பெரும் முதலாளி வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

தொழிலாளி – விவசாயி ஆட்சி அதிகாரத்திற்கு வழி வகுப்போம்!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் அறிக்கை

தமிழக மக்களே,

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களுடைய வாழ்க்கை மேலும் படு மோசமடைந்திருக்கிறது. மத்திய, மாநில அரசாங்கங்களின் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான மக்களுடைய வாழ்வாதாரம் மிகவும் சீரழிக்கப்பட்டிருக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா பொது முடக்கம் போன்ற நடவடிக்கைகள் தமிழக மக்களைக் கடுமையாக பாதித்திருக்கின்றன. தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பறித்தும், சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 14 பேர்களை படுகொலை செய்தும், விவசாயிகளுடைய எதிர்ப்பை நசுக்கிவிட்டு முதலாளிகளுக்கு பெரும் இலாபத்தை கொடுப்பதற்காக சேலம்-சென்னை 8 வழிச் சாலை, மீதேன் திட்டங்களை மேற்கொண்டும், பொள்ளாச்சி போல பல இடங்களில் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும், உயர்மட்ட பெண் காவல் அதிகாரிகளுக்கே அப்பட்டமான பாலியல் கொடுமைகளையும் அச்சுறுத்தல்களையும், சாதி ஆணவப் படுகொலைகளையும், சாத்தான் குளத்தில் நடத்தப்பட்டது போன்ற அரசு பயங்கரவாதப் படுகொலைகளையும் வெட்கமின்றி நடத்தி பாஜக – அதிமுக கூட்டணி தமிழக மக்களை காலில் போட்டு நசுக்கி வருகிறது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளும், தொழிற் சட்டங்களை ரத்து செய்துவிட்டு தொழிலாளர்களுடைய நியாயமான உரிமைகளைக் கூட பறிக்கின்ற வகையில், முதலாளிகள் விரும்புகின்றவாறு 4 தொகுப்புச் சட்டங்கள் மூலமும், தொழிலாளர்களுடைய உரிமைகள் மீது மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டங்கள் மூலம் தொழிலாளர் நல வாரியங்கள் முழுவதுமாக முடக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களை முதலாளிகள் கடுமையாக சுரண்டுவதற்காக நீம் (NEEM), எப்டிஇ (FTE) போன்ற அநீதியான திட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலை என்பதையே ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள். பெரும் முதலாளிகளுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரியும், பண மதிப்பு நீக்கமும் இலட்சக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களை நலிவடையச் செய்து மூடிவிட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்களை நடு வீதியில் நிறுத்தியிருக்கின்றன.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான உத்திரவாதமான குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத காரணத்தாலும், முதலாளிகளுடைய மேலாதிக்கத்தாலும், கடன் சுமையில் சிக்கியும் விவசாயிகள் பேரழிவைச் சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தைக் கடுமையாக பாதித்த புயல் வெள்ள பேரிடர்களிலும் கூட தமிழக அரசு விவசாயிகளுக்குப் போதுமான நிவாரணம் அளித்து விவசாயத்தை மீட்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பெரும் முதலாளிகள் வேளாண் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய விரோதச் சட்டங்கள், ஏற்கெனவே கடுமையான கடன் பிரச்சனைகளில் சிக்கியிருக்கும் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை மேலும் படுமோசமாக பாதிக்கும். நியாயவிலைக் கடைகள் மூடப்படும் சூழலையும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலையையும் ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அதிமுக அரசாங்கம் விவசாயத்தை சீரழித்து வருகிறது. விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து பல மாதங்களாக தில்லியின் எல்லைகளிலும், நாடெங்கிலும் போராடி வரும் விவசாயிகளுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக அவர்கள் மீது பல்வேறு தாக்குதல்களை மோடி அரசாங்கமும், எடப்பாடி அரசாங்கமும் நடத்தி வருகின்றன. நாட்டின் கனிம வளங்களை முதலாளிகள் சுரண்டிக் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக, சுற்றுப்புற சூழல் குறித்த சட்டங்களும், நிலம் கையகப்படுத்தும் சட்டங்களும் திருத்தப்படுகின்றன.

சீரிலங்கா அரசாங்கம் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க மறுத்து வருவதும், அதற்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவதும் மீனவர்களுடைய உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குவதாக இருக்கிறது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சொற்ப உதவித் தொகையைக் கூட மத்திய அரசு நிறுத்தியிருப்பதோடு, கல்வியை இலாப நோக்கத்திற்காக நடத்தப்படும் தனிப்பட்ட நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து வருகிறது. நீட் போன்ற தேர்வு முறைகளும், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை மத்திய அரசு கைப்பற்றுவதன் மூலமும், தமிழக மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ சேவைகளை ஒழித்துக் கட்டிவிட்டு, பெரும் முதலாளிகளுடைய மருத்துவமனைகளை அரசாங்கம் ஆதரித்து வருவதால் பெரும்பாலான மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகள் மறுக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைப் பன்மடங்கு உயர்த்தி பொது மக்களை அரசாங்கம் பகல் கொள்ளையடித்து வருகிறது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசும் தமிழக அரசும் கொண்டு வந்த காட்டுமிராண்டித்தனமான பொது முடக்க நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளிகளுடைய உயிர்களைப் பறித்திருப்பதோடு, அனைத்து மக்களுடைய வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்திருக்கின்றன. கொரோனா நோய்க்கு நிவாரணம் அளிப்பதற்காக பொது மக்களிடமிருந்து அரசாங்கத்தின் பெயரில் பிரதமர் மோடி திரட்டிய பிஎம் கேர்ஸ் (PM CARES) என்ற பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி பற்றிய விவரங்கள் மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் கூட வெளியிடாமல் மூடி மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அந்த நிதியை மக்கள் விரோத சக்திகள் சுருட்டி ஏப்பம் விட்டு வருகின்றவோ என்ற கேள்வி மக்கள் மனதில் பரவலாக இருக்கிறது.

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம் ரபாலே போர் விமானங்களை வாங்குவதில் ஊழல் மூலம் இந்திய மக்களின் வரிப்பணத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர். வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவதாகக் கூறும் அரசாங்கம், கட்சிகளுக்கு நிதியளிக்கும் “தேர்தல் பத்திரங்கள்” திட்டத்தின் மூலம், பெரும் முதலாளிகள் தங்களுக்காக வேலை செய்யும் பாஜக போன்ற கட்சிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பொது மக்களுக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக கொடுத்து வருவதை சட்ட ரீதியாக ஆக்கியுள்ளனர்.

இவை மட்டுமின்றி, அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் பதிவேடு (என்ஆர்சி) போன்ற வகுப்புவாத நடவடிக்கைகளும், பிளவுவாத மத வெறி நடவடிக்கைகளும் மக்களைத் திரண்டெழுந்து போராடச் செய்திருக்கின்றன.

பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக பாஜக-வின் கால்களை பிடித்துக் கொண்டு ஆட்சி நடத்தும் அதிமுக-வின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, ஊழல் நிறைந்த கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழக அரசினுடைய கடன்சுமை மேலும் அதிகரித்து தற்போது 9 இலட்சம் கோடி ரூபாயாக ஆகியிருக்கிறது. மிகப்பெரும்பாலான வரி வருவாயையும், கல்வி, மருத்துவம், தொழிலாளர் சட்டங்கள், விவசாயம் மற்றும் பிற துறைகளையும் மத்திய அரசு மையப்படுத்தி மாநில அரசுகளுடைய உரிமைகளைப் பறித்து பெரும் முதலாளிகளுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கியிருக்கிறது. இதை எதிர்த்து குரலெழுப்பக் கூட துணிவற்ற அடிமை அரசாக அதிமுக அரசாங்கம் இருந்து வந்திருக்கிறது.

ஒரு பக்கம் மக்கள் மீது வரிச் சுமைகளையும், விலைவாசியையும் உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கும் அதே நேரத்தில் பெரும் முதலாளிகளுக்கு பல்வேறு வரிச் சலுகைகளையும், மானியங்களையும் மத்திய, மாநில அரசாங்கங்கள் வாரி வழங்கி வருகிறார்கள். பெரும் தொழில் நிறுவனங்கள், தன் பங்குதாரர்களுக்கு வழங்கும் ஈவுத் தொகை மீது நிறுவனங்கள் கட்டும் 20.56 % வரியை மோடி அரசாங்கம் முழுவதுமாக நீக்கியிருக்கிறது. மேலும் நிறுவன வரியை 30 %-த்திலிருந்து 22 % மாகவும், புதிய நிறுவனங்களுக்கு 25 %-த்திலிருந்து 15 %-மாகவும் குறைத்து 1.5 இலட்சம் கோடி ரூபாய் ஆதாயம் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி உற்பத்தி தொடர்பான ஊக்கத் தொகை (PLI) என்ற பெயரில் ரூ 1.45 இலட்சம் கோடி ரூபாயை பெரும் முதலாளிகளுக்கு திருவாளர் மோடி மக்களுடைய வரிப் பணத்திலிருந்து வழங்குகிறார். கடந்த 7 ஆண்டுகளில் மல்லையா, நீரவ் மோடி போன்ற மிகப் பெரிய முதலாளிகள் திருப்பிக் கட்ட மறுக்கும் ரூ 8 இலட்சம் கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்து, அந்தச் சுமையை மக்கள் மீது பாஜக திணித்திருக்கிறது.

இந்திய மக்களுக்குச் சொந்தமான இரயில்வே, வங்கிகள், பிஎஸ்என்எல், பிபிசில், எல்ஐசி, ஏர் இந்தியா, விமான நிலையங்கள் என அதிக இலாபமீட்டும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை, மோடி அரசாங்கம் பெரும் முதலாளிகளுக்கு வாரி வழங்கி வருகிறது. இப்படி மக்களுக்குச் சொந்தமான பல இலட்சம் கோடி பொறுமானமுள்ள சொத்துக்களெல்லாம் கொள்ளை போகின்றன. இரயில்வே, தொலை தொடர்பு, வங்கி போன்ற அடிப்படை சேவைகளைக் கூட இயக்கத் திறனற்ற ஒரு கேடு கெட்ட அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறதென மக்கள் கேட்கிறார்கள்.

இன்னொரு பக்கம் மக்களுடைய உரிமைகளுக்காக குரலெழுப்புபவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான வன்முறையும் ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (ஊபா) போன்ற கருப்புச் சட்டங்களின் கீழ் எவ்வித குற்றச்சாட்டும், விசாரணையும் இன்றி வருடக்கணக்கில் சிறைகளில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். மக்களுடைய கருத்துரிமையும், அரசியல் உரிமைகளும், பேச்சுரிமையும் பெரும் முதலாளிகளுக்காக ஆட்சி செய்யும் பாஜக-அதிமுக அரசாங்கத்தால் நசுக்கப்பட்டு வருகிறது.

முதலாளிகளுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக மத்திய மாநில அரசாங்கங்கள் மக்களை வதைத்துக் கொள்ளையடித்து வருகிறார்கள். கொரோனாவைக் காட்டி மக்களைக் கூடவிடாமல் முடக்கி போட்டுவிட்டு, மத்திய மாநில அரசாங்கங்கள், பொது மக்களுடைய சொத்துக்களை ஏகபோக முதலாளிகளுக்கு வாரி வழங்கியும், மக்களுடைய உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கியும், சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கு வசதியாக சட்டங்களை இயற்றியும் வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஐயோக்கியத்தனமான பாஜக – அதிமுக கட்சிகளை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய வேண்டியதும், மக்களைக் கொன்று அரக்கத்தனமாக தாக்குதல்கள் நடத்தியவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டியதும் நம்முடைய கடமையாகும்.

அதே நேரத்தில் பகற் கொள்ளையடிக்கும் தற்போதைய ஆளும் கூட்டணியாகிய பாஜக – அதிமுக-விற்கு மாற்றாக திமுக – காங்கிரசு கூட்டணியை நாம் கருத முடியுமா? கடந்த காலத்தில் இதே கட்சிகள் பெரும் முதலாளிகளுடைய நலன்களுக்காக ஆட்சி நடத்தி மக்கள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுக்கவில்லையா? அப்படியிருக்கையில் மக்கள் நாம் இன்று சந்தித்து வரும் எந்தப் பிரச்சனைக்கும் திமுக – காங்கிரசு கூட்டணி முடிவு கட்டுமென நாம் எதிர்பார்க்க முடியுமா?

இன்றைய அரசியல் வழிமுறையில் தேர்தலில் யார் போட்டியிடலாம் என வேட்பாளர்களைத் தீர்மானிப்பதற்கும், சரிவர செயல்படாத தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திருப்பியழைப்பதற்கும், சட்டங்களைத் தீர்மானிப்பதற்கும், ஆளுமை குறித்த எல்லா முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் மக்களுக்கு எவ்வித உரிமையோ பங்கோ இல்லை. தேர்தல் வழி முறைகள், பெரும் முதலாளிகளுடைய ஆதரவு பெற்ற பணபலமும், குண்டர் பலமும் கொண்ட, வாக்குப் பதிவு மின்னணுக் கருவிகளை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கட்சிகள் மட்டுமே வெற்றி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முதலாளி வர்க்கக் கட்சிகளான பாஜக, காங்கிரசு, அதிமுக, திமுக போன்ற கட்சிகளை, சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்றை மாற்றி வேறொன்றை முதலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் இந்தக் கட்சிகள் முதலாளி வர்க்கம் தீர்மானிக்கும் திட்டங்களை முந்தைய ஆட்சியாளர்கள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து தொடர்ந்து தீவிரப்படுத்துகிறார்கள், மக்களை மேலும் சுரண்டி, முதலாளி வர்க்கம் கொழுக்க வழிவகை செய்கிறார்கள் என்பது தான் கடந்த 70 ஆண்டு கால நமது அனுபவமாகும். ஆட்சி நடத்தும் கட்சிகள் மாறினாலும், ஆளும் வர்க்கமாக அதே பெரும் முதலாளி வர்க்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலைக்குத் தீர்வு காண வேண்டுமானால் ஆளும் வர்க்கமான பெரும் முதலாளி வர்க்கத்தை தூக்கியெறிந்துவிட்டு, தொழிலாளிகள் – விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்கள் நாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதிகாரத்தை நம் கைகளில் எடுத்துக் கொண்டு பொருளாதார, அரசியல் வழி முறைகளை மாற்றியமைத்து நம் மீது நடத்தப்படும் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும், வன்முறைகளுக்கும் முடிவு கட்ட முடியும்.

தொழிலாளிகள் – விவசாயிகளுடைய ஆட்சி அதிகாரம் மட்டுமே இன்று நாம் சந்தித்து வரும் பாசிச சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும், உழைக்கும் மக்களுக்கு புதிய ஒளிமயமான ஒரு எதிர்காலத்தைப் படைக்க முடியும்!

தமிழகத்தில் தேர்தல்கள் நடைபெறும் இந்தச் சூழ்நிலையில் மக்கள் விரோத பாசிச பாஜக – அதிமுக கூட்டணியை அதிகாரத்திற்கு வரவிடாமல் தோற்கடிப்போம். அதே நேரத்தில் முதலாளி வர்க்கத்தின் மற்ற கூட்டணிகளையும் புறக்கணிப்போம். தொழிலாளிகள் – விவசாயிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழிவகைகளை சிந்தித்து நாம் செயல்படுத்துவோம்!

தொழிலாளி – விவசாயி ஒற்றுமை ஒங்குக!

இன்குலாப் ஜிந்தாபாத்!

2 comments

 1. தேர்தல் புறக்கணிப்பா? பங்கேற்பா?

  1. தேர்தல் பங்கேற்பு குறித்து கேள்வி எழுப்பியிருப்பதற்கு நன்றி.

   இந்த அரசியல் அமைப்பு குறித்தும், தங்களுடைய நிலை குறித்தும், பிரச்சனைகளுக்குத் தீர்வு குறித்தும் தேர்தல்கள் மக்களிடம் சிந்தனைகளையும், விவதாதங்களையும் எழுப்புகிறது. அதை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தி இந்த முதலாளித்துவ அமைப்பு குறித்த கருத்துக்களையும், இந்த சுரண்டல் அமைப்பை மாற்றி சுரண்டலற்ற சனநாயக அமைப்பை நிறுவுவதற்கு தொழிலாளிகள் – விவசாயிகள் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தையும் விவாதத்தையும் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.இதை தேர்தல் நேரத்தில் வாய்ப்பு வசதிகளைப் பொறுத்து, மக்கள் வேட்பாளர்கள் முன்வைப்பதன் மூலமோ அல்லது, வேட்பாளர்கள் இல்லாமலேயே பரப்புரை மூலமாகவோ செய்யலாம். போட்டியிட்டாலும், வேட்பாளரின்றி பரப்புரை செய்தாலும் நமது மைய நோக்கமானது இந்த அமைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு தொழிலாளிகள் – விவசாயிகளுடைய ஆட்சி அதிகாரத்தை அமைக்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

   மேலும் இது குறித்து விளக்கத்தை அண்மையில் வெளியிட்ட கட்சியின் அறிக்கையில் பார்க்கவும் – “நான்கு மாநிலங்கள், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் :
   மக்களைப் பெருமளவில் ஏமாற்றுவதற்கும், திசை திருப்புவதற்கும் தேர்தல்கள் ஒரு ஆயுதம்”

   நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *