டன. தொழிற்சங்கத் தலைவர்களும், மாணவ செயற்பாட்டாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். தில்லி, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள குடிசைவாசிகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அவர்களது குடிசைகள் தரைமட்டமாக்கப்பட்டன. “மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது” என்ற பெயரில் பல லட்சம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பலவந்தமாக கருத்தடை செய்யப்பட்டது.

மக்கள் தங்களுடைய பேச்சுரிமையையும், கூடுவதற்கான உரிமையையும் இழந்தனர். பத்திரிகைகள் மீது தணிக்கை விதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் மீதான அனைத்து வகையான விமர்சனங்களும் தடை செய்யப்பட்டன. பல்லாயிரக்கணக்கான அரசியல் செயற்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் எதிர்க்கட்சிகள் தலைமையில் இருந்த மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் காலத்தை நீடிக்கவும், தேர்தல்களை ஒத்திவைக்கவும் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

நெருக்கடி நிலையை அறிவிப்பதென முடிவு எடுத்தவர் யார்? அதனுடைய முதன்மையான நோக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான உண்மையான பதில்களை மூடிமறைக்க அதிகபட்ச குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தான் இந்த முடிவை எடுத்தார் என்ற கதையை முதலாளித்துவ அரசியல் ஆய்வாளர்கள் இன்று வரை பரப்பி வருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகள் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளான தனது சொந்த அரசியல் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதே அவரது நோக்கம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தோழர்களே, நெருக்கடிநிலை அறிவிப்பு போன்ற ஒரு முக்கிய முடிவு, ஒரு நபரின் நலனுக்கு சேவை செய்ய மட்டுமே எடுக்கப்படுவதில்லை என்பதை நாம் அறிவோம். அது அதிகாரத்தில் உள்ள வர்க்கத்தால் தங்களுடைய நலனுக்காக எடுக்கப்படுகிறது.

இந்திய ஆளும் வர்க்கம் 1975 சூன் 26-இல் ஒரு நெருக்கடி நிலையை அறிவிப்பதென ஏன் முடிவெடுத்தது? அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள, அந்த நேரத்தில் நிலவிய சூழ்நிலைமைகள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மக்கள் சனநாயகத்திற்காவும் சோசலிசத்திற்காகவும் உலக அளவில் புரட்சிகரப் போராட்டங்கள் முன்னேறிக் கொண்டிருந்த காலம் அது. வலிமை மிக்க அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக வியட்நாமிய மக்களின் நீண்ட நெடிய தேசிய விடுதலைப் போராட்டம் 1975 ஆம் ஆண்டில் இறுதி வெற்றி பெற்றது.

இந்தியாவுக்குள் புரட்சிகர சூழ்நிலை நிலவியது. திரளான மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், அத்துடன் பின்தங்கிய நிலவுடமை மற்றும் சாதி அடிப்படையிலான உறவுகள் தொடர்ந்து நீடித்து வருவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மீது சுரண்டலும் ஒடுக்குமுறையும் தீவிரமடைய வழிவகுத்தது.

மார்ச் 1967 இல், பெரிய நிலவுடமையாளர்களுக்கு எதிராக சுமார் 50,000 ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளின் ஆயுதந் தாங்கிய கிளர்ச்சி, மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் கம்யூனிச புரட்சியாளர்களால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்டது. தோழர் சாரு மஜும்தார் மற்றும் அவரது தோழர்கள் தலைமையிலான இந்த கம்யூனிஸ்ட் குழு, சோசலிச இலக்கை அடைய பாராளுமன்ற சனநாயகத்தை நம்பியிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து தெளிவாக விடுபட்டு வரவேண்டுமென அனைத்து கம்யூனிஸ்டுகளுக்கும் அழைப்பு விடுத்தது. இது கம்யூனிச இயக்கத்திற்குள் ஒரு புதிய போக்கின் தொடக்கத்தையும், ஒரு புதிய விழிப்புணர்வையும் குறித்தது. இது 1969 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிச-லெனினிஸ்ட்) உருவாகுவதற்கு வழிவகுத்தது.

காலனிய எதிர்ப்புப் போராட்டத்திற்கு 1947 இல் துரோகமிழைக்கப்பட்டு விட்டது என்ற உண்மையை தோழர் சாரு மஜூம்தாரின் தலைமையில் சிபிஐ (எம்எல்) துணிவோடு அம்பலப்படுத்தியது. ஆங்கிலேய ஏகாதிபத்தியர்களிடமிருந்து அரசியல் அதிகாரமானது இந்திய பெரிய முதலாளிகள் மற்றும் பெரிய நில உடமையாளர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வெறுக்கத்தக்க சுரண்டல் முறை காலனியத்திற்கு பிந்தைய இந்தியாவில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த பகுப்பாய்வு மற்றும் முடிவின் அடிப்படையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்வதற்காக, மக்கள் சனநாயக புரட்சிக்கு கட்சி அறைகூவல் விடுத்தது. “1947 விலங்குகளை உடைத்தெறிவீர்” என்று கொடுக்கப்பட்ட அறைகூவல், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் முற்போக்கான சிந்தனையாளர்களுடைய இதயங்களையும் கருத்தையும் கவர்ந்தது.

நாட்டின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் சிபிஐ (எம்எல்)-இன் இந்த அறைகூவலையொட்டி ஒன்று திரண்டனர். கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில், கம்யூனிஸ்டுகள் சிபிஐ (எம்எல்) தலைமையிலான புரட்சிகர இயக்கத்திற்கு ஆதரவாக இந்தியத் தொழிலாளர்களையும் மாணவர்களையும் அணி திரட்டத் தொடங்கினர். ஒவ்வொரு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி வளாகங்களிலும் உள்ள மாணவ இளைஞர்கள் இந்திய அரசின் தன்மையில் ஒரு தரமான மாற்றத்திற்கான அழைப்பால் ஈர்க்கப்பட்டனர்.

புரட்சிகர விழிப்புணர்வின் பரவல் காரணமாக, 1970-களின் ஆரம்ப ஆண்டுகளில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் வலுவடைந்தன. இதற்கு, ஏகபோக குடும்பங்களின் தலைமையிலான இந்திய முதலாளி வர்க்கம் மிருகத்தனமான அரசு அடக்குமுறையைக் கொண்டு பதிலளித்தது. பல துறைகளில் தொழிலாளர் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்க அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் – 1968 பயன்படுத்தப்பட்டது. 1971 இல் இயற்றப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் (மிசா), ஆயிரக்கணக்கான கம்யூனிச புரட்சியாளர்களை கைது செய்து சித்திரவதை செய்ய பயன்படுத்தப்பட்டது.

தோழர் சாரு மஜூம்தாரும் மற்றும் சிபிஐ (எம்எல்) இன் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைத்துக் கொல்லப்பட்டனர். இருப்பினும், கட்சியின் புரட்சிகர நிலைப்பாட்டின் செல்வாக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து பரவியது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் எண்ணிக்கையிலும், போர்க்குணத்திலும் தொடர்ந்து வளர்ந்தன. 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற, இரயில்வே தொழிலாளர்களின் மிகப்பெரிய அகில இந்திய வேலைநிறுத்தம் முழு பொருளாதாரத்தையும் ஒரு நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது.

இந்திய ஆளும் வர்க்கம் புரட்சி அச்சுறுத்தலை எதிர்கொண்டது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்ட, ​​முதலாளித்துவ ஏகபோக குடும்பங்கள் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்துமாறு குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கின. இந்த முடிவின் பின்னணியில் இருந்த முதன்மையான நோக்கம், புரட்சியின் அச்சுறுத்தலை அகற்றுவதும், அரசு அதிகாரத்தின் மீது முதலாளித்துவ ஏகபோக குடும்பங்களின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதும் ஆகும்.

இந்திரா காந்தியின் காங்கிரசு அரசாங்கம் நெருக்கடிநிலையை வலது பிற்போக்கிற்கு எதிரான போராட்டமாக முன்வைத்தது. இந்தியாவை நிலைகுலையச் செய்வதற்காக இருக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராகவும், ஜன சங் போன்ற வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் போராடுவதாக அது கூறியது. 1971 ல் சோவியத் யூனியனோடு ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்த நிலையில், சோவியத் யூனியன் இந்த பரப்புரை மீண்டும் மீண்டும் கூறி உலக அளவில் பரப்பியது.

முதலாளித்துவ நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள், இந்திரா காந்தி அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கும் ஊழலுக்கும் எதிராகவும், சனநாயகத்தை மீட்டெடுப்பதற்காகவும் போராடுவதாகக் கூறின. சனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான அவர்களின் அறைகூவலுக்கு ஆங்கிலேய-அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் பரவலான விளம்பரம் செய்தன.

சிபிஐ (எம்எல்) கட்சியின் கிளைகள், மக்கள் சனநாயகப் புரட்சியை முன்னெடுக்கும் நோக்கில் அடக்குமுறையான நெருக்கடிகால ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்காக தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களை அணி திரட்டின. சிபிஐ (எம்.எல்) இன் வெளிநாட்டுப் பிரிவாக செயல்பட்ட, இந்துஸ்தானி கெதர் கட்சி (வெளிநாட்டிலுள்ள இந்திய மார்க்சிச-லெனினிஸ்டுகளின் அமைப்பு), தோழர் ஹார்தியால் பெயின்சின் தலைமையில், புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள இந்திய மாணவர்களுக்கு இடையில் கம்யூனிச அடிப்படை அமைப்புக்களை உருவாக்கியது.

ஆளும் வர்க்கம் நெருக்கடி காலத்தை புரட்சிகர கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்கும், மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கும், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியை மாற்றுவதற்கான மாற்று ஏற்பாட்டைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தியது.

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கைது மக்கள் மத்தியில் அவர்களை மக்கள் நாயகர்களாக காட்ட உதவியது. இது ஆளும் வர்க்க திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆளும் வர்க்கத்தின் நம்பிகைக்குரிய அரசியல்வாதிகளை சனநாயகத்திற்கான சிறந்த போராளிகளாக முன்னேற்றுவது, புரட்சிகர பாதையை மக்கள் பின்பற்றுவதைத் தடுக்க உதவியது.

6-ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு முடிவுற்றவுடனே, நெருக்கடிகால நிலை 1977 மார்ச் 21 இல் திரும்பப் பெறப்பட்டது. காங்கிரஸ் கட்சியை மாற்றி, ஏராளமான பாராளுமன்ற எதிர்க் கட்சிகளை இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட சனதா கட்சி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. மக்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் ஆதரவாக பெரிய மாற்றம் நிகழ்ந்ததென என்று ஒரு பெரிய மாயை உருவாக்கப்பட்டது.

சனநாயகத்தின் மீட்சி என்று அழைக்கப்பட்ட அந்த மாற்றம், உழைக்கும் மக்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க வழிவகுக்கவில்லை. நிலையான மற்றும் “செயல்படும் அரசாங்கம்” என்று உறுதியளித்து 1980-ஆம் ஆண்டில், ஏகபோக முதலாளிகள் காங்கிரசு கட்சியை மீண்டும் மத்திய அரசின் பொறுப்பேற்க கொண்டு வந்தனர். பஞ்சாப் மக்களின் போராட்டங்களை இழிவுபடுத்துவதற்கும், போலி எதிர்மோதல்களில் இளைஞர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கும், சீக்கிய பயங்கரவாதம் மற்றும் காலிஸ்தானிய பிரிவினைவாதத்தின் அச்சுறுத்தலை அவர்கள் உருவாக்கி பரப்பினர். மதச்சார்பற்றதாகவும் சனநாயகமானதாகவும் அழைக்கப்படும் இந்திய அரசு, பொற்கோயில் மீதான இராணுவத் தாக்குதலுக்கும், நவம்பர் 1984 வகுப்புவாத இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியது.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பூதத்தைப் பயன்படுத்தி அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் சர்வதேச ஏகாதிபத்திய நிலைப்பாட்டை 1990 களிலிருந்து இந்திய ஆளும் வர்க்கம் பின்பற்றி வருகிறது. ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகளான காங்கிரசு மற்றும் பாஜக ஆகிய இரண்டுமே அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத படுகொலைகளை 1992-93 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளைப் போலவே முன்னணியில் நின்று நடத்தியிருக்கின்றன. முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட கைது செய்தல் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

மார்ச் 1977-இல் சனநாயகத்தை மீட்டெடுப்பது என்று அழைக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, ஆளும் வர்க்கம் மைய அரசின் அடக்குமுறை அதிகாரங்களைத் தொடர்ந்து பலப்படுத்தி வந்திருக்கிறது. மிசா சனதா கட்சி அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டாலும், மக்கள் உரிமைகள் மீறப்படுவதை சட்டப்பூர்வமாக்க தொடர்ச்சியாக பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்எஸ்ஏ), பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா), பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (போடா) மற்றும் திருத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) ஆகியவை இதில் அடங்கும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் செயற்பாட்டாளர்கள் எந்தவொரு விசாரணை கூட இல்லாமல் இந்த முதலாளித்துவ சனநாயகத்தின் சிறைகளில் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறை உட்பட அரசு பயங்கரவாதம், ஆட்சி நடத்துவதற்கு விருப்பமான முறையாக மாறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதச் சமூகத்தை அரக்கர்களாக காட்டுவதன் மூலம் மக்களைத் திசைதிருப்புவதும் பிளவுபடுத்துவதும் இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்கு சேவை செய்துள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகிய அவர்களின் சமூக விரோத நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்ல இது உதவியிருக்கிறது. இது மக்களின் நியாயமான போராட்டங்களை “சட்டம் ஒழுங்கு” பிரச்சினைகளாக மாற்ற பயன்பட்டிருக்கிறது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் எதைக் காட்டுகின்றன? நெருக்கடி நிலை விதிக்கப்பட்டதன் பின்னணியிலும், சனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான இயக்கத்தின் பின்னணியிலும் ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் கை இருந்தது என்பதை அவை காட்டுகின்றன. தோட்டாக்கள் மற்றும் வாக்குகள் மூலம், ஆளும் வர்க்கம் புரட்சியின் அச்சுறுத்தலை அகற்றுவதில் வெற்றி பெற்றது. கம்யூனிச இயக்கத்தின் ஒரு பிரிவினர் நெருக்கடி நிலைக்கு ஆதரவளித்ததும், மற்றொரு பிரிவினர் சனதா கட்சி மற்றும் சனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான அதன் அறைகூவலுக்கு ஆதரவளித்ததும் முதலாளி வர்க்கம் மக்கள் போராட்டத்தைச் சூழ்ச்சியாகக் கையாளுவதற்கும் புரட்சியின் அச்சுறுத்தலை அகற்றுவதற்கும் உதவியது.

தற்போது, ​​தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளுடைய போராட்டத்தையும் நசுக்குவதற்கு பிரதமர் மோடி இந்த ஆண்டு நெருக்கடி நிலையை அறிவிக்கலாம் என்ற கருத்தை பல்வேறு கட்சிகள் பரப்பி வருகின்றன. அந்தக் கருத்து முற்றிலும் தவறானதாகும்.

மீண்டும் வலியுறுத்தி கூறுவதானால், 1975 இல் ஒரு நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும் என்று இந்திரா காந்தி தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கவில்லை. அத்தகைய முடிவை நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எடுக்க முடியாது. நெருக்கடி நிலை அறிவிப்பு என்பது ஆளும் வர்க்கம் எடுக்கும் ஒரு முடிவாகும். ஏகபோக முதலாளிகள் தங்களுடைய ஆட்சிக்கும் சுரண்டல் முறைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அத்தகைய முடிவை எடுப்பார்கள்.

தற்போது நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் நெருக்கடி காலத்தைப் போலவே தோன்றினாலும், ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அந்த நேரத்தில், புரட்சியின் அலை உலக அளவிலும் நம் நாட்டிலும் அடித்துக் கொண்டிருந்தது. தற்போதுள்ள அரசுக்கு பதிலாக மக்கள் சனநாயகம் என்ற புதிய அரசுக்கான போராட்டத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்திருந்தனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட வேண்டும் என்று ஆளும் வர்க்கத்தைத் தீர்மானிக்க தூண்டிய முக்கிய காரணம் அதுதான்.

1990-களின் தொடக்கத்தில், நிலைமை மாறியது. புரட்சியின் அலை உலக அளவில் குறைந்து பின்வாங்கத் தொடங்கியது. நமது நாடு உட்பட அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும், பிற்போக்குத்தனமான முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தின் மீதும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்கு எதிராகவும் இதுவரை கண்டிராத அளவில் தாக்குதலை நடத்தி வருகிறது.

தற்போது, ​​நம் நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மூன்று விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்வதற்காகவும், அனைத்து விவசாய பொருட்களுக்கும் உத்தரவாதமான – இலாபகரமான விலைகளுக்காகவும் கோரிக்கைகளை எழுப்பியுள்ள விவசாயிகளுடைய போராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கம் முழுமையாக ஆதரவளிக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் அரசின் தன்மையில் ஒரு தரமான மாற்றத்திற்கான இயக்கமாக உருவாகும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவர்கள் இன்னும் அந்த விழிப்புணர்வை அடையவில்லை.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் முதலாளித்துவ அரசியல் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் வரை, ஆளும் வர்க்கம் ஒரு நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள் நாம் தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களை தற்போதுள்ள அரசை மாற்றி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை, ஒரு புதிய அரசை அமைக்கும் நோக்கத்தோடு போராட்டங்களை வழி நடத்துவதில் வெற்றி பெற்றுவிட்டால், ஒரு புரட்சிகர சூழ்நிலைமை உருவாக்கப்படும். அப்படிப்பட்ட நிலையில், நெருக்கடி நிலையை அறிவிப்பது அவசியமாகவும் நேரக்கூடியதாகவும் ஆகலாம்.

தற்போதைய நேரத்தில் புரட்சிகர விழிப்புணர்வு வளர்ச்சிக்கான முக்கியத் தடையாக இருப்பது என்னவென்றால், பாஜக போன்ற வகுப்புவாத மற்றும் பாசிச சக்திகளிடமிருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகக் கூறப்படும் பாராளுமன்ற சனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் தொழிலாளர்களும் விவசாயிகளும் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தாகும்.

தற்போதுள்ள முதலாளித்துவ சனநாயகத்தை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நம்முடைய உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்காத இந்த அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் இல்லை.

1975 இல் நெருக்கடி நிலை அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தை மீறவில்லை. ஏகபோக குடும்பங்களுடைய ஆட்சிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏகபோக குடும்பங்கள் நினைக்கும் போதெல்லாம், அவர்கள் ஒரு நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கும், மக்களுடைய எல்லா உரிமைகளை மறுப்பதற்கும், அரசியல் சட்டத்தின் உறுப்பு 352 தெள்ளத் தெளிவாக அனுமதிக்கிறது.

யுஏபிஏ-வின் கீழ் அண்மைக் காலங்களில் மக்களை விருப்பப்படி கைது செய்வதும், 2020 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தொழிலாளர் விரோத, விவசாய விரோத சட்டங்களும் கூட அரசியல் சட்டத்தை மீறவில்லை.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பதில்லை. மனித உரிமைகள், சனநாயக உரிமைகள், தேசிய உரிமைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மீறப்படக் கூடாதவை என்பதற்கு இது எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இந்த அரசியலமைப்புச் சட்டம், அதிகபட்ச தனியார் இலாபங்களை அறுவடை செய்வதற்காக, தொழிலாளர்களைத் தீவிரமாகச் சுரண்டுவதற்கும், விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களைக் கொள்ளையடிப்பதற்கும், நமது நிலம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைச் சீரழிப்பதற்கும் டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக முதலாளிகளின் வரைமுறையற்ற “உரிமையைப்” பாதுகாக்கிறது என்பதை வரலாற்று அனுபவம் காட்டுகிறது.

அரசியலமைப்பின் முன்னுரை, யதார்த்தத்துடன் எந்த தொடர்பும் இல்லாத அழகான சொற்கள் நிறைந்ததாக உள்ளது. முன்னுரையில் பிரகடனப்படுத்தப்படுவதற்கு நேர்மாறாக இந்தியக் குடியரசு உள்ளது. இது ஒரு சோசலிச குடியரசு என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இது முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கும் இந்தியாவை ஏகாதிபத்திய சக்தியாக மாற்றுவதற்குமான ஒரு நிறுவனமாகும். இது ஒரு சனநாயக குடியரசு என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இது உண்மையில் ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட சுரண்டும் சிறுபான்மையினரின் ஒரு காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரமாகும். இது ஒரு மதச்சார்பற்ற குடியரசு என்று அழைக்கப்படுகிறது, ஆனால் உண்மையில் இது காலனிய பாரம்பரியத்தையும், அதன் பிரித்தாளும் கொள்கையையும் தொடர்ந்து நீடிப்பதற்கான ஒரு அங்கமாகும்.

மொத்தத்தில், நெருக்கடி காலம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் அனுபவத்திலிருந்து மிக முக்கியமான படிப்பினை என்னவென்றால், தற்போதுள்ள அரசையும், அதன் அரசியலமைப்பு சட்டத்தையும், பாராளுமன்ற சனநாயக முறையையும் பாதுகாப்பதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு சேவை செய்ய முடியாது என்பதாகும். தற்போதுள்ள முதலாளி வர்க்க சர்வாதிகார அரசை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒரு புதிய ஆட்சியைக் கொண்டு மாற்றியமைப்பதில் தான் நமது நலன்கள் உள்ளன. அப்போதுதான் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும். அப்போதுதான் அனைவரின் வளமைக்கும் பாதுகாப்பிற்கும் உத்திரவாதமளிக்க முடியும்.

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியை முக்கியமான அகநிலை சக்தியாக, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக நாம் பலப்படுத்த வேண்டும். மார்க்சியம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலம், கம்யூனிச இயக்கம் இந்தக் காலத்தின் திட்டவட்டமான நடைமுறை பணிகளையொட்டி தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்கள் திரளை ஒன்றிணைக்க முடியும். அந்த திட்டவட்டமான நடைமுறைப் பணிகளாவன – தனியார்மய, தாராளமயமாக்கல் திட்டத்திற்கு உடனடியாக முடிவு கட்டுதல்; தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுதல்; சனநாயக, காலனிய எதிர்ப்பு, நில பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்வதற்கான நிபந்தனையாக முதலாளித்துவத்தை தூக்கியெறிதல்; மற்றும் புரட்சி மூலம் சோசலிசத்தைக் கட்டுதல் என்பனவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *