கொரோனா சூழ்நிலையில் சென்னை பகுதி வாகன உற்பத்தி தொழிலாளர்களின் நிலைமை

கொரோனா நெருக்கடியில் வாகன உற்பத்தித் தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் குறித்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் சூன் முதல் வாரத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் யமஹா மோட்டார், ராயல் என்ஃபீல்டு, ஃபோர்டு மோட்டார், ஹூண்டாய் மற்றும் ரினால்ட் நிசான் நிறுவனங்களின் தொழிற் சங்கத் தலைவர்களும் தொழிலாளர்களும் பல்வேறு பிற தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், அமைப்புக்களும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த எல்லா தொழிற்சங்கத் தலைவர்களையும், தோழர்களையும் தோழர் பாஸ்கர் வரவேற்றார். கொரோனா இரண்டாவது அலையில் வாகனத் தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் குறித்து ஒரு விளக்கக் காட்சி முன்வைக்கப்பட்டது. அந்த விளக்கக் காட்சி, கொரோனா நெருக்கடியையும், இந்த பெருந்தொற்று நோய் நெருக்கடியில் அரசாங்கம் எப்படி தொழிலாளர்களை ஆபத்து உள்ளாக்கி வருகிறது என்பது குறித்தும், தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்தும் விவாதித்தது.

தொழிலாளர்களுடைய நிலைமைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும், நிர்வாகத்தின் நிலைப்பாடுகள் குறித்தும், எப்படி இந்த இயக்கத்தை முன் கொண்டு செல்லலாம் என்பது குறித்தும் எடுத்து விளக்குமாறு தொழிற் சங்கத் தலைவர்களை பாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

யமாஹா தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் உதயகுமார் பேசுகையில், சென்ற ஆண்டு கொரோனா முதல் அலையின் போது ஊதியத்துடன் கூடிய விடுமுறையை தொழிலாளர்களுக்கு நிர்வாகம் கொடுத்தது. இப்போது இரண்டாவது அலையின் போது, பொது முடக்கத்தின் போதும் வாகனத் தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்திருக்கிறது. கொடுக்கப்பட்ட சில நாட்கள் விடுமுறைக்கான ஊதியத்தை நாங்கள் போராடிப் பெற்றோம். எல்லா தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி, பாதுகாப்பு கவசங்களை கோரிக்கை எழுப்பிப் பெற்றோம். லாக்கர்கள், உணவு விடுதி, பேருந்துகளில் நெரிசலை குறைக்க நடவடிக்கைகளைக் கோரிப் பெற்றோம். தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக, காப்பீடுத் தொகையை 3 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எங்களுடைய தொழிலாளி கொரோனாவால் இறக்க நேரிட்டால், அவருடைய குடும்ப உறுப்பினருக்கு வேலை என்பது உட்பட 9 கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகத்திடம் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். கொரோனாவிலிருந்து எங்களைக் காப்பதற்கு தேவையான அடிப்படைக் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள மறுக்குமானால், போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, என்றார் தோழர்.

யமாஹா வெண்டர் பார்க்கில் உள்ள பிற தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தத்தம் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தம் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் நாங்கள் ஆதரவளித்து வருகிறோம்.

ராயல் என்பீல்டு தொழிற் சங்கத்தின் பொருளாளர் தோழர் செல்வகுமார் பேசுகையில், கொரோனா பரிசோதனைகளை ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டுமென்றும், தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனவும் கோரிப் பெற்றிருக்கிறோம். கொரோனா நோயில் சிக்கி இறக்க நேரிடும் தொழிலாளர்களுடைய குடும்பத்திற்கு அடுத்து 5 ஆண்டுகளுக்கு ஊதியத் தொகையை வழங்க வேண்டுமென கேட்டிருக்கிறோம். சென்னையிலிருந்து பிற மாநிலங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நிர்வாகம் மீண்டும் சென்னைக்குக் கொண்டுவந்து கொரோனா நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். முன்னர் நாங்கள் போராடி சுமார் 500 பயிற்சித் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையைப் பெற்றுத் தந்திருக்கிறோம். தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 54 தொழிலாளர்களை விரைவில் வேலையில் சேர்த்துக் கொள்ள முயற்சி எடுத்து வருகிறோம் என்றார் அவர்.

அடுத்து ஃபோர்டு தொழிற் சங்கத்தின் தலைவர் தோழர் எஸ்.சுரேஷ் உரையாற்றினார். கொரோனாவின் முதலாவது அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை நமது மக்களை மிகவும் மோசமாக பாதித்திருக்கிறது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், முதலாளிகளுடைய இலாபத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் வாகனத் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதித்திருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் எப்படி தொழிற்சாலைகள் இயங்க வேண்டுமென ஒரு ஆணையை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அதில், நிர்வாகங்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், நோயால் பாதிக்கப்படும் அல்லது இறக்க நேரிடும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்தும் அரசாங்கம் அறிவித்திருக்க வேண்டும். முழு முடக்கத்தை அறிவிப்பதற்கு முன்னர், தொழிற்சாலை நிர்வாகங்களை அழைத்துப் பேசிய அரசாங்கம், தொழிற் சங்கங்களின் கருத்தைக் கேட்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் தொழிலாளர்கள் குறித்த எல்லா பிரச்சனைகளுக்கும், அரசாங்கம் தொழிற் சங்கங்களோடு கலந்தாலோசிக்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம். தொழிற்சாலைகளுக்குச் சென்று கூடி வேலை செய்வதால் தொற்று நோய் பரவுகிறதென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடமிருந்து மற்ற தொழிலாளர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் நோய் பரவுவதோடு, இறக்கவும் நேரிடுகிறது. தொழிற்சாலைகள் தொடர்ந்து வேலை செய்வதால் தொற்று நோயின் தொடர் சங்கிலியை உடைக்க முடியாது. இந்த எல்லா உண்மைகளையும் புறக்கணித்துவிட்டு, உற்பத்தியைத் தொடருமாறு தொழிலாளர்களை அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறது.

ஃபோர்டு சென்னையில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறோம். உடன் வேலை செய்யும் பிற நிறுவனத் தொழிலாளர்களையும் சேர்த்து 7000-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வேலை செய்கிறோம். எங்களில் எவரும் தொற்று நோயால் பாதிக்கப்படும் போது, மருத்துவமனையில் படுக்கையோ, ஆக்சிஜனோ கிடைப்பதற்கு அரசாங்கமும், நிர்வாகமும் எந்த உத்திரவாதமும் தராத நிலையில் நாங்கள் எங்கே போவது? நாங்கள் கோரிக்கை எழுப்பிப் போராடியதால் மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக ரூ 2 இலட்சத்தையும், மருத்துவமனையில் ஆக்சிஜனோடு கூடிய 10 படுக்கைகளையும், ஆக்சிஜன் கொடுக்கும் 20 சாதனங்களையும் ஏற்பாடு செய்வதாக நிர்வாகம் கூறியிருக்கிறது. கொரோனாவால் இறந்து போக நேரிடும் தொழிலாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டிற்காகவும் நாங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதுவரை எங்களுடைய தொழிற்சாலையில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 4 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். நோய்த் தொற்றைத் தவிற்பதற்காக நிறுவனத்தை 3 நாட்களுக்கு மூட வைத்தும், 12 விடுமுறையையும் நிர்வாகத்திடம் கோரிப் பெற்றுள்ளோம்.

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சங்கம் எதுவும் இல்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த இழப்பீடும் காப்பீடும் கிடைப்பதில்லை. அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. சமுதாயத்திலுள்ள மக்களில் 90 சதவிகித மக்கள் தொழிலாளர்கள் ஆவர். எனவே தொழிற்சங்கம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம்முடைய கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன் வைக்க வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது.

இதையடுத்து ரினால்ட் நிசான் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் மூர்த்தி பேசினார். தொழிற்சாலையிலுள்ள 3500 தொழிலாளர்களும் ஒற்றுமையோடு செயல்படுகிறோம். எங்களுடைய சங்கத்தை ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு (ULF) வழிநடத்துகிறது. முதல் அலையின் போது தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்கும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் அரசாங்கமும், நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். ஆனால் இரண்டாவது அலையின் போது, இவர்கள் எவரும் இது குறித்து கவலைப்படவோ, தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவோ இல்லை. இதன் விளைவாக காட்டுத்தீயைப் போல கொரோனா மக்களிடையே பரவியது. இரண்டாவது அலையின் துவக்கத்தில் கூட எங்களுடைய தொழிற் சங்கம், தனிநபர் இடைவெளி கிருமி நாசினி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு நிர்வாகத்திடம் கோரினோம். அரசாங்கம் அவ்வாறு எதையும் கூறவில்லை என்று கூறி நிர்வாகம் செயல்பட மறுத்துவிட்டது. இதன் காரணமாக கொரோனா எங்களுடைய தொழிலாளர்கள் பலருக்கும் பரவி ஒருவர் இறக்கவும் நேரிட்டது.

வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் எப்படி தொடர் உற்பத்தி நிறுவனமாக ஆகும் என்றும், முழு ஊரடங்கு நேரத்தில் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதித்தது ஏன் என்றும் கேட்டு நாங்கள் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தோம். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 3 நிரந்தரத் தொழிலாளர்களும், 2 ஒப்பந்தத் தொழிலாளர்களும் இறந்துவிட்டனர். தொழிலாளர்களுடைய உயிரையே கொரோனா அச்சுறுத்தும் சூழ்நிலையில், நிர்வாகம் குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தும் நிலையில், ஊதியம் கிடைக்குமா இல்லையா என்பதைக் கூட பொருட்படுத்தாமல் தொழிற் சங்கம் மே 26-லிருந்து தொற்று நோய் பரவலைத் தடுக்க நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்கும் வரையிலும், முழு முடக்கம் தளர்த்தப்படும் வரை எங்களுடைய தொழிலாளர்கள் வேலைக்கு வர மாட்டோமென உறுதிபட நிர்வாகத்திற்கு அறிவித்து விட்டோம். அடுத்த நாளே நிர்வாகம் 4 நாட்களுக்கு தொழிற்சாலையை மூடியது. எங்களுடைய நெருக்குதல் காரணமாகவும், நீதி மன்றத்தின் ஆணையின் காரணமாகவும், தொழிற்சாலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையினர் ஆலையை ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். வேலை செய்யும் போது தொழிலாளர்களிடையே இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக கன்வேயர் உற்பத்தி வரிசையில் ஒரு வாகனத்திற்கும் அடுத்த வாகனத்திற்கும் இடையே ஒரு வாகன இடைவெளியை விடுமாறு நாங்கள் கோரினோம். அதிக இலாபத்திலேயே குறியாக இருக்கும் நிர்வாகம் 10 அல்லது 8 வாகனங்களுக்கு இடையே 1 இடைவெளியை மட்டுமே கொடுக்க முடியுமென வாதாட இறுதியில் 3 வாகனங்களுக்கு இடையே 1 இடைவெளியை சோதனை அடிப்படையில் செயல்படுத்த ஒப்புக் கொண்டோம். அது மட்டுமின்றி தொழிற்சாலையில் எங்கெங்கெல்லாம் தொழிலாளர்கள் நெருக்கமாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி மாற்றம் செய்யக் கோரினோம்.

எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில், இறந்துபோக நேரும் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கிறோமென நிர்வாகம் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். இறந்தவருடைய குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகையையும், 6 மாத சம்பளத்தையும் கொடுப்போமென நிர்வாகம் கூறுகிறது. நாங்கள் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ 50 இலட்சம் கொடுக்க வேண்டுமென கோரியிருக்கிறோம். நிர்வாகமே முன்வந்து எடுத்திருக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தொழிற்சங்கம் கோரி வற்புறுத்திய பின்னர் எடுத்து வருகிறார்கள். தொழிலாளி வர்க்கக் கட்சிகள் உட்பட எல்லா கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவில் இருக்கிறார்கள். குழுவில் இடம் பெற்றுள்ள இந்தக் கட்சிகள் அந்தக் குழுவில் வாகனத் துறைத் தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை எழுப்பவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

தற்போது, இன்னும் சில ஆண்டுகளில் நிரந்தர வேலை எங்குமே இல்லாத நிலை உருவாகி வருகிறது. நீம், ஃஎப்டிஇ (NEEM, FTE) போன்ற திட்டங்களை நிர்வாகங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. வேலைகள் நிரந்தரமாக இருக்கின்றன, வேலை செய்பவர்கள் அல்ல. தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரத்தை மறுக்கும் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதைத் தடுப்பதற்கான முயற்சியை தொழிலாளி வர்க்கக் கட்சிகள் மேற் கொள்ள வேண்டும்.

இதைத் தொடர்ந்து மக்களாட்சி இயக்கத்தின் தலைவர் திரு இராகவன் உரையாற்றினார். கொரோனா ஊரடங்கு இருந்தாலும், இல்லையென்றாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தனி நபர் இடைவெளியும், பிற தடுப்பு நடவடிக்கைகளும் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. எங்கெல்லாம் தொழிற் சங்கங்கள் வலுவாகவும், ஒற்றுமையாகவும் செயல்படுகிறார்களோ, அங்கு சில பயன்களையும், காப்பீட்டையும் தொழிலாளர்களால் பெற முடிகிறது. கொரோனாவில் ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சித் தொழிலாளர்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருகிறார்கள். நம்முடைய சில தொழிற் சங்கங்கள் அவர்களுடைய பிரச்சனைகளையும் எடுத்துப் போராடி வருகின்றன. இந்த பெருந்தொற்று நோயைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் தொழிலாளிகளுடைய வேலைச் சுமையை அதிகரித்து சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள். மக்களுடைய அரசியல் அதிகாரம் குறித்த பிரச்சனையை மக்களாட்சி இயக்கம் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

நமது நாட்டில் தொழிலாளர்கள் நாம் மிகப் பெரும்பான்மையாக இருந்தாலும், நம் கைகளில் எந்த அதிகாரமும் இல்லை. போராடாமல் நம்முடைய அடிப்படை உரிமைகளைக் கூடப் பெற முடியாது. தொழிலாளர்கள் நம்மிடம் ஒற்றுமையும், அதிகாரமும் இல்லாத காரணத்தால், அரசாங்கமும், முதலாளிகளும் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் வகையில் புதிய நான்கு தொழிலாளர் விரோதச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பதைத் தவிர மக்களுக்கு எவ்வித உரிமைகளும் இல்லை. இதுதான் இன்றைய உண்மையான நிலைமை. மிகப் பெரும்பான்மையாக இருக்கும் நம்முடைய நிலைமை ஏன் மோசமாகவும், அதிகாரமின்றியும் இருக்க வேண்டும்? நமக்கு நியாயமான ஊதியமோ, மருத்துவ வசதிகளோ, நிரந்தர வேலையோ, வேலைக்குப் பாதுகாப்போ, காப்பீடோ இல்லை. நம்முடைய அரசியல் உரிமைகள் குறித்தும், அவற்றைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நாம் விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தேர்தல்கள் மட்டுமே நமக்குள்ள ஒரே உரிமையா? நம்முடைய அரசியல் சட்டத்திலும், தொழிற் சட்டங்களிலும் அரசாங்கத்தைக் கேள்வி கேட்க நமக்கு எந்த உரிமையாவது, அல்லது வழி முறையாவது இருக்கிறதா போன்றன குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

அடுத்ததாக குளோபல் மருத்துவமனை பணியாளர்களுடைய சங்கத்தின் தலைவர் தோழர் மாந்தநேயன் உரையாற்றினார். கொரோனா நேரத்தில் வாகனத் தொழிலாளர்கள், பிற அணி திரட்டப்பட்ட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கிராமப்புறங்களிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் என எல்லா உழைக்கும் மக்களும் கடுமையான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் போர்த் தளவாடங்கள் போன்றவற்றில் அரசாங்கம் பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து வருகிறார்கள். அதில் ஒரு சிறிய தொகையைக் கூட மக்களுடைய மருத்துவ சுகாதாரத்திற்காகச் செலவிடவில்லை. நம்முடைய கோரிக்கைகளை, தனிப்பட்ட நிறுவனங்கள் மட்டத்தில் எடுத்துக் கொள்வதோடு, அவற்றை ஒரு பொதுவான அரசியல் கோரிக்கைகளாக கூட்டாக நாம் அரசாங்கத்திடம் எழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஏஐசிசிடியு-வின் தலைவர்களில் ஒருவரான தோழர் இரணியப்பன், வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் தங்களுடைய அனுபவங்களை சிறப்பாகப் பகிர்ந்து கொண்டனர் என்றார். வாகன உற்பத்தி அத்தியாவசிய சேவையல்ல. முழு முடக்கத்தை அறிவித்த அரசாங்கம், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறது. தொழிலாளர்களுடைய துன்பங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே முழு பொறுப்பாகும். தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் தொழிற்சங்கத்தை அமைப்பதைத் தடுத்து நிர்வாகமே தொழிற் சங்கத்தை உருவாக்குவதன் மூலம் அனுபவமற்ற தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டி வருகிறார்கள். மிகவும் மோசமான பெருந்தொற்று நோய்க்கு இடையில், இந்தத் தொழிலாளர்கள் தயங்காமல் போராட முன்வந்திருப்பது மிகவும் போற்றத் தக்கதாகும். எல்லா வாகன உற்பத்தித் தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்க மேற்கொள்ளும் முயற்சியை அவர் மிகவும் பாராட்டினார்.

சிஓஐடியு (COITU) மற்றும் கம்யூனிஸ்டு ஒர்கர்ஸ் கட்சியின் வழிகாட்டுதலில் உள்ள 108 ஆம்புலன்சு தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், அரசு மருத்துவமனை உதவிப் பணியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவருமாகிய தோழர் இராசேந்திரன், மருத்துவமனைத் தொழிலாளர்கள் ஆபத்துக்களைச் சந்தித்தவாறு இரவும் பகலும் உழைத்து வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் உள்ள 20,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்களும், 6000-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்சு தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் நோயாளிகளைத் தொட்டு நெருங்கி செயல்பட வேண்டியிருப்பதால், தனிநபர் இடைவெளி என்பது இயலாத ஒன்றாகும். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யும் எங்களுக்கு போதுமான முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், தனிமைப்படுத்திக் கொள்வதற்கு தங்குமிடம், உணவு, தண்ணீர் போன்றன கொடுக்கப்படுவதில்லை. எங்களுடைய இந்த மோசமான நிலை குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடமும், மருத்துவ இயக்குனர்களிடமும், மாவட்ட அரசு அதிகாரிகளிடமும் பல முறை பேசியிருக்கிறோம். கோவையில் சாலை மறியல் போராட்டம் கூட நடத்தியிருக்கிறோம். ஆனால் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. ஆம்புலன்சு சேவை கோரி அழைப்பதிலிருந்து துவங்கி, நலமடைந்து வீடு திருப்பும் வரையில் நோயாளிகளைக் கையாளும் முன்னணி மருத்துவப் பணியாளர்களுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. எந்தத் துறையில் வேலை செய்தாலும், தொழிலாளர்கள் நம்மை பற்றி எவ்வித அக்கறையும் அற்ற முதலாளிகள் நம்மை மலிவான வேலையாட்களாக நடத்துகிறார்கள். இந்த நிலைக்கு முடிவு கட்டுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம்முடைய உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் போராட வேண்டுமென்று அவர் கூறினார்.

அடுத்து பேசிய தோழர் சேது மாதவன், ஒப்பந்தத் தொழிலாளர்களுடைய சட்டப் பிரச்சனைகள் குறித்து பேசினார். ஒப்பந்தத் தொழிலாளர்களும் சட்டப்படி நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களுடைய பிரச்சனைகளை தொழிலாளர் ஆணையரிடம் முறையிடவும், அவற்றை 30 நாட்களுக்குள் அவர் தீர்க்கவும் வேண்டும். தொழிலாளர்கள் தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும் நிர்வாகமும், ஒப்பந்தக்காரருமே பொறுப்பாகும். எல்லா தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நாம் ஒன்றுபட்டு உறுதியோடுப் போராட வேண்டுமென்றார் அவர்.

விஎச்எஸ் மருத்துமனைத் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அமைப்பாளருமாகிய தோழர் மணிதாசன் பேசுகையில் தொழிலாளர்களுடைய ஒற்றுமையை வலியுறுத்தினார். தொழிலாளர் உரிமைகள் குறித்து சட்ட ரீதியான விவரங்களைத் தெளிவாக அறிந்து கொள்வதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராட முடியும். தொழிற் சங்கம், கட்சி மற்றும் பிற வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிலாளர்கள் நாம் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலம் நம்முடைய பொருளாதார, சங்க உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

சென்னை ஃபோர்டு தொழிற் சங்கத்தின் செயலாளர் தோழர் அருண் சஞ்சீவி, சமுதாயத்தில் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்கள் நமக்கு, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிப்பதில் எவ்வித பங்கும் இல்லை. அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் முதலாளிகள் தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆளுமையில் பங்கு வகிப்பதற்கு எல்லா சங்கங்களும், கட்சிகளும் கடந்து தொழிலாளர்கள் நாம் ஒரு மாபெரும் இயக்கமாக மாற வேண்டும். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து நாம் போராடுவதோடு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட எல்லா தொழிலாளர்களுடைய நலன்களையும் பாதுகாக்க வேண்டும்.

தொழிலாளர் கூடத்தைச் சேர்ந்த தோழர் சந்திரிகா, கூட்டத்தின் கருத்துக்களை வரவேற்றார். சுரண்டலையும், தாக்குதல்களையும் எதிர் கொள்ளும் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கும், வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டால் இதிலிருந்து தப்பிவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் கொரோனா நெருக்கடி இந்தத் தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டியத் தேவையை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் குறைவாக உள்ளன. சமுதாயத்தில் புதிய மாற்றத்தை உருவாக்குவதற்கு அவர்கள் தங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஊடகங்களையும் கட்டமைப்புக்களையும் நாம் உருவாக்க வேண்டுமென்றார்.

மருந்து உற்பத்தித் துறையைச் சேர்ந்த தோழர் பால் பாண்டி அடுத்து உரையாற்றினார். இந்த தொற்று நோய் காலத்திலும் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலான மக்களை ஊரடங்கில் முடக்கி வைத்து விட்டு, தொழிலாளர்களை உற்பத்தி செய்யுமாறு கட்டாயப்படுத்துவது சரியல்ல. தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும் அவசியமான பல்வேறு மருந்துகளை, தொற்று நோய் அபாயத்தைப் பொருட்படுத்தாமல் நாங்கள் உற்பத்தி செய்கிறோம். ஆனால் எங்களுக்குப் போதிய பாதுகாப்போ ஆதரவோ முதலாளிகளிடமிருந்து கிடைப்பதில்லை. நாம் ஒன்றுபடுவது மட்டுமின்றி, தொழிலாளர்களுடைய எல்லா பிரச்சனைகளையும், இந்த முழு சமுதாயத்தின் முன்னுரிமையாக ஆக்கி அவற்றிற்குத் தீர்வு காண வேண்டும்.

மணலியிலுள்ள எஸ்ஆர்எஃப் தொழிற் சங்கத்தைச் சேர்ந்த தோழர் சத்தீஷ், முதலாளிகளும், அரசாங்கமும் தொழிலாளர்களை விரும்பத்தகாதவர்களாக கருதுகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளின் கீழும், தனிப்பட்டவைகளாகவும் உள்ள எல்லா தொழிற்சங்கங்களை எப்படி ஐக்கியப்படுத்துவது? எப்படித் தொழிலாளர்களை அரசியல் போராட்டங்களில் பங்கேற்க வைப்பது? ஒரு போர்முக ஒற்றுமையை எப்படிக் கட்டுவதென்றும், அரசியல் போராட்டங்களை நோக்கிச் செல்வதெப்படி என்றும் நாம் சிந்திக்க வேண்டும். தொழிலாளர்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்தும் இந்த முயற்சியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இறுதியில் தொகுத்து உரையாற்றிய தோழர் பாஸ்கர், வாகன உற்பத்தித் துறையில் வேலை செய்யும் நமது தொழிலாளர்கள் மிகவும் மோசமான ஆபத்தான நெருக்கடியில் இருப்பதை நமது தோழர்களுடைய எல்லா அனுபவங்களும் தெளிவாகக் காட்டுகின்றன. நிர்வாகம் எடுத்த சில நடவடிக்கைகளும், ஆதரவும் கூட, நமது தொழிற் சங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக கிடைத்திருக்கின்றன. மேலும் பல முக்கியமான நமது கோரிக்கைகள் நிர்வாகத்திடம் தேங்கியுள்ளன. இந்த கொரோனா நெருக்கடி நேரத்தில், வாகனத் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பொதுவான கோரிக்கைகளைத் திரட்டி அவற்றை அரசாங்கத்திடம் நாம் முன்வைக்க வேண்டும். நம்முடைய உரிமைகளுக்கு குரலெழுப்புவதற்காக, இந்த வாகன உற்பத்தித் துறையிலுள்ள எல்லா தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கட்டி நாம் வலுப்படுத்த வேண்டும். இந்த முக்கியமான கூட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றதற்கும், அனுபவங்களையும், கண்ணோட்டத்தையும் பகிர்ந்து கொண்டதற்கும் எல்லா தலைவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் தோழர் பாஸ்கர் நன்றி தெரிவித்தார். இந்த இயக்கத்தை முன் கொண்டு சென்று, தொழிலாளி வர்க்க ஒற்றுமையை நாம் அனைவரும் கட்டி வலுப்படுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *