தில்லியின் எல்லைகளில் ஆறு மாத கால ஆர்பாட்டம்

தில்லியின் எல்லைகளில் நடைபெற்றுவரும் மக்கள் திரள் ஆர்பாட்டங்கள் 6 மாத காலத்தை நிறைவு செய்துள்ளதை 2021 மே 26 குறிக்கிறது. விவசாய சங்கங்களுடைய ஐக்கிய முன்னணி அதை ஒரு கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. விவசாயிகளுடைய குரலுக்கு செவிசாய்க்க அரசாங்கம் மறுத்து வருவதை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தின் அடையாளமாக கருப்பு அடையாளப் பட்டிகளை அணியுமாறு சம்யுக்தா கிசான் மோர்ச்சா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிற் சங்கங்கள் விவசாயிகளுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளன. கடந்த ஆறு மாதங்களின் அனுபவத்தை தொகுத்து, அதன் அடிப்படையில் பொருத்தமான படிப்பினைகளைப் பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.

கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவதாகவும், அவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் இருக்கும் சட்டங்களைப் பற்றித் தீர்மானிக்க எந்த உரிமையும் இல்லை என்பதைக் காட்டியுள்ளன. முடிவெடுக்கும் அதிகாரமானது ஏகபோக முதலாளித்துவப் பேராசையை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ள ஒரு ஆளும் கும்பலின் கைகளில் குவிந்துள்ளது. நம்முடைய வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் விலையாகக் கொடுத்து, டாட்டாக்கள், அம்பானிகள், அதானிகள், பிர்லாக்கள் மற்றும் பிற முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களுடைய பேராசைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றுகிறது. மொத்தத்தில், தற்போதைய பாராளுமன்ற சனநாயக அமைப்பு உண்மையில் ஏகபோகக் குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகும்.

இந்த புதிய சட்டங்களை ரத்து செய்யக் கோரி 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுடைய அமைப்புகள் ஒன்று திரண்டிருந்த போதிலும், மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் அரசாங்கச் செய்தித் தொடர்பாளர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். மத்திய அரசு ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது? ஏனெனில் இந்திய மற்றும் வெளிநாட்டு மிகப்பெரிய ஏகபோக நிறுவனங்கள் இந்த பிரச்சினையில் எந்தவொரு பின்வாங்கலையும் கடுமையாக எதிர்கின்றன.

வால்மார்ட் மற்றும் அமேசான், ரிலையன்ஸ் ரிடெயில், ஆதித்யா பிர்லா ரிடெயில், டாடாவின் ஸ்டார் இந்தியா, அதானி வில்மர், பிக் பஜார் மற்றும் டி-மார்ட் ஆகியன அனைத்தும் விவசாய வர்த்தக தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரலை கடந்த பல ஆண்டுகளாக தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன. விவசாய விளைபொருட்களுக்கான மிகப் பெரிய இந்திய சந்தையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். வேளாண் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் அதிகபட்ச லாபத்திற்கான தங்கள் பேராசைக்கு அடிபணிய வைப்பதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மன்மோகன் சிங் அரசாங்கம் 10 ஆண்டுகளாக, இந்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளை வற்புறுத்த முயன்றது, ஆனால் அதில் அதிக வெற்றி கிட்டவில்லை. இப்போது பாஜக தலைமையிலான பெரும்பான்மை அரசாங்கம் அனைத்து மாநில அரசாங்கங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு மத்திய சட்டத்தை இயற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. ஏகபோக முதலாளிகள் இதை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக கருதுகின்றனர், என்னவானாலும் இதை விட்டுவிடக் கூடாதென்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

மூன்று சட்டங்களும் உண்மையில் விவசாயிகளின் நலனுக்காகவே என்ற பரப்புரையை கடந்த ஆறு மாதங்களிலும், பாஜக மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் எதிர்க்கட்சிகளால் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், அவர்களுடைய இயக்கத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்பதை இப்போது தான் கண்டுபிடித்தது போல கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக பாஜக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. அவர்கள் இருவரும் விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

தற்போதுள்ள அமைப்பில், எந்தக் கட்சி அரசாங்கத்தை நடத்தினாலும் ஏகபோக முதலாளிகளால் நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த வேண்டியுள்ளது. அதிகாரத்திலுள்ள கட்சி, எல்லாவற்றையும் மக்களுடைய நலனுக்காகவே செய்து வருவதாக மக்களிடம் பொய் சொல்ல வேண்டும். உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக அரசாங்கம் செயல்படுவதாக விமர்சித்து அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டும். பதவிக்கு வந்த பிறகு, இப்போது விமர்சிக்கின்ற கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஏகபோக முதலாளிகளுடைய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம், விவசாய வர்த்தகத்தைத் தாராளமயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போது, அதை விவசாயிகளுக்கு எதிரானது என்று ​​பாஜக விமர்சித்தது. இப்போது இந்த இரு கட்சிகளின் இடங்களும் மாறிவிட்டன. இதிலிருந்து உயர்மட்ட அதிகாரமானது உண்மையில் ஏகபோகக் குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தின் கைகளில் தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது. மத்திய அரசில் பொறுப்பு வகிக்கும் கட்சி, ஆளும் வர்க்கத்தின் மத்திய நிர்வாக குழுவாகும். இந்த நிர்வாக குழு, தேர்தல் வழிமுறை மூலம் மாற்றப்படலாம். கட்சிகள் இடம் மாறுகின்றன, ஆனால் மாறாமல் இருப்பது முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகும்.

விவசாயிகளுடைய போராட்டத்தை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய கேள்வியானது, முக்கிய எதிரியை – போராட்டத்தின் முக்கிய இலக்கை அடையாளம் காண்பதாகும். ஏகபோகக் குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கமே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களின் முக்கியமான, பொது எதிரி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆகவே, விவசாயிகளுடைய முன்னேற்றத்திற்கான பாதையானது, ஏகபோகக் குடும்பங்களுக்கும் அவர்களுடைய மக்கள் விரோத நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராக, தொழிலாளி வர்க்கத்துடன் ஒரு உறுதியான அரசியல் கூட்டணியை உருவாக்குவதும் பலப்படுத்துவதும் ஆகும்.

பாஜக தான் முக்கியமான எதிரி என்ற நிலைப்பாட்டை ஊக்குவிக்கும் கட்சிகளிடமிருந்து விவசாயிகளின் போராட்டம் இந்த நேரத்தில் எதிர்கொள்ளும் முக்கிய ஆபத்து வருகிறது. பாஜகவை முக்கியமான எதிரியாக அடையாளம் காண்பதென்பது, முதலாளி வர்க்க பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் பின்னால் செல்வதே முன்னேற்றத்திற்கான பாதை என்பதைக் குறிக்கிறது. பாஜக-வை மாற்றி, காங்கிரஸ் கட்சி அல்லது வேறு ஒரு பாஜக எதிர்ப்புக் கூட்டணியை கொண்டுவருவது விவசாயிகளின் நலன்களை முன்னேற்றும் என்ற தவறான நம்பிக்கையால் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டு துரோகமிழைக்கப்படும் என்று இதற்குப் பொருளாகும்.

மக்களைப் பிளவுபடுத்துவதற்கும் அவர்களின் உண்மையான எதிரிகளிடமிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே ஆளும் வர்க்கம் பயிற்சி அளித்துள்ளது. 1980-களில் விவசாயிகளுடைய போராட்டங்களை “சீக்கியப் பிரிவினைவாதம்” என்று சித்தரிக்கவும், பஞ்சாபில் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதை நியாயப்படுத்தவும் காங்கிரஸ் கட்சி எவ்வாறு பரப்புரை நடத்தியது என்பதை நாம் மறக்க முடியாது.

வரலாற்று அனுபவத்தின் மிக முக்கியமான படிப்பினைகளில் ஒன்று என்னவென்றால், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிப் பாதை, உழவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியாது என்பதாகும். ஏகபோகக் குடும்பங்களின் தலைமையில் மேலாதிக்கம் செய்யப்படும் முதலாளித்துவ வளர்ச்சி, பெரும்பான்மையான விவசாயிகளை எப்போதும் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளும்.

விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அனைத்து உணவு மற்றும் பிற பயிர்களையும் உள்ளடக்கிய பொது கொள்முதல் முறையை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளுக்கு மலிவு விலையில் எல்லா விவசாய இடுபொருட்கள் வழங்கப்படுவதையும், அனைத்து வேளாண் விளைபொருட்களை நிலையான மற்றும் இலாபகரமான விலையில் வாங்கப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் மலிவு விலையில் அனைத்து அத்தியாவசிய நுகர்வு பொருட்களும் கிடைப்பதை உறுதிசெய்யும் பொது விநியோக முறையுடன், பொது கொள்முதல் முறையை இணைக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் மற்றும் மக்கள் குழுக்கள் பொது கொள்முதல் மற்றும் பொது விநியோக முறைகளைக் கண்காணிக்க வேண்டும். தனிப்பட்ட இலாப வேட்டைக்காரர்களாலும் ஊழல் அதிகாரிகளாலும் இழப்புகள் ஏற்படாமல் இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய ஒரே அரசியல் சக்தி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணி மட்டுமே ஆகும். அத்தகைய சக்தி, அரசியல் அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களையும் மற்ற அனைத்து தனியார் இலாப வேட்டைக்காரர்களையும் விவசாய வர்த்தகத் துறையிலிருந்து வெளியேற்ற முடியும். அப்போதுதான் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் நிலையான முன்னேற்றம் உறுதி செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *