அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் / நிறுவனப்படுத்துதல் கொள்கைகளை தடுத்து நிறுத்திய வெற்றிகரமான போராட்டங்கள்

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (காம்கர் ஏக்தா கமிட்டி) ஏற்பாடு செய்திருந்த “தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுங்கள்!” என்ற கூட்டத் தொடரின் பத்தாவது கூட்டம்

தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை பிரதமர் நரசிம்ம ராவ் ஆரம்பித்ததிலிருந்து, நம் நாட்டின் தொழிலாளி வர்க்கம் இந்த திட்டத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்து வந்திருக்கிறது. தனியார்மயமாக்கலுக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக, ஆளும் முதலாளி வர்க்கம் நரித்தனமான தந்திரங்களைப் பின்பற்றி வந்துள்ளது. அதனுடைய நோக்கமானது, தனியார்மயமாக்கலுக்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்துவதாகும்.

1996-1998 ஆண்டுகளில் இருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள், முதலீட்டை மீட்பதற்கான அமைச்சகத்தை அமைப்பதன் மூலம் தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தன. அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை வெவ்வேறு வகைகளாகப் பிரித்தனர், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவற்றை தனியார்மயமாக்க மாட்டோம் என்றும், இழப்பை ஏற்படுத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே தனியார்மயமாக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர். சனவரி 2000 இல், அப்போதைய வாஜ்பாயின் தேசிய சனநாயக கூட்டணி அரசாங்கம் “ரொட்டி தயாரிப்பது அரசாங்கத்தின் வேலையல்ல” என்று கூறி, மாடர்ன் புட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (எம்.எஃப்.ஐ.எல்)-ஐ பன்னாட்டு நிறுவனமாகிய இந்துஸ்தான் லீவர் லிமிடெட் (எச்.எல்.எல்) க்கு விற்றது. மேலும் அது பாரத் அலுமினிய கம்பெனியையும் (பால்கோ) ஒரு தனியார் முதலாளித்துவ ஏகபோகத்திற்கு விற்றது. எம்.எஃப்.ஐ.எல் மற்றும் பல்கோ (BALCO) வின் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒரு வீரமிக்கப் போராட்டத்தை நடத்தினர். அவர்களுடைய போராட்டம், மேற் கொண்டு தனியார்மயமாக்குவதை நிறுத்துமாறு தேசிய சனநாயகக் கூட்டணி அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியது. மன்மோகன் சிங்கின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், நவரத்னாக்கள் எனப்படும் அதிக மதிப்பு வாய்ந்த பொதுத் துறை நிறுவனங்களும், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளும் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அது, நிறுவனமயப்படுத்துவது, முதலீட்டை மீட்பது என்பன போன்ற பல்வேறு வழிகளில் தனியார்மயமாக்கலைத் தொடர்ந்து நடத்தி வந்தது. இப்போது, ​​நரேந்திர மோடி அரசாங்கம் எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (காம்கர் ஏக்தா கமிட்டி)  ஏற்பாடு செய்த தொடர் கூட்டங்கள் குறித்து தொழிலாளர் ஒற்றுமைக் குரல் கட்டுரைகளை வெளியிட்டு வந்திருக்கிறது. ஏப்ரல் 4, 2021 ஞாயிற்றுக் கிழமை அன்று, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் “தனியார்மயமாக்கலைத் தடுக்க முடிந்த வெற்றிகரமான போராட்டங்கள்” குறித்த ஒரு கூட்டத்தை நடத்தியது. செப்டெம்பர் 2020 இல் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் தொடங்கிய “தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுங்கள்!” என்ற கூட்டத் தொடரின் 10-ஆவது கூட்டமாகும் இது.

தோழர் மேத்யூ கூட்டத்தில் பங்கேற்பவர்களை வரவேற்று, தனியார்மயமாக்கலுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் பல்வேறு தொழிற் சங்கங்களையும் கூட்டமைப்புக்களையும் ஒன்றிணைக்க தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் முயற்சித்து வருவதைக் குறிப்பிட்டார். இந்த முயற்சிக்கு, தேசிய தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுத்துறை கூட்டமைப்புகள், நாடு முழுவதும் உள்ள தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மக்கள் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதையும் நிறுவனமயப்படுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த முடிந்த போராட்டங்களிலிருந்து மதிப்புமிக்க படிப்பினைகளைப் பெறுவதற்காக இந்த கூட்டத்தை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அவர் அனத்திந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பின் (ஏஐபிஇஎஃப்) தலைவர் திரு. சைலேந்திர துபே, அனத்திந்திய டிபென்ஸ் ஊழியர் சம்மேளனத்தின் (ஏஐடிஇஎப்) தலைவர் திரு எஸ்.என். பாதக், இந்த் கதான் மஜ்தூர் கூட்டமைப்பின் (எச்.கே.எம்.எஃப்) தலைவர் திரு நாதுலால் பாண்டே ஆகிய  பேச்சாளர்களை வரவேற்றார். கூட்டத்தில் உரையாற்ற இந்திய ரயில்வேயின் பல்வேறு உற்பத்தி பிரிவுகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மாடர்ன் கோச் தொழிற்சாலை (எம்.சி.எஃப்) தொழிற் சங்கத்தின் (ஏ.ஐ.ஆர்.எஃப்) பொதுச் செயலாளரும், ஆடவர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், உபி – ரே பெர்லி, மாடர்ன் கோச் தொழிற்சாலையின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமாகிய  திரு எல்.என் பதக், ரயில் கோச் தொழிற்சாலை தொழிற்சங்க காங்கிரசின் (ஏ.ஐ.ஆர்.எஃப்)   தலைவரும், உபி – ரே பெர்லி, மாடர்ன் கோச் தொழிற்சாலையின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவருமாகிய திரு நாய்ப் சிங், மேற்கு வங்காளம் – சித்தரஞ்சன் (சி.ஐ.டி.யு) சித்தரஞ்சன் லோகோ ஒர்க்ஸ் தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர்  நிர்மல் முகர்ஜி, டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் (டி.எல்.டபிள்யூ) தொழிற் சங்கம் (ஏ.ஐ.ஆர்.எஃப்) இன் பொதுச் செயலாளரும்  டி.எல்.டபிள்யூ – வாரணாசி – உ.பி-யின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமாகிய டாக்டர். பிரதீப் சர்மா மற்றும் இந்திய ரயில்வேயின் தொழில் நுட்ப மேற்பார்வையாளர்கள் அசோசியேசனுடைய (ஐ.ஆர்.டி.எஸ்.ஏ) மூத்த இணைப் பொதுச் செயலாளர் கே.வி.ரமேஷ் ஆகியோர் இவ்வாறு பங்கேற்றவர்கள் ஆவர்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் போன்ற பிற அமைப்புக்களோடு ஆரம்பத்தில் இருந்தே தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடி வரும் மக்கள் அமைப்பான மக்களாட்சி இயக்கத்தின் தேசிய துணைத் தலைவர் சஞ்சீவானி ஜெயினையும் அவர் வரவேற்றார்.

மூன்று கூட்டமைப்பு தலைவர்களின் உரைகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு :

அனைத்திந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பின் (ஏஐபிஇஎஃப் – AIPEF) தலைவர் சைலேந்திர துபே ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள் –

கடந்த 30 ஆண்டுகளாக மின்சார விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று நோய் முடக்கத்தின் போது கூட, 2020 மே 13 அன்று சட்டத் திருத்தம் எதுவுமின்றி, நிதியமைச்சர் சீதாராமன் ஒருதலைப்பட்சமாக யூனியன் பிரதேசங்களின் மின்சாரத் துறை தனியார் மயமாக்கப்படுவதாக அறிவித்தார். மின்சாரத்தைப் பொருத்தவரை, இது ஒரு நீண்ட போராட்டமாக இருந்து வந்திருக்கிறது.

சமீபத்தில் வாரணாசியில், பூர்வஞ்சல் வித்யுத் வித்தரன் நிகத்தை (மின்சார வினியோக அமைப்பு) தனியார்மயமாக்க உ.பி. அரசு முடிவு செய்தது. மத்திய மின்சார அமைச்சர் 2020 ஜூலை மாதத்தில் லக்னோவிற்கு வந்தார், உ.பி.யில் உள்ள 75 மாவட்டங்களுள் 21 மாவட்டங்களில் மிகப் பெரிய மின்சார விநியோக நிறுவனமாக விளங்கும் பூர்வஞ்சல் வித்யுத் வித்தரன் நிகம் இப்போது தனியார்மயமாக்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 2020 முதல் நாங்கள் அதை எதிர்க்க ஆரம்பித்தோம். உ.பி.யில் 18 தொழிற்சங்கங்களைக் கொண்ட எங்கள் அமைப்புக்கு வித்யுத் கர்மாச்சாரி சன்யுக்ட் சங்கர்ஷ் சமிதி (வி.கே.எஸ்.எஸ்.எஸ்) என்று பெயரிடப்பட்டுள்ளது; இதன் உறுப்பினர்களில் தலைமை பொறியாளரில் துவங்கி அவருக்கு கீழே உள்ள அனைத்து பதவிகளும் அடங்கும். இந்த 18 தொழிற்சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்களுக்கும், வி.கே.எஸ்.எஸ்.எஸ்ஸின் ஒருங்கிணைப்பாளருக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது, அது “இந்த தொற்றுநோய் காலத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உங்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தொற்று சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்” என்று அச்சுறுத்தினர். ஆனால் இந்த அச்சுறுத்தல்களுக்கு யாரும் பயப்படவில்லை, நாங்கள் அனைவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு கூட்டங்களை நடத்தினோம்.

எங்களுடைய முதல் கூட்டத்தை வாரணாசியில் 2020 செப்டம்பர் 1 அன்று நடத்தினோம். அந்தக் கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். உ.பி.யில் சட்டப் பிரிவு 144 கீழ் ஊரடங்கு போடப்பட்டிருந்த போதிலும், நாங்கள் இந்த கூட்டத்தைத் திட்டமிட்டோம், அவர்கள் எங்களை கைது செய்ய விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம். செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை நாங்கள் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு அவர்களிடம் கடிதங்களை ஒப்படைத்தோம்.

2020 செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற மாபெரும் பேரணியில் 2000 பேர் பங்கேற்றனர்.

வீரத்தியாகி பகத்சிங்கின் பிறந்த நாள் விழாவில் பல்வேறு பொதுத் துறைகள், தனியார் மயமாக்கப்படுவதை எதிர்ப்பதற்கும், தொழிலாளர்களின் ஒற்றுமையைக் காண்பிப்பதற்கும் ஒரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. லக்னோவில், சுமார் 4000 ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைத்து பக்கங்களிலிருந்தும் போலீசாரால் சூழப்பட்டனர். காவல்துறை துணை ஆணையர் (ஏ.சி.பி) என்னை அணுகி, இந்தப் பேரணி நடப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். பகத்சிங்கின் பிறந்த நாளைக் நாங்கள் கொண்டாடுவதை இந்த ஒட்டுமொத்த தேசத்திலும் யாராலும் எங்களைத் தடுக்க முடியாது என்று நான் அவருக்கு பதிலடி கொடுத்தேன். என்னை அவர் கைது செய்தார். என்னோடு 900 ஊழியர்கள் தாமாக முன்வந்து கைதாயினர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எங்களுக்கு காவல் துறையினருடைய வண்டிகளில் இடமளிக்க முடியவில்லை. இந்த செய்தி மாநிலத்தின் பிற பகுதிகளை அடைந்தவுடன், மேலும் 10,000 ஊழியர்கள் போலீசில் தாமாக முன்வந்து கைதாகினர். இறுதியில் வேறு வழியின்றி அவர்கள் எங்கள் அனைவரையும் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்க வேண்டியிருந்தது.

செப்டெம்பர் 28-க்குப் பின்னர், தொழிலாளர்களைப் பிளவுபடுத்த அவர்கள் பல்வேறு தந்திரங்களை முயற்சித்தனர். ஆனால் நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டோம். போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவோடு விவாதித்த பின்னர் அக்டோபர் 5 இல், பூர்வாஞ்சல் வித்யுத் விதாரன் நிகாமை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் விலக்கிக் கொள்ள வேண்டியதாகிற்று. எதிர்காலத்தில் கூட ஊழியர்களோடு விவாதிக்காமல், இப்படிப்பட்ட எந்தத் திட்டத்தையும் முன்வைக்க மாட்டோமென எழுத்துப்பூர்வமாக அரசாங்கம் உறுதி கொடுக்க வேண்டியிருந்தது.

2018 ஆம் ஆண்டிலும், தனியார்மயமாக்கலுக்கான அரசாங்கத்தின் திட்டங்களை நாங்கள் எதிர்த்ததைத் தொடர்ந்து, அனைத்து தனியார் நிறுவன விருப்ப மனுக்களையும் அரசாங்கம் ரத்து செய்ய வேண்டியிருந்தது. தனியார் நிறுவனங்கள் இந்த பொதுத் துறைகளிலிருந்து இலாபங்களை மட்டுமே விரும்புகின்றன, ஆனால் அவை பொதுத் துறைகளின் உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய விரும்பவில்லை.

அரசு நிறுவனங்களின் தற்போதைய உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் இந்த பொதுத்துறையில் பங்குபெறும் என்றும், பொது மக்களுக்கு மின்சார விநியோக சேவையை வழங்குவதற்காக உரிமம் எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை என்றும் மின்சாரத் திருத்த மசோதா 2021 கூறுகிறது. இந்த தனியார் நிறுவனங்கள் தங்கள் இலாப நோக்கங்களுக்கு ஏற்ப மக்களிடமிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணத்தையும் வசூலித்துக் கொள்ளலாம்.

பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகராகவும், ஒன்றியப் பிரதேசமாகவும் இருக்கும் சண்டிகரில், மின்சாரத் துறை கடந்த 5 ஆண்டுகளாக இலாபம் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டு அது 365 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில், இரு மாநிலங்களையும் விட சண்டிகரில் மின்சாரம் மலிவானதாக இருந்து வருகிறது. இது போன்ற நிலை மும்பை மற்றும் தாத்ரா, நாகார் மற்றும் ஹவேலியிலும் உள்ளது. இவ்வாறாக இலாபம் ஈட்டும் அனைத்து பொதுத் துறைகளையும் தனியார் – பொதுத்துறை பங்கேற்பு (பிபிபி) மாதிரியின் கீழ் தனியார்மயமாக்க அரசாங்கம் விரும்புவதைத் தெளிவாகக் காணலாம்.

இருப்பினும் தேவைப்படும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

அனைத்திந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் (AIDEF) தலைவர் திரு எஸ்.என்.பதக் அவர்களின் உரையின் சிறப்பம்சங்கள் –

எம்.இ.சி, சி.ஓ.டி, ஆர்ட்னன்ஸ் டிப்போ, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் 42 ஆர்டனன்ஸ் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு சிவில் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். முன்னதாக 7.5 லட்சம் பாதுகாப்பு சிவில் ஊழியர்கள் வேலையில் இருந்தனர், ஆனால் இப்போது அவர்களுடைய எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ராஜ்யதக்சா குழு அமைக்கப்பட்டதிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக தனியார்மயமாக்கலுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். மூன்று பாதுகாப்பு அமைச்சர்கள் எங்களுக்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்களை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த பிரதமர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாதுகாப்பு தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதற்கான முடிவுகள் அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்படுகின்றன. 2016 ல் தில்லி – ஜந்தர் மந்தரில் ஆர்டினன்ஸ் தொழிற்சாலைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட 47 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஆரம்பித்து இந்த அரசாங்கத்துடன் போராடத் தொடங்கினோம். தொழிற்சங்கங்கள் மற்றும் ரயில் தொழிற்சங்கங்களும் எங்கள் போராட்டத்தில் இணைந்து எங்களுக்கு ஆதரவளித்தன. பாதுகாப்புத் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க இதுவரை எதுவும் செய்யப்படவில்லை என்றும் எனவே அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அரசாங்கம் எங்களிடம் கூறினாலும், இதுவரை எழுத்துப்பூர்வமாக எதுவும் கொடுக்கவில்லை.

2019 ஆம் ஆண்டில், அரசாங்கம் அவர்களுடைய தனியார்மயத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தொடங்கியது. காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு அறிவிப்பை அனுப்பினோம். எங்கள் வேலைநிறுத்தத்தின் 5 ஆவது நாளில், டெல்லியின் தலைமைத் தொழிலாளர் ஆணையரும், அரசாங்கமும் சேர்ந்து எங்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்துமாறு கூறியதுடன், ஊழியர்களின் ஆலோசனையின்றி இந்தத் துறையை தனியார்மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் எங்களுக்கு உறுதியளித்தனர்.

இந்த வாக்குறுதியை மீறி அவர்கள் 2020 ஆம் ஆண்டில் மீண்டும் தனியார்மயமாக்கலில் வேலை செய்யத் தொடங்கினர், எனவே காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அரசாங்கத்திற்கு அறிவிப்பு அனுப்ப வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. அரசாங்கம் மீண்டும் தில்லியின் தலைமைத் தொழிலாளர் ஆணையரை அணுகி, அது நிலைமையை எவ்வித மாற்றமும் இன்றி வைத்துக் கொள்ளும் என்றும், அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் தீர்வு காணும் வரை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் கூறினார். ஆனால், தீர்வுக்கு நாங்கள் அழைக்கப்பட்ட போது ​​தனியார்மயமாக்கல் என்பது கொள்கை முடிவென்றும் எனவே அது பற்றி பேச முடியாது என்றும் அரசாங்கம் கூறியது. மேலும் இந்த முடிவு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நாடு திருவாளர் மோடிக்கோ, அமித் ஷாவுக்கோ சொந்தமானதல்ல என்று நாங்கள் இதற்கு பதிலளித்தோம். இந்த தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் அரசாங்கத்திற்கு தெள்ளத் தெளிவாக கூறிவிட்டோம்.

பல விவாதங்களுக்குப் பிறகு அரசாங்கம் ரூ. 30,000 கோடி ஆயுத உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இந்த இலக்கை அடைய எங்களால் உதவ முடியாது என்றும் அதன் காரணமாகவே தனியார் மயமாக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள். நாங்கள் தலைமைத் தொழிலாளர் ஆணையருடன் பேச்சு வார்த்தை நடத்தினோம், ரூ. 30,000 கோடி. உற்பத்தி இலக்கை அடைவதற்கு நாங்கள் உதவுவோம் என்று கூறினோம். அதற்கான முன்மொழிவை வழங்குமாறு அவர் எங்களிடம் கேட்டார். தற்போதைய அரசாங்கத்தின் அமைப்பிலேயே உற்பத்தி இலக்கை எப்படி அடைவது என்பதற்கான முழு திட்டத்தையும் நாங்கள் கொடுத்தோம். 4 மாதங்களுக்குப் பிறகு எங்களிடம் திரும்பி வந்த அவர், வாங்குவதற்கு யாரிடமிருந்தும் ஆணைகள் வராத நிலையில் இலக்கை எவ்வாறு அடைய நீங்கள் திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். எங்களிடமிருந்து வாங்குவதற்கு ஆணைகள் இராணுவத்தால் வழங்கப்படுகின்றன, ஆனால் இங்கு முடிவெடுக்கும் வழிமுறையில் உள்ளவர்கள் அதை தனியார்மயமாக்க விரும்புகிறார்கள். இன்றுவரை ரூ 1000 கோடி மதிப்புள்ள வாங்குவதற்கான ஆணைகள் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை!

பாதுகாப்பு சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 75,000 கோடி என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த மதிப்பீடு அம்பானி, அதானி, டாடா மற்றும் பிர்லா போன்றவர்களுக்காகக் கூறப்படுகிறது. இல்லையெனில் அவர்கள் தேர்தலுக்கு எவ்வாறு நிதி பெறுவார்கள்? உண்மையில் அதன் மதிப்பு இதை விட பத்து மடங்கு அதிகமானதாகும். ஒரு தரை பீரங்கியைத் தயாரிக்க 60 முதல் 70 கோடி ரூபாய் அவசியமாகும். நாக்பூரில் எங்கள் தொழிற்சாலைக்கு அருகில், ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையின் நிலத்தை வெடிமருந்து தயாரிப்பதற்காக அனில் அம்பானிக்கு அரசாங்கம் இலவசமாக வழங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் எனது நோக்கமானது, நாங்கள் எப்படிப் போராடினோம் என்பதை மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக அல்ல, இந்த அரசாங்கத்திற்கு எதிராக வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துப் போராட வேண்டும் என்று அனைவருக்கும் சொல்வதற்காகவே இந்த விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். தனியாக நாங்கள் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. எனவே நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

இந்த் கதான் மஜ்தூர் கூட்டமைப்பின் தலைவர் திரு நாதுலால் பாண்டே ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள் –

நிலக்கரித் தொழிலில் கோல் இந்தியா தாய் நிறுவனமாகும், அதன் கீழ் 8 நிறுவனங்கள் உள்ளன. இது இந்தியாவின் எரிசக்தி தேவையில் 72%-த்தை நிறைவு செய்கிறது. கோல் இந்தியா 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, அப்போது 70 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது; இன்று நாம் 559 மில்லியன் டன்களைக் கடந்துவிட்டோம். முன்னதாக, கோல் இந்தியாவில் கூட 7.5 லட்சம் ஊழியர்கள் இருந்தனர், இன்று 2 லட்சம் 67 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, ஆனால் உற்பத்தி மட்டும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கோல் இந்தியா நேரடியாக தனியார் மயமாக்கப்படவில்லை; அதிகாரபூர்வமான சுரங்கங்கள் எதுவும் தனியாருக்கு விற்கப்படவில்லை, மாறாக ஏற்கனவே இருக்கும் சுரங்கங்களுக்கு இணையாக நிலக்கரியைத் தோண்டி எடுக்க சுரங்கத்திற்கு அவர்கள் அனுமதி அளிக்கின்றனர். இதற்கு எதிராக எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி மற்றும் பி.எம்.எஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள, நிலக்கரி துறையில் உள்ள எல்லா தொழிற் சங்கங்களும் ஒன்றுபட்டு 2020 சூலை 2-லிருந்து 4 வரை ஒரு வெற்றிகரமான வேலைநிறுத்தத்தை நடத்தினோம். அது 100% வெற்றிகரமான வேலைநிறுத்தமாக, கிட்டத்தட்ட முழு கோல் இந்தியாவும் அந்த 3 நாட்களுக்கு செயல்படாமல் முழுவதுமாக நின்றுவிட்டது. 2020 நவம்பர் 26 நடைபெற்ற அனைத்திந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்றோம்.

அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற ஐந்து தொழிற்சங்கங்கள் நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம். அரசாங்கங்கத்தின் தனியார்மயமாக்கல் கொள்கையை எதிர்ப்பதில் பி.எம்.எஸ்ஸும் நேர்மையாக பங்கேற்றது என்று நான் கூற விரும்புகிறேன். தேவைப்படும் போதெல்லாம் நாம் அனைவரும் எப்போதும் போராடத் தயாராக இருக்கிறோம். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் தனியாகப் போராடும் போது சிறிய வெற்றிகளைப் பெற்றுள்ளோம். வங்கி சங்கங்கள் 15, 16 மார்ச் இல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். காப்பீடு தொழிற் சங்கங்கள் 2021 மார்ச் 17 – 18  இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்த தனியார்மயமாக்கும் பிரச்சனைக்கு எதிராக நாம் எல்லா துறைகளிலும் கூட்டாக நாடு தழுவிய அளவில் 3-லிருந்து 4 நாட்களுக்கு ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்வதோடு, ஒருங்கிணைந்து போராடுவதற்கான ஒரு வழியையும் தீர்மானிக்க வேண்டுமென நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். விவசாயிகள் செய்ததைப் போல நாம் ஒன்று திரண்டு, ஒரு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டால், நாம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். பி.எம்.எஸ் உறுப்பினர்கள் பலரும் கூட அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளோடு உடன்படவில்லை.

நாடு தழுவிய ஒரு வேலைநிறுத்தத்தை நாம் திட்டமிட்டால், கோல் இந்தியாவின் அனைத்து ஊழியர்களும் இதற்கு ஆதரவாக இருப்பார்கள், சுரங்கங்களில் இருந்து ஒரு கிராம் நிலக்கரி கூட தோண்ட விடமாட்டோம் என்று நான் உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்!

கூட்டத்தில் பங்கேற்ற பிற தலைவர்களும் உரையாற்றினர்.

மாடர்ன் கோச் தொழிற்சாலை (எம்.சி.எஃப்) தொழிற் சங்கத்தின் (ஏ.ஐ.ஆர்.எஃப்) பொதுச் செயலாளரும், ஆடவர் சங்கம் பொதுச் செயலாளரும், உபி – ரே பெர்லி, மாடர்ன் கோச் தொழிற்சாலையின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமாகிய திரு எல்.என் பதக், அரசாங்கத்தின் கொள்கையின்படி டீசல் என்ஜின்களின் பயன்பாட்டை நிறுத்தப் போவதையும், மின்சாரத்தைப் பயன்படுத்தி அனைத்து ரயில்வே தடங்களை இணைக்கப் போவதையும் சுட்டிக் காட்டினார். மற்ற நாடுகளிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதால் ஆகும் செலவுகளைக் கட்டுப்படுத்த இவ்வாறு செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஒரு தனிப்பட்ட இடத்தை ஒதுக்கிக் கொடுத்து, புதிய டீசல் என்ஜின்களை தயாரிக்க அனுமதி வழங்கியது ஏன்? ரூ 22 கோடி கொடுத்து ஏபிபி இஞ்சினை அரசு வாங்கியிருக்கிறது. ஆனால் இதே போன்ற இஞ்சின்களை சித்தரஞ்சனில் வெறும் 9 கோடி ரூபாய் நாம் தயாரிக்கிறோம். ரே பரேலியில் தயாரிக்கப்படும் இரயில் பெட்டிகளின் மதிப்பு ரூ. 2 கோடியாக இருக்கையில், அரசாங்கம் ரூ. 6.5 கோடி கொடுத்து அவற்றை இறக்குமதி செய்கிறது! ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து அரசாங்கம் வழங்கிய 100 நாள் வேலைத் திட்டம், எம்.சி.எஃப் ரே பரேலி மட்டுமே ஒரு நிறுவனமாக மாற்றப்படும் என்றும், பின்னர் மீதமுள்ள உற்பத்தி பிரிவுகளும் அதில் இணைக்கப்படும் என்றும் கூறுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும், அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களோடு கூட்டாக தங்கள் குடும்பங்களுடன் ஒரு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. ரயில்வே ஊழியர்களுடன் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் பல சூழ்நிலைகளிலும் எங்களுக்கு வாக்குறுதியளித்திருந்தாலும், அது தனது திட்டங்களை வெளிப்படையாக எங்கள் முன் வைக்கவில்லை.

ரயில் கோச் தொழிற்சாலை தொழிற்சங்க காங்கிரசின் (ஏ.ஐ.ஆர்.எஃப்) தலைவரும், உபி – ரே பெர்லி, மாடர்ன் கோச் தொழிற்சாலையின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவருமாகிய திரு நாய்ப் சிங், 2019 சூன் 19 அன்று 6 உற்பத்தி பிரிவுகள் ஒரு நிறுவனமாக ஆக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிய வந்தது. உடனடியாக, 20 ஆம் தேதியன்றே பெரும்பான்மையான ஊழியர்கள் பங்கேற்ற ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 2019 சூன் 25 அன்று இரயில்வே வாரியம், எம்.சி.எப்-க்கு தங்கள் நிதி ஆணையரை அனுப்பினர். தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். 1000 பெட்டிகளை உற்பத்தி செய்வதற்காக தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்தாலும், உண்மையில் 1900 பெட்டிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது! பின் ஏன் அது நிறுவன மயமாக்கப்படுகிறது? முதலில் நடந்த இந்தப் போராட்டம் ரயில்வே வாரியத்தை பெரிதும் கவலை கொள்ளச் செய்தது. ஏனெனில் உண்மையான ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் அவர்களுடைய குடும்பங்களும் இதில் பங்கேற்றன. பல்வேறு ரயில்வே வாரிய உறுப்பினர்கள் எங்களிடம் கொண்டு வந்த எந்தவொரு விதிமுறைகளுக்கும் தொழிலாளர்கள் உடன்படவில்லை. தொழிலாளர்கள் விடாப்பிடியாக எதிர்த்த காரணத்தாலும், 9 மாதங்கள் தொடர்ந்து போராடியதாலும், அரசாங்கம் அதன் திட்டத்தை நிறுத்த வேண்டியதாகியது. 2006 ஆம் ஆண்டிலும் இதே முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கூட குடும்பங்கள், குறிப்பாக பெண்கள் அதற்கு எதிராகப் போராடினார்கள். அவர்கள் 71 நாட்கள் போராடினார்கள், எனவே கபுர்தலாவில் உள்ள இரயில் பெட்டித் தொழிற்சாலையைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டியிருந்தது.

டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் (டி.எல்.டபிள்யூ) தொழிற் சங்கம் (ஏ.ஐ.ஆர்.எஃப்) இன் பொதுச் செயலாளரும்  டி.எல்.டபிள்யூ – வாரணாசி உ.பி-யின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமாகிய டாக்டர். பிரதீப் சர்மா, இரயில்வேயில் 12.26 தொழிலாளர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார். டி.எல்.டபிள்யூ பழைய இரயில் பெட்டிகளைப் புதுப்பித்து புதியவற்றைப் போல சீரமைத்துத் தருவதன் மூலம் நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது. தனியார்மயமாக்கலின் மோசமான விளைவுகள் குறித்து அவரது அமைப்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டியது. புதுதில்லி மற்றும் லக்னோ இடையே இயக்கப்படுகின்ற சதாப்தி மற்றும் தனியார் தேஜாஸ் ரயில்கள் அரசாங்கத்திற்கு சொந்தமானவையாகும். லக்னோவில் முன்பதிவு மையங்களில் தேஜாஸ் பயணச்சீட்டுகள், சதாப்தி கட்டணத்தைக் காட்டிலும் ரூ 174 அதிகம் என்பதை விளக்கி தொழிலாளர்கள் சுவரொட்டிகளை வைத்துள்ளனர்.

இந்திய ரயில்வே தொழில் நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் (IRTSA) மூத்த கூடுதல் பொதுச் செயலாளராகிய கே.வி. ரமேஷ், இந்திய ரயில்வே உற்பத்திப் பிரிவுகளை நிறுவனப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை ரயில்வே வாரியம் (CRB) 2019 சூன் 18 இல் அறிவித்தது என்று கூறினார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே, தன்னிச்சையான ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் வெடித்தன. என்.எஃப்.ஐ.ஆர் (NFIR), ஏ.ஐ.ஆர்.எஃப் (AIRF), தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் தொழிற் சங்கங்களான திமுக தொழிலாளர் சங்கம் மற்றும் அதிமுக அண்ணா தொழிற் சங்கம் மற்றும் டி.ஆர்.யு (DREU) (சி.ஐ.டி.யு), பி.ஆர்.எம்.எஸ் (BRMS) மற்றும் ஓபிசி மற்றும் எஸ்சி-எஸ்டி சங்கங்கள் மற்றும் ஐ.ஆர்.டி.எஸ்.ஏ (IRTSA) என அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக இணைந்தன. அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு போராட்டமும் ஐ.சி.எஃப் (ICF) கூட்டு நடவடிக்கை குழுவின் (ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலை) பெயரின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது.

ஐ.சி.எஃப் பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்ற ஊர்வலத்தில் சுமார் 6000 ஊழியர்கள் பங்கேற்றனர். ஐ.சி.எஃப்-ஐயும் பிற பொதுத்துறை நிறுவனங்களையும் நிறுவனமயமாக்கலுக்கு எதிரான மனுவில் கிட்டத்தட்ட 8000 தொழிலாளர்கள் கையெழுத்திட்டனர், இது ஐ.சி.எஃப் பொது மேலாளர் மூலம் ரயில்வே வாரியத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஐ.சி.எஃப், பொது மேலாளர் அலுவலகம், இரயில் பெட்டி தொழிற்சாலை, பெட்டியின் உள்வேலை தொழிற்சாலை மற்றும் எல்.எச்.பி தொழிற்சாலைக்கு முன்னால் என ஐ.சி.எஃப் இல் தொடர் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களை அணுகி உற்பத்தி பிரிவுகளை நிறுவனமயமாக்குவதற்கு எதிராக கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஐக்கிய போராட்டம் தொடர வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய இரயில்வே குறித்து பல ஆர்வமூட்டும் முக்கியமான செய்திகளைக் குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்ற உடனேயே, அனைத்து இரயில் பெட்டிகளும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து அதிக விலைக்கும், எப்போது கிடைக்குமென்ற காலக் கெடு இல்லாமலும் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இன்று இந்த ஏழு உற்பத்தித் தொழிற்சாலைகளும் இந்திய ரயில்வேயின் தேவையை நிறைவு செய்வதற்காக 10,000 பயணிகள் இரயில் பெட்டிகளையும் 1000 என்ஜின்களையும் உற்பத்தி செய்ய முடியும், இதன் மூலம் இது இப்போது முக்கிய தன்னிறைவு அடைந்துள்ளது.

இந்த உற்பத்தி ஆலைகள் ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்திக்கு தேவையான ஆட்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அவற்றின் செயல்திறனை நிரூபித்துள்ளன. 2012-லிருந்து 2018 வரை உள்ள காலகட்டத்தில், ஒரு இஞ்சின் வண்டியைத் தயாரிக்கத் தேவைப்படும் சராசரி மனித உழைப்பு சித்தரஞ்சன் லோகோ ஒர்க்ஸில் 51-லிருந்து 30.5 ஆகவும், வாரணாசியில் உள்ள டீசல் லோகோ ஒர்க்ஸில் 22.8-லிருந்து 19 ஆகவும், ஒரு இரயில் பெட்டியை உற்பத்தி செய்ய தேவைப்படும் சராசரி மனிதவளமானது சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையில் 8.1-லிருந்து 4.5 ஆகவும்  கபூர்தலாவில் உள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையில் 3.9-லிருந்து 3 ஆகவும் குறைந்துள்ளன.

இது இந்திய ரயில்வேயின் செலவுகளைக் குறைக்க பெரிதும் பயன்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டிலிருந்து, இந்திய ரயில்வே ஜெர்மனியிலிருந்து எல்எச்பி இரயில் பெட்டிகளை ரூ 5.5 கோடி ரூபாய் செலவில் இறக்குமதி செய்து வருகிறது. அதே இரயில் பெட்டிகள் இந்தியாவில் ரூ. 2 கோடியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல், இந்திய ரயில்வே, தனிப்பட்ட சரக்கு கூடத்திற்கான (டி.எஃப்.சி) இஞ்சின் பெட்டிகளை தலா ரூ 20 கோடி விலையில் வாங்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் சித்தரஞ்சன் லோகோ ஒர்க்ஸில் அதே திறன் கொண்ட இஞ்சின் பெட்டிகளை தலா ரூ 12 கோடி செலவில் உற்பத்தி செய்கிறது!

ஏழு உற்பத்தி தொழிற்சாலைகள் ஆண்டுக்கு 1000 என்ஜின் வண்டிகளையும் 10,000 இரயில் பெட்டிகளையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்திய ரயில்வேயில் தற்போது 12,500 என்ஜின் வண்டிகளும் 70,000 இரயில் பெட்டிகளும் உள்ளன, அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3.1 லட்சம் கோடியாகும். இந்திய ரயில்வே தொழிற்சாலைகளை நிறுவனங்களாக மாற்றுவது என்ஜின்கள் மற்றும் இரயில் பெட்டிகளின் விலையை அதிகரிக்கும்.

மேலும் இந்த ஏழு உற்பத்தித் தொழிற்சாலைகளிடம் 36 சதுர கி.மீ நிலம் உள்ளது. சென்னை நகரத்தின் பிரதான இடத்தில் ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) அமைந்துள்ளது, அங்கு நிலத்தின் விலை சதுர அடிக்கு 10,000 ரூபாய்க்கு மேல் உள்ளது. அதாவது ஐ.சி.எஃப் இன் நிலத்தின் மொத்த விலை ரூ. 12,000-13,000 கோடிக்கும் அதிகமானதாகும். இது நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அது ரூ. 2,500 கோடி அடிமட்ட விலைக்குக் கொடுக்கப்படும்.

தொழிற்சாலைகள் தவிர, இந்த உற்பத்திப் பிரிவுகளில் குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், நல்ல விளையாட்டு வசதிகள், பள்ளிகள் மற்றும் பல உள்ளன. அவை அனைத்தும் தன்னிறைவு பெற்ற சிறு நகரங்களாக இருக்கின்றன!

மக்களாட்சி இயக்கத்தின் துணைத் தலைவர் சஞ்சீவானி ஜெயின் தனது உரையில் பின்வரும் கருத்துக்களைக் குறிப்பிட்டார். மக்களாட்சி இயக்கம் பங்கேற்ற அல்லது வழிநடத்திய தனியார்மயமாக்கலுக்கு எதிரான ஏராளமான பரப்புரைகள் குறித்தும், அதை எதிர்ப்பதற்கான அவசியம் குறித்து மக்களுக்கு விளக்குவதற்காக அது ஏற்பாடு செய்து நடத்திவரும் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் குறித்தும் பேசினார். தனியார்மயம், தாராளமயம் கொள்கை மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை ஒவ்வொரு அரசாங்கமும் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது, இது இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் மக்களின் நலன்களுக்கு எதிரானது. கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பையும் மீறி அடுத்தடுத்த அரசாங்கங்கள் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கும் இந்த அமைப்பில் சமூகக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதை படித்தவர்கள் கேள்வி எழுப்ப வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.

பல தலையீடுகள் மூலம், பல்வேறு பேச்சாளர்கள் தனியார்மயமாக்கல் மக்களுடைய நலன்களுக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்காக, மக்களை ஈடுபடுத்துவதும் அவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதும், அதை எதிர்ப்பதில் தொழிலாளர்களுடன் ஒன்றுபடுத்துவதும் முற்றிலும் அவசியமானது என்று சுட்டிக்காட்டினர். இது நம் பலத்தைப் பெருக்க உதவுகிறது. குறிப்பாக இந்தப் போராட்டங்களில் மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்கள் பங்கேற்க உதவுவது மிகவும் அவசியமானது. இளைஞர்களை இதில் ஈடுபடுத்துவதும் மிகவும் முக்கியம். இது போன்ற தகவல் பரிமாற்ற அமர்வுகளை, பணியிடங்கள் மற்றும் சமூகங்கள், நமது குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடத்த வேண்டும். மின்சார வினியோகத்தைத் (பூர்வஞ்சல் வித்யுத் வித்தரன் நிகாமின்) தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிராக பொது மக்களுடைய விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்ட போது அது மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

தற்போதைய அமைப்பு செயல்படும் விதம் என்னவென்றால், உண்மையான சக்தியானது ஒரு சில பெரும் நிறுவன குடும்பங்களின் கைகளில் உள்ளது, மேலும் அவை, மக்களிடமிருந்து குறைந்த எதிர்ப்பை சந்தித்து வருகின்றவர்களாகவும், தங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தக்கூடியவர்களாகவும் இருக்கும் கட்சிக்கு ஆதரவளித்து நிதியளிக்கின்றன. எனவே, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் இந்த பெரும் நிறுவன குடும்பங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். விவசாய சட்டங்கள், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அல்லது தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் ஆகியன அதே பெரும் நிறுவனக் குடும்பங்களின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும், அவற்றை அதிகாரத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மூலம் செயல்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களிடம் இருக்கும் முக்கியமான வளங்களில் ஒன்று நிலம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் மூலம் இந்த விலையுயர்ந்த நிலத்தை அடிமட்ட விலையில் பெற ஆர்வமாக உள்ளன. அரசாங்கத்தின் ஒரு அறிக்கைப்படி, இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன; அவர்களிடம் 1 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இரண்டரை லட்சம் ஹெக்டேர் நிலமும், இந்திய ஏர்போர்ட்ஸ் அதாரிடியிடம் 20,400 ஹெக்டேர் நிலமும் உள்ளது. மேலும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளும் அதிக விலை கொண்டவையாகும். இந்திய ரயில்வேயிடம் 43,000 ஹெக்டேர் நிலம் உள்ளது. பெரும் நிறுவனக் குடும்பங்களுடைய கண்கள் இந்த நிலத்தின் மீது உள்ளன. ரயில்வேயின் 43,000 ஹெக்டேர் நிலத்தின் விலை ரூ. 3 லட்சம் கோடி ஆகும்!

ஒருவர் மீது தாக்குதல் அனைவரின் மீதுமான தாக்குதல் என்ற கண்ணோட்டத்தோடு நாம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை!

உற்சாகமான இந்தக் கூட்டம் மூன்றரை மணி நேரம் நடந்தது. இந்தத் தொடரின் அடுத்த கூட்டம் மின்சாரம் விநியோகம் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக இருக்குமென தோழர் மேத்யூ அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *