தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இந்த நாட்டின் உண்மையான மன்னர்களாக ஆக்குவதற்கு போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!

தொழிலாளி-விவசாயி ஒற்றுமை வாழ்க!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறைகூவல், சனவரி 5, 2021

தோழர்களே,

நாடெங்கிலும், தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆளும் முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசும் நமது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது நடத்திவரும் கொடூரமானத் தாக்குதலை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்வதற்காக, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நாடெங்கிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் அணிதிரட்டவும் தொழிலாளி வர்க்கம் முன்வர வேண்டுமென தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் அழைப்பு விடுக்கிறது.

புதிதாக இயற்றப்பட்ட ஊதியச் சட்டம், பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் பற்றிய சட்டம், தொழில் உறவுகள் சட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த சட்டம் ஆகிய தொழிற் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமெனக் கோரிப் போராடுவதற்காகவும் அணி திரட்டுவதற்காகவும் நாடெங்கிலும் உள்ள தொழிற் சங்கங்களையும், அமைப்புகளையும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

தோழர்களே,

இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக, மூன்று விவசாய விரோத சட்டங்களை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, இலட்சக் கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையில் திரண்டு போராடி வருகின்றனர். இந்த சட்டங்கள், ஒரு சில பெரிய நிறுவனங்கள் விவசாயத் துறையில் தங்களுடைய ஏகபோக கட்டுப்பாட்டை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும், அதே நேரத்தில் சிறு வணிகர்களில் பெரும்பாலோர் வணிகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஏகபோக நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விலையைத் தீர்மானிக்கவும், நியாயமற்ற ஒப்பந்தங்கள் மூலமாகவும் விவசாய பொருட்களை பதுக்கி வைப்பதன் மூலமாகவும், விவசாயிகளைக் கசக்கிப் பிழிவதன் மூலமும் சில்லறை வணிகத்தில் அவற்றை அதிக விலையில் விற்கவும் முடியும்.

இந்த சட்டங்கள், மிகப் பெரிய இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்கள் தங்களைச் சுரண்டுவதையும் கொள்ளையடிப்பதையும் பெரிதும் தீவிரப்படுத்தி தங்களுடைய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று விவசாயிகள் உறுதியாக நம்புகின்றனர். இந்த சட்டங்கள் “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி அவர்களின் செழிப்புக்கு வழிவகுக்கும்” என பிரதமரும் பிற அரசாங்க செய்தித் தொடர்பாளர்களும் கூறிவரும் பொய்களால் அவர்கள் ஏமாறவில்லை. சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்றும் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை திரும்பி செல்ல மாட்டோம் என்றும் ஆர்பாட்டம் நடத்திவரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

அரியானா மற்றும் பஞ்சாப் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதிகள் ஒவ்வொரு நாளும் ஆர்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில் வந்து கலந்து கொள்கின்றனர். உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தினமும் போராட்டங்களில் வந்து சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர். தொழிற் சங்கங்களும், மாணவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் அமைப்புகளும் முன்வந்து விவசாயிகளுடைய போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன. குடியரசு தினத்தன்று தலைநகரில் ஒரு மாபெரும் “டிராக்டர் பேரணியை” நடத்துவதன் மூலம் தங்களுடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் திட்டத்தை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரமும் பல பெரும் நிறுவனங்களுடைய ஊடகங்களும், விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்துவதற்காக அனைத்து வகையான பொய்களையும் பரப்ப முயற்சித்தன. போராடுகின்ற விவசாயிகளை “தேசவிரோதிகள்” என்றும், “காலிஸ்தானியர்கள்” என்றும் அவை சித்தரிக்கின்றன. இதற்கிடையில், நடுங்கும் கடுங் குளிரில் ஒரு மாதத்திற்கும் மேலாக வெட்டவெளியில் அமர்ந்து போராடிவரும் விவசாயிகளைச் சலிப்படையச் செய்வதற்கும், அவர்களின் ஒன்றுபட்ட உறுதியை உடைப்பதற்கும் அரசு கொடூரமான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சட்டங்கள் விவசாயிகள் மீது மட்டுமின்றி, இந்த நாட்டின் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். அவை நம் மக்கள் அனைவரின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தோழர்களே,

இன்னொரு பக்கம், நம் நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் மீது ஒரு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை மாற்றி 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இது, முதலாளி வர்க்கத்தின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமான தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான உரிமையை வெட்டி நீக்க வேண்டும்; வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற வகையான எதிர்ப்புக்கள் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட வேண்டும்; ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதன் மூலம், முதலாளிகள் விருப்பப்படி தொழிலாளர்களை வேலைக்கு வைக்கவோ, தூக்கியெறியவோ செய்யலாம்; மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்கள் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட விதி மீறல்களுக்கான சோதனைகளை நிறுத்த வேண்டும் என்பன போன்றன முதலாளி வர்க்கத்தினுடைய கோரிக்கைகள் ஆகும்.

குறைந்தபட்ச ஊதியமானது, ஒரு தொழிலாளியும் அவரது குடும்பத்தினரும் மனிதர்களுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ கூடிய வகையில் ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான ஊதியமாக இருக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஊதியங்கள் குறித்த சட்டம் முற்றிலுமாக நிராகரிக்கிறது. சமூகப் பாதுகாப்புக்கான சட்டம், பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை மறுக்கிறது. பணியிடப் பாதுகாப்பு குறித்த சட்டம், பெரும்பாலான உடமையாளர்கள் தம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பான பணி நிலைமைகளை உறுதி செய்ய வேண்டிய அவசியத்திலிருந்து விலக்கு அளிக்கிறது. தொழில் உறவுகள் குறித்த சட்டம், தொழிலாளர்களை அடிமைகளாக மாற்ற முயற்சிக்கிறது.

நம் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்துக்களான – இரயில்வே, நிலக்கரிச் சுரங்கங்கள், எண்ணெய் நிறுவனங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகம் மற்றும் கப்பல்துறைகள், பிஎஸ்என்எல், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் என அனைத்தும் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நம்முடைய உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினரும் போராடி வருகின்றனர். இரயில்வே தொழிலாளர்கள், நிலக்கரித் தொழிலாளர்கள், பாதுகாப்புத் துறைத் தொழிலாளர்கள், போர்த் தளவாடங்கள் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், தொலை தொடர்புத் தொழிலாளர்கள், வங்கி மற்றும் காப்பீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் பல துறைகள் மற்றும் தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் – நமது விலைமதிப்பற்ற சொத்துக்களும், பொதுச் சேவைகளும் மிகப் பெரிய முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு விற்கப்படுவதை எதிர்ப்பதற்காக ஒரு பொதுவான மேடையில் ஒன்றுபடுகிறார்கள். பல தொழிற்சாலைகளில், தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்காக கட்சி மற்றும் தொழிற்சங்க இணைப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே கொடியின் கீழ் தொழிலாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைப் போலவே, ஏகபோக முதலாளிகளின் அரசாங்கம், தனியார்மயமாக்கல் திட்டமும் புதிய தொழிலாளர் சட்டங்களும் “பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்” என்று கூறி, எனவே அவை “தேச நலனுக்காகக்” கொண்டு வரப்பட்டுள்ளன என்று ஒரு தவறான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இது ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

கடந்த மூப்பது ஆண்டுகளாக, முதலாளிகளின் ஒவ்வொரு அரசாங்கமும் தாராளமயம், தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டத்திற்கு ஆதரவாக வாதாடி செயல்பட்டு வந்துள்ளன. முதலாளிகள் மிக விரைவாக பணக்காரர்களாக வளர அனுமதிக்கப்பட்டால், அந்தச் செல்வங்களில் சில சொட்டுக்கள் கசிந்து தொழிலாளர்களுக்கு வந்து சேரும் என அவர்கள் அனைவரும் வாதிட்டனர். எனவே முதலாளிகள் தங்கள் செல்வத்தை விரிவாக்குவதற்குத் தடையாக உள்ள அனைத்துச் சட்டங்களும் அகற்றப்பட வேண்டும் என்றனர்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நம் நாட்டின் மிகப்பெரிய முதலாளித்துவ ஏகபோகங்கள் நம்பமுடியாத அளவு செல்வத்தை குவித்துள்ளனர், இப்போது அவர்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் கணக்கிடப்படுகிறார்கள். மறுபுறம், மிகப் பெரிய அளவிலான தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் நிலைமைகள் மோசமான நிலையில் இருந்து படுமோசமாக ஆகியுள்ளன. பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்குதல், புதிய தொழிலாளர் சட்டங்கள் என இவை அனைத்தும் மிகப் பெரிய இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ ஏகபோகங்கள் இன்னும் கூடுதலான செல்வத்தை மிக விரைவான வேகத்தில் குவிப்பதற்கு மட்டுமே உதவும், அதே நேரத்தில் அவை தொழிலாளி வர்க்கத்தின் சொல்லொணாச் சுரண்டலுக்கும் துயரத்திற்கும் வழிவகுக்கும்.

ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொண்டால், இவை நம் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொகையாக இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது ஒரு மிகப் பெரிய தாக்குதலாக இருக்கின்றன. பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் தம் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் குரலை இந்திய அரசு புறக்கணிக்கிறது. இது, தற்போதுள்ள பாராளுமன்ற அமைப்பு பெயரில் மட்டுமே ஒரு சனநாயகமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

உண்மையில் இருப்பது என்னவென்றால், டாடாக்கள், அம்பானிகள் மற்றும் பிற ஏகபோக குடும்பங்களின் தலைமையிலான முதலாளிகளின் ஆட்சியாகும். இந்த மிகப் பெரிய பணக்கார சிறுபான்மையினரின் நலனுக்காக இந்திய அரசு செயல்படுகிறது. தற்போது இருப்பது ஒரு முதலாளி வர்க்க சர்வாதிகாரமாகும்.

தோழர்களே,

ஏகபோக முதலாளிகளின் இந்த ஆட்சியின் முற்றிலும் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான முகத்தை 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய முடக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் தெளிவாகக் காண முடிந்தது. தங்களுக்கு வாழ்வாதாரம் தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்த கோடிக்கணக்கான நமது சகோதர சகோதரிகள், தாய்மார்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகள், தங்களுடைய கிராமங்களுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். அவர்கள் இரக்கமின்றி வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர், அரசாங்கம் அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பையோ, வேலைப் பாதுகாப்பையோ அல்லது சமூகப் பாதுகாப்பையோ உறுதி செய்யவில்லை. முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு விவசாயத் துறையைத் திறந்து விடும் விவசாய விரோதச் சட்டங்கள், விவசாயிகளை மேலும் சீரழித்து, மேலும் பல இலட்சக்கணக்கானவர்களை கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வாழ்வாதாரத்தைத் தேடி ஓடச் செய்யும்.

நம்முடைய வாழ்வாதாரத்தின் மீதும் உரிமைகள் மீதும் நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஒரு பொதுவான போராட்டமாகும். விவசாய விரோத சட்டங்களையும், தொழிலாளி வர்க்க விரோத தொழிலாளர் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான நமது போராட்டம் உண்மையில், முதலாளி வர்க்கத்தின் தற்போதைய சர்வாதிகாரத்திற்கு எதிரானப் போராட்டமாகும். இந்த நாட்டின் செல்வத்தை உருவாக்கும் நாம், முடிவெடுப்பவர்களாக இருப்பதற்கும், சமுதாயத்திற்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதற்கும் நமது உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு போராட்டமாகும். இரத்தம் உறிஞ்சும் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை மாற்றி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதற்கான போராட்டமாகும் இது. இந்தியாவின் செல்வத்தை உற்பத்தி செய்யும் நாம் இந்த நாட்டினுடைய மன்னர்களாக ஆக வேண்டும். நமது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான இந்த தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் நோக்கத்தோடு நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

தொழிலாளி, விவசாயி, பெண்கள் மற்றும் இளைஞர்களே, நாமே இந்தியா, நாமே அதன் மன்னர்கள்!

தொழிலாளி – விவசாயி ஒற்றுமை வாழ்க!

புரட்சி ஓங்குக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *