கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பேரழிவு :

இந்த அமைப்பு முற்றிலும் மக்கள் விரோதமானதென்பது வெட்ட வெளிச்சம்!

கொஞ்சநெஞ்சம் இருந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பும் முற்றிலுமாக சீரழிந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மரணமும் பேரழிவும் தாண்டவமாடுகின்றன.

தில்லியிலும் நாடெங்கிலும் உள்ள  பல மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுத்துவிட்டன.

கடந்த சில வாரங்களாக, கொரோனா பெருந்தொற்று நோய் காட்டுத்தீ போல் இந்தியாவெங்கும் பரவி வருகிறது. மிகவும் நோய்வாய்ப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சுவாசிக்க முடியாமல், தங்களுடைய நெருங்கிய சொந்தங்களால் மருத்துவமனைகளுக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்படுகிறார்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்தவமனைகளின் நுழைவாயில்களிலேயே நோயாளிகளை வேறு ஏதாவது மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மருத்துவமனையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது பலர் சாகிறார்கள். மற்றவர்கள் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் இறக்கின்றனர்.

எல்லா இடங்களிலும் மருத்துவப் பற்றாக்குறை உள்ளது. மருத்துவமனைகளில் காலிப் படுக்கைகளோ, ஐ.சி.யூ தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளோ, ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளோ அல்லது சாதாரண படுக்கைகள் கூட இல்லை. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் சந்தையில் கிடைப்பதில்லை, மருந்துகளுக்கான ஒரு கருப்பு சந்தை தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆம்புலன்ஸ் சேவைகள் திணறி வருகிறது. சுடுகாடுகளுக்கும், இடுகாடுகளுக்கும் முன்னால் நீண்ட வரிசையில் பிணங்கள் காத்துக் கொண்டு நிற்கின்றன. தில்லியிலும், மற்றும் பிற நகரங்களிலும் உடல்கள் குவியல் குவியலாக சேர்த்து வைத்து எரிக்கப்படுகின்றன என்றும் எரிப்பதற்குக் கூட விறகு பற்றாக்குறை இருப்பது குறித்தும் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. மோசமான, உடல்நிலை சரியில்லாத தங்களுடைய உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் யாராவது உதவ முடியுமா என்று மிகுந்த பதற்றத்தோடு மக்களுடைய தேடுதல்கள் தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் வலைப்பின்னல்களில் நிரம்பி வழிகின்றன. நிலமையை சமாளிக்க முடியாமல் சுகாதாரப் பணியாளர்கள் களைத்துப் போய் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள்.

மிகச் சிறந்த நேரங்களிலேயே பரிதாபகரமாக செயல்படும் நமது நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மருத்துவ சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு, இப்போது முற்றிலும் முடங்கி செயலிழந்து விட்டது.

 

நாடெங்கிலும் மக்கள் உரிய மருத்தவ வசதியோ பாதுகாப்போ இல்லாமல் கொத்துக் கொத்தாக துடிதுடித்து இறக்கும் இந்த பயங்கரமான நிலைமைக்கு மத்திய அரசே முழு பொறுப்பாகும். பதினான்கு மாதங்களுக்கு முன்னர் 2020 மார்ச் மாதத்தில் அரசாங்கம் முழு முடக்கத்தை அறிவித்தபோது, ​​ஒரு பெருந்தொற்று நோயைக் கையாளக்கூடிய வகையில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைத் தயாரிக்க விரும்புவதாக அது அறிவித்தது. தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்பதை இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ளுமாறு பிரதமர் மோடி 2021 சனவரியில் உலகின் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்!

ஆனால் உண்மையில், அதன் சொந்த சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளைக் கூட அரசாங்கம் செயல்படுத்தப்படவில்லை. இந்த நோய்க்கு ஒரு சிகிச்சை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அல்லது பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதற்கு முன்னர் இந்த பெருந்தொற்று நோய் மீண்டும் மீண்டும் அலை அலையாக வரும் என்று இந்த நிபுணர் குழுக்கள் கணித்துள்ளன. ஓராண்டிற்கு முன்னரே மேலும் பல ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க வேண்டுமென அவர்கள் பரிந்துரைத்தனர். அவற்றைச் செயல்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சொல்லொணா மனிதத் துன்பங்கள் மற்றும் வேதனையான மரணங்களின் புதுப்புது சோகக் கதைகளை ஒவ்வொரு நாளும் கொண்டு வருகிறது. மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனுக்கான பற்றாக்குறையைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் தங்கள் சேவைகளுக்கு, மிக அதிக அளவில் கட்டணங்களைக் கறந்து வேறு வழியற்ற பொது மக்களைக் கொள்ளையடித்து வருகின்றன. மருத்துவமனையால் வழங்க முடியாத மருத்துவப் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் வெளியில் இருந்து வாங்குவதற்கு நோயாளிகள் பெரும் தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிறுவனங்கள், இதை கொள்ளை இலாபமடிப்பதற்கான மோசடியாக மாற்றியுள்ளன. ஆக்சிஜன் கிடைக்கும் பட்சத்தில், மிகவும் அவசியமான ஆக்சிஜனுக்காக நோயாளிகள் மிக அதிக அளவில் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஏகபோக முதலாளிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் இலாபத்தை உறுதி செய்வதும், “மிகவும் திறமையான மேலாண்மை” செய்வது போன்ற சர்வதேச பிம்பத்தைக் காட்டுவதும் இந்திய அரசின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் அரசாங்கத்தின் அப்பட்டமான பொய் பரப்புரையை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதிகாரிகள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.

அதிகாரிகளின் குற்றங்களையும், அதிகாரப்பூர்வ வழிமுறைகளால் பரப்பப்பட்ட பொய்யான, தவறான தகவல்களையும் அம்பலப்படுத்த மக்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செய்யும் மக்கள் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். உத்திர பிரதேசத்தில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற பொருட்களின் பற்றாக்குறையை வெளியே சொல்லும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி முதலமைச்சர் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். மருத்துவ பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறை குறித்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அரசாங்க அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். மருத்துவ சுகாதார அமைப்பின் செயலிழப்பாலும், சீரழிவின் காரணமாகவும், அதிகாரிகளின் பொறுப்பற்ற அலட்சியத்தாலும் ஏற்பட்டுவரும் துயரம் மிகுந்த கொரோனா மரணங்கள் குறித்து செய்திகளை வெளியிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் வருகின்றனர்.

மத்திய அரசும், பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் தத்தம் சொந்த குற்றங்களை மூடிமறைக்க முயற்சிக்கும் அதே நேரத்தில், இந்த பயங்கரமான சூழ்நிலைக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதே அரசாங்கங்கள் தத்தம் மாநிலங்களில் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு மார் தட்டி பெருமைபட்டுக் கொண்டனர்! நம் நாட்டில் மருத்துவ சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ ஒருபோதும் தீவிரமாக அக்கறை காட்டவில்லை என்பதை இது காட்டுகிறது.

மார்ச் 2020 இல் கோவிட் பெருந்தொற்று நோய் வெடித்தபோது, ​​அத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான ஒரு சுகாதார அமைப்பை நிறுவவும் பலப்படுத்தவும் தேவை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. அத்தகைய அமைப்பை நிறுவுவதற்கான அவசரத் தேவையை மத்திய அரசு முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டது. இதுபோன்ற பெருந்தொற்று நோய்களின் பேரழிவுகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதைக் காட்டிலும், மக்களின் பெருந்தொற்று நோயையும் மக்கள் படும் சொல்லொணாத் துயரங்களையும் சாதகமாகப் பயன்படுத்தி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்வதில் தான், நமது ஆட்சியாளர்கள் அதிக அக்கறை கொண்டிருக்கின்றனர். பொது மக்களுடைய ஆர்பாட்டங்களுக்கு தடை விதித்துவிட்டு, தொழிலாளர்களின் உரிமைகளை மேலும் முடக்கும் சட்டங்களை இயற்றுவதற்கும், விவசாயத் துறையை இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திறந்து விடுவதற்கும் பெருந் தொற்று நோய் சூழ்நிலையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறு நமது மக்களுடைய நிலங்களையும், உழைப்பையும், பிற இயற்கை வளங்களையும் தீவிரமாகச் சுரண்டுவதன் மூலம் பெரும் நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை பன்மடங்கு பெருக்க இன்னும் கூடுதலான வாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறார்கள். “இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றுங்கள்” என பிரதமர், பெரிய நிறுவனங்களுக்கு பகிரங்கமாகவே “அறிவுறுத்தியிருக்கிறார்”!

தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பு முற்றிலும் மனிதாபிமானமற்ற அமைப்பு என்ற யதார்த்தத்தை கோவிட் பெருந்தொற்று நோய் நமக்கு தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இந்திய அரசு இந்த மனிதாபிமானமற்ற அமைப்பைப் பாதுகாக்கிறது. கோடிக் கணக்கான மனித உயிர்களைப் பலி கொடுத்து, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்களைக் கொழுக்கச் செய்வதே அதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. நம் நாட்டை ஆளுகின்ற முதலாளி வர்க்கத்தாலும், மிகப்பெரிய முதலாளித்துவ ஏகபோகங்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் அரசாங்கங்களாலும் சமூகத்தில் உழைக்கும் பல கோடிக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது. ஆளும் முதலாளி வர்க்கம், மனித நெருக்கடியை பயன்படுத்தி எப்படித் தன் இலாபங்களை அதிகரிப்பது என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே செயல்படுகிறது. முதலாளி வர்க்கம், ஆட்சி செய்யத் தகுதியற்றது என்பதை கோவிட் பெருந்தொற்று நோய் மீண்டும் நிரூபிக்கிறது. இந்த முதலாளித்துவ அமைப்பு, மனித சமுதாயத்தை மென்மேலும் பேரழிவுகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *