வேளாண் பிரச்சனைகள் குறித்து தஞ்சையில் கருத்தரங்கு

தாளாண்மை உழவர் இயக்கமும் பிற விவசாய அமைப்புகளும் இணைந்து விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தீர்வு குறித்த ஒரு மாநாட்டை தஞ்சாவூரில் ஏப்ரல் 10, 2021 அன்று ஏற்பாடு செய்து நடத்தினர். அத்துடன் தமிழ்நாடு உழவர் இயக்கத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது.

கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் எல்லா விவசாயிகள் மற்றும் அவர்களுடைய அமைப்புக்களின் பரந்த ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், விவசாயிகளின் அனைத்து உரிமைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் வென்றெடுப்பதற்காக, ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.

நிகழ்ச்சிக்கு தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் தோழர் கோ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். அவர் தனது தொடக்க உரையில், இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளக்கினார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சரியான விலையைப் பெறுவார்களேயானால், விவசாயிகள் வங்கிகளிடமிருந்து எந்தவொரு கடனையும் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது, மேலும் விவசாயிகள் தங்களுடைய உபரி பணத்தை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடும் செய்யவும் முடியும் என்றார். இந்திய அரசாங்கம் விவசாயிகளுடைய நலன்களைப் புறக்கணித்துவிட்டு, சர்வதேச முதலாளிகளின் தரகர்களாக செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நாட்டின் விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகளை ஆட்சியாளர்கள் காலால் போட்டு மிதிக்கிறார்கள், நமது நாட்டின் அனைத்து வளங்களும் சொத்துக்களும் விற்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும், இந்தத் தாக்குதல்களை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக தில்லியின் எல்லைகளில், பஞ்சாப், உ.பி., அரியானா மற்றும் பிற மாநில விவசாயிகள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களின் போராட்டங்களுக்கு தலைமையளிக்கவும், ஒன்றுபட்ட பலமான விவசாய அமைப்பு அவசியம் என்றார். எனவே தோழர் திருநாவுக்கரசும் மற்றும் பலரும் சேர்ந்து இந்த தமிழக உழவர் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்க முன்வந்துள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த அமைப்பைக் கட்டியெழுப்ப அனைவரின் ஒத்துழைப்பையும் அவர் நாடினார்.

அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாட்டின் அமைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன், தனது உரையில் அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையில் தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய படிப்பினைகளையும் அதன் தாக்கத்தையும் விளக்கினார். சமமான அடிப்படையில் ஏராளமான அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கி, ஒற்றுமையையும் போராட்டத்தையும் நிலைநிறுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. இந்த இயக்கம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் முன்வந்து, ஒன்றுபட்டு, தங்களின் பொதுவான கோரிக்கைகளுக்காக போராட ஆர்வத்தை உருவாக்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் இந்த ஐக்கியப் போராட்டம் உலகெங்கிலும் உள்ள மக்களின் மரியாதையையும் ஆதரவையும் வென்றுள்ளது. இந்த விவசாய விரோத 3 சட்டங்களையும் ரத்து செய்யுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தோழர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் திருநாவுக்கரசு மட்டுமின்றி, தோழர்கள் ஜே.சிதம்பரநாதன் (சிபிஐஎம்எல் – மக்கள் விடுதலை), காளியப்பன் (மக்கள் அதிகாரம்), பாஸ்கர் (இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி), பழனிவேல் ராஜன் (சமவெளி விவசாயிகள் இயக்கம்), பார்த்தசாரதி (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்), இரா அருணாச்சலம் (சிபிஐ-எம்எல் மக்கள் விடுதலை), அருண் ஷோரி (தமிழ்த் தேச மக்கள் முன்னணி), மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தின் தொடக்கத்தில், தோழர் துரை மதிவாணன் (ஏ.ஐ.டி.யூ.சி) வந்திருந்தவர்களை வரவேற்று கூட்டத்தின் நடவடிக்கைகளை நடத்தினார்.

தோழர் பரிதி மொழி பெயர்த்திருந்த இந்திய அரசின் 3 விவசாய விரோத சட்டங்களைத் தாளாண்மை உழவர் இயக்கம் வெளியிட்டது. இந்த புத்தகத்தை தோழர் ஜே சிதம்பரநாதன் (சிபிஐஎம்எல் – மக்கள் விடுதலை) வெளியிட தோழர் காளியப்பன் (மக்கள் அதிகாரம்) பெற்றுக் கொண்டார். தமிழக உழவர் இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள் பற்றிய ஆவணத்தையும் அமைப்பாளர்கள் வெளியிட்டனர்.

இந்த அரசியல் அமைப்பில் விவசாயிகளுக்கு நிகழும் அநீதிகளை ஜெ.சிதம்பரநாதன் சுட்டிக்காட்டினார். நியாயமான கோரிக்கைகளுக்காக வடக்கில் போராடும் விவசாயிகளின் ஒற்றுமையையும், அந்தப் போராட்டத்தை ஆதரிப்பதில் தமிழ்நாட்டின் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையையும் அவர் பாராட்டினார். விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு தனது அமைப்பின் ஆதரவை அவர் உறுதிப்படுத்தினார்.

பெரிய முதலாளிகளின் நிறுவனங்கள் அதிக இலாபம் பெறுவதற்கு இந்திய அரசு உத்தரவாதம் அளித்து வருவதை தோழர் காளியப்பன் சுட்டிக்காட்டினார். எடுத்துக்காட்டாக, தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதில், அந்த முதலாளிகள் அதிகபட்ச இலாபம் அடைவதற்காக அதிக விலைக்கு உத்தரவாதம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், மின்சாரத் தேவை இல்லாத நேரங்களில் இந்த நிறுவனங்கள் மின்சாரத்தை வழங்காவிட்டாலும், அவர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கும் இந்த அரசு உறுதியளிக்கிறது, இதற்கு நேர்மாறாக, இதே அரசாங்கம் சிறு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் தர மறுத்து, அவர்களை பெரிய நிறுவன சுறாக்கள் கட்டுப்படுத்தும் சந்தை சக்திகளுக்கு விட்டு விடுகிறது என்பதை எடுத்துக்கூறி அரசாங்கம் விவசாயிகளை நசுக்கி, பெரு முதலாளிகளுடைய நலன்களைப் பாதுகாத்து வருவதை சுட்டிக் காட்டினார்.

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் சார்பாக பேசிய தோழர் பாஸ்கர் விவசாய இடுபொருட்களின் விலைகளும், விவசாய விளைபொருட்களின் சந்தை விலைகளும் என இரண்டுமே பெரும் முதலாளிகளால் கட்டுப்படுத்தப்பட்டு தீர்மானிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டினார். இடையே மாட்டிக் கொண்டுள்ள நமது விவசாயிகள் இரண்டு பக்கங்களிலிருந்தும் நசுக்கப்படுகிறார்கள். அனைத்து விவசாய பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், அதன் அடிப்படையில் எல்லா விளை பொருட்களையும் உத்திரவாதமாக கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். அனைத்து விவசாய அமைப்புகளும் கோரி வருவதைப் போல, உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, எல்லா உண்மையான செலவுக் காரணிகளையும், விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுடைய உழைப்பையும், விளைபொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலம் மற்றும் பிற சொத்துக்களின் பங்கீட்டையும் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போதைய குறைந்தபட்ச ஆதார விலைகள் உண்மையில் உற்பத்தியின் நியாயமான மதிப்பில் கால் பங்காக மட்டுமே இருக்கிறதென தோழர் திருநாவுக்கரசு செய்த பகுப்பாய்வை அவர் மேற்கோள் காட்டினார். பேராசை கொண்ட முதலாளிகளை விவசாய வர்த்தகத்திலிருந்து அகற்றிவிட்டால் அவர்களுக்கு இலாபகரமான வணிகம் இல்லாமல் போய்விடும் என்பதால், சரியான மற்றும் நியாயமான குறைந்தபட்ச ஆதார விலைகளை வழங்குவதிலோ அல்லது நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விளைபொருட்களையும் கொள்முதல் செய்வதிலோ அரசாங்கம் அக்கறை காட்டவில்லை, அதற்கு பதிலாக, இந்த 3 விவசாய விரோத சட்டங்களை இயற்றுவதன் மூலம், பெரிய முதலாளிகளின் ஈவுஇரக்கமற்ற தாக்குதல்களுக்கும் விவசாயிகளை சுரண்டுவதற்கும் விவசாயத் துறையை பரந்த அளவில் திறந்து விட்டிருக்கிறது. விவசாயிகளையும் அவர்களது அமைப்புகளையும் மேலும் கட்டி ஒன்றிணைக்கும் முயற்சிகளை அவர் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி சார்பாக இந்த முயற்சிக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன: 3 விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்வது குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட வேண்டும், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசு கொள்முதல் செய்வது ஆகியவை சட்டப்பூர்வ உரிமையாக ஆக்குதல், தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல், விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் டீசலுக்கு 50% மானியம், மின்சாரச் சட்டம் 2020 மற்றும் சுற்றுச்சூழல் வரைவுத் திட்டங்களை ரத்து செய்தல், தில்லி மற்றும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற விவசாயிகள், தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறப்பட வேண்டும், போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் இராவணன் நன்றி கூற, அரசுக்கு எதிராக விவசாயிகளுடைய ஒற்றுமையைக் கட்டியமைத்து அவர்களுடைய உரிமைகளை நிலை நாட்ட வேண்டுமென்ற உறுதியோடு கூட்டம் முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *