பாராளுமன்ற சனநாயகமும் அரசு பயங்கரவாதமும்

பரந்துபட்ட அரசு பயங்கரவாதத்திற்கும், விவசாயிகள் போராட்டம் குறித்த பொய்யான கட்டுக்கதைகளுக்கும் இடையில் அரசின் வரவு-செலவு கூட்டத் தொடர் துவங்கியிருக்கிறது. பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன. ஏகபோக முதலாளிகளைக் கொழுக்கச் செய்யும் திட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி முகாம்கள் என இருவருமே உறுதியாக இருக்கிறார்கள்.

சனவரி 26 அன்று நடைபெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து விவசாயப் போராட்டத்திற்கு எதிராக அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதோடு, அந்தப் போராட்டத்தை இழிவுபடுத்துவதற்காக பெரிய அளவில் ஒரு பொய்யான பரப்புரையும் நடத்தப்பட்டு வருகிறது.

எதிர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறும் இடங்களில் முகாமிட்டுள்ளவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவளிக்க வரும் மக்களுக்கும் இடையிலான தொடர்பைத் துண்டிப்பதற்காக தில்லி எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறும் இடங்களுக்கு மின்சாரமும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளிலும், உ.பி. மற்றும் அரியானாவின் பல மாவட்டங்களிலும் வலைப்பின்னல் இணைய இணைப்பு பல நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது.

உலகின் பார்வையில் இந்தியாவை இழிவுபடுத்துவதற்காக, குடியரசு தினத்தன்று வெளிநாட்டு சக்திகளின் ஆதரவோடு தேச விரோத சக்திகள் கலவரத்தையும், வன்முறையையும் திட்டமிட்டு நடத்தியதாக தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொய்யான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோர் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதியைக் கடைபிடிப்போம் என்று உறுதியளித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ரூ. 50,000 முதல் ரூ. 2,00,000-க்கு பிணைப் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் பலருடைய ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சனவரி 26 நிகழ்வுகள் குறித்து அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்ட விவரங்களை அப்படியே தெரிவிக்காததற்காக பத்திரிக்கையாளர்கள் ஏன் கைது செய்யப்படக்கூடாது என்று விளக்கம் கேட்டு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

தில்லியின் எல்லைகளில் ஆர்பாட்டம் நடைபெறும் இடங்களைச் சுற்றி முள்வேலிகள் இடப்பட்டும், ஆழமான அகழிகள் தோண்டப்பட்டும், இரும்பு கம்பிகளும் நடப்பட்டும் இருப்பது, உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்டதாக கூறப்படும் சனநாயகம், தங்களுடைய உரிமைகளைக் கோரும் விவசாயிகளை எப்படி நடத்துகிறது என்பது அதன் ஒரு அப்பட்டமான முகத்தைக் காட்டுகிறது.

அரசு பயங்கரவாதம் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதும், நடத்தப்பட்டுவரும் பொய்யான பரப்புரையும், கடந்த சனவரி 26 அன்று நடந்த கலவரமும், வன்முறையும் பாஜக-வால் நடத்தப்படும் மத்திய அரசாங்கத்தின் ஒரு சதித் திட்டமே என்பதை உறுதிப்படுத்துகின்றன. அரசு நிறுவனங்கள் ஒரு சம்பவத்தை திட்டமிட்டு நடத்திவிட்டு, அந்தக் குற்றத்தை தங்கள் உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீது போடும் வழக்கமான முறைதான் இது. இந்த நடவடிக்கையின் நோக்கமானது, விவசாயிகளுடைய போராட்டத்தை இழிவுபடுத்துவதும், விவசாயிகளுடைய போராட்டம் உட்பட அனைத்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்காக அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதும் ஆகும்.

பரவலாக நிலவும் அரசு பயங்கரவாதத்திற்கும் தவறான பொய்ப் பரப்புரைக்கும் இடையில் பாராளுமன்ற நிதி நிலை அறிக்கைக் கூட்டம் துவங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 அன்று முன்வைக்கப்பட்ட 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு-செலவு அறிக்கை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோபத்திற்கு மேலும் நெய் வார்த்திருக்கிறது. அரசியல் கட்சிகளும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சங்கங்களும், மத்திய அரசு அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக வரவு-செலவு உரையில் கூறப்பட்ட தவறான கருத்தை அம்பலப்படுத்தி நிராகரித்துள்ளன. இன்னொரு துருவத்தில், டாடாக்களும், அம்பானிகளும், பிர்லாக்களும், அதானிகளும் மற்றும் பிற ஏகபோகக் குடும்பங்களும் வரவு செலவு அறிக்கையை போற்றிப் பாராட்டியுள்ளன, பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது.

ஏகபோக முதலாளிகளும் அவர்களுக்கு சேவை செய்வதில் உறுதி பூண்டுள்ள மத்திய அரசாங்கமும் விவசாய சங்கங்களைப் பிளவுபடுத்துவதற்கு ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு மோசமான தந்திரங்களை முயற்சித்தன. ஆனால் விவசாயிகளும் அவர்களது சங்கங்களும் தங்களது உடனடி கோரிக்கைகளையொட்டி ஒற்றுமையாக இருக்கின்றனர். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் உடனடி கோரிக்கைகளாவன –

(i) செப்டம்பர் 2020 இல் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தல்;

(ii) குடும்ப உழைப்பு மற்றும் கணக்கிடப்பட்ட வாடகை உள்ளிட்ட மொத்த உற்பத்தி செலவைக் காட்டிலும் குறைந்தது 50% அதிக அளவில் அனைத்து விவசாய பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கான சட்ட உத்தரவாதம்.

(iii) நீர், மின்சாரம் மற்றும் இணையம் மறுக்கப்படுவதற்கு உடனடி முடிவு

(iv) விவசாயிகளுடைய போராட்டத்தில் பங்கேற்றதற்காக சனவரி 26-லிருந்து கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டிருந்த போதிலும், விவசாயிகளுடைய போராட்டம் மென்மேலும் வலிமை பெற்று வருகிறது. நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் மக்கள், விவசாயிகளுடைய உடனடி கோரிக்கைகளுக்கு முழு மனதுடன் ஆதரவளித்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினரை தில்லி எல்லைக்கு அனுப்புவதென பல கிராமங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

விவசாயிகள் எதிர்க்கட்சிகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் அறிவிக்கிறார். மூன்று வேளாண் சட்டங்களில் என்ன தவறு இருக்கிறது என்பதை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளால் விளக்க முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தச் சட்டங்களில் என்ன தவறென தொடக்கத்திலிருந்தே விவசாய சங்கங்கள் மிகவும் தெளிவாக விளக்கி வந்துள்ளனர். அவை ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் நம் நாட்டின் விவசாய உற்பத்தியிலும் வேளாண் வர்த்தகத்திலும் முழுமையான ஆதிக்கம் செலுத்துவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் அவை வழி வகுக்கும்.

விவசாயத்தில் ஏகபோக முதலாளித்துவ ஆதிக்கம், தங்களுடைய அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இது ஒரு அடிப்படையற்ற அச்சமல்ல, உண்மைகளின் அடிப்படையில் வந்திருக்கும் ஒரு மதிப்பீடாகும். முதலாளித்துவம், அதன் தற்போதைய ஏகபோக கட்டத்தில், விவசாயிகளையும் பிற சிறுவீத உற்பத்தியாளர்களையும் பெருமளவில் சீரழிக்கும் என்பதற்கு நமது நாட்டிலும் உலக அளவிலும் உள்ள மக்களின் அனுபவம் ஏராளமான சான்றுகளை வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஏகபோகங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரே சந்தையை உருவாக்குவதற்காக மன்மோகன் சிங் அரசாங்கம் ஆரம்பித்த விவசாய சந்தை சீர்திருத்தங்களை தனது அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக சுட்டிக் காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடத்தப்படும் விவாதங்கள் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே என்ற உண்மையை அவர் இதன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். உண்மையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி முகாம்கள் முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களைக் கொழுக்கச் செய்யும் திட்டத்தில் உறுதியாக உள்ளன.

தற்போதுள்ள பாராளுமன்ற சனநாயக அமைப்பானது, பெரும்பான்மையான மக்களைச் சுரண்டும் பகாசூர பணக்கார சிறுபான்மையினரின் சர்வாதிகாரமாகும் என்பதை உண்மைகளும் நிகழ்வுகளும் வெளிப்படுத்துகின்றன. இறையாண்மை மக்களின் கைகளில் இல்லை. அது பிரதிநிதித்துவமற்ற பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது, அதற்குள்ளும் முடிவெடுக்கும் அதிகாரமானது, பிரதமர் தலைமையிலான அமைச்சரவையிடம் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவை தீர்மானிப்பதை அங்கீகரிக்க குடியரசுத் தலைவர் கடமைப்பட்டிருக்கிறார்.

பாராளுமன்றம் ஒரு திண்ணைப் பேச்சுக் கூடமாகும். நாட்டை ஆளும் உண்மையான வேலையானது திரைக்குப் பின்னால் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சிறிய குழு, ஏகபோகக் குடும்பங்களோடு கலந்தாலோசித்து, இயற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் குறித்து முடிவு செய்கிறது. அவற்றை அதிகாரத்தில் இருக்கும் கட்சியால், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அந்தந்த நிர்வாக இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக கருதப்பட்டு பாதுகாப்பு படையினரால் எதிர் கொள்ளப்படுகிறார்கள். சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் பாதுகாக்கும் சட்டத்தின் ஆட்சியை, நீதித்துறை உயர்த்திப் பிடிக்கிறது.

முழு அரசு இயந்திரமும், முதலாளி வர்க்கத்தின் நிதியால் நடத்தப்படும் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் செயல்முறையும் ஆங்கிலேய காலனிய பாரம்பரியமான பழைய ஆங்கிலேய முதலாளி வர்க்க கருத்தியலின் அடிப்படையில் அமைந்ததாகும்.

முக்கிய முடிவுகளை எடுக்கும் வழிமுறையில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த இடமும் இல்லை. நாட்டின் சட்டங்களைத் தீர்மானிப்பதில் நமக்கு எந்தப் பங்கும் இல்லை. டாடா-க்கள், அம்பானி-கள், பிர்லா-க்கள், அதானி-கள் மற்றும் பிற ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட சுரண்டும் சிறுபான்மையினரின் நலன்களுக்கு ஏற்ப சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக, இந்த மிகப் பெரிய பணக்கார ஏகபோக முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

நாம் நமது உரிமைகளைக் கோரினால், நாம் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம், கைது செய்யப்பட்டு காலவரையின்றி சிறையில் தள்ளப்படுவோமென அச்சுறுத்தப்படுகிறோம். வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட தனிப்பட்ட இலாபமடிப்பவர்களுக்கு நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதில் மும்முரமாக இருப்பவர்களால் நாம் இந்தியாவின் எதிரிகளாக நடத்தப்படுகிறோம்.

முதலாளித்துவ வர்க்கம், ஒருவருக்கொருவர் எதிராகத் தொடர்ந்து போட்டியிடும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எனவே இயல்பாகவே, முதலாளி வர்க்கம் போட்டியிடும் குழுக்களாக பிளவுபட்டுள்ளது. இதைத் தான் எதிரெதிராக மோதிக் கொள்ளும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

பெரிய பண பலத்தின் ஆதரவோடு அரசு இயந்திரத்தைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக எதிரெதிராக மோதிக் கொள்ளும் கட்சிகளைக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பு, முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. இது தொழிலாளி வர்க்கத்தையும் பிற ஒடுக்கப்பட்ட மக்களையும் பிளவுபடுத்துவதற்கும், திசை திருப்புவதற்கும், அவர்களைச் சுரண்டும் வர்க்கத்தின் போட்டியிடும் பிரிவுகளுக்கு பின்னால் நிறுத்துவதற்கும் பயன்படும் ஒரு வழிமுறையாகும். முதலாளி வர்க்கத்திற்குள் உள்ள முரண்பாடுகளைக் கையாள்வதற்கான ஒரு பொறிமுறையும் இதுவாகும்.

வாக்களிப்பதன் மூலம், ஒட்டுமொத்த மக்களே தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்ற ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஏகபோக முதலாளிகளின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான அரசியல் நிர்வாக குழுவைத் தீர்மானிக்க ஆளும் வர்க்கம் தேர்தல்களைப் பயன்படுத்துகின்ற அதே நேரத்தில், மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன என்று மக்களை ஏமாற்றுகின்றனர் என்பது தான் உண்மையாகும்.

முதலாளி வர்க்கத்தின் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த சித்தாந்தவாதிகள் உள்ளனர், அவர்கள் தத்தம் கட்சியின் சொற்களுக்கும் செயல்களுக்கும் தத்துவார்த்த நியாயங்களை முன்வைக்கிறார்கள். மேலும்  எந்தவொரு கட்சியுடனும் இணைந்திராத, ஆனால் முதலாளி வர்க்கத்திற்கு விசுவாசமான பிற படித்தவர்களும் மற்றும் வல்லுநர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் உள்ளனர், அவர்கள் முதலாளித்துவ சுரண்டலையும் பல அடுக்கு ஒடுக்குமுறையையும் கட்டிக் காக்கும் நோக்கத்தோடு பேசவும், எழுதவும் செய்கிறார்கள்.

150 க்கும் குறைவான ஏகபோகக் குடும்பங்களின் தலைமையிலான ஒரு சில லட்சம் சுரண்டலதிபர்களின் ஆட்சியைத் தக்கவைக்க முழு அரசு இயந்திரமும், அரசியல் வழிமுறையும் பரப்புரை வலையமைப்பும் உதவுகின்றன. 130 கோடிக்கும் அதிகமான நமது நாட்டின் உழைக்கும் மக்கள் மீது அவர்கள் தங்களுடைய விருப்பத்தைத் திணிக்கின்றனர். இதை அவர்கள் வாக்கு சீட்டுகள் மற்றும் தோட்டாக்கள் மூலமாக செய்கிறார்கள்.

மக்களைப் பிளவுபடுத்துவதற்கும் திசை திருப்புவதற்கும், மக்கள் தம் பொதுவான வர்க்க எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதைத் தடுக்கவும் வாக்குகள் உதவுகின்றன. எல்லா பிளவுகளுக்கும் மேலாக உயர்ந்தெழுந்து, சுரண்டலதிபர்களுக்கும் அவர்களின் ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபட்டப் போராட்டங்களை நடத்துபவர்களை நசுக்க தோட்டாக்கள் உதவுகின்றன.

தொழிலாளர்களும் விவசாயிகளும் முன்னேறிச் செல்வதற்கு ஒரே வழி, முதலாளித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதன் இடத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதற்கான நோக்கத்துடன் தங்கள் போராட்டத்தை முன்னெடுப்பதாகும். வெற்று வார்த்தைகளாக இல்லாமல், உண்மையாகவே இறையாண்மையை மக்களுடைய கைகளில் வைக்கும் ஒரு புதிய நவீன சனநாயக அமைப்பு நமக்குத் தேவை.

நமது கடின உழைப்பால் இந்தியாவின் செல்வத்தை உருவாக்கும் நாம், நாட்டின் ஆட்சியாளராக வேண்டும். கூட்டு முடிவெடுப்பவராகவும் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிப்பவராகவும் நாம் மாற வேண்டும். அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு பொருளாதார அமைப்பையும் அரசையும் நாம் உருவாக்க வேண்டும்.

தற்போது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தில் வளர்ந்து வரும் ஒற்றுமையால் முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் நிலைத்தன்மை ஆட்டம் கண்டிருக்கிறது. இதற்கு ஆளும் வர்க்கத்தின் எதிர்வினையாக, மக்கள் திரள் இயக்கத்தின் அணிகளைப் பிளவுபடுத்துவதற்கும், அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதை நியாயப்படுத்துவதற்கும் ஆளும் வர்க்கம் கொடூரமான சதிகளை செயல்படுத்தி வருகிறது.

மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென விவசாயிகளுடைய போராட்டத்தையும், அதன் தலைமையையும் சூழ்நிலை எச்சரிக்கிறது.

விவசாய போராட்டத்தின் எந்தத் தலைவரும், சனவரி 26 அன்று நிகழ்ந்த குழப்பத்திற்கும், வன்முறைக்கும் இயக்கத்திலுள்ள எந்தப் பிரிவினரையும் குறை கூறினால் அது பாதிப்பை உருவாக்குமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி உண்மையிலேயே கருதுகிறது. குறிப்பிட்ட சிலரையோ அல்லது குழுக்களையோ துரோகிகளென முத்திரை குத்த வேண்டுமென்ற நெருக்குதலுக்கு நாம் அடிபணிந்து விடக்கூடாது. அது நமது ஒற்றுமையை வலுப்படுத்த பயன்படாது. மாறாக அது நம்முடைய ஒற்றுமையை பலவீனப்படுத்தும், அதைத் தான் ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். குடியரசு தினத்தன்று ஏன் கலவரமும் வன்முறையும் வெடித்தன என்பதற்கு மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்க வேண்டும்.

ஏகபோக முதலாளிகளுக்கும் அவர்களின் அரசாங்கத்திற்கும் எதிரான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட ஒற்றுமையை உறுதியாகப் பாதுகாப்பதும் மேலும் வலுப்படுத்துவதும் இந்த நேரத்தின் தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *