தொழிலாளர் வேலை நிலைமைகள் மீது கொரோனா முடக்கத்தின் தாக்கம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா (கோவிட் -19) முடக்கம் தொழிலாளி வர்க்கத்தின் பல பிரிவினருக்கு பல புதிய மற்றும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது.

பல துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கூறியுள்ளன. தொற்றுநோய் மற்றும் முடக்கத்தின் காரணமாக, தொழிலாளர்கள் உடல் ரீதியாக பயணிக்கவும், குறிப்பிட்ட நேரங்களில் பணியிடத்தில் இருக்கவும் முடியாத சூழ்நிலையில், “வீட்டிலிருந்து வேலை” செய்வதென்பது உண்மையில் புதிய வழிமுறையாக மாறியுள்ளது.

2020 மார்ச் 25 அன்று நாடு தழுவிய பூட்டுதல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, அனைத்து பெரிய மற்றும் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளில் உள்ள 90-95% தொழிலாளர்கள் தத்தம் வீடுகளிலிருந்து வேலை செய்யுமாறு முதலாளிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அன்றிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் முடக்கம் தளர்த்தப்பட்டு வரும் சூழலில் இந்த நிறுவனங்களில் சில ஓரளவு திறக்கப்பட்டன, இருப்பினும் ஏப்ரல் 2021 முதல் தொற்றுநோயின் தற்போதைய பேரழிவான அலை, இந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையினரை வீட்டிலிருந்து வேலை செய்ய மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளது.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகை, பள்ளி மற்றும் உயர் கல்வி, வங்கி மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகளில் உள்ள பல சேவைகள், இந்த முடக்கக் காலத்தில் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு செய்திருக்கின்றன.

வீட்டிலிருந்து வேலை செய்வதென்பது தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலம் மற்றும் சமூக உறவுகளைக் கடுமையாக பாதித்துள்ளது என்ற உண்மையை உலகிலும், இந்தியாவிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகள், எடுத்துக்காட்டுகின்றன. பல துறைகளில் உள்ள தொழிலாளர்களும், அவர்களின் அமைப்புகளும் தொழிலாளர்கள் அதிக அளவில் சுரண்டப்படுவது குறித்தும் சட்டரீதியாகவே அவர்களுடைய வேலை நேரத்தை 8 லிருந்து 12 மணி வரையிலும், பெரும்பாலும் 20 மணி நேரம் வரையிலும் அதிகரித்து இருப்பது குறித்தும் கவலை தெரிவித்திருக்கிறார்கள்! அதிகரித்த வேலை நேரத்திற்கு கூடுதல் நேர ஊதியம் கிடைக்காதது, தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு குழந்தைகள் காப்பக வசதிகள் இல்லாதது, தங்களோடு வேலை செய்பவர்களோடு தொடர்பு இல்லாமை, வேலைக்குப் பாதுகாப்பின்மை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அணி திரள்வதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்த பிரச்சனைகளில் சில பின்வருமாறு.

தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் பாதிப்பு

தொழிலாளர்கள் பெரும்பாலும் 8-லிருந்து 10-12 மணி நேரம் தொடர்ந்து, ஒரே நிலையில் உட்கார்ந்து கொண்டு, மடிக்கணினி அல்லது கைபேசிக்கு முன்னால், மற்றவர்களோடு நேரடியான கூட்டங்களோ, பிற தொடர்புகளோ இல்லாமல் அவர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வேலை நேரம் திட்டவட்டமாக வரையறுக்கப்படாமல்,  ‘நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப மாறக் கூடியதாக’ வைக்கப்பட்டிருப்பதால், பணிச்சுமை கணிசமாக அதிகரித்துள்ளது. இது தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மற்றும் வேலை தொடர்பான வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டை முற்றிலுமாக அழித்துவிட்டதாக பல உழைக்கும் பெண்களும் ஆண்களும் புகார் எழுப்பியுள்ளனர். அவர்களால் உணவு, தூக்கம் அல்லது உடல் உடற்பயிற்சி – நடைபயிற்சி, உடற்பயிற்சிகள் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட நிலையான நேரம் எதையும் ஒதுக்க முடியவில்லை.

“வேலை நேரம்” தொடர்ந்து வீட்டு மற்றும் குடும்ப பொறுப்புகளுடன் “சரிசெய்யப்பட” வேண்டியிருக்கிறது. வீட்டிற்குள் முடக்கப்பட்ட சூழ்நிலையில், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் பணியிடத்தையும் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பையும் உருவாக்கும் சுமை முற்றிலும் தொழிலாளர்கள் மீது விழுகிறது.

வீட்டிலிருந்து நீண்ட நேரம் வேலை செய்வதன் விளைவாக தொழிலாளர்கள் தூக்கமின்மை, தலைவலி, முதுகுவலி, ஓய்வின்மை, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகிய பொதுவான உடல் – மன நோய்களைச் சந்தித்து வருகிறார்கள். பல துறைகளில் தொழிற்சாலைகள் மூடப்படுதல் மற்றும் தொழிலாளர்களைப் பெரிய அளவில் பணிநீக்கம் செய்வது போன்றன வேலைகளுக்குப் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியிருப்பதும், தொழிலாளர்களிடையே மிகுந்த கவலையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் மற்றொரு காரணியாகும். கொரோனா வைரஸ் தொடர்பான துன்பகரமான செய்திகள், மக்களை தங்கள் சொந்த மற்றும் அவர்களது குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி பயப்படவும் கவலையடையச் செய்வதாகவும், மனநலப் பிரச்சினைகளை மோசமாக்குவதாகவும் மனநல மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தொழிலாளர்கள் தீவிரமாக சுரண்டப்படுகின்றனர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தி வரும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள், அதிகரித்த பணிச்சுமை மற்றும் நீண்ட வேலை நேரம் காரணமாக சுரண்டல் அதிகரித்துள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களின் வேலை நேரங்களை “நிறுவனங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு” கட்டாயப்படுத்தியுள்ளன, மேலும் உற்பத்தித் திறனுக்கான புதிய அளவீடாகவும், காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கும், புதிய திட்டங்களை ஒப்படைப்பதற்கும் “விழித்திருக்கும் எல்லா நேரங்களையும்” பயன்படுத்துகின்றன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் கூற்றுப்படி, முதலில் மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த திட்டங்கள், தொழிலாளர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் வகையில், ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒரு நாளைக்கு 16-18 மணி நேரங்களுக்கு மேல், நடுவே எந்த இடைவெளியும் இல்லாமலும் அல்லது வார இறுதி நாட்களிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்வதற்கு ‘கூடுதல் ஊதியம்’ கொடுக்கும் கருத்து முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு அடிபணியுமாறு தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்த முதலாளிகள், கதவடைப்பு மற்றும் பணிநீக்கம் போன்ற அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துகின்றனர்.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிகரிக்கும் வகையில், வீட்டிலிருந்து வேலை செய்யத் தேவையான அதிவேக இணையம், வன்பொருள், மென்பொருள் மற்றும் வேலை செய்யும் இடம் போன்ற உள்கட்டமைப்பைக் கூட நிறுவனங்கள் ஏற்பாடு செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள அரசோ, வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களோ தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உடல்நலம் அல்லது உளவியல் உதவிகளையும் வழங்கவில்லை.

வேலைக்கும் வாழ்க்கைக்குமான சமநிலை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், தங்கள் பணி தொலைபேசி அழைப்புகளையும் மின்னஞ்சல்களையும் எல்லா நேரங்களிலும் எடுத்துப் பார்த்து பதிலளிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டிலிருந்து வேலை செய்வது கொண்டுவரும் அழுத்தங்கள் காரணமாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்களைப் பராமரிப்பது உள்ளிட்ட தேவையான வீட்டு வேலைகள் மற்றும் பொறுப்புகளைக் கையாள்வதற்கு தொழிலாளர்களுக்கு எந்த நேரமும் சக்தியும் இல்லாமல் போய்விடுகின்றன. குழந்தைக் காப்பகங்கள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், குழந்தைகளிடையே நிகழும் வழக்கமான அனைத்து வகையான சமூக உறவுகளும் நின்றுவிட்டன. எனவே, உழைக்கும் தாய்மார்களும் தந்தையரும் சிறு குழந்தைகளுக்கு ஆன்-லைன் கல்வி மற்றும் சமூக தனிமைப்படுத்தலின் சவால்களுக்கு உதவுவதற்கான கூடுதல் பொறுப்புகளை எதிர்கொள்கின்றனர். அதனால் அவர்கள் முழுவதுமாக களைப்படைந்து விடுகிறார்கள்.

இந்தக் காரணிகள் அனைத்தும் மோசமான மன அழுத்தத்தையும், களைப்பையும், தூக்கமின்மை பிரச்சினைகளையும் மற்றும் கவலை தொடர்பான நோய்களையும் தீவிரப்படுத்துகின்றன. அவை குடும்ப மற்றும் சமூக உறவுகளில் அதிகரித்த பதட்டங்களுக்கு வழி வகுக்கின்றன.

இந்தக் கடுமையான சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து கோரிக்கை எழுப்புகின்றனர்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான சேவைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அணி திரண்டு, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூடுதல் பணிச்சுமை மற்றும் நீண்ட வேலை நேரம் குறித்து தங்கள் பிரச்சனைகளை எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக, தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது தொடர்பான சேவைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுடைய தொழிற் சங்கமாகிய யுனைட் (UNITE), இந்த முடக்கக் காலத்தில் வழக்கமான உற்பத்தித்திறனை நிறைவு செய்ய முடியாது என்ற புரிதலோடு, வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த முடக்கக் காலத்தின் போது இணையத் தொடர்புக்காகவும் மின்சாரத்திற்காகவும் தொழிலாளர்கள் செய்யும் கூடுதல் செலவுகளை நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். வேலை நேரத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் பணி இணைப்பைத் துண்டிப்பதற்கான உரிமையை அவர்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.

கொரோனா முடக்கத்தினால் தங்களுடைய இலாபங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக முதலாளிகள் எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். அவை, தொழிலாளர்களுக்கு கடுமையான உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளையும், பெரும் சமூக அழுத்தங்களையும் விளைவித்தாலும் கூட அது பற்றி முதலாளிகள் கவலைப்படுவதில்லை. கோவிட் -19 முடக்கத்தில் முதலாளிகள் நடைமுறைப்படுத்தி வரும் “வீட்டிலிருந்து வேலை செய்வது” போன்ற நடவடிக்கைகள், முதலாளித்துவமானது முதலாளி வர்க்கத்தின் இலாபங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ள ஒரு மனிதாபிமானமற்ற அமைப்பு என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. முதலாளித்துவ இலாபத்திற்கு ஆதாரமாக இருப்பது உழைப்புச் சுரண்டலாகும். மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாத அமைப்பு தான் முதலாளித்துவமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *