கொரோனா தடுப்பூசியை தனியார்மயமாக்குவது மக்கள் விரோத நடவடிக்கை!

ஏப்ரல் 19 அன்று, கோவிட் தொற்றுநோய் குறித்து நாட்டிற்கு உரையாற்றிய ​​பிரதமர் மோடி, தனது அரசாங்கத்தின் “தாராளமயமாக்கப்பட்ட மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்தை” அறிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் 2021 மே 1 முதல் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி பெறுவார்கள் என்று கூறி அவர் இதை மக்களுக்கு பரிசளிப்பது போலக் குறிப்பிட்டார். இருப்பினும், அவர் அளித்த விவரங்களும், புதிய தடுப்பூசி கொள்கை குறித்து பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்ட செய்திகளும், ஏற்கனவே தடுப்பூசி உற்பத்தியை தனியார்மயமாக்கியதோடு, இப்போது தடுப்பூசி போடுவதும் கூட தனியார்மயமாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இந்த புதிய கொள்கை முற்றிலும் மக்களுக்கு விரோதமானதும், சமூகத்திற்கு விரோதமானதும் பாரபட்சமானதும் ஆகும். மேலும் தற்போதைய பொது சுகாதார நெருக்கடியை இது மேலும் மோசமாக்கும்.

மே 1 வரை, நாட்டில் கிடைக்கக்கூடிய தடுப்பூசி முழுவதையும் மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகித்தது. மே 1 முதல், உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் பாதி அளவு மட்டுமே அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். மீதி பாதியை தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசித் தயாரிப்பாளர்கள் நிர்ணயிக்கும் விலையில் விற்றுக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசி போடுவதற்கான விலையை அவர்களே விருப்பம்போலத் தீர்மானித்துக் கொள்ளலாம். முன்னர் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் பாதி அளவை மட்டுமே மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும். மீதித் தடுப்பூசித் தேவையை தனிப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு தனியார் மருத்துவமனைகளுடன் மாநில அரசாங்கங்கள் போட்டியிட வேண்டியிருக்கும். (புதிய கொள்கையின் விவரங்களுக்கு பெட்டியைப் பார்க்கவும்). இவ்வாறாக, கோவிட் தடுப்பூசி போடுவது, அதன் விலையில் எவ்வித அரசாங்கக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்போது தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.

ஹாப்கென் பார்மாசூடிகல் கார்பரேசன் – மும்பை, பாரத் இம்யூனினோலாஜிகல்ஸ் அன்டு பயோலாஜிகல்ஸ் கார்பரேசன் – புலந்த்சகர் (உ.பி.), எச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் –  சென்னை, ஹுமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் – ஐதராபாத்,  பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா – குன்னூர் (தமிழ்நாடு), மத்திய ஆராய்ச்சி நிறுவனம் – கசூலி (இமாச்சலப் பிரதேசம்), பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகம், கிண்டி (தமிழ்நாடு) என மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குச் சொந்தமான ஏழு தடுப்பூசி நிறுவனங்கள் / ஆய்வகங்கள் இருந்தபோதிலும் கோவிட் தடுப்பூசி உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை ஆதரித்து கோவிட் தடுப்பூசியை உருவாக்கி உற்பத்தி செய்வதை விட்டுவிட்டு பாரத் பயோடெக் என்ற தனியார் மருந்து நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரசாங்கத்தின் பொது நோய்த் தடுப்பு திட்டங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளுக்கு கூட தனியார் தடுப்பூசி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பல ஆண்டுகளாக, பல்வேறு மத்திய – மாநில அரசாங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களை வேண்டுமென்றே புறக்கணித்து, மோசமடையச் செய்து வந்திருக்கின்றன. அரசாங்க நிதியால் உருவாக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிக்கு காப்புரிமை பெறுவதற்குக் கூட பாரத் பயோடெக் நிறுவனத்தை அனுமதித்துள்ளனர். எந்தவொரு உரிமக் கட்டணமும் செலுத்தாமல் கோவிட் தடுப்பூசி தயாரிக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டுமென்று கூட அது அறிவுறுத்தவில்லை!

இதன் விளைவாக, நாட்டில் இரண்டு கோவிட் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மட்டுமே உள்ளனர், இந்த கட்டத்தில் அவற்றில் ஒரு தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 90% உற்பத்தியை ஏகபோகமாகக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பது தடுக்கப்பட்டுள்ளது!

மருந்து விலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வரும் அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலைகளும் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டாலும், கோவிட்டிற்கான தடுப்பூசியை ‘அத்தியாவசியமானது’ என்று அரசாங்கம் கருதவில்லை. அதனுடைய விலையை தடுப்பூசி தயாரிப்பாளர்களே தீர்மானித்துக் கொள்ள அரசாங்கம் சுதந்திரம் அளித்துள்ளது!

எனவே இந்திய தனியார் ஏகபோகங்களால் நிர்ணயிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியின் விலைகள் உலகிலேயே மிக அதிகமாக இருப்பதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

மாநில அரசாங்கங்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ. 600 என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இது ரூ. 1200 என்றும் அரசாங்கம் விலையை நிர்ணயித்துள்ளதாக ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒரு மருத்துவமனை கோவாக்சின் தடுப்பூசியைப் போடுவதற்கு அதன் விலையை ஒரு ஊசி போடுவதற்கு 1500 ரூபாய் (தடுப்பூசிக்கு ரூ .1200 + அதை போடுவதற்கு ரூ .300) என நிர்ணயித்தால், ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ 7500 செலவாகும். இரண்டு ஊசிகளையும் போட ஒரு குடும்பத்திற்கு ரூ 15,000 செலவாகும். இது நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் மாத வருமானத்தை விட அதிகமானதாகும். மேலும், இந்த செலவு ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட வேண்டியிருக்கும். கோவிட் தடுப்பூசியை தனியார்மயமாக்குவது நிச்சயமாக அதிக எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளும்.

கோவிட் தடுப்பூசி உற்பத்தியை ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், நாட்டின் தேவையை நிறைவு செய்யும் திறனை இந்த தனியார் உற்பத்தியாளர்கள் விரைவாக உருவாக்குவார்கள் என்று அரசாங்கம் அதை நியாயப்படுத்துகிறது. இருப்பினும், தனியார் உற்பத்தியாளர்கள் இதுவரை போதுமான தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தவறிவிட்டனர். நாட்டின் தற்போதைய உற்பத்தி திறன் மாதத்திற்கு 6.5-7 கோடி அல்லது ஒரு நாளைக்கு 22 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே ஆகும். இதன் காரணமாக, 25 ஏப்ரல் 2021 வரை கடந்த மூன்று மாதங்களில், 160 லட்சம் பேருக்கு மட்டுமே முதல் தடுப்பூசியும்,  35 லட்சம் பேருக்கு மட்டுமே இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போட வேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 34 கோடியாகும். 2021 மே 1 முதல், தடுப்பூசிக்கு தகுதியானவர்களின் எண்ணிக்கை சுமார் 60 கோடியாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நாடு முந்தைய கட்டத்தை விட மிகவும் மோசமான தொற்றுநோயின் மற்றொரு அழிவுகரமான கட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி மறுக்கப்படும் சூழ்நிலையில், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகள், ஆம்புலன்சு சேவை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் நாடெங்கிலும் இறந்து வருகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடப்படும் வேகம் மந்தமாக இருக்கிறது. தங்கள் முறை வருவதற்கு, மக்கள் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது ஊசிக்காக இன்னும் காத்திருப்பதால், 18-45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதென அரசாங்கம் அறிவித்த திட்டம் இன்னும் துவங்கவே இல்லை. மத்திய அரசிடமிருந்து முன்னர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசி தற்போது பாதியாக வெட்டிக் குறைக்கப்பட்டு விட்டதால், மே 1 க்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. 3 மாதங்களில் தடுப்பூசி உற்பத்தி தோராயமாக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அப்போதும் தடுப்பூசியின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுடைய இக்கட்டான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு விருப்பம் போல எந்த விலையையும் வசூலித்துக் கொள்வார்கள். இவ்வாறு புதிய தடுப்பூசிக் கொள்கை, தனிப்பட்ட தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு பெரும் இலாபம் ஈட்ட ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இது உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கக் கூடிய வாய்ப்பை மேலும் மறுக்கும்.

பல்வேறு மாநிலங்களுக்கு தடுப்பூசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதும், தகுதியுள்ள ஒவ்வொருக்கும் எந்தவொரு பாரபட்சமும் இன்றி தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்வதும் மத்திய அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

புதிய தடுப்பூசிக் கொள்கையானது, சுகாதாரத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் மேலும் ஒரு நடவடிக்கையாகும். சமமான அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமையாகும். மிகப்பெரிய ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்யும் அரசின் முழுமையான குற்றத்தன்மையை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய தனது பொறுப்பை அது கை கழுவி விடுவதிலிருந்து காணலாம். மாறாக, இந்த ஆபத்தான சுகாதார நெருக்கடியின் மூலம், தடுப்பூசி உற்பத்தியாளர்களும் தனியார் மருத்துவமனை சங்கிலிகளும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இலாபம் ஈட்ட அது உதவுகிறது.

புதிய கோவிட் தடுப்பூசிக் கொள்கை

மே 1 முதல், கோவிட் தடுப்பூசி வழங்குவது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது : தடுப்பூசியின் மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் மத்திய அரசாங்கத்திற்கும், மீதமுள்ள 50 சதவீதம் திறந்த சந்தைக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு வசதிகள் உள்ள மாநில அரசாங்கங்களும், தனியார் மருத்துவமனைகளும், பிற நிறுவனங்களும், திறந்த சந்தை மூலம் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தேவைப்படும் அளவு தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகள் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசாங்கங்களால் நடத்தப்படும் தடுப்பூசி மையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப் பயன்படுத்தப்படும். திறந்த சந்தை மூலம் மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும்.

இதுவரை தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றாலும், இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசுகள் மூலமாக மட்டுமே இறக்குமதி செய்யப்படும். வெளிநாட்டு மருந்து ஏகபோக நிறுவனங்கள் இப்போது தங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் திறந்த சந்தையில் அவர்கள் தீர்மானிக்கும் விலையில் விற்க முடியும்.

இதுவரை, சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்னணித் தொழிலாளர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டபோது, ​​மத்திய அரசு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கி, அவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கியது. இவ்வாறு பெறப்பட்ட தடுப்பூசிகளை மாநில அரசாங்கம், இலவசமாக தடுப்பூசி போடும் அரசு தடுப்பூசி மையங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் வினியோகித்தன. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்பவரிடமிருந்து ஒரு தடுப்பூசிக்கு 250 ரூபாய் வசூலிக்கும் மருத்துவமனைகள், ரூ 100 ஐ தங்களுடைய சேவைக்காக வைத்துக் கொண்டு ரூ 150 அரசாங்கத்திற்கு கொடுத்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *