குடியரசு நாளில் இந்தியாவெங்கிலும் விவசாயப் பேரணிகள்

சனவரி 26 அன்று, தமிழ்நாடு, மராட்டியம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பேரணிகளும், கூட்டங்களும், மற்றும் பிற வடிவங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நீண்ட தூரத்தில் இருந்து தில்லிக்கு வரமுடியாத விவசாயிகள், தத்தம் மாநில ஆளுநர் மாளிகையின் முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடெங்கிலும் விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்த இந்த டிராக்டர் அணிவகுப்பு மற்றும் பிற மக்கள்திரள் ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான பெண்களும் ஆண்களும் பங்கேற்றனர். தில்லி, நகரத்திற்குள் அணிவகுத்துச் சென்ற பேரணிகளை மக்கள் மலர் தூவி வரவேற்று, விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்கள் முழு ஆதரவை வெளிப்படுத்தினர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்ற தங்களுடைய கோரிக்கை குறித்து மத்திய அரசு காட்டிவரும் “அலட்சியப்” போக்கைக் கண்டித்து சனவரி 26 அன்று  தமிழ்நாட்டில் கடலூர், மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருவாரூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் பல்வேறு நகரங்களில் விவசாயிகள் வலுவான கண்டன ஆர்பாட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கடலூர் காட்டுமன்னார்கோவிலில் எருமை மாடுகளை வைத்து ஒரு பேரணியை நடத்தியது. மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு கோவையில் விவசாயிகளும் தொழிலாளர்களும் இருசக்கர வாகனங்களிலும், சைக்கிள்களிலும் முவ்வண்ணக் கொடிகள் மற்றும் தட்டிகளுடன் பேரணி நடத்தினர்.

 

     

கரூர், கோவில்பட்டி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரணி காட்சிகள்

சனவரி 25 அன்று பல்லாயிரக்கணக்கான மராட்டிய மாநில விவசாயிகள் மும்பை ஆசாத் மைதானத்தில் கூடினர். மாநிலத்தின் பல மாவட்டங்களிலிருந்து அவர்கள் வந்திருந்தனர், ஒரு பெரும் திரளானவர்கள் நாசிக்கிலிருந்து அணிவகுத்து வந்திருந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவதற்காக ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தினர்.

மத்திய பிரதேசத்தில் 55 மாவட்டங்களில் 20 இல் விவசாயப் பேரணிகள் நடைபெற்றன. போபாலில் 15 கி.மீ டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பார்வானி மாவட்டத்தில் 16 கி.மீ மாட்டு வண்டி அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது. ரைசன், சிவ்புரி, பிந்த், மோரேனா மற்றும் குவாலியர் மாவட்டங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன.

பஞ்சாபின் பல மாவட்டங்களில், குறிப்பாக பாட்டியாலா மற்றும் சங்ரூரில் ஏராளமான ஆர்பாட்டாளர்கள் ஒன்று கூடினர். தில்லியில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 12,000 கிராமங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தது ஒருவரையாவது பங்கேற்கச் செய்வதற்காக விரிவான அணிதிரட்டல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் குடியரசு தினத்தன்று நடத்தப்படும் டிராக்டர் பேரணிக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அங்குள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் தத்தம்  , வீடுகளுக்கும் கடைகளுக்கும் வெளியே விவசாய சங்கக் கொடிகளை ஏற்றி வைத்தனர். அப்பகுதியிலுள்ள கடைகளிலும், வீடுகளின் கூரைகளிலும், வீட்டு நுழைவாயில்களிலும், நெடுஞ்சாலைகளிலும், வயல்களிலும், வாகனங்களிலும் விவசாய சங்கங்களின் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணக் கொடிகள் பறந்தன. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்றும் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் எழுப்பப்பட்ட கோரிக்கையை கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் மக்கள் திரண்டெழுந்து ஆதரவளித்தனர்.

   

பஞ்சாபில் உள்ள அம்ரித்சர், பட்டியாலா பேரணிகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்காக அரியானா விவசாயிகள், குடியரசு நாளன்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கூடியிருந்தனர்.

பெங்களூரு நகர மையத்தில் உள்ள விடுதலைப் பூங்காவில் விவசாயிகளும் தொழிலாளர்களும் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் பெங்களூரில் உள்ள விடுதலைப் பூங்காவில் வந்து குவிந்தனர். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் பேரணி மைசூரு சாலை, தும்கூர் சாலை மற்றும் தேவநஹள்ளியிலிருந்து நகரத்திற்குள் நுழைந்தது.

பெங்களூரு மற்றும் ஐதிராபாத் பேரணிக் காட்சிகள்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, மேற்கு வங்க மாநிலமெங்கும் பெரிய பேரணிகள் நடத்தப்பட்டன. கிழக்கு பர்த்வான், ஹூக்லி, முர்ஷிதாபாத் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் நடந்த பேரணிகளில் ஏராளமான எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர்.

பல்லாயிரக்கணக்கான பொது மக்களுடைய ஆதரவைப் பெற்றிருந்த, நாடு தழுவிய இலட்சக்கணக்கான விவசாயிகளின் பேரணிகளை முதலாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் எதையும் பிரதிபலிக்கவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *