மாபெரும் கெதர் எழுச்சியின் 164-ஆவது ஆண்டு விழா

இந்தியாவின் மன்னர்களாக ஆவதற்கு மக்களின் போராட்டம் தொடர்கிறது

1857 மே 10-ஆம் தேதியன்று, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் மீரட் இராணுவ முகாமில் உள்ள வீரர்கள் கிளர்ச்சியில் திரண்டெழுந்து தில்லியை முற்றுகையிட அணிவகுத்துச் சென்றனர். துணைக் கண்டம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கான சமிக்ஞையாக அது இருந்தது.

தில்லியைக் கைப்பற்றிய வீரர்கள், ஒரு புதிய அரசியல் சக்தியின் பிரதிநிதியாக பகதூர் ஷா ஜாபரை நியமித்தனர். தில்லியில் ஒரு நிர்வாக மன்றம் (கெதர் குழு) அமைக்கப்பட்டது, அதில் பொதுமக்களும் இராணுவ வீரர்களும் பங்கேற்றனர், அவர்களுடைய முடிவுகள், அரசனைக் கட்டுப்படுத்துவதாக இருந்தது. இதே போன்ற மன்றங்கள் லக்னோ, கான்பூர், ஜான்சி மற்றும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன.

அரியணையில் தன்னை மக்கள் அமர்த்தியிருப்பதாகவும், அவர்களின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டே செயல்படுவேனென்றும் பகதூர் ஷா வெளிப்படையாக அறிவித்தார். பிரிட்டிஷ் நம்மை ஆள்வதற்கு எந்த நியாயமும் இல்லை, எனவே அது அகற்றப்பட வேண்டும் என்று வாதிட்ட அவர் “எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமென்பதை, இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.

நிலப்பரப்பின் அடிப்படையிலும், அதில் பங்கேற்ற மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் 1857 ஆம் ஆண்டின் கெதர் எழுச்சி, 19 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போராக இருந்தது. அது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த படை வீரர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மன்னர்கள் மற்றும் ராணிகளின் புரட்சிகர எழுச்சியாகும். வெறுக்கப்பட்ட கிழக்கிந்திய கும்பெனியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒன்றுபட்டு எழுந்தனர்.

இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒருவருக்கு எதிராக ஒருவரை மோதச் செய்வதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி இந்திய மக்கள் ஒன்றுபட்டதைக் கண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பீதியடைந்தனர். எழுச்சியை நசுக்கி, மிருகத்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட பின்னர், ஆங்கிலேயர்களுடைய அரசு இது “முஸ்லீம்களுடைய கிளர்ச்சி” என்ற பொய்யைப் பரப்பினர். அனைத்துத் தரப்பு மக்களும் பரவலாக பங்கேற்றதை மறைப்பதற்காக, அவர்கள் இந்த கெதர் எழுச்சியை ஒரு “சிப்பாய்க் கலகம்” என்று அழைத்தனர்.

1947 இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இடத்தைப் பிடித்த இந்திய முதலாளி வர்க்கம் 1857 பற்றி தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. மக்கள் தங்கள் புரட்சிகர மரபுகளிலிருந்து எழுச்சி பெறுவதையும், தங்கள் விதியைத் தாங்களே தீர்மானிப்பவர்களாக மாறுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதையும் ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.  பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் நிலைப்பாட்டைப் பின்பற்றி, இந்திய முதலாளி வர்க்கம் 1857 ஆம் ஆண்டின் கெதர் எழுச்சி, ஒரு “நிலப்பிரபுத்துவத்தின் எதிர்வினை” என்ற கருத்தைப் பரப்பியது, இது கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்திய நவீன முறைக்கு பழைய ஆட்சியாளர்களின் எதிர்ப்பாகும் என்ற கருத்தைக் குறிக்கிறது.

கிளர்ச்சியாளர்களை வழி நடத்தியது மன்னர் பகதூர் ஷா அல்ல. மாறாக, திரளான மக்கள் எழுச்சி தான், அரசனைத் தனது மக்களுக்கு ஆதரவாக நிற்க கட்டாயப்படுத்தியது. ஒரு மக்கள் மன்றத்தை நிறுவியதும், அதன் முடிவுக்கு அரசன் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்பதும் முற்றிலும் புதியது. இது ஆழ்ந்த சனநாயகமானதும், முற்றிலும் புரட்சிகரமானதும் ஆகும். மறுபுறம், வெள்ளை மனிதனின் சுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்த பிரிட்டிஷ் இந்திய அரசு முற்றிலும் பிற்போக்குத்தனமாக இருந்தது. அது சாதிய அடுக்குமுறையையும் நமது கடந்த காலத்திலிருந்து வந்த அனைத்து பிற்போக்குத்தனத்தையும் பாதுகாக்கவும், மக்களை பிளவுபடுத்தவும் அடிமைப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டதாக இருந்தது.

1857 கெதர் எழுச்சி ஒரு தெளிவான அரசியல் நோக்கத்தை முன்வைத்தது, அது பல்வேறு தேசிய இனங்கள், பழங்குடியினர், சாதியினர் மற்றும் மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்களைக் கவர்ந்திழுத்தது. கிளர்ச்சியாளர்கள் “இந்தியா நமக்கே சொந்தமானது! நாமே அதன் மன்னர்கள்!” என்று முழங்கினர்.

யார் இந்த கிளர்ச்சியாளர்கள்? அவர்கள் போர் வீரர்கள், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் ஆவர். அவர்களுக்கு ஏராளமான புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவார்ந்தவர்கள் மற்றும் மத நம்பிக்கை கொண்டவர்கள் போன்றோர் ஆதரவளித்தனர். போர் வீரர்கள் பெரும்பாலும் விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 1857 கெதர் எழுச்சி, “இந்த நாடு எங்களுடையது, நாங்கள் இந்த நாட்டின் மன்னர்கள்” என்ற உழைக்கும் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களின் ஒரு சக்திவாய்ந்த கூற்றைப் பிரதிபலித்தது.

1947 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற நாட்டுப் பற்றாளர்கள் சுதந்திர இந்தியாவின் மன்னர்களாக மாறவில்லை என்பதில் இந்திய சமுதாயம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் வேர் உள்ளது. அந்த இடம் டாடாக்கள், பிர்லாக்கள் மற்றும் பிற ஏகபோக குடும்பங்களின் தலைமையிலான துரோகத்தனமான முதலாளிகள் மற்றும் நிலவுடமையாளர்களால் கைப்பற்றப்பட்டது.

இந்திய மற்றும் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும், அவர்களது அரசியல்வாதிகளுக்கும் இருந்த புரட்சி பற்றிய பொதுவான அச்சம் அவர்களை ஒன்றிணைத்தது. அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டனர், அதன்படி பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வந்த சூழ்நிலையில், வெள்ளையர்களை மாற்றி அவர்கள் இடத்தில் இந்திய முதலாளி வர்க்கப் பிரதிநிதிகள் வந்தனர்.

1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம், பெரும்பாலும் ஆங்கிலேய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 1935 இந்திய அரசாங்க சட்டத்தின் மறுஉருவாக்கம் ஆகும். இதன் விளைவாக, கடந்த காலத்திலிருந்து வந்த பிற்போக்கான அனைத்தும் அழியாமல் பாதுகாக்கப்பட்டன. முடிவெடுக்கும் சக்தி மிகச் சிலருடைய கைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் ஓரங்கட்டப்பட்டு, வாக்கு வங்கிகளாக நடத்தப்படுகின்றனர்.

1947 முதல் இந்திய சமுதாயத்திற்கான நிகழ்ச்சி நிரலை ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கம் நிர்ணயித்து வருகிறது. முதலாளிகளுக்கு இடையிலான மோதல்களைத் தீர்த்துக் கொள்வதற்கும் அதன் நம்பிக்கைக்குரிய கட்சிகளில் எது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதன் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கும் மக்களை ஏமாற்றுவதற்கும் மிகவும் பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்கவும், ஆளும் வர்க்கம் தேர்தல்களைப் பயன்படுத்துகிறது.

தற்போதுள்ள அரசையும், தற்போதுள்ள பாராளுமன்ற சனநாயக அமைப்பையும், அதன் அரசியல் செயல்முறையை பாதுகாப்பதனால் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் நமக்கு எந்த பயனும் கிடையாது. கெதர் போராளிகளின் கண்ணோட்டத்திற்காகப் போராடுவதன் மூலம் – அதாவது அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதில் உறுதிபூண்டுள்ள தொழிலாளர்கள் – உழவர்களுடைய ஒரு புதிய அரசுக்கு ஒரு புதிய அடித்தளத்தை அமைப்பதன் மூலம் நம்மால் எல்லாவற்றையும் அடைய முடியும். இந்திய ஒன்றியத்திற்குள் தேசிய உரிமைகள் உட்பட மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகளை மதித்து அவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கும் அடிப்படையில் இந்த புதிய அரசின் அரசியலமைப்பு சட்டம் இருக்க வேண்டும். தற்போதுள்ள மனிதாபிமானமற்ற, மூலதனத்தை மையமாகக் கொண்ட போக்கை மாற்றி, மக்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய பொருளாதாரம் நமக்குத் தேவை.

நமது நாட்டின் உழைக்கும் வர்க்கத்திற்கும், பாடுபடும் விவசாயிகளுக்கும் மற்றும் பிற கடின உழைப்பாளிகளுக்கும், நாட்டுப் பற்றுள்ள மக்களுக்கும், 1857 கெதர் எழுச்சியும், “நாமே நாட்டின் மன்னர்கள்!” என்ற அறைகூவலும், செயல்படுவதற்கான ஒரு அறைகூவலாக இருந்து வருகிறது. இது இந்திய மறுமலர்ச்சிக்கு – இறையாண்மை மக்களுக்கு சொந்தமானது மற்றும் அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசு கடமைப்பட்டுள்ளது என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு புதிய அரசு மற்றும் அரசியல் வழிமுறைக்கு – முழு மனதோடு வேலை செய்வதற்கான ஒரு அறைகூவலாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *