நான்கு மாநிலங்கள், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் :

மக்களைப் பெருமளவில் ஏமாற்றுவதற்கும், திசை திருப்புவதற்கும் தேர்தல்கள் ஒரு ஆயுதம்

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை. ஏப்ரல் 6, 2021

தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு மார்ச்சில் தொடங்கிய தேர்தல்கள் மே 2 ம் முடிவடையும்.

இந்தத் தேர்தல்கள், நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் எல்லா பக்க நெருக்கடியில் சிக்கியிருக்கும் நேரத்தில் நடைபெறுகின்றன. கொரோனா தொற்று நோய் தொடங்குவதற்கு முன்பிருந்தே, விவசாய வருமானங்கள், தொழில்துறை வேலைவாய்ப்பு மற்றும் சேவை ஏற்றுமதிகள் அனைத்தும் குறைந்து வருகின்றன. முடக்கக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பெண்கள் மற்றும் இளைஞர்களின் தீவிர பங்களிப்புடன், தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களுடைய மக்கள் திரள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகப்பெரிய வளர்ச்சியை அண்மைக் காலங்களில் கண்டிருக்கிறது.

மக்களைச் சுரண்டுகின்றவர்களுக்கும் சுரண்டப்பட்டவர்களுக்கும் இடையில் மட்டுமல்லாமல், சுரண்டும் சிறுபான்மையினருக்குள்ளும் முரண்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. எப்படி ஆட்சி நடத்துவதென்பதிலும், உலகமயம், தாராளமயம் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதிலும் அவர்களுக்கிடையே மோதல்கள் உள்ளன. இப்படிப்பட்ட கடுமையான முரண்பாடுகள் இருக்கும் ஒரு நேரத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் வந்துள்ளன.

தற்போதுள்ள அமைப்பில் தேர்தல்கள், எல்லா பக்கங்களிலிருந்தும் பொய்யான பரப்புரைகளை மக்கள் மீது அள்ளி வீசுவதற்கு, முதலாளி வர்க்கத்திற்கு ஒரு மேடையை வழங்குகின்றன. வாக்களிப்பதன் மூலம் மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற பெரிய பொய்யை உயிரோட்டத்தோடு வைத்திருக்க தேர்தல்கள் உதவுகின்றன. உண்மை என்னவென்றால், மக்களைத் திறம்பட முட்டாளாக்குகின்ற அதே நேரத்தில், தங்களுடைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தங்களுடைய கட்சிகளில் எது மிகவும் பொருத்தமானது என்பதைத் தீர்மானிப்பதற்கு தேர்தல்களை ஏகபோக முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள்.

டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற ஏகபோக குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கம் தேர்தல் பரப்புரைகளின் நிகழ்ச்சி நிரலை அமைக்கின்றனர். ஏகபோகக் குடும்பங்களால் நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் தொலைக்காட்சி ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தேர்தல் நடைபெற இருக்கும் ஒவ்வொரு மாநிலங்களிலும், பெரும் நிறுவன ஊடகங்கள் இந்தத் தேர்தலை முக்கியமாக சுயநலமான கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் இரண்டு போட்டி கும்பல்களுக்கு இடையிலான மோதலாகச் சித்தரித்தன. சில இடங்களில் மூன்று கூட்டணிகளும் இருக்கலாம். மற்ற அனைத்து வேட்பாளர்களும் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தேர்தல்கள் திமுக – அதிமுக விற்கு இடையிலான போட்டியாக முன்வைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இது மோடிக்கும் மம்தாவுக்கும் இடையிலானதாகவும், அசாமில் இது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக பாஜக தலைமையிலான கூட்டணியாகவும், கேரளாவில் இது காங்கிரஸ் கட்சி மற்றும் சிபிஐ (எம்) தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையிலானதாகவும், மூன்றாவது சக்தியாக பாஜக-வும் காட்டப்படுகிறது.

இந்த ஒவ்வொரு போட்டியிலும் போட்டியிடுபவர்களுக்கிடையே மிகவும் குறைவான இடைவெளி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஆளும் வர்க்க பரப்புரை உருவாக்குகிறது. வெல்லப் போகின்றவர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு மக்கள் மீது அழுத்தம் கொண்டு வரப்படுகிறது. நெருக்கமான இந்தப் போட்டியாளர்களில் இறுதியாக யார் வெற்றி பெறுவார்கள் என்பதை வாக்குகளை உற்பத்தி செய்யவும், முடிவுகளை சரி கட்டவும் தங்களுக்கு இருக்கும் பல்வேறு வழிகளைக் கொண்டு ஆளும் வர்க்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

அண்மை ஆண்டுகளில், பாராளுமன்ற சனநாயகத்தின் இந்த அமைப்பு முன்பை விட அதன் கோரமான அம்சங்களை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. நவீன தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதோடு, பல கோடிக்கணக்கான வாட்ஸ்அப் மற்றும் மக்களின் மின்னஞ்சல் கணக்குகள் போன்ற முக்கிய விவரங்கள் மீது ஏகபோக முதலாளிகளுடைய மேலாதிக்க கட்டுப்பாடும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்க முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ஆயுதக் களஞ்சியத்தில் பெருமளவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்களிடமிருந்து பரப்புரைக்காக, தேர்தல் பத்திரங்கள் மற்றும் பிற வழிகள் மூலம் பெறப்பட்ட மிகப்பெரிய அளவு நிதியைப் பெற்றிருக்கும் பாஜக, இந்த நேரத்தில் தனது போட்டியாளர்களை விட பெரிய அளவில் சாதகமான நிலையில் இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பதனாலும், மாநில அரசாங்கங்களின் வருவாயைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும் பாஜக-விற்கு மேலும் சாதகமான சூழ்நிலை இருக்கிறது. பாஜக முன்வைத்த “இரட்டை இஞ்சின் அரசாங்கம்” என்ற முழக்கம், பாஜக மாநில அரசை அமைத்தால் மாநிலத்திற்கு அதிக அளவு மத்திய நிதி வழங்கப்படும் என்ற உறுதிமொழியின் மூலம் கொடுக்கப்படும் இலஞ்சமே தவிர வேறில்லை.

மும்முரமான சண்டை என்று அழைக்கப்படும் இந்தப் தேர்தல் போட்டியின் இரு தரப்பினரும் மக்களின் கவனத்தை உண்மையிலிருந்து திசை திருப்புகிறார்கள். மேற்கு வங்கத்தில், திருணாமுல் காங்கிரசை இந்துக்களுக்கு விரோதமானதாக பாஜக குற்றம் சாட்டுகிறது, அதே நேரத்தில் திருணாமுல் காங்கிரசு, பாஜகவை வங்காளி மக்களுக்கு எதிரானதாக கூறுகிறது. பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பும், அதிகாரபூர்வமான கொள்கைத் திட்டமும் முதலாளிகளுக்கு ஆதரவானதாகவும், மக்களுக்கு விரோதமானதாகவும் இருக்கிறது என்ற உண்மையிலிருந்து மக்கள் கவனத்தை இரு தரப்பினரும் திசை திருப்ப முயல்கின்றனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் இந்து அல்லது முஸ்லிம்களாகவோ, வங்காளி அல்லது பிகாரி மக்களாகவோ அல்லது வேறு எந்த பிரிவினராகவோ இருந்தாலும் தீவிரமாகச் சுரண்டப்படுகிறார்கள்.

தேர்தல் பரப்புரையின் போது, போட்டியிடும் ​​அனைத்து முக்கியக் கூட்டணிகளும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோமென உறுதியளிக்கின்றன. அதிகாரப் பொறுப்பில் வந்தவுடன், அவர்கள் டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள், அதானிகள் மற்றும் பிற முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களுடைய கோரிக்கைகளை கறாராக நிறைவேற்றுகிறார்கள்.

நம்மைப் போன்ற ஒரு வர்க்கப் பிளவுபட்ட சமூகத்தில், வெவ்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் தத்தம் வர்க்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் கட்சிகளை உருவாக்குகிறார்கள்.

நவீன கால முதலாளி வர்க்கம், போட்டி போடும் தனிநபர் மற்றும் குறுங்குழு நலன்களாக பிளவுபட்டுள்ளது. பல போட்டி கட்சிகள் இருந்து வருவது முதலாளி வர்க்க நலனுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதில் பயிற்சி பெற்ற கட்சிகள், அரசு இயந்திரத்தை யார் கட்டுப்படுத்துவதென போட்டியிடும் ஒரு அரசியல் அமைப்பு முதலாளித்துவ ஆட்சியை நீடிக்க உதவுகிறது. இது முதலாளி வர்க்கத்தின் போட்டியிடும் பிரிவுகளுக்கு பின்னால் மக்களை அணி திரட்ட உதவுகிறது.

தங்கள் உழைப்பு சக்தியைத் தவிர விற்க எதுவும் இல்லாத தொழிலாளிகளாகிய பாட்டாளி வர்க்கம், புறநிலை அடிப்படையில் சோசலிசத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறது. மனித உழைப்பின் அனைத்து வகையான சுரண்டல்களையும் அகற்றுவதற்கான அதன் நோக்கத்தை அடைவதற்கு, பாட்டாளி வர்க்கம் தன்னை ஒரு ஐக்கிய அரசியல் சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். வர்க்கத்தின் முன்னணி பிரிவினரை கொடிப்படைக் கம்யூனிஸ்டு கட்சியாக அணிதிரட்ட வேண்டும். பரந்துபட்ட பிரிவினர், ஒரு ஐக்கிய முன்னணியில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும், அது அனைத்து உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒருங்கிணைந்ததாக இணைக்கப்பட வேண்டும்.

நிலமுள்ள விவசாயிகளும் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்களும் கூட தங்கள் அரசியல் கட்சிகளை உருவாக்குகிறார்கள். இருப்பினும், முதலாளித்துவத்தை நீடிக்காமலோ அல்லது சோசலிச பக்கம் செல்லாமலோ நிறைவேற்றக் கூடியதாக இடைத் தட்டுப் பிரிவினருக்கென தனித்துவமான நலன்கள் இல்லை. சமுதாயத்தின் தற்போதைய கட்டத்தில் சாத்தியமான இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன – ஒன்று முதலாளி வர்க்கத்தின் முதலாளித்துவ-ஏகாதிபத்திய பாதையாகும். மற்றொன்று பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச பாதையாகும். இடைத்தட்டு பிரிவினரிடமிருந்து எழும் கட்சிகள் முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையில் ஊசலாடுகின்றன. இறுதியில் அவை ஒன்றுடனோ அல்லது மற்றொன்றுடனோ இணைகின்றன.

தற்போதைய அமைப்பில், அரசாங்கத்தை யார் அமைக்கிறார்கள், எந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள் மற்றும் எந்த சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை தீர்மானிப்பதில் பெரும்பான்மையான மக்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. முடிவெடுக்கும் அதிகாரம் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட கட்சியின் கைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பொறுப்பை வைத்துள்ள கட்சி, அதிகாரத்திலுள்ள முதலாளி வர்க்கத்திற்கான மேலாண்மைக் குழுவாக செயல்படுகிறது.

தற்போதைய அமைப்பில் தேர்தல்களுக்கும் மக்களின் விருப்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற உண்மையை நாட்டு நடப்பும், நிகழ்வுகளும் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளன. ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கத்தின் விருப்பம் தான் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் திணிக்கப்படுகிறது.

பாஜக அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சியின் வெற்றி, மக்கள் விருப்பத்தைப் பிரதிபலிப்பதில்லை. தேர்தல்களின் முடிவைத் தீர்மானிப்பது மக்கள் அல்ல. ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கமே அதைத் தீர்மானிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்) சூழ்ச்சியாகக் கையாளுதல், அவற்றைத் திருடுவது உட்பட, மக்களை ஏமாற்றுவது, திசைதிருப்புவது, குறுங்குழுவாதப் பிளவுகள் மற்றும் மோசடி போன்ற பல்வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்தி ஏகபோக முதலாளிகள் முடிவைத் தீர்மானிக்கின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முடிவெடுப்பவர்களாக மாறுவதற்கு, முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு நவீன சனநாயக முறையைக் கொண்டு, தற்போதைய காலாவதியான, அன்னிய மற்றும் முற்றிலும் மதிப்பிழந்த பாராளுமன்ற சனநாயக அமைப்பை மாற்றுவதற்காகப் போராட வேண்டியது அவசியமாகும்.

மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்களும் விவசாயிகளும், தங்களுடைய நம்பகமான பிரதிநிதிகளை மிக உயர்ந்த முடிவுகளை எடுக்கும் அமைப்புகளுக்கு நிறுத்தவும், தேர்ந்தெடுக்கவும் இயல வேண்டும். சமுதாயத்திற்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதில் அவர்கள் பங்கேற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தங்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக வைத்திருக்கவும், எந்த நேரத்திலும் அவர்களைத் திருப்பியழைக்கவும் அவர்களால் முடிய வேண்டும். வாக்கெடுப்புகள் மூலம் சட்டங்களை இயற்றவும் மாற்றுவதற்கும், சட்டங்களை அல்லது கொள்கை முடிவுகளை அங்கீகரிக்கவும் அல்லது நிராகரிக்கவும் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும்.

முடிவெடுக்கும் அதிகாரத்தை நம் கைகளில் கொண்டு தொழிலாளிகள் – விவசாயிகள் நாம், முதலாளித்துவ இலாபங்களை அதிகரிக்க உதவுவதற்குப் பதிலாக, அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் செழிப்பையும் உறுதி செய்வதற்காக பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் திருத்தியமைக்கவும் முடியும்.

தற்போதைய நிலைமையானது, இந்திய சமூகத்தை நெருக்கடியிலிருந்து வெளியே கொண்டு வர, ஆர்வமுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தனிநபர்களும் முதலாளி வர்க்கத்தின் அனைத்து போட்டி போடும் முன்னணிகளையும் நிராகரிக்க வேண்டும் என்று கோருகிறது. நமது அனைத்து சக்திகளையும் நாம் புரட்சிகர தொழிலாளர்-விவசாயி முன்னணியை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் மையப்படுத்த வேண்டும்.

நமது உழைப்பால் இந்தியாவின் செல்வத்தை உருவாக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நாம், நாட்டின் ஆட்சியாளராக வேண்டும். இந்தியாவின் தலைவிதியை நாம் கூட்டாக முடிவெடுப்பவர்களாகவும் தீர்மானிப்பவர்களாகவும் மாற வேண்டும். அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் ஒரு பொருளாதார அமைப்பையும் அரசையும் நாம் உருவாக்க வேண்டும். இந்த நோக்கத்தோடும் கண்ணோட்டத்தோடும் நமது உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஏகபோக முதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் போக்கில், இந்திய சமுதாயம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் தர அடிப்படையிலான மாற்றத்தை – அரசு அதிகார மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய புரட்சிகர ஐக்கிய முன்னணியை நாம் கட்டமைத்து பலப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *