கொடுங்கோல் அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் – விவசாயிகளின் செங்கோலுக்கான போர் இது

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்திய குழுவின் அறிக்கை, சனவரி 10, 2021

இந்திய அரசாங்கத்திற்கும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான இந்திய மக்களுக்கும் இடையே இணக்கம் காண முடியாத மோதல் நடைபெற்றுவரும் காட்சியை நமது நாடும், முழு உலகமும் கண்டு வருகின்றன. நவம்பர் 26 முதல் தில்லியின் எல்லைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் உடனடி கோரிக்கைகளில், ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்த உதவுவதற்காக பாராளுமன்றம் நிறைவேற்றிய மூன்று சட்டங்களை ரத்து செய்வது அடங்கும். ஒவ்வொரு நாளும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பேரணிகள் போராட்டங்களில் வந்து சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆர்பாட்டம் நடைபெறும் இடங்களில் இருப்பவர்கள் அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வரை இடத்தை விட்டுப் போக மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். சுதந்திரம் அடைந்த கடந்த 73 ஆண்டுகளில் இந்தியா இதுபோன்ற ஒரு சூழ்நிலையைச் சந்தித்ததில்லை.

அரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் தில்லியின் எல்லைகளில் சிங்கு, திக்ரி, காசிப்பூர், சில்லா, தன்சா, ஆச்சந்தி, பியாயு மன்யாரி, சபோலி மற்றும் மங்கேஷ் உள்ளிட்ட இடங்களிலும், ராஜஸ்தான்-அரியானா எல்லையில் ஷாஜகான்பூரிலும் மக்கள் தற்காலிக நகரங்களை நிறுவியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இரவும் பகலும் இங்கேயே இருக்கிறார்கள். பாதத், தசானா, பல்வால், பாவல் போன்ற பல இடங்களில் விவசாயிகள் நெடுஞ்சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை நடத்தும் விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடங்களை ஏற்பாடு செய்துள்ளன.

மக்கள் ஒருங்கிணைந்து, தங்களுடைய சொந்த பொருட்களைக் கொண்டு, ஆண்களும் பெண்களும் கூட்டாக உணவை சமைத்து அனைவருக்கும் உணவளிக்கும் எண்ணற்ற சமூக உணவுக் கூடங்களை அமைத்துள்ளனர். ஒருவருடைய சாதி, மதம், மொழி குறித்து எந்தக் கேள்வியும் அங்கு கேட்கப்படுவதில்லை. அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வயல்களில் இருந்து உணவு தானியங்களையும் காய்கறிகளையும் வழங்குவதற்கு தினமும் அங்கு வருகிறார்கள். நாடு முழுவதிலுமிருந்து மருத்துவர்களும் செவிலியர்களும் இலவச மருத்துவ முகாம்களை அங்கு நிறுவியுள்ளனர். மாணவர்கள் புத்தகங்களை விநியோகிக்க நூலகங்களை அமைத்துள்ளனர். பள்ளிப் படிப்பை குழந்தைகள் இழந்துவிடக் கூடாதென்பதற்காக வகுப்புகளையும் அவர்கள் ஏற்பாடு செய்து நடத்துகின்றனர்.

போராட்டக்காரர்கள் பலர் தத்தம் வண்டிகளில் இரவுகளைக் கழித்தாலும், சொந்தமாக எந்த தங்குமிடமும் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மிகவும் மோசமான குளிரிலும் மழையிலும், அங்கு தங்க விரும்பும் அனைவருக்கும் அமைப்பாளர்கள் தங்குமிடங்களை அமைத்துள்ளனர். தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் போர்வைகளை வழங்குகிறார்கள். அவர்கள் தற்காலிக கழிப்பறைகளை நிறுவி வெந்நீரை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். தூய்மையை உறுதிப்படுத்த அவர்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர்.

விவசாயப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருப்பவர்கள் இந்த எதிர்ப்பு மையங்களில் உயர்வான ஒழுங்கு முறையையும் சமூகப் பொறுப்புணர்வையும் கடைபிடித்து வருகின்றனர். எதிரிகள் எவரும் பிரச்சனையை உருவாக்கும் நோக்கத்தோடு அங்கு அமைதியை சீர்குலைக்க முடியாத சூழ்நிலையை அவர்கள் உறுதி செய்துள்ளனர். தங்களுக்கு ஆதரவளிக்க வந்தவர்களை அவர்கள் அன்புடன் வரவேற்கிறார்கள். அங்கு சுதந்திரமும் நட்புறவுமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவரும் எந்தவிதமான அச்சமோ நெருக்குதலோ இல்லாமல், தத்தம் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பும் எவரும் தங்களது பெயரைக் கொடுத்துவிட்டு தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பேசலாம்.

இந்த ஆர்பாட்டம் நடைபெறும் இடங்களில் பெண்கள் முற்றிலும் பாதுகாப்பாக உணர்கிறார்கள். நாட்டின் பிற பகுதிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடூரமான பாதுகாப்பற்ற நிலைக்கு இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

போராட்டத்தின் அமைப்பாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் சொந்த தொடர்பு வலையமைப்பை நிறுவியுள்ளனர். தங்களது போராட்டத்தைப் பற்றி பொய்களைப் பரப்பி, அரசாங்கத்தின் பரப்புரையை கொண்டு செல்லும் பிரதான தொலைக்காட்சி ஊடகங்களை அவர்கள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களுக்கு எதிராகவும் நடத்தி வரும் போராட்டங்கள் ஒரு வலிமைமிக்க சக்தியாக மாறிவிட்டன. தில்லியின் எல்லைகளை மையமாகக் கொண்டு, போராட்டம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் பரவி வருகிறது. “தொழிலாளி – விவசாயி ஒற்றுமை ஒங்குக!” என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியர்கள் இந்தியாவில் தீவிரமாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பல ஆர்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இந்த போராட்டத்தை பல்வேறு வழிகளிலும் ஆதரிக்கின்றனர்.

முதலாளித்துவ சார்பு சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், உற்பத்தி செலவுக்கு மேலே குறைந்தது 50 சதவீதமாவது கூட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவர்களுடைய அனைத்து விளை பொருட்களையும் அரசு கொள்முதல் செய்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டுமெனவும் விவசாயப் போராட்டம் கோரியுள்ளது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது என்பது மக்கள் மத்தியில் மேலும் கோபத்தைத் தூண்டி விட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தில்லி எல்லையில் உள்ள எதிர்ப்பு முகாம்களில் சேர முடிவு செய்து வருகிறார்கள்.

எட்டுச் சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் கூட, இந்த மூன்று சட்டங்களில் எதையும் ரத்து செய்ய மாட்டோமென மத்திய அரசு தொடர்ந்து ஆணவத்துடன் அறிவிக்கிறது. தொழிலாளர்களையும், விவசாயிகளையும் மனச்சோர்வடையச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. உறைய வைக்கும் குளிரும், கொட்டும் மழையும் நமது போராட்டத்தைக் கைவிட நம்மைக் கட்டாயப்படுத்தும் என்று அது நம்புகிறது. விவசாயிகளுடைய போராட்டத்தைப் பிளவுபடுத்த அரசு நிறுவனங்கள் காலங்காலமாக பின்பற்றி வந்திருக்கும் முறைகளை தற்போதும் முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிகளுக்கு இடையே, விவசாய அமைப்புகள் தங்கள் ஒற்றுமையை உறுதியுடன் பாதுகாத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றன. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்டுள்ள எழுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்த் தியாகம் மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. “சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, போராட்டம் தொடரும்!” என அவர்கள் ஒருமித்த குரலில் அறிவித்துள்ளனர்.

சமுதாயத்தின் பொருள் தேவைகளை உற்பத்தி செய்வதற்கு கடுமையாக உழைப்பதன் மூலம் உழைக்கும் மக்களாகிய நாம் நமது கடமையைச் செய்கிறோம். உழைப்பவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய தன் கடமையை தற்போதுள்ள அரசு செய்யவில்லை. மாறாக, நமது வாழ்வாதாரத்தை விலையாகக் கொடுத்து, ஏகபோக முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுவதில் அது உறுதிபூண்டுள்ளது. ஒரு சில மிகப் பெரிய பணக்கார குடும்பங்கள் மற்றும் அவர்களின் வெளிநாட்டு ஒத்துழைப்பாளர்களின் பேராசையை நிறைவு செய்ய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அரசின் இந்த கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவதற்காக நாம் போராடி வருகிறோம். அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய ஒரு அரசை நிறுவுவதற்காக, செங்கோன்மைக்காக நாம் போராடுகிறோம்.

வீரத் தியாகி பகத் சிங் கூறினார் –

“விரல் விட்டு எண்ணக்கூடிய அயல்நாட்டினரோ அல்லது இந்த நாட்டைச் சேர்ந்தவரோ அல்லது இருவரும் கூட்டாகவோ நமது மக்களுடைய உழைப்பையும் வளங்களையும் சுரண்டிக் கொழுக்கும் நிலை நீடிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இந்த பாதையிலிருந்து எதுவும் நம்மைத் தடுக்க முடியாது”.

சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​ பிரிட்டிஷ் முதலாளி வர்க்கத்தின் காலனிய ஆட்சிக்கு பதிலாக தொழிலாளர் – விவசாயிகளுடைய ஆட்சியை நிறுவுவதற்காக நமது நாட்டுப்பற்றாளர்களும் புரட்சிகரத் தியாகிகளும் போராடினர். ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட அரசியல் நிறுவனங்களையும் சட்டங்களையும் ஏற்றுக் கொள்வதென்ற கருத்தை அவர்கள் நிராகரித்தனர். முழு அமைப்பையும் வேரோடு பிடுங்க எறிய வேண்டும் என்றும், ஒரு புதிய அமைப்புக்கான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக நம்பினர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், காலனித்துவ அரசுக்குள் ஒரு சில இந்தியர்களுக்கு சில பதவிகளை உருவாக்குமாறு ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் கெஞ்ச வேண்டுமென இந்திய முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் முன்வைத்த பாதையை அவர்கள் நிராகரித்தனர்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஒரு புரட்சி ஏற்படக் கூடிய சூழ்நிலையை எதிர்கொண்டனர். இதைத் தடுப்பதற்காக, அவர்கள் துரோகத்தனமான இந்திய முதலாளி வர்க்கத்தோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, 1947 இல் அரசியல் அதிகாரத்தை அவர்களுடைய கைகளுக்கு மாற்றினர். சுரண்டல் அமைப்பிற்கு முடிவு கட்ட வேண்டுமென்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நோக்கத்திற்கும் விருப்பங்களுக்கும் துரோகமிழைக்கப்பட்டது.

கடந்த 73 ஆண்டுகளாக, வெளிநாட்டு முதலாளிகளுடைய ஒத்துழைப்போடும் போட்டி போட்டுக் கொண்டும், நாட்டின் நிகழ்ச்சி நிரலை துரோகத்தனமான முதலாளி வர்க்கம் தீர்மானித்து வருகிறது. மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்கள் – விவசாயிகள் நமக்கு, நம் சமூதாயத்தின் வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிப்பதில் எந்தவிதமான பங்கும் இல்லை.

பொருளாதாரத்தின் போக்கு, நமது தேவைகளை நிறைவு செய்வதாக இல்லை. மாறாக, முதலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கும் சுமார் 150 முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களின் தணியாத பேராசையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏகபோக முதலாளிகள் தங்களுடைய தனிப்பட்ட சொத்தாக வைத்திருப்பதைத் தவிர, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் அவர்கள் கூட்டாகக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட பேரரசுகளை விரிவுபடுத்துவதற்கு தேவைப்பட்ட போது பொதுத் துறையை உருவாக்க பொது நிதியைப் பயன்படுத்தினர்; இப்போது அவர்கள் அதிகபட்ச இலாபங்களை அறுவடை செய்ய இந்தப் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயப்படுத்தி வருகிறார்கள்.

பாராளுமன்ற சனநாயகத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் பிரதிபலிப்பாக ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அரசியல் அமைப்பை இந்திய முதலாளி வர்க்கம் பாதுகாத்து மேலும் செம்மைப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பில், பெரும்பான்மையான மக்கள் அரசியல் அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களித்து, பெரும்பாலும் முதலாளி வர்க்கக் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே மக்களின் ஒரே பங்காக இருந்து வருகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த “மக்கள் பிரதிநிதிகளுக்கு” அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய எந்தக் கடமையும் இல்லை. முடிவெடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்குள்ளும் அது பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் கைகளில் குவிந்துள்ளது.

தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் என்ற மக்கள் விரோத திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரத்தில் உள்ள முதலாளி வர்க்கம் இந்த நேரத்தில் பாஜகவை நம்பியுள்ளது. பாஜக மதிப்பிழந்தவுடன், அவர்கள் அதே போக்கைத் தொடர வேறு சில கட்சிகளைப் பயன்படுத்துவார்கள். தற்போதுள்ள அமைப்பில் தேர்தல்கள் முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தை நியாயப்படுத்த மட்டுமே உதவுகின்றன. எந்தக் கட்சி அரசாங்கத்தை அமைத்தாலும், அது ஏகபோகக் குடும்பங்களால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துகிறது. எனவே, பாஜகவை அகற்றுவதோடு மட்டுமின்றி, முதலாளி வர்க்கத்தை அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் நாம் நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களை, தங்களுக்கென எந்தவிதமான உற்பத்தி சாதனங்களும் இல்லாத கூலித் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது, இப்போது, ​​இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்கள், விவசாயிகளின் விளைபொருட்களையும் நிலங்களையும் பேராசையுடன் கண் வைத்து வருகின்றன. விவசாய பொருட்களின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் கையிருப்பைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் விரும்புகிறார்கள். அதன் மூலம் இந்த மிகப் பெரிய சந்தையிலிருந்து அதிகபட்ச லாபத்தைக் கைப்பற்ற அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்திய மக்கள் நாம், அதிகாரத்தைக் கைப்பற்றி, நம் அனைவரையும் கொள்ளையடிப்பவர்களுடன் கணக்கைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ ஏகபோகங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கம் நமது நிலத்தையும் உழைப்பையும் சுரண்டுவதற்கும் கொள்ளையடிப்பதற்குமான அதிகாரம் பறிக்கப்படுவதை உறுதி செய்ய தொழிலாளர்கள் – விவசாயிகள் நாம் அணி திரள வேண்டும். சமுதாயத்தின் ஒரு புதிய அமைப்பிற்கு – நமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு நாம் அடித்தளமிட வேண்டும்.

புதிய இந்தியாவிற்கான விடிவெள்ளியை தில்லியின் எல்லைகளில் நாம் காணலாம். எதிர்ப்பு ஆர்பாட்டக் களங்களில் என்ன நடக்கிறது என்பது, முதலாளி வர்க்கமும் அதன் அரசியல்வாதிகளும் இன்று நாட்டை எப்படி ஆளுகிறார்கள் என்பதை விட மக்கள் எவ்வாறு தங்களைத் தாங்களே மிகச் சிறப்பாக ஆண்டுகொள்ள முடியும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் ஏகாதிபத்தியத்தின் பிற கருத்தியலாளர்களும் முதலாளித்துவ சந்தையில் மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை பரப்புகின்றனர். தனியார் இலாப அதிகரிப்பையும், மற்றவர்களை மிதித்துத் தள்ளி முன்னேறுவதையும், மிகவும் சுயநலமான நடத்தையையும் “மனித இயல்பு” என்று அவர்கள் முன்வைக்கின்றனர். மாறாக, தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒரு உயர்ந்த பண்பைக் காட்டுகிறார்கள். அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்வதற்காக ஒத்துழைப்பதன் அடிப்படையில் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் இந்த நாட்டை ஆளத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டுகிறார்கள். மறுபுறம், முதலாளி வர்க்கம் ஆட்சி செய்ய தகுதியற்றது என்பதை அதுவே காட்டியிருக்கிறது. முன்னோக்கிச் செல்வதற்கான இந்திய சமுதாயத்தின் இயக்கம் முதலாளி வர்க்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தொழிலாளி – விவசாயிகளின் ஆட்சி அதிகாரம் நிறுவப்பட வேண்டும் என்றும் கோருகிறது.

தொழிலாளி – விவசாயிகள் நாம், முதலாளி வர்க்கத்தின் கைகளிலிருந்து உற்பத்தி மற்றும் பரிமாற்றத்திற்கான முக்கிய சாதனங்களைக் கைப்பற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். அவற்றை நாம் சமூக உடைமையாக நம் கூட்டு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

தற்போதுள்ள முதலாளி வர்க்க அரசுக்கு பதிலாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒரு புதிய அரசை நாம் நிறுவ வேண்டும். தற்போதைய முதலாளி வர்க்க சனநாயக அமைப்பை மாற்றி, உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் அரசியல் அதிகாரத்தைச் செலுத்தக் கூடிய ஒரு நவீன அமைப்பை நிறுவ வேண்டும். இந்திய அல்லது வெளிநாட்டு எந்தவொரு தனியாருடைய நலத்திற்காகவும், நமது வளங்களைச் சுரண்டுவதையும் கொள்ளையடிப்பதையும் தடைசெய்யும் சட்டங்களை நாம் இயற்ற முடியும். அப்போதுதான் அனைவருக்கும் வளமையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

தொழிலாளர் மற்றும் விவசாய அமைப்புக்கள், வரும் வாரங்களில் நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், சனவரி 26 – இந்தியக் குடியரசு நாளன்று தில்லியின் வீதிகளில் டிராக்டர் பேரணியை நடத்துவதெனவும் தங்கள் தீர்மானத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு முழு மூச்சோடு வேலை செய்யுமாறு நாடெங்கிலும் உள்ள மக்களை கம்யூனிஸ்ட் கெதர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் நாம், ஒரு செங்கோன்மைக்காக போர் நடத்தி வருகிறோம். இது, ஒரு சிறுபான்மையினருடைய வளமைக்கு மட்டுமே உத்திரவாதமளிக்கும் தற்போதுள்ள கொடுங்கோல் குடியரசுக்கு எதிரான போராட்டமாகும். இது சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் வளமைக்கும், பாதுகாப்பிற்கும் உத்திரவாதமளிப்பதையும், செங்கோன்மையையும் உயர்த்திப் பிடிக்கும் ஒரு குடியரசை நிறுவுவதற்கானப் போராட்டமாகும்.

மூன்று விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்!
தொழிலாளி – விவசாயி ஒற்றுமை ஓங்குக!
தொழிலாளி – விவசாயி ஆட்சியை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்கொண்டு செல்வோம்!
புரட்சி ஓங்குக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *