தோழர் பிரவின் மறைவு குறித்து மிகவும் வருந்துகிறோம்

மே 4 அன்று விடியற்காலையில் தோழர் பிரவின் ராம்டெக் நம்மிடமிருந்து பிரிந்துவிட்டதை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மத்தியக் குழு மிகுந்த அதிர்ச்சியோடும், துயரத்தோடும் அறிவிக்கிறது. கொரோனா நோயோடு சில நாட்கள் போராடி வந்த அவர் 54 இளம் வயதில் நம்மிடமிருந்து மறைந்துவிட்டார்.

மராட்டிய மாநிலத்தின் சந்திரப்பூரில் விவசாயம் சார்ந்த ஒரு தொழிலாளி வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் தோழர் பிரவின். அவருடைய குடும்பத்தில் உயர் கல்வி பெற்ற முதல் மனிதர் அவர். அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்ற தாகத்தோடு, மனித சமுதாயத்திற்காக உழைக்க வேண்டுமென்ற ஆர்வமும் நிறைந்தவராக அவர் இருந்தார்.

பிரவின், ஐஐடி மும்பையிலிருந்து விமானப் பொறியியல் துறையில் முதுநிலை தொழில் நுட்பம் – எம்.டெக் பட்டம் பெற்றவர். அந்த நேரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கட்சியில் இணைந்தார். முதல் கம்யூனிச படிப்பு வட்டத்தில் அவர் சேர்ந்த நாளிலிருந்து, இறுதி மூச்சு வரை, கட்சியின் நிலைப்பாட்டிலும், புரட்சி மற்றும் கம்யூனிசத்தின் வெற்றியிலும் அவர் உறுதியோடு இருந்தார்.

தன்னுடைய மாணவர் பருவத்தில் கல்லூரி வளாகத்தில் படிப்பு வட்டங்களை கட்டியமைப்பதில் பிரவின் ஒரு முக்கிய பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுடைய உரிமைகளுக்காக கட்சி அமைப்புக்களையும், பல்வேறு பிற போராட்ட அமைப்புக்களையும் கட்டுவதில் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

பிரவின் மிகவும் ஆர்வமும், துடிப்பும் நிறைந்தவராக இருந்தார். அவருடன் வேலை செய்பவர்களும் அவருடைய இந்த பேரார்வத்தால் உந்தப்பட்டனர். ஒரு கூட்டத்திலோ, பேரணியிலோ அவர் பங்கேற்கும் போதே கவிதைகளை உடனடியாக இயற்றும் திறமை பெற்றிருந்தார். கூடியிருக்கும் ஒவ்வொருவரையும் சுண்டியிழுத்து உணர்வூட்டும் வகையில் அவர் பல புரட்சிகர பாடல்களை பாடுவார்.

தோழர் பிரவின் மறைவில் கட்சி முழுவதும் துயரத்தில் ஆழந்துள்ளது. நம்முடைய இந்த துயரத்தை வலிமையாக மாற்றுவோம். நம்முடைய இலக்கை அடைவதற்கு இருமடங்கு வலுவோடும், சக்தியோடும் நாம் வேலை செய்வோம்.

லால் சிங்

பொதுச் செயலாளர்

மத்தியக் குழு

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *