மே தினம் வாழ்க!

தொழிலாளர் நாம் ஒன்றுபட்டு உரிமைகளை வெல்லுவோம்!

சுரண்டல், ஒடுக்குமுறையற்ற இந்தியாவைப் படைப்போம்!

தொழிலாளர் தோழர்களே,

முதலாளிகளும், நாம் வேலை செய்யும் நிறுவனங்களும் நாள்தோரும் நம் மீது தீவிரத் தாக்குதல்கள் நடத்தி நம்மை ஒடுக்கி வருகிறார்கள். நம்முடைய எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு நம்மை அடிமைகளாகவே அவர்கள் நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம் அறவே மறுக்கப்பட்டு தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக நீம் (NEEM), எப்டிஇ (FTE) போன்ற அடிப்படைகளில் மிகக் குறைவான ஊதியத்தில் முதலாளிகள் நம்மைச் சுரண்டிக் கொழுத்து வருகிறார்கள். இந்திய அரசும், தமிழக அரசும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு நம்முடைய உரிமைகளைப் பறித்து, நம்மை ஒடுக்கி வருகிறார்கள். பாஜக அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் நம்முடைய எல்லா உரிமைகளையும் நசுக்குவதற்காக 44 தொழிற்சட்டங்களை ரத்து செய்து விட்டு முதலாளிகளுக்கு ஆதரவான 4 தொகுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

135 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டத்தை நசுக்குவதற்காக முதலாளிகளுடைய அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் அவர்களுடைய கோரிக்கைகள் வென்றன. இப்படி பல்வேறு உயிர்த் தியாகங்கள் செய்து தொழிலாளர்கள் நாம் இந்த 8 மணி நேர வேலை என்ற உரிமையைப் பெற்றோம். அந்த அரும்பெரும் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காகவும், நம் ஒற்றுமையை வலுப்படுத்தி உரிமைகளுக்காகப் போராடுவதற்காகவும் நாம் இந்த மே நாளைக் கொண்டாடி வருகிறோம்.

ஆனால் 135 ஆண்டுகள் கடந்து, தொழில் நுட்பமும், உற்பத்தித் திறனும் பன்மடங்கு வளர்ந்திருக்கும் இந்த 21-ஆம் நூற்றாண்டில், இலாப வெறி கொண்ட முதலாளிகள் 8 மணி நேர வேலை என்ற உரிமையை ஒழித்துக்கட்டி விட்டு காட்டுமிராண்டித்தனமாக உடலுழைப்பிலிருந்து தகவல் தொழில் நுட்பம் வரை எல்லா நிலைகளிலும் வேலை நாளை 10-15 மணி நேரமாக ஆக்கி, தொழிலாளர்களுடைய சூழ்நிலையை 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளியிருக்கிறார்கள். மிகை நேர ஊதியம் மற்றும் பிற அலவன்சுகளையும் வெட்டிக் குறைத்து நம்மை வாட்டி வதைத்து வருகிறார்கள். நம்முடைய ஊதியம் வாழ்க்கை நடத்துவதற்கே கூட போதுமானதாக இல்லாமல் மிகவும் அடிமட்டமாக இருப்பது மட்டுமின்றி, விலைவாசியைக் கூட ஈடுகட்ட முடியாமல் குறைந்து கொண்டே வருகிறது. இரவும் பகலும் கடுமையாக உழைத்து முதலாளிகளுடைய இலாபத்தைப் பல மடங்கு பெருக்குவதற்காகவே தொழிலாளிகள் நாம் இந்த உலகில் பிறந்திருக்கிறோம் என்ற எண்ணத்தில் முதலாளிகள் நம்மைச் சக்கையாகப் பிழிந்து கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் நம்மைச் சுரண்டி வாழும் பெரும் முதலாளிகள் பல லட்சம் கோடி ரூபாய் இலாபம் சம்பாதித்து உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களாக கொடி கட்டிப் பறந்து வருகிறார்கள். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் பிற்போக்கான, சுயநலப் பேய்களான முதலாளிகளுடைய கைகளில் இருப்பதால்தான் தொழிலாளிகளும் விவசாயிகளும் சுரண்டப்பட்டு மோசமான வறுமையில் தள்ளப்பட்டு வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையை மாற்றி நல்லதொரு ஒளிமயமான வாழ்க்கையை தொழிலாளர்கள் நாமும், குடுப்பத்தினரும், நம் பிள்ளைகளும் வாழ வேண்டாமா? நம்மை கசக்கிப் பிழியும் இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு முறைக்கு முடிவு கட்டிவிட்டு, இந்த நாட்டைத் தொழிலாளிகள் – விவசாயிகள் நாம் ஆள வேண்டாமா?

வாருங்கள், இந்த மே நாளில் நாம் ஒன்றுபட்டு நம் உரிமைகளுக்காக அணி திரள்வோம்!

இந்திய அரசே,

 • தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் 4 தொகுப்புச் சட்டங்களை ஒழித்துக் கட்டு
 • வேலை நிரந்தரத்தை மறுக்கும் நீம் (NEEM), எப்டிஇ (FTE), ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் போன்ற சட்டங்களை நீக்கிவிட்டு, எல்லா தொழிலாளர்களையும் உடனடியாக நிரந்தரப்படுத்து.
 • 8 மணி நேர வேலை என்ற உரிமையை எல்லோருக்கும் கறாராக நடைமுறைப்படுத்து.
 • எல்லாத் தொழிலாளர்களுக்கும் சரியான ஊதியம், பிஎப், காப்பீடு, இலவச மருத்துவம், போனசு, இரவு நேரப் பணிக்கு கூடுதல் சிறப்பு ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம், விடுமுறை மற்றும் பிற நியாயமான உரிமைகளைக் கொடு.
 • குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 20,000 த்தை உறுதி செய்.
 • எல்லா தற்காலிக, பயிற்சி, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம் கொடு.
 • எல்லா பெண் தொழிலாளர்களுக்கும் உரிய பணியிடப் பாதுகாப்பையும், ஆண்களுக்கு சமமான ஊதியத்தையும், மகப்பேறு கால உரிமைகளையும், பிற சிறப்புச் சலுகைகளையும் வழங்கு.
 • தொழிலாளர்கள் விரும்பும் தொழிற் சங்கத்தை அமைக்க உரிமையும் உத்திரவாதமும் வழங்கு. விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தொழிற் சங்கங்களைப் பதிவு செய்.
 • வேலை நிறுத்த உரிமையையும் எல்லா பிற உரிமைகளையும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உறுதி செய்.
 • விவசாயி விரோத 3 சட்டங்களையும் உடனடியாக நீக்கி விவசாயிகளுடைய கோரிக்கைகளை நிறைவேற்று.
 • இந்திய மக்களுக்குச் சொந்தமான இரயில்வே, வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை முதலாளிகளுக்கு வாரிக் கொடுக்கும் திட்டத்தை நிறுத்து.
 • வேலையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, வழக்கு நடைபெற்றுவரும் எல்லா தொழிலாளர்களையும் இறுதி தீர்ப்பு வரும் வரை குற்றமற்றவர்களாக கருதி உடனடியாக தொடர்ந்து வேலையில் அமர்த்து.
 • தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும், அவர்களுடைய உரிமைகளை மீறும் முதலாளிகளை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடு.

தொழிலாளர் தோழர்களே,

நம்முடைய உரிமைகளை வென்றெடுக்கவும், நியாயமான ஊதியம் மற்றும் பிற சலுகைகளைப் பெறவும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு, அணி திரள்வோம்!

முதலாளிகளையும், முதலாளித்துவ கட்சிகளையும், முதலாளித்துவ அமைப்பையும் எதிர்த்து தொழிலாளர்களுடைய ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

நம்முடைய உரிமைகளுக்காக குரலெழுப்ப ஒவ்வொரு தொழிற்சாலையிலும், தொழிற்பேட்டையிலும் சங்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களை அமைப்போம்!

மே நாள் வாழ்க!

தொழிலாளர் ஒற்றுமை வாழ்க!

புரட்சி ஓங்குக!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *