விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்படுவதை எதிர்த்து ஏர்போர்ட் அத்தாரிடி ஆப் இந்தியா ஊழியர்கள் மறியல்

2021 மார்ச் 21 அன்று எல்லா விமான நிலையங்களிலும் அனைத்திந்திய அளவில் ஒரு மறியல் ஆர்பாட்டத்தை நடத்துமாறு ஏர்போர்ட்ஸ் அத்தாரிடி ஆப் இந்தியாவின் தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேசன்களுடைய கூட்டமைப்பும், ஏர்போர்ட்ஸ் அத்தாரிடி எம்பிளாயிஸ் யூனியன் ஏஏஇயூ- (AAEU) யும் ஒரு அறைகூவல் விடுத்திருந்தன. இந்த மறியல் ஆர்பாட்டமானது ஏர்போர்ட்ஸ் அத்தாரிடி ஆப் இந்தியா நடத்தி வந்த மேலும் ஆறு விமான நிலையங்களை முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க முன்வந்துள்ள அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக நடத்தப்பட்டது.

தொழிற் சங்கங்களுடைய அறைகூவலை எற்று இந்தியாவெங்குமுள்ள 123 விமான நிலையங்களில் மறியல் நடைபெற்றது.

2021 மார்ச் 31 அன்று சென்னையில் பெரும் எண்ணிக்கையில் ஏர்போர்ட்ஸ் அத்தாரிடி ஆப் இந்தியாவின் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னையில் நிர்வாக அலுவலகம் முன்னர் பெரும் எண்ணிக்கையில் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஊழியர்கள் கூடி, ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தினர். ஏஏஐ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஏஏஇயூ மெட்ரோ வட்டாரச் செயலாளராகிய டாக்டர்.எல்.ஜார்ஜ் எல்லா ஊழியர்களையும் வரவேற்று, தர்ணாவின் நோக்கங்களையும், தனியார்மயத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்ட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கிக் கூறினார். ஏஏஇயூ தென்பகுதியின் தலைவராகிய தோழர் குகன், ஏஏஆ கூட்டமைப்பின் தென்பகுதியின் ஒருங்கிணைப்பாளரும், ஏஏஇயூ தென்பகுதிச் செயலாளருமாகிய தோழர் பாஸ்கரன், ஏஏஇயூ துணைச் செயலாளராகிய தோழர் சுப்பராயன் மற்றும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பாஸ்கர் ஆகியோர் ஆர்பாட்டத்தில் உரையாற்றினர்.

ஏர்போர்ட்ஸ் அத்தாரிடி ஊழியர்களும், விமானத்தில் பயணம் செய்யும் பொது மக்களும் கடுமையாக எதிர்த்த போதிலும் விமான நிலையங்களை தனியார்மயப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதை அனைவரும் சுட்டிக் காட்டினர். மேலும் 6 விமான நிலையங்களை முதலாளிகளுக்கு வழங்கவும், இன்னும் பல விமான நிலையங்களை வழங்கவும் இருக்கும் தன் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. துவக்கத்திலிருந்தே விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்படுவதை ஏர்போர்ட்ஸ் அதாரிடி பணியாளர்கள் எதிர்த்துப் போராடி வந்திருக்கிறார்கள். மிகப் பெரிய அளவில் வருவாயைக் கொடுக்கும் இந்த விமான நிலையங்கள், ஏர்போர்ட்ஸ் அதாரிடி தொழிலாளர்களுடைய இரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டப்பட்டன என்பதைப் பேச்சாளர்கள் சுட்டிக் காட்டினர். அவை மக்களுக்குச் சொந்தமானவை. அவற்றை முதலாளிகளுக்கு வாரி வழங்க அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை. விமான நிலையங்களை தனியார்மயப்படுத்துவது ஏர்போர்ட்ஸ் அதாரிடி பணியாளர்களுடைய வேலைப் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதிக்கும். அரசாங்கங்களுடைய பொய்யான வாக்குறுதிகள் இருந்துங்கூட, மும்பை, தில்லி, ஐதிராபாத் மற்றும் பெங்களூரு என்பன போன்ற ஏற்கெனவே தனியார்மயப்படுத்தப்பட்ட விமானநிலையங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுடைய மோசமான அனுபவங்களை பேச்சாளர்கள் எடுத்துக் கூறினர். விமானநிலைய சேவைகளை ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்து அவற்றை பல்வேறு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் கொடுத்து வருகின்றனர்.

விமான நிலையங்களை தனியார்மயப்படுத்துவதன் காரணமாக விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மீது பயன்பாட்டு கட்டணங்கள், வளர்ச்சிக் கட்டணங்கள் என்ற பெயரில் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை பேச்சாளர்கள் சுட்டிக் காட்டினர். பயணிகளைச் சுரண்டி, விமான நிலையங்களை நடத்துகின்ற முதலாளிகளுக்கு அதிக இலாபத்தை உறுதி செய்வதற்காக இந்தக் கட்டணங்களும் விமானப் பயணக் கட்டணத்தோடு சேர்க்கப்படுகின்றன. இந்திய மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் தற்போதைய ஆட்சியாளர்களால் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டு, முதலாளிகளுக்கு வாரி வழங்கப்படுகின்றன என்று அவர்கள் கூறினர்.

சென்னை விமான நிலையத்தை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் எல்லா முயற்சிகளையும் எதிர்த்து கடந்த காலத்தில் சென்னை விமான நிலையத் தொழிலாளர்கள் மாபெரும் மறியல் போராட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் நடத்தி வந்திருப்பதை தொழிற் சங்கத் தலைவர்கள் சுட்டிக் காட்டினர். அதன் காரணமாகவே இந்த விமான நிலையத்தை பேராசை பிடித்த முதலாளிகளுடைய கைகளிலிருந்து இதுவரை நம்மால் தக்க வைக்க முடிந்திருக்கிறது என்பதை தொழிற் சங்கத் தலைவர்கள் எடுத்துக் கூறினர். “விமான நிலையங்களையும் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்த அனுமதிக்க மாட்டோம்!”, “அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும் சட்டங்களையும் முறியடிப்போம்!”, “தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!” என்பன போன்ற போர்க்குணமிக்க முழக்கங்களை ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பணியாளர்கள் எழுப்பினர்.

தனியார்மயத்திற்கு எதிரான ஏர்போர்ட்ஸ் அதாரிடி தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கு தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் பிரதிநிதி தோழர் பாஸ்கர் தங்களுடைய முழு ஆதரவை தெரிவித்தார். விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்துப் போராடுவதென்ற உறுதியோடு ஆர்பாட்டம் முடிவுக்கு வந்தது. வருகின்ற ஒவ்வொரு புதன் கிழமை நண்பகல் இடைவேளையின் போது விமான நிலைய வளாகங்களில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை நடத்துவதென பணியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *