சென்னை மாநகராட்சியில் வேலை செய்து வந்த எட்டாயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் சனவரி இரண்டாவது வாரத்தில் அவர்களுடைய வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தேசிய நகர்ப் புற வாழ்வாதாரத் திட்டத்தின் (NULM) கீழ் பணிபுரியும் இந்தத் தொழிலாளர்கள் எவ்வித முன் அறிவிப்புமின்றி வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நகரத்தின் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் முயற்சியின் விளைவே இது. மாநகராட்சியில் வேலை செய்து வரும் 12,000 தேசிய நகர்ப் புற வாழ்வாதாரத் திட்டத் தொழிலாளர்களில், 4,000 பேரை மட்டுமே புதிய தனியார் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக் கொண்டன. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் வாரம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருவதாகவும், மாவட்ட ஆட்சியரைக் கூட சந்தித்து தங்களுடைய கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக் காட்டினார். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு மாநகராட்சியை தொடர்ந்து வலியுறுத்தி வருவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.