விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் ஆர்பாட்டம்

மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒரு ஆர்பாட்டத்தை தஞ்சாவூரில் சனவரி 4, 2021 அன்று ஏற்பாடு செய்து நடத்தியது. அதில் பல்வேறு கட்சிகளும், மக்கள் அமைப்புக்களும் பெரும் திரளான இளைஞர்களும், பெண்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தின் நிகழ்வுகளை பனைசை அரங்கன் வழி நடத்தினார். த.ம.பு.க-இன் மாவட்டச் செயலாளர் தோழர் கைலாசம் வரவேற்புரை நிகழ்த்தி ஆர்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். துவக்கத்தில் இந்திய அரசின் விவசாய விரோத சட்டங்களையும், மக்களுடைய உணவுப் பொருட்கள் பாதுகாப்பைப் பாதிப்பதாகவும், பெரும் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழி வகை செய்வதற்காகவும் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டங்களை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதைத் தொடர்ந்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் கோ.திருநாவுக்கரசு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தோழர் மி.த.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் பாஸ்கர், தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் தங்க.குமரவேலு மற்றும் முனைவர் ஜீவானந்தம், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தோழர் கே.கே.ஆர்.லெனின், பெரியார் அம்பேத்கார் மக்கள் கழகத்தின் தோழர் ரெ.செல்வம், தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண் சோரி, சி.பி.எம்.எல் மக்கள் விடுதலைக் கட்சியின் தோழர் ஆர்.அருணாசலம், பெரியார் மையத்தின் தோழர் வழக்கறிஞர் பி.சின்னசாமி, மே-17 இயக்கத்தைச் சேர்ந்த தோழர் இராஜேந்திரன், மக்கள் சனநாயக குடியரசுக் கட்சியின் தோழர் சிவராமன், தமிழர் அறத்தைச் சேர்ந்த தோழர் ஆர்.ராமசாமி, மக்கள் விடுதலை முன்னணியின் தோழர் மனோகரன், உழவர் அரணைச் சேர்ந்த தோழர் அருண் மாசிலாமணி, ஆதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் சதா சிவக்குமார், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் வி.சி.முருகையன், ஆறு.நீலகண்டன், ஈரோடு சூளை தமிழ்ச்செல்வன், திருமுருகன், மா.சின்னத்துரை, அமிர்தலிங்கம், ரெகுபதி ஆகியோரும், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த தோழர் பனைசை அரங்கன், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சின்னப்பா தமிழர் ஆகியோரும் மற்றும் பலரும் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்பாட்டத்தின் நிறைவில் தோழர் அரங்க குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். உரையாற்றிய அனைத்துத் தோழர்களும் இந்திய அரசின் விவசாய விரோதச் சட்டங்களைக் கடுமையாக கண்டனம் செய்தனர். இந்தச் சட்டங்கள் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது குறித்தும், பொது மக்களுடைய உணவு ஆதாரமும், உணவுப் பொருட்களின் விலைகளும் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்தும், பெரும் முதலாளிகளுடைய தலையீட்டை மேலும் தீவிரப்படுத்துவதற்காக வேளாண்மை வணிகத்தைத் திறந்து விடுவதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும், சுற்றுப்புற சூழலில் ஏற்படும் மோசமான தாக்கம் குறித்தும், பொது வினியோக முறை அழிக்கப்படுவது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இத்தகைய மக்கள் விரோத, விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து கோடிக்கணக்கான விவசாயிகள் தில்லியிலும், நாடெங்கிலும் தீவிரமாகப் போராடி வந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் மத்திய அரசாங்கம், பெரும்பான்மையான இந்த மக்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் பெரு முதலாளி வர்க்கத்தின் பேராசையை நிறைவேற்றுவதிலேயே அக்கறை காட்டுவதை வன்மையாகக் கண்டித்தனர். இப்படிப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு மக்களாட்சியாக எப்படி இருக்க முடியுமென அவர்கள் கேள்வி எழுப்பினர். தொழிலாளர்களும், விவசாயிகளும், இளைஞர்களும், பெண்களும் திரண்டெழுந்து விவசாய விரோத சட்டங்களுக்கு மட்டுமின்றி இந்த சுரண்டல் அமைப்பிற்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை பலரும் சுட்டிக் காட்டினர். இந்த பிற்போக்கான பெரும் முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவான, விவசாய விரோதச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்யவில்லையானால், நாடு தழுவிய போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவோமென அனைவர் சார்பிலும் தோழர் அரங்க குணசேகரன் உறுதிபட அறிவித்தார்.

கண்டன ஆர்பாட்டத்தின் இறுதியில் இந்தச் சட்டங்களுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய – மாநில அரசாங்கங்களுக்கு எதிராகவும் போர்க்குணமிக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *