சர்வதேச தொழிலாளி வர்க்க தினம், மே தினம் வாழ்க!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் அறைகூவல், மே 1, 2021

தொழிலாளர் தோழர்களே,

இன்று சர்வதேச தொழிலாளி வர்க்க தினமான மே தினம் ஆகும். உலகம் முழுவதும், கடந்த 131 ஆண்டுகளாக, நமது வர்க்கத்தின் இந்த விழாவைத் தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். நம்முடைய இலக்கை நோக்கி முன்னேறுவதற்காக, நாம் நமது வெற்றிகளைக் கொண்டாடுகிறோம், பின்னடைவுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்கிறோம். நமது உடனடிப் பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளோடு, ஒருவன் மற்றொருவனை எந்த வகையிலும் சுரண்டுவதிலிருந்தும், ஒடுக்குவதிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு புதிய சோசலிச சமுதாயத்தை உருவாக்குவதற்கான நோக்கத்துடன் நாம் போராடுகிறோம்.

நம் நாட்டில், கடந்த இரண்டு ஆண்டாக, தொழிலாளர்கள் நாம் மே தினப் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது என்ற பெயரில், கடந்த 14 மாதங்களாக தொழிலாளர்களின் அனைத்துப் பேரணிகளையும் போராட்டங்களையும் மத்திய அரசு தடை செய்துள்ளது.

முதலாளிகள் மற்றும் அவர்களுடைய அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிராக மிகவும் கடினமான சூழ்நிலைகளில் ஒரு வீரம் மிக்க போராட்டத்தை நடத்தி வரும் நமது நாட்டுத் தொழிலாளர்களுக்கும், பிற நாட்டுத் தொழிலாளர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி (சிஜிபிஐ) வணக்கம் செலுத்துகிறது.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டம் நடத்திவரும் ரயில்வே, போக்குவரத்து, நிலக்கரி, பெட்ரோலியத் தொழில், பாதுகாப்புத் தொழில், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றின் தொழிலாளர்களுக்கு சிஜிபிஐ வணக்கம் செலுத்துகிறது.

விவசாய எதிர்ப்புச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும், தில்லியின் எல்லைகளில் வரலாற்று சிறப்புமிக்க ஆறு மாத கால போராட்டத்தில் பங்கேற்றுள்ள இலட்சக்கணக்கான விவசாயிகளுக்கு சிஜிபிஐ தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பொது சுகாதார அமைப்பு முழுமையாக சீரழிந்திருப்பதற்கு மத்திய அரசை சிஜிபிஐ கண்டிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி இறந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்னர், அரசாங்கம் ஒரு கொடூரமான பொது முடக்கத்தை விதித்தது, தொற்றுநோயைச் சமாளிக்க சுகாதாரப் பாதுகாப்பு முறையைத் தயாரிக்க அந்த நேரத்தைப் பயன்படுத்தப் போவதாவதாக அது உறுதியளித்தது. ஆனால் அது பொது சுகாதார அமைப்பின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எதையும் செய்யவில்லை. அது மதக் கூட்டங்கள் நடைபெறவும் தேர்தல் பேரணிகளை நடத்தவும் அனுமதித்தது, இது வைரஸை மேலும் பரப்ப உதவியிருக்கிறது. இதன் விளைவாக நமக்கு முன்னால் மிகப் பெரிய மனிதப் பேரழிவு பெருகி வருகிறது.

கொரோனா தொற்று நோயால் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் சிஜிபிஐ தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மக்களுக்குச் சேவை செய்வதற்காக, தங்கள் உயிருக்கு எற்படக்கூடிய ஆபத்தைப் பொருட்படுத்தாமல் வேலை செய்து வரும் செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புறவுப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் பிற முன்னணி தொழிலாளர்களுக்கும் சிஜிபிஐ வணக்கம் செலுத்துகிறது.

பொது முடக்கத்தின் விளைவாக நகரங்கள் மற்றும் பேரூர்களில் உள்ள கோடிக்கணக்கான தொழிற்சாலைத் தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் கட்டிடத் தொழிலாளர்கள் தத்தம் கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தங்களுக்கும், தங்கள் குடும்பங்களுக்கும் உணவுக்கு வழி இல்லை, வீட்டு வாடகையைக் கட்டுவதற்கு கூட அவர்களுக்கு வழி இல்லை. எந்தவொரு உரிமையும் இல்லாத, இரண்டாம் தர குடிமக்களாக அரசாங்கங்கள் அவர்களை நடத்துகின்றன. அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதாக மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியது.

எல்லா மனித உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ள, புலம்பெயர்ந்தோர் என்று அழைக்கப்படும் இந்த கோடிக்கணக்கான நமது வர்க்க சகோதரர்களை மீண்டும் மீண்டும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி வருவதற்கு மத்திய அரசாங்கத்தை சிஜிபிஐ வன்மையாகக் கண்டிக்கிறது.

தொழிலாளர் தோழர்களே,

இந்தியா சுதந்திரமான பிறகு, இந்நாட்டு மக்களாகிய நாம், நாட்டின் மன்னர்களாக ஆகி விட்டோமென கூறப்பட்டது. ஆனால் இது உண்மை இல்லை. உண்மை என்னவென்றால், ஒரு பகாசூர பணக்கார சிறுபான்மையினர் தான் நாட்டை ஆண்டு வருகிறார்கள். தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வங்கிகள், ரயில்வே என உற்பத்தி மற்றும் பரிமாற்ற சாதனங்களைத் தம் உடமையாக வைத்துக் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்துபவர்கள் இந்தியாவின் மன்னர்களாக இருக்கிறார்கள். அவர்கள் டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கமாகும். தங்களுக்கு அதிகபட்ச லாபத்தை உறுதி செய்வதற்காக அவர்கள் நம்மை ஒட்டச் சுரண்டுகிறார்கள். அவர்களுக்கு நாம் தேவைப்படாத போது, ​​அவர்கள் நம்மை சாறு பிழிந்துவிட்ட சக்கையைப் போலத் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

தொழிலாளர்கள் நம்மிடம், உற்பத்தி சாதனங்கள் நம் உடமையாகவோ, நமது கட்டுப்பாட்டிலோ இல்லை. உயிர்வாழ்வதற்காக, நாம் நமது உழைப்பு சக்தியை முதலாளி வர்க்கத்திற்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உயிர் பிழைத்திருப்பதற்காக நம்மில் பலர் ஒரு நாளைக்கு 12-14 மணிநேரமும், வாரத்திற்கு ஆறு அல்லது ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு சிறுபான்மையினருக்கு மட்டுமே பொருந்தும்; அவர்களுக்கு கூட, இந்த உரிமைகள் வெற்றுக் காகிதத்தில் மட்டுமே உள்ளன. அவை அரிதாகவே செயல்படுத்தப்படுகின்றன. முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசு இயந்திரத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதே தவிர, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கல்ல.

கிராமங்களில் உள்ள நமது உடன்பிறப்புக்களும் நம்மைப் போலவே மோசமான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு நிலம் இல்லை, அல்லது சிறிய நிலத்தைக் கொண்டு வாழ முயற்சிக்கிறார்கள். மற்றவர்களின் நிலங்களில் வேலை செய்வதன் மூலமோ அல்லது 100 நாள் வேலைத் திட்டம் போன்றவற்றில் வேலை செய்வதன் மூலமும் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க முயற்சிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மேலும் மேலும் அதிகமான விவசாய குடும்பங்கள் சீரழிகின்றன. ஒவ்வொரு ஆண்டும், இலட்சக் கணக்கான இந்த சகோதர சகோதரிகள் கட்டுமான தளங்களில் அல்லது வேறு ஏதேனும் வேலை தேடி நகரங்களுக்கு வருகிறார்கள்.

சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களில் இலட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பங்களும் குடிசைப் பகுதிகளிலும், சாக்கடையை ஒட்டியும், வீதி ஒரங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். மும்பையின் தாராவியில், 10 லட்சம் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் இரண்டு சதுர கி.மீ பரப்பளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் பொங்கல் வீடுகள் என்று அழைக்கப்படும் வீடுகளில் ஷிப்டுகளில் மாறிமாறி தங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். டெல்லியின் சங்கம் விஹாரில் சுமார் 15 லட்சம் பேர் வாழ்கின்றனர். இந்த காலனியில் உள்ள எழுபத்தைந்து சதவீத வீடுகளுக்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை. வாழ்க்கை நடத்துவதற்கு தண்ணிர் டேங்க் லாரிகளின் தயவை நம்பி அந்த மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது. கழிவுநீரை அகற்றுவதற்கான வேறு வழி இல்லாததால் காலனியின் குறுகிய சந்துகளிலும் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நம் நாட்டில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சுகாதாரமற்ற நெருக்கடியான நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட மோசமான நிலைமைக்குத் தொழிலாளர்கள் மீதே பழி போடுவதற்காக, அவர்கள் குடியிருக்கும் பகுதிகளை – சேரிகள், அங்கீகரிக்கப்படாத காலனிகள், ஆக்கிரமிப்புப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், என்பன போன்ற அனைத்து வகையான பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. நாம் “சட்ட விரோதமாக” குடியிருப்பதாக கூறுகிறார்கள், எனவே இந்த நிலைக்கு அரசாங்கத்தைக் குறை கூறாமல், அவர்கள் காட்டும் மிகச் சிறிய கருணைகளுக்காகக் கூட நாம் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமாம்! நமக்குக் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும், கழிப்பறை தேவைகளுக்கும் தண்ணீர் இல்லை. பல இடங்களில் தண்ணீர் டேங்கர்கள் வருவதை எதிர் நோக்கி நம் வீட்டுப் பெண்களும் குழந்தைகளும், கைகளில் குடங்களுடன், பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய நிலைமைகளில் வாழும் மக்களுக்கு சமூக இடைவெளியாக இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிக்கவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தும்போது, ​​அது தொழிலாளர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது. ஒரு குடம் தண்ணீரைப் பெறுவதற்காக நாம் முந்தியடித்துக் கொண்டு சண்டையிடும்போது இரண்டு மீட்டர் இடைவெளியை பராமரிப்பது எப்படி? நெருக்கடியான நம் வீட்டில் இரண்டு மீட்டர் இடைவெளியை எவ்வாறு வைத்திருப்பது?

ஒவ்வொரு நாளும் உயிர் பிழைத்திருப்பதற்காகப் போராட்டம். பெரும்பான்மையான தொழிலாளர்கள் எழுந்திருக்கும்போது அவர்களுக்குத் தெரியாது அன்று இரவு தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியுமா என்று. அவர்கள் வேலை கிடைக்குமாவென்று, தொழிற்சாலைகளின் வாயில் கதவுகளைத் தட்ட வேண்டும் அல்லது வீதிகளில் வேலை தேடி அலைய வேண்டும்.

எந்தக் கட்சியைச் சேர்ந்த அரசாங்கமாக இருந்தாலும், அவர்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் மனிதர்களாகக் கருதுவதில்லை. அவை முதலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பாதுகாக்கின்றன. நம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் நோய்களாலும் துன்பப்பட்டு வருகிறார்களா, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா செத்துவிட்டார்களா, அவர்களுக்குக் கல்வி கிடைக்கிறதா, நிரந்தரமான வேலை கிடைக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

தொழிலாளர் தோழர்களே,

நம்முடைய எல்லாத் துயரங்களுக்கும், ஆட்சியாளர்கள் எப்போதுமே நம்மைக் குறை கூறுகிறார்கள். முன் பிறவியில் நாம் பாவங்களைச் செய்திருப்பதால் தான், இன்று நாம் துன்பப்படுகிறோம் என்று குழந்தை பருவத்திலிருந்தே நம்மிடம் சொல்லி வருகிறார்கள். இன்னொரு பக்கம் டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பிற முதலாளிகள் கடின உழைப்பாளிகள் என்றும், அவர்கள் வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி கோடிக் கணக்கான ரூபாய்களை சம்பாதித்திருக்கிறார்கள் என்றும் நமக்கு கூறப்படுகிறது. உண்மையோ முற்றிலும் வேறுபட்டது. நமது உழைப்பை சுரண்டுவதன் மூலமும், நம் விவசாய சகோதரர்களைக் கொள்ளையடிப்பதன் மூலமும், நம் நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலமும் முதலாளிகள் அபரிமிதமான செல்வத்தைக் குவித்து கொண்டனர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், அவர்கள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழ் ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களை நிறுவினர். நில பிரபுக்களும் காலனியர்களும் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து மிக அதிக வரியை வசூலித்து அவர்களை நாசப்படுத்தினர். இண்டிகோ, ஓபியம் போன்ற பயிர்களைப் பயிரிடுமாறு விவசாயிகளை அவர்கள் கட்டாயப்படுத்தினர். காலனிய ஆட்சியின் போது பஞ்சம் இந்தியாவின் வழக்கமான நிகழ்வாக மாறியது. சீரழிவாலும் வறுமையாலும் துரத்தப்பட்ட விவசாயிகள், இந்திய மற்றும் பிரிட்டிஷ் முதலாளிகளால் அமைக்கப்பட்ட ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்வதற்காக நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். எவ்வித உரிமையும் இன்றி, மிக மோசமான சூழ்நிலையில் அவர்கள் இரவு பகலாக உழைத்தனர். இந்திய மற்றும் பிரிட்டிஷ் முதலாளிகள், பெரிய நில உரிமையாளர்களோடு சேர்ந்து கொண்டு, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மிருகத்தனமாக சுரண்டுவதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டனர்.

சுதந்திரப் போராட்டத்தில் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இரண்டு வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன. முதலாளி வர்க்கம், ஆங்கிலேயர்களின் இடத்தை எடுத்துக் கொண்டு சுரண்டல் மற்றும் கொள்ளை அமைப்பைத் தொடர விரும்பியது. தொழிலாளி – விவசாயிகளுடைய ஆட்சியை நிறுவி, சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை இல்லாத ஒரு இந்தியாவை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் தொழிலாளி வர்க்கம் போராடியது.

இந்தியா சுதந்திரமடைந்த போது, ​​அரசியல் அதிகாரம் இந்தியாவின் முதலாளிகள் மற்றும் நில பிரபுக்களின் கைகளுக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமையால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட அவர்கள், சுதந்திர இந்தியா மீது தங்களுடைய ஆட்சியை சட்டரீதியாக ஆக்கும் ஒரு அரசியலமைப்பையும், பாராளுமன்ற சனநாயக அமைப்பையும் நிறுவினர். தொழிலாளர்களும் விவசாயிகளும் எப்போதுமே முதலாளி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதையும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் குற்றவாளிகளாக கருதப்படுவதையும் உறுதிசெய்ய அவர்கள் ஒரு சட்ட அமைப்பை நிலைநாட்டினர்.

தொழிலாளர் தோழர்களே,

ஆங்கிலேய ஆட்சி முடிவடைந்ததிலிருந்து, ஏகபோகக் குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கம், இந்தியாவுக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானித்து வருகிறது. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏமாற்றுவதற்காக அனைத்து வகையான உன்னதமான முழக்கங்களையும் பயன்படுத்தும் அதே நேரத்தில், அவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்கு ஏற்ப அரசாங்கக் கொள்கையை அமைத்துக் கொண்டனர்.

1947 க்குப் பின்னர் ஆரம்ப ஆண்டுகளில் ஏகபோகக் குடும்பங்கள், முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கான தங்கள் திட்டத்தை, சோசலிச பாணி சமுதாயம் என்று அழைக்கப்படும் ஒரு திட்டமாக மக்களிடையே பரப்புரை செய்து அதை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு நேருவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை நம்பியிருந்தன. டாடாக்கள், பிர்லாக்கள் மற்றும் பிற பெரிய வணிக நிறுவனங்களின் நலனுக்காக ஒரு பொதுத்துறை, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்பும் துறைகளில் அந்நிய மூலதன முதலீட்டிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுரண்டல் முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளேயே, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற மாயை பரப்பப்பட்டது.

இந்தியாவில் முதலாளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் அரசை சார்ந்திருப்பது மற்றும் பொது நிதியைக் கொள்ளையடிப்பது என்ற வழிமுறையின் திறன் 1980 களில் வலுவிழந்துவிட்டது. 1991 இல் சோவியத் யூனியன் உடைந்து நொருங்கிய போது, ​​இந்திய ஏகபோக முதலாளிகள் இந்த புதிய காலகட்டத்தில் தங்களுடைய உலகளாவிய ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு ஏற்ப தங்கள் முறையை மாற்ற முடிவு செய்தனர். சீர்திருத்த வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் முடிவு செய்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகளில், காங்கிரசாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அரசாங்கமும் சில பிரிவு தொழிலாளர்களுக்கு பொருந்தக்கூடிய சில குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பைக் கூட மேலும் வெட்டிக் குறைப்பதை உறுதிசெய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்கள் மிகவும் துரிதமாக சொத்துகளை குவிப்பதற்கு உள்ள எல்லா தடைகளையும் அகற்றுவதற்காக விசுவாசத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில், வேலை நாளின் கால நேர சட்ட வரம்பை நீட்டித்தல், முதலாளிகளின் விருப்பப்படி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், வேலையிலிருந்து தூக்கியெறியவும் அனுமதிப்பது மற்றும் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கான பிற வழிகளை அவர்கள் பின்பற்றி வருகின்றனர். தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் அணி திரட்டப்பட்ட பிரிவினருடைய உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் தாக்குவதன் மூலம், முழு தொழிலாளி வர்க்கத்தின் சூழ்நிலைமைகளையும் தாழ்த்த முடியுமென முதலாளி வர்க்கம் நம்புகிறது.

தொழிலாளி வர்க்கத்தையும் மக்களையும் பிளவுபடுத்தியும், ஏமாற்றியும் வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் வழிமுறை மூலம் முதலாளி வர்க்கம் ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பின் மூலம், மக்களின் வாழ்க்கை நிலைமைகள் அரசாங்கத்தை நடத்துகின்ற கட்சியைப் பொறுத்தது என்ற மாயை உருவாக்கப்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் ஏதாவதொரு போட்டி கட்சியின் பக்கம் நிற்குமாறு மக்கள் மீது தினந்தோரும் பரப்புரை நெருக்குதல் தொடுக்கப்படுகிறது.

தேர்தல்கள் என்பது அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை நடத்துவதற்கான பொறுப்பை தன்னுடைய கட்சிகளில் யாருக்குக் கொடுப்பதென முதலாளி வர்க்கம் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு கருவியாகும். தனது தொழிற்சாலையை சிறப்பாக நடத்துவதற்கு தனிப்பட்ட முதலாளி தனது மேலாளர்களை அவ்வப்போது மாற்றுவதைப் போலவே, மக்கள் விரோதத் திட்டமாகிய உலகமயம், தாராளமயம், தனியார்மயத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதே நேரத்தில் மக்களை மிகவும் திறமையோடு முட்டாளாக்குவதற்கு மிகவும் பொறுத்தமான கட்சியென அது கருதும் கட்சியிடம் அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பை முதலாளி வர்க்கம் ஒப்படைக்கிறது. எந்த ஒரு நேரத்திலும் அரசாங்கத்தை நடத்துகின்ற காங்கிரஸ், பாஜக அல்லது வேறு எந்த கட்சியும், முதலாளி வர்க்கத்தின் நிர்வாக குழு மட்டுமே ஆகும். அத்தகைய ஒரு கட்சியை மாற்றி வேறு ஒரு கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவது மக்களின் நிலைமைகளை மாற்றாது.

தாங்கமுடியாத சுரண்டல், வேலையின்மை, பாதுகாப்பின்மை மற்றும் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதலாளித்துவ அமைப்பிற்கும் முதலாளி வர்க்க ஆட்சிக்கும் முடிவு கட்ட வேண்டியது அவசியமாகும்.

தொழிலாளர்கள் நாம், விவசாயிகளுடன் கூட்டாக, நமது நாட்டின் மன்னர்களாக.. ஆக வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு நாம் போராட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, உழைக்கும் மக்களைச் சுரண்டாத, ஒடுக்காத ஒரு உண்மையான சோசலிச இந்தியாவை நாம் கட்டியெழுப்ப முடியும்.

தொழிலாளர் தோழர்களே,

நம்முடைய பொதுவான கோரிக்கைகளுக்கு ஆதரவாக, அண்மை ஆண்டுகளில் பல மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களிலும் அகில இந்திய வேலைநிறுத்தங்களிலும் நாம் மீண்டும் மீண்டும் பங்கேற்று வருகிறோம். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக, 3 விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லியின் எல்லையில் விவசாயிகள் அமர்ந்திருக்கிறார்கள். நம்முடைய இந்த நடவடிக்கைகள் உண்மையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். நம்முடைய கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றையாவது ஏற்றுக் கொள்ள அந்தப் போராட்டங்கள் முதலாளி வர்க்கத்தைக் கட்டாயப்படுத்தி இருக்கிறதா? நாம் நமக்கு நேர்மையாக இருந்தால், இதற்கு பதில் இல்லை என்பதாகும்! நம்முடைய ஆர்ப்பாட்டங்கள் முதலாளி வர்க்கத்திற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

நம்முடைய எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏன் முதலாளிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை? ஏனென்றால், எதிர்ப்பு இயக்கங்களின் அரசியல் நோக்கமானது போட்டி கட்சிகளைக் கொண்ட பாராளுமன்ற அமைப்பின் வரம்பிற்குள் இருக்கும் வரை முதலாளி வர்க்கம் அச்சுறுத்தப்படுவதில்லை.

முதலாளித்துவ வர்க்கத்தின் அமைதியை ஆட்டங்காண வைக்க, பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் பரப்பிவரும் மாயைகளை நாம் நிராகரிக்க வேண்டும். “தகுதியற்ற அரசாங்கத்தை மாற்ற வேண்டும்” என்ற பழைய முழக்கத்தை நாம் உடைக்க வேண்டும். மோடி அரசாங்கத்தை மாற்றி, அதே முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றொரு அரசாங்கத்தைக் கொண்டு வருவது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நம்முடைய வாழ்க்கை நிலைமைகளை மாற்றாது.

தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வங்கிகள், ரயில்வே போன்ற பெரிய அளவிலான உற்பத்தி சாதனங்களின் உடமையையும் கட்டுப்பாட்டையும் முதலாளி வர்க்கத்தின் கைகளிலிருந்து எடுத்து அவற்றை சமூக உடைமை மற்றும் சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதை நோக்கமாகக் கொண்டு நாம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நாம் ஒரு ஐக்கிய அரசியல் சக்தியாக மாறி, விவசாயிகளுடன் ஒரு உறுதியான கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே இதை நம்மால் செய்ய முடியும்.

இந்தியா முதலாளி வர்க்கத்தின் தனிப்பட்ட சொத்தல்ல, அது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நமக்குச் சொந்தமானதாகும். ஆனால் இன்று, இந்தியா முதலாளி வர்க்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளுடைய கைகளில் உள்ளது. அவர்கள் நாட்டை தங்களுடைய தனிப்பட்ட சொத்து போல நடத்துகிறார்கள். முதலாளி வர்க்க ஆட்சியை நாம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியைக் கொண்டு மாற்ற வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.

இந்தியாவின் மன்னர்களாக ஆகும் நோக்கத்துடன் நாம் போராடும்போது, நம்முடைய உடனடி கோரிக்கைகளில் சிலவற்றையும் வென்று, சமூக விரோதத் தாக்குதலான தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தையும் முன் கொண்டு செல்ல முடியும்.

2021 மே தினத்தில், அனைவரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக, தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி தொழிலாளர்களை அழைக்கிறது. தொழிலாளர்-விவசாயிகளுடைய ஒற்றுமையை நாம் பலப்படுத்த வேண்டும். முதலாளித்துவத்தை மாற்றி சோசலிசத்தை நிறுவும் நோக்கத்துடன் இந்த போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அத்தகைய அமைப்பில் ஒருவர் இன்னொருவரைச் சுரண்டுவதற்கான அடிப்படையை அகற்ற, உற்பத்திக் கருவிகள் சமூக உடமையாக, சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *