விஸ்ட்ரான் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனங்களில் தொழிலாளர் வேலைநிறுத்தம்

பெருகிவரும் சுரண்டலுக்கு போர்க் குணமிக்க எதிர்ப்பு

எந்த விலை கொடுத்தாவது ‘தொழிலுக்கு ஆதரவான’ சூழலை’ இந்திய மற்றும் வெளிநாட்டு பெரிய முதலாளிகளுக்கு உறுதி செய்வதற்காக மோடி அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் அண்மையில் கர்நாடகாவில் தொழிலாளர்களிடமிருந்து ஒரு போர்க்குணமிக்க எதிர்ப்பை சந்தித்துள்ளன.

டிசம்பர் 12 ம் தேதி, அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐ-போன்களையும் பிற சாதனங்களையும் தயாரிக்கும் பெங்களூருக்கு அருகிலுள்ள நரசாபூரில் உள்ள தைவானுக்கு சொந்தமான விஸ்ட்ரான் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் எதிர்ப்பு வெடித்தது. தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மறுக்கப்படுவதையும், உற்பத்தி திறன் என்ற பெயரில் அதிகரித்து வரும் சுரண்டலையும் அவர்களால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களது இந்த நடவடிக்கை பெங்களூருக்கு அருகிலுள்ள பிடாடியில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் இதே போன்ற சுரண்டல் நிலைமைகளுக்கு எதிராக பல வாரங்களாக நடத்திவரும் வேலைநிறுத்தப் பின்னணியில் நடந்திருக்கிறது.

விஸ்ட்ரோனில் ஏற்பட்ட ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் கிட்டத்தட்ட 300 தொழிலாளர்களை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். ஆப்பிள் மற்றும் மாநில அரசாங்கத்தின் சொந்த விசாரணை அறிக்கை, விஸ்ட்ரானால் கடுமையாக சட்ட மீறல்கள் நடந்துள்ளன என்றும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், எடியூரப்பா அரசாங்கம் வெட்கமின்றி, தொழிலாளர்களின் நடவடிக்கை ‘முதலீட்டுக்கு ஆதரவான மாநிலம்’ என்ற கர்நாடகாவின் நற்பெயரை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து மட்டுமே கவலை தெரிவித்துள்ளது. விஸ்ட்ரான் முதலாளிகளுக்கு உற்பத்தியை மீண்டும் துவக்குவதற்கும், தொழிலாளர்களைத் தண்டிப்பதற்கும் அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். இதேபோலவே டொயோட்டா கிர்லோஸ்கர் நிர்வாகம் நடத்திவரும் கதவடைப்பை சட்ட விரோதமானதாக உயர் நீதி மன்றமே குறிப்பிட்டிருக்கும் நிலையிலும் நிர்வாகத்திற்கு  மாநில அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில், இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக மூலதனத்தின் ஆணையின் அடிப்படையில், தொழிலாளி வர்க்கத்தின் போராடிப் பெற்ற உரிமைகளைத் தாக்க இந்திய அரசு எல்லா வகையிலும் முயன்று வருகிறது. மேலும், கோவிட் தொற்று நோயின் சூழ்நிலைமைகளையும், பொது மக்கள் கூடுவதற்கும், பயணிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் குற்றவியாலன முறையில் பயன்படுத்தி, மத்திய மாநில அரசாங்கங்கள் புதிய தொழிற் சட்டங்களை கொண்டு வந்திருக்கின்றன. அவை நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வென்ற பல உரிமைகளை மறுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வெளிநாட்டு மூலதனத்தை இழுப்பதற்காக இந்திய மக்களின் நிலத்தையும் உழைப்பையும் மிகக் குறைந்த விலையில் வழங்குவோமென அவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். விஸ்ட்ரான் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிலாளர்களின் போராட்டங்கள், தொழிலாளி வர்க்கம் தங்களுடைய உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் மீதான இந்த தாக்குதல்களுக்கு அடிபணியத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றன. அரசாங்கம் ‘எடுத்துக் காட்டாகவும்’ மற்றும் ‘அதிக ஊதியம் பெறும்’ தொழில் துறைகள் எனவும் காட்ட முயற்சிக்கும் மிகவும் நவீன தொழில் நுட்பம் கொண்ட மின்னணு மற்றும் வாகன தொழில்களில் இந்த வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

விஸ்ட்ரான் தொழிலாளர்கள் ஏன் கோபமடைந்துள்ளனர்?

விஸ்ட்ரானில் உள்ள தொழிலாளர்கள் படித்த இளைஞர்களும் பெண்களும் ஆவர். அவர்களில் பலர் பொறியியல் பட்டங்கள் அல்லது டிப்ளோமா பெற்றவர்கள் ஆவர். விஸ்ட்ரான் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தபோது, ​​அவர்களில் பலருக்கு மாதத்திற்கு ரூ. 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் உண்மையில் அவர்கள் ரூ 8000-லிருந்து ரூ. 5000 வரை மட்டுமே பெறுகிறார்கள். அவர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தங்களைச் செய்வதன் மூலமும், அல்லது அவர்களின் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மதிக்க மறுப்பதன் மூலம் இவ்வளவு குறைவான ஊதியம் அவர்களுக்குத் தரப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் 12,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். விஸ்ட்ரான் அதிகாரிகளால் அவர்கள் வேலைக்காக நேர்காணல் செய்யப்பட்டபோது, ​​தொழிலாளர்கள் நேரடியாக நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் சுமார் 1,300 தொழிலாளர்களைத் தவிர மற்ற அனைவருக்கும், நியமனக் கடிதங்கள் ஆறு வெவ்வேறு ஒப்பந்தக்காரர்களால் வழங்கப்பட்டன. வேண்டுமென்றே செய்யப்பட்ட இந்த மோசடியின் மூலம், வழக்கமான தொழிலாளர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களாக இந்த தொழிலாளர்களை விஸ்ட்ரான் நிர்வாகத்தால் நடத்த முடிகிறது.

வழக்கமான 8 மணிநேர வேலைச் சுற்றுகளில் பணிபுரிவதற்கு பதிலாக, தொழிலாளர்கள் கூடுதல் நேர ஊதியம் கூட இல்லாமல் 12 மணி நேர சுற்றுக்களில் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பல தொழிலாளர்களுக்கு, பகல் சுற்றிற்கு அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 8 மணிக்குப் பிறகு வீடு திரும்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தொற்றுநோய் நிலைமைகளில் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பது என்ற பெயரில் வேலை நேரத்தை நீடித்து அரசாங்கம் கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டங்கள் இப்படிப்பட்ட முதுகெலும்பை முறிக்கும் நீண்ட நேர வேலைக்கு வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. ஒரு குறுகிய மதிய உணவு இடைவேளையும், தேநீருக்காக ஒரு 15 நிமிட இடைவெளியும் தவிர, அனுமதியின்றி கழிப்பறைக்குச் செல்லவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ கூட நகர முடியாது என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவ அல்லது பிற அவசரத் தேவைகளுக்கும் கூட அவர்களுக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலை சூலை மாதத்தில் தான் திறக்கப்பட்டதால், தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் எதுவும் இல்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி நிர்வாகத்தையும், கோலார் மாவட்ட துணை ஆணையரையும், மாநிலத் தொழிலாளர் துறையையும் அணுக பலமுறை முயன்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் தொழிலாளர்களோடு பேச மறுத்த சூழ்நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி தொழிலாளர்களுடைய கோபம் வெடித்தது. இந்த பின்னணி அனைத்தும் அதிகாரிகள் மற்றும் பெரும்பாலான ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு, அதற்கு பதிலாக தொழிலாளர்களின் ‘ஆர்பாட்டத்தில்’ முக்கிய கவனம் செலுத்தியுள்ளன. தொழிலாளர்களின் ஆர்பாட்டத்தினால், விஸ்ட்ரானுக்கு முதலில் ரூ. 437 கோடி இழப்பை சந்தித்ததாகக் கூறினர், ஆனால் அதை விஸ்ட்ரான் நிர்வாகம் இப்போது ஓசையின்றி அதை 53 கோடி ரூபாய் இழப்பாக குறைத்துவிட்டது.

டிசம்பர் 12 க்குப் பிறகு, விஸ்ட்ரோனில் நடந்த ‘வன்முறையால்’ தான் மிகவும் கலக்கமடைந்ததாக மோடி கூறியிருக்கிறார். ஆனால் தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது வெளிநாட்டு முதலாளிகளும், அவர்களுடைய நிர்வாகமும் அப்பட்டமான மோசடிகளையும், நியாயமற்ற தொழில் நடைமுறைகளையும் கையாண்டு வருவது குறித்து அவர் கொஞ்சமும் கலக்கமடையவில்லை. இதே தொழிலாளர் விரோத முதலாளித்துவ ஆதரவு அணுகுமுறையை கர்நாடக முதலமைச்சரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் எதிரொலித்தனர். கர்நாடக அரசாங்கத்தின் சொந்த தொழிற்சாலைகள், கொதிகலன்கள், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையானது, தன் விசாரணை அறிக்கையில், விஸ்ட்ரான் ஆலை செய்த பல சட்டங்கள் மற்றும் விதி மீறல்களை பட்டியலிட்டுள்ள போதிலும், (டிசம்பர் 15, 2020 அன்று டெக்கான் ஹெரால்டு) அவர்களுடைய நிலைப்பாடு தொழிலாளர்களுக்கு எதிராகவே இருக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

கர்நாடகாவிலுள்ள பிடாடியில் உள்ள இரண்டு டி.கே.எம் தொழிற்சாலைகளில், வேலை செய்யும் 6000 தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்களின் குறைகள் பற்றி நிர்வாகத்தை அணுக முயற்சித்த ஒரு தொழிற்சங்க உறுப்பினர் மீது ஒரு பொய்யான வழக்கை சுமத்தி, இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தொழிற்சாலையில் நவம்பர் 9 ஆம் தேதி மோதல் தொடங்கியது. தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட, உடனடியாக நிர்வாகம் கதவடைப்பை அறிவித்தது.

டி.கே.எம் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், விஸ்ட்ரான் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் போன்றவையாகும். குறிப்பாக அது, செயல்திறனை அதிகரிப்பது என்ற பெயரில் தொழிலாளர்கள் மீது சுரண்டலைத் தீவிரப்படுத்துவதாகும். தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமலோ அல்லது கூடுதல் நேர ஊதியத்தைக் கொடுக்காமலேயே, தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து எவ்வித அக்கறையும் இன்றி உற்பத்தியை அதிகரிக்குமாறு நிறுவனம் வற்புறுத்தியுள்ளது. “நிறுவனம் மில்லி விநாடிகளில் வேலையைச் செய்ய முயற்சிக்கிறது” என்று தொழிற் சங்கத் தலைவர் கூறுகிறார். “இது கிட்டத்தட்ட சாத்தியமற்றதும், மனிதாபிமானமற்றதும் ஆகும்”. “டொயோட்டா உற்பத்தி அமைப்பு” என்று அழைக்கப்படுவது, அதிகபட்ச இலாபங்களை அடைவதற்காக செலவுக் குறைப்பை ஒரு சிறந்த கலையாகவே மாற்றும் நோக்கம் கொண்டுள்ளது. இது, உற்பத்தியை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், வழக்கமான தொழிலாளர்களை வேலையை விட்டுப் போகுமாறு செய்ய முயற்சிப்பதன் மூலம், அவர்களுக்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் அடங்கும்.

கர்நாடக முதலமைச்சர் யெடியூரப்பா, கிர்லோஸ்கர் மற்றும் பிற பெரிய முதலாளிகளுடன் நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு கூட்டத்தை நடத்தி, தொழிற்சாலையில் ‘இயல்பு நிலையை’ மீட்டெடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இருப்பினும், 6 வாரங்களுக்கும் மேலாக, வேலைநிறுத்தமும் கதவடைப்பும் தொடர்கின்றன, வேலையைத் தொடங்குவதற்கு நிர்வாகம் விதித்த நிபந்தனைகளை, பெரும்பாலான தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

உற்பத்தியை உலகமயமாக்குவது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது

“மேக் இன் இந்தியா” திட்டத்தின் “எடுத்துக் காட்டுக்களாக” கருதப்படும் இந்த இரண்டு தொழிற்சாலைத் தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளது தற்செயலான நிகழ்வு அல்ல. மத்தியிலும் மாநிலத்திலும் அடுத்தடுத்த வந்துள்ள அரசாங்கங்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு மூலதனம் அதிகபட்ச இலாபம் ஈட்டுவதற்கு மிகவும் சாதகமான நிலைமைகளை எல்லா வழிகளிலும் உருவாக்கி வருகின்றன. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் முயற்சியில், மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள அரசாங்கங்கள் சலுகை விலையில் நிலத்தை வழங்கியுள்ளன, மேலும் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமை, சமூகப் பாதுகாப்பு, கூடுதல் நேரப் படி போன்ற உரிமைகளை மறுப்பதன் மூலமும், வழக்கமான வேலைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதன் மூலமும், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளன. தொழிலாளர்களைச் சுரண்டுதலைத் தீவிரப்படுத்துவதை சட்டப்பூர்வமாக ஆக்குவதற்கு தொழிலாளர் சட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் திருத்த வேண்டும் என்று இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ ஏகபோகங்கள் கோருகின்றன. இந்த நோக்கத்தையொட்டி, தற்போதைய மோடி அரசாங்கம் கோவிட் தொற்றுநோயைப் பயன்படுத்தி, தொழிலாளி வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான மூன்று தொழிற் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

அழுகி நாற்றமடிக்கும் இந்த முதலாளித்துவ சார்புக் கொள்கையை, அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும், “தேசத்தின்” நலன்களுக்கும் அதன் “வளர்ச்சிக்குமானதாக பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் இந்த “தேசம்” என்பது தொழிலாளர்கள் மற்றும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அல்லவா? வேலை செய்பவர்களின் உரிமைகளையும், மாண்பையும், நல்வாழ்வையும் பறிக்கும் இந்த “வளர்ச்சி” எப்படிப்பட்டது? தங்கள் எதிர்ப்புக்கள் மூலம், விஸ்ட்ரான் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிலாளர்கள் இந்திய அரசு மற்றும் முதலாளிகளின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளையும், இவை நாட்டிற்கு நல்லது என்ற பொய்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன. முதலாளி வர்க்கமும் அரசாங்கமும் தங்களுடைய உரிமைகளைத் தாக்கி வருவதைக் கண்டு நமது நாட்டின் தொழிலாளர்கள் அஞ்சி மண்டியிட மறுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *