சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் – ஊபா (UAPA) – எதிர்ப்பை நசுக்குவதற்கான ஒரு கருவி

சனவரி 26 தில்லியில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, குடியரசு நாளன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் பின்னால் ஒரு “பெரிய சதி மற்றும் குற்றவியலான திட்டம்” இருப்பதாகவும், அதை, தேசத் துரோகம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகள் கீழ் ஆய்வு நடத்தப்படுமென தில்லி காவல்துறை கூறியிருக்கிறது. விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு அனுமதியளிப்பதற்கு அடிப்படையாக இருந்த காவல்துறை மற்றும் விவசாய சங்கங்களுக்கிடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் விதிமுறைகளை மீறுவதற்கு “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மற்றும் நன்கு ஒருங்கிணைந்த திட்டம் இருந்தது” என்று தில்லி காவல்துறையின் முதல்கட்ட விசாரணை காட்டுவதாக தெரிவித்துள்ளது. விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்காக நடந்து வரும் இயக்கத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயத் தலைவர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் “விசாரணை” ஊபா மற்றும் தேச துரோகம் குறித்த குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ், தனிப் பிரிவால் தங்களுடைய விசாரணை நடைபெறும் ஒரு உயர்மட்ட காவல் துறை அதிகாரி கூறியுள்ளார்.

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 2019 (ஊபா) இன் கீழ் அப்பாவி குடிமக்களை சிறையில் அடைத்து வைப்பது வழக்கமான முறையாக இருந்து வருகிறது. தங்கள் உரிமைகளை கோரியும், அநியாய சட்டங்களுக்கும் அதிகாரபூர்வமான கொள்கைகளுக்கும் எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் திரள் இயக்கங்களின் முன்னணியில் இருப்பவர்கள் “பெரிய சதித் திட்டத்தின்” ஒரு பகுதியென குற்றஞ் சாட்டப்படுகிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெரிய சதித்திட்டங்களில் பங்கேற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஊபா-இன் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில், 2019-20 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் – தேசிய மக்கள் பதிவேடு-க்கு எதிரான போராட்டங்களின் முன்னணியில் இருந்த ஜே.என்.யூ, ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்குவர். ஏப்ரல் 2020 இல் கிழக்கு தில்லியில் மக்களைப் பேரழிவிற்கு உட்படுத்திய வகுப்புவாத வன்முறையைத் தூண்டிவிடுவதற்கும் நடத்துவதற்கும் சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு பேர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கடந்த பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இழிவான பெயர் பெற்றுள்ள பீமா-கோரேகான் வழக்கில் ஜூன் 2018 முதல் செப்டம்பர் 2020 வரை வழக்கறிஞர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் உட்பட 16 பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சாதிகளுக்கு இடையே மோதலைத் தூண்டும் சதித்திட்டத்தில் பங்கேற்றனர் என்றும், பிரதமரைப் படுகொலை செய்ய ஒரு “மோசமான சதி” யில் அவர்கள் ஈடுபட்டனர் என்றும் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு தடுப்புக்காவல் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. எதிர்காலத்தில் ஒருவர் ஒரு குற்றத்தை செய்யக்கூடும் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாலேயே ஒருவர் கைது செய்யப்படுகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒருவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் குறிவைப்பதற்கான உண்மையான காரணத்தை மறைக்கும் முறையை காவல்துறை உருவாக்கியுள்ளது. கைது செய்யப்படுபவர் சில குற்றச் சதியிலோ அல்லது வேறு செயல்களிலிலோ ஈடுபட்டிருப்பதாக சந்தேகிப்பதாகக் கூறி அவர்கள் முதல் தகவல் அறிக்கையைத் தயாரிக்கிறார்கள். அனைத்து வகையான புனையப்பட்ட ஆதாரங்களைத் தயாரிக்கவும், அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய விசாரணையைத் தாமதப்படுத்தவும் காவல்துறைக்கு நீதிமன்றங்கள் காலவரையின்றி அவகாசம் அளிக்கின்றன. அப்படிச் செய்வதற்கு “பயங்கரவாதத்திற்கு எதிரான” இந்தச் சட்டங்கள் அனுமதிக்கின்றன. இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட சிறையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா)  பிரிவு 43D (5), (பயங்கரவாதம் மற்றும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரென அத்தியாயம் IV மற்றும் VI கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர் பற்றிய  வழக்கு டைரியையும், காவல்துறையின் அறிக்கையையும் ஆராய்ந்த பின்னர், “அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான அடிப்படை இருப்பதாக நீதிமன்றம் நம்புமானால்” அவரை பிணையில் விடுவிக்கக் கூடாதென கூறுகிறது.

ஊபா வழக்குகளின் கீழ், குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய அரசு நிறுவனங்களுக்கு 180 நாட்கள் அல்லது 6 மாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஊபா-வின் கீழ் குற்றம் உறுதி செய்யப்படுபவர்களில் எத்தனை பேர் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுகிறார்கள் என்ற ஆய்வு, 2018 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களில் 68 சதவிகித்தினர் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை ஒருவர் பிணை-க்கு விண்ணப்பிக்க முடியாது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் உள்ள இந்த கடுமையான பிணை தொடர்பான விதிகள், பயங்கரவாதம் மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் (பொடா) ஆகியவற்றின் தொடர்ச்சியாகக் காணலாம்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற போலிக் காரணத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் ஊபா-வின் கீழ் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு மற்றும் கருத்தியல் நம்பிக்கையின் காரணமாக மக்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். சுரண்டல், சாதிப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு மற்றும் தேசிய ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து விடுதலை கோருவது, பயங்கரவாதக் குற்றமாக கருதப்படுகிறது. கைது செய்யப்பட்டு காலவரையின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடி மக்கள், பெண்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைகளுக்கான போராளிகள் ஆவர். ஊபா-வை ரத்து செய்யக் கோருபவர்களும் அவர்களது சட்ட பிரதிவாதிகளும் கூட இவ்வாறு கைது செய்யப்படுகிறார்கள்!

தேசப் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற பெயரில், குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லாமலேயே குடிமக்கள் கைது செய்யப்படுகிறார்கள். குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்படுகிறது. சான்றுகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் ஒரு நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்ற கொள்கையை இது முற்றிலும் மீறுவதாகும்.

பல ஆண்டுகளாக நீதிக்காக போராடும் மக்கள், இந்தக் கடுமையான சட்டத்தை எதிர்த்து வருகின்றனர்; இந்தச் சட்டத்தையும், தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) மற்றும் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற பிற சனநாயக விரோத சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரி வருகின்றனர்.

ஊபா-வை எதிர்க்கும் பல மக்களும் அமைப்புகளும் சனவரி 21ஆம் தேதி அன்று மக்கள் குடியியல் உரிமைக் கழகம் (PUCL) ஏற்பாடு செய்த ஆலோசனையில் ஒன்று கூடினர். பங்கேற்பாளர்களில் ஊபா-வால் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்புக்காவலில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊபா-வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆதரிக்கும் வழக்கறிஞர்களும் அடங்குவர். நீதிக்கான ஆர்ப்பாட்டங்கள் போன்ற அமைதியான செயல்பாடுகள், வன்முறையான அழிவுகரமான “பயங்கரவாத நடவடிக்கைகளுடன்” சமன் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்து கூறப்பட்டது. இதன் விளைவாக, எந்தவொரு எதிர்ப்பின் வெளிப்பாடும், நடைமுறையில் உள்ள அநீதிகளுக்கு எதிரான எந்தவொரு மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களும், கருப்புச் சட்டங்களை ரத்து செய்வதற்கான எந்தவொரு கோரிக்கையும், இத்தகைய நடவடிக்கைகளில் பங்கேற்பவர்கள் மீது ஊபா-வின் கீழ் குற்றஞ்சாட்டுவதன் மூலம் தடுக்கப்படுகின்றன. நீதிக்கான அனைத்து ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் அடக்குவதற்கு இது ஒரு ஆயுதமாகும்.

ஊபா- சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் வரலாறு

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் முதன்முதலில் டிசம்பர் 30, 1967 இல் இயற்றப்பட்டது. அமைப்புகளை அனைத்திந்திய அளவில் தடை செய்யவும், இந்தியாவிலிருந்து பிரிவினை கோரும் சங்கங்களை ‘சட்ட விரோதமானவை’ என அறிவிக்கவும் இந்தச் சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரங்களை வழங்கியது. 2004 ஆம் ஆண்டில் ஊபா அதன் தற்போதைய கொடூரமான வடிவத்திற்கு மாற்றப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும், முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யாமல் கேள்விக்குரிய மற்றும் நீண்டகால தடுப்புக் காவல்கள் மூலம் நசுக்குவதற்கு அப்போதிருந்த பொடா சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பொடா சட்டத்திற்கு எதிராக பரவலாக மக்களிடம் எதிர்ப்பு இருந்தது. பொடாவை ரத்து செய்து, ஆனால் அதே நேரத்தில் ஊபா சட்டத்தில் முக்கிய திருத்தங்களை அரசாங்கம் கொண்டு வந்தது.

ரத்து செய்யப்பட்ட பொடாவிலிருந்து ‘பயங்கரவாதச் செயல்’ மற்றும் ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகிய வரையறைகளை உள்ளடக்கியும், ‘சட்டவிரோத நடவடிக்கை’ என்ற வரையறையில் கணிசமான மாற்றங்களைச் செய்தும் திருத்தப்பட்ட ஊபா சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் ‘பயங்கரவாதக் கும்பல்’ என்ற கருத்தையும் அது கொண்டு வந்தது. ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான தண்டனை’, ‘பயங்கரவாதத்தின் வருமானத்தை பறிமுதல் செய்தல்’ மற்றும் ‘பயங்கரவாத அமைப்புகள்’ குறித்த பிரிவுகள் IV, V மற்றும் VI ரத்து செய்யப்பட்ட பொடா-விலிருந்து பெரிதும் கடன் வாங்கப்பட்டன. எனவே, அடிப்படையில் இது ஒரு புதிய பெயரில் பொடா-வின் தொடர்ச்சியாகும்.

அடுத்த திருத்தம் 2008 இல் செய்யப்பட்டது. இந்தத் திருத்தமானது, குற்றச்சாட்டு எதுவுமின்றி ஒருவரை அடைத்து வைப்பதற்கும், காவல் துறை சிறையில் வைத்திருப்பதற்கான காலத்தை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்தியும் அதிகாரத்தை வழங்கியது.

அதே ஆண்டு, ஊபா மற்றும் தேசத் துரோகம் சட்டங்கள் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட குற்றங்களை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டது.

இந்தச் சட்டமானது, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த மசோதா 2019 மூலம் மேலும் திருத்தப்பட்டது. ஆகஸ்டு 8, 2019 இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு இது சட்டமாக ஆகியது.  தற்போதுள்ள சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றமானது, இப்போது தனிநபர்களை பயங்கரவாதியாக அறிவிக்கப்படவும், தொடர்புடைய மாநில அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி எங்கும் சோதனைகளை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) அதிகாரத்தைக் கொடுத்திருப்பதும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *