கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம்

கீழ் பவானி திட்ட கால்வாய், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 200 கிமீ நீளமுடைய பாசன வாய்க்காலாகும். இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு பகுதி நிலம் நேரடிப்பாசனம் பெறும்போது, கால்வாய்க்கு அருகிலுள்ள மற்ற பாசன நிலங்களுக்கும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலமாக அங்குள்ள கிணறுகளுக்கு நீர் கிடைத்து விடுகிறது. இதனால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் மறைமுகப் பாசனம் பெறுகின்றன.

இதுபோக 38 உரம்பு நீர் – கசிவு நீர் பாசனம் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. தலைமைக் கால்வாய்க்கு வலதுபுறம் தடை செய்யப்பட்ட தூரத்திற்கு அப்பால் கிணறுகள் வெட்டி 60 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. இதிலிருந்து வடியும் நீர் கொடிவேரிப் பாசனத்துக்கும், காலிங்கராயன் பாசனத்துக்கும், காவிரியிலும் கலந்து பாசன நீராகப் பயன்படுத்தப்படுகிறது.. இவற்றிலிருந்து வெளியேறும் நீர் காவிரியில் கலந்து டெல்டா மாவட்டங்களுக்குப் பாசன நீராகிறது. மேலும் ஒரு பகுதி நீர் வீராணம் ஏரிக்கும், அங்கிருந்து சென்னைக்கு குடிநீராகவும் செல்கிறது. இவ்வாறு கீழ்பவானி தற்போதைய கால்வாய் ஒரு மழை நீர் அறுவடைத் திட்டமாகவும் செயல்படுகிறது.

கடந்த 2013-ல் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டது. பாசனப் பயனாளிகளின் எதிர்ப்பு மற்றும் எழுச்சி காரணமாக இந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. தற்போது கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை வரை கால்வாய் நீர் சென்று சேருவதை உறுதி செய்வதற்காக என்று சொல்லி கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு மீண்டும் அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கமும், விவசாயிகளும், அப்பகுதியில் வாழும் மக்களும் கடுமையாக எதிர்த்து ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தக் கால்வாயில் கான்கிரீட் தளம் போடப்பட்டால், கீழ்பவானி பகுதியிலுள்ள விவசாய நிலங்களும், மக்களுடைய நீராதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பை உருவாக்கும் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.  கீழ்பவானி பாசனக் கால்வாயை, கான்கிரீட் கால்வாயாக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வெங்கடாசலம், துளசிமணி, கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி, ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஈ.வீ.கே. சண்முகம், தமிழக விவசாயிகள் சங்க செயலாளர்கள் த.கனகராஜ், மு.ரவி, ஏ.கே.சுப்பிரமணியம், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் மே.கு. பொடாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள் கால்வாயை கான்கிரீட் தளம் போடுவது குறித்து அப்பகுதியிலுள்ள விவசாயிகளிடம் முறையாக கருத்துக் கேட்காமல் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி கண்டித்தனர். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க்காலில் செல்லும் கசிவு நீர் மூலம், பாசனம் பெறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள், நீர் ஆதாரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல், பாலைவனமாகும் சூழ்நிலை உள்ளது. தென்னை, வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட நீண்ட காலப் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

கீழ்பவானி வாய்க்கால் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் எல்லா விவசாய நிலங்களுக்கும் நீர் ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். கடைமடை விவசாய நிலங்களுக்கு நீரை உறுதி செய்வது என்ற பெயரில் ஆண்டாண்டு காலமாக இந்த வாய்க்காலின் மூலம் பாசன வசதி பெற்றுவரும் மற்ற விவசாயிகளுக்கு அவசியமான நீரை மறுப்பது நியாயமல்ல. எனவே கீழ்பவானி வாய்க்கால் மூலம் பயனடையும் விவசாயிகளை, இடைநிலை என்றும், கடைமடை என்றும் பிளவுபடுத்தி அவர்களை மோத விடும் நோக்கத்தைத் தமிழக அரசாங்கம் கைவிட வேண்டும். தமிழக அரசு வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடும் திட்டத்தை உடனடியாக நிறுத்தி விட்டு, எல்லா விவசாய நிலங்களுக்கும் தேவைப்படும் பாசன நீரை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இயற்கையாகவே நீரை சேகரிப்பதாகவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதாகவும் அமைந்து வெகுவாகப் பயன்பட்டு வரும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதன் மூலம் தமிழக அரசு பரப்புரை செய்துவரும் மழைநீர் சேகரிப்புத் திட்டம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது போன்றவற்றை ஒழித்துக் கட்ட அரசாங்கமே முனைகிறது.

கடைமடை பாசன நிலங்களுக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே கான்கிரீட் தளத்திட்டத்தைக் கொண்டு வருவதாக கூறும் அரசாங்கம், அந்தப் பகுதியில் எத்தனை புதிய ஏரிகளையும் குளங்களையும், நீர் நிலைகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்? மாறாக தமிழக அரசு, ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை ஒழித்துக்கட்டியும், மாசுபடுத்தி வேளாண்மைக்கும் மக்கள் தேவைகளுக்கும் பயன்பட முடியாத வகையில் சீரழித்தும் வருவதைப் பார்க்கலாம்.

இந்த ஆண்டு தமிழகத்தில் தேவைக்கும் அதிகமான அளவிலே மழை பெய்திருக்கிறது. ஆயினும் தமிழக அரசு, அறிவியல் அடிப்படையில் நிலத்தின் ஏற்ற இறக்கங்களையும், நீர் வழிப் பாதைகளையும் சரிவர ஆராய்ந்து, நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரி, நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தி வைக்காத காரணத்தால் பெரும்பாலான மழை நீர் பல இடங்களில் விவசாயிகளுடைய பயிர்களை வெள்ளத்தில் மூழ்கடித்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை உருவாக்கி இருப்பதோடு, மக்கள் குடியிருப்புப் பகுதிகளை மூழ்கடித்தும், மிகுதியான நீர் கடலில் சென்று வீணாகக் கலந்தும் வருகிறது. இந்த நிலை அரசாங்கத்தின் பொறுப்பற்ற, திட்டமற்ற போக்கைக் காட்டுகிறது.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை, விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய்களையும், உயர் மின் அழுத்தக் கோபுரங்களையும் அமைத்தல், வளமான விவசாய நிலங்களைக் கைப்பற்றி முதலாளிகளுக்கு வழங்குதல் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை தமிழக அரசாங்கம் செயல்படுத்தி வருவது போலவே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடும் திட்டத்தை முன்வைத்து அப்பகுதியிலுள்ள விவசாயிகளைப் பிளவுபடுத்தவும், கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இலாபத்தை ஏற்படுத்தவும் தேர்தல் நேரத்தில் தங்களுடைய வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்ளவும் ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் தமிழக விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடி இந்த திட்டத்தை முறியடிப்பார்கள் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *