அரசின் அடக்குமுறைகளை மீறி தஞ்சையில் விவசாயிகளின் மாபெரும் பொதுக்கூட்டம்

விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய மாட்டோமென ஆணவத்தோடு செயல்படும் அரசாங்கத்திற்கு எதிராக தஞ்சை திலகர் திடலில் கூடி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்த விவசாய விரோதச் சட்டங்களை எதிர்க்கவும், தில்லியில் இதே நோக்கத்திற்காக கடந்த 36 நாட்களாகப் போராடிவரும் பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கவும் தஞ்சையில் தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்களுடைய ஒரு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 29, 2020 அன்று நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல் விடுத்திருந்தது. தமிழக விவசாயிகள் சங்கம் உட்பட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பு சங்கங்கள் இந்த அழைப்பை ஏற்று பேரணிக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இந்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடெங்கிலும் தங்களுடைய கடுங்கோபத்தை விவசாயிகள் வெளிப்படுத்தியிருப்பதோடு, அவற்றை ரத்து செய்வதற்காகப் போராடுவதில் தீவிரமாக இருக்கின்றனர்.

தமிழக விவசாயிகளுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்தச் சட்டங்களை எதிர்ப்பதற்கு பதிலாக, முதலாளி வர்க்கம் விவசாயிகளைக் கொள்ளையடிப்பதற்கு மேலும் வழிவகுக்கும் இந்தச் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. மோடி-க்கு தன் விசுவாசத்தைக் காட்டுவதற்காக தமிழக முதலமைச்சர் விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை எதிர்த்து வருகிறார். பல சாக்குபோக்கான காரணங்களைக் கூறி காவல்துறை, விவசாயிகளுடைய தஞ்சைப் பேரணிக்கு அனுமதியை மறுத்து விட்டது. நிகழ்ச்சியை எப்படியாவது நடத்த வேண்டுமென்பதற்காக, அமைப்பாளர்கள் பேரணியை ரத்து செய்துவிட்டு பொதுக் கூட்டத்தை மட்டும் நடத்த ஒப்புக் கொண்டனர். ஆனால் காவல் துறை விவசாயிகளுடைய இந்த மக்கள் திரள் பொதுக்கூட்டத்தையும் நடத்துவதற்குத் தடைகளை ஏற்படுத்தினர். தமிழ்நாடெங்கிலும் பல விவசாய சங்கத் தலைவர்களையும், செயற்பாட்டாளர்களையும் காவல்துறை கைது செய்தது. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலுமிருந்து பெரும் எண்ணிக்கையில் தனிப்பட்ட வேன்களிலும் பிற ஊர்திகளிலும் தஞ்சை நோக்கி வந்த விவசாயிகளை காவல்துறை, மாவட்ட எல்லையில் வழி மறித்து அவர்களைக் கைது செய்தது.

அரசின் இந்த அடக்குமுறைகளை மீறி தஞ்சை திலகர் திடலில் குறிப்பிட்ட நேரத்தில் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். திடலில் எங்கு நோக்கினாலும் விவசாயிகள் ஏந்தி வந்த சிவப்பு, பச்சை வண்ண சங்கக் கொடிகள் வண்ணம் தீட்டப்பட்டது போல ஒளிர்ந்தது. விவசாய விரோத, மக்கள் விரோத, பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு சட்டங்களை இயற்றியிருப்பதையும், அதற்கு மாநில அரசாங்கம் கொடுக்கும் ஆதரவையும் வன்மையாகக் கண்டித்து கூடியிருந்தவர்கள் பெரும் முழக்கங்களை எழுப்பினர்.

தூத்துக்குடி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவராகிய தோழர் ஈ.சரவணமுத்துவேல், ஒட்டப்பிடாரம் – பசுவந்தனை வட்டார விவசாயிகளோடு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். விவசாயிகளுடைய இந்த நியாயமான போராட்டத்தை ஆதரித்து தமிழக விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட துண்டறிக்கைகளை அங்கு வினியோகித்தனர்.

இந்த மாபெரும் கூட்டத்திற்கு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தில்லியின் எல்லையில் பங்கேற்று அரசாங்கத்தின் அடாவடித்தனத்தால் குளிருக்கு பலியாகி உயிரிழந்த 40க்கும் மேற்பட்ட விவசாய தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கூட்டம் துவங்கியது.

தோழர் க. பாலகிருஷ்ணன் மட்டுமின்றி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாட்டின் தோழர் என்.வி.கண்ணனும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தோழர்கள் சண்முகம், சாமி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ். குணசேகரன் மற்றும் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோரும், சிபிஐ-யைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் தோழர் எம். செல்வராஜ், திமுக-வின் சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திமுக-வின் முன்னாள் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் தோழர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் தோழர் சிம்சன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஆ.ரங்கசாமி, வாழ்க விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் பி.எஸ்.காளிராஜ், காவிரி பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தோழர் கே.வீ.இளங்கீரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தோழர் அக்ரி கா.பசுமைவளவன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், தமிழ்நாடு பெண்கள் கூட்டுக் குழுவின் தோழர் ஷீலு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தோழர் பொழிலன், மக்கள் அதிகாரத்தின் தோழர் காளியப்பன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர் ஆடுதுறை முருகன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தோழர் பா.பாலசுந்தரம் மற்றும் பலர் உரையாற்றினர்.

பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டங்களால், இந்திய விவசாயகளுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான பாதிப்புகள் குறித்து எல்லா தலைவர்களும் விரிவாக எடுத்துக் கூறினார்கள். விதைகள், உரங்கள், பூச்சுக் கொல்லி மருந்துகள், பாசன நீர், மின்சாரம், வட்டி விகிதம் போன்றவற்றாலும், நிலையற்ற சந்தை விலைகள், பருவமழை போன்றவற்றாலும் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுடைய மோசமான நிலைமையைச் சீர்செய்வதற்கு மாறாக அரசாங்கம் விவசாயிகளுடைய சிறிய உடமைகளையும் உழைப்பையும் பெரும் முதலாளிகள் மேலும் கொள்ளையடிப்பதற்கு கதவுகளைத் திறந்து விட்டு வருகிறது.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசாங்கம் கொள்முதல் செய்வதற்கான உத்திரவாதம், பயிர் காப்பீடு, போன்றன மறுக்கப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். இவை மட்டுமின்றி எல்லா முக்கிய உணவுப் பொருட்களும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்திலிருந்து நீக்கப்படுவதால் பெரும் தொழில் நிறுவனங்களின் பதுக்கல் போன்ற நடவடிக்கைகள் காரணமாகவும், இலாப வெறிக்கும், சூழ்ச்சியாக விலைகள் உயர்த்தப்படுவதற்கும் நம்முடைய மக்கள் ஆளாக நேரிடும். இந்தச் சட்டங்கள் மாநில அரசாங்கங்களுடைய அதிகாரங்களை மேலும் பலவீனப்படுத்தி வேளாண்மையை மத்திய அரசின் உடும்புப்பிடியின் கீழ் மேலும் குவிக்கிறது. அரசாங்கம், மிகப் பெரும்பான்மையான விவசாயிகளுடைய நலன்களைப் பாதுகாக்க வேண்டுமே ஒழிய இலாப வெறி கொண்ட சில பெரும் முதலாளிகளுடைய நலன்களை அல்ல என்று பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

மோடி கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் தமிழக முதலமைச்சருடைய அடிமைத்தனமான போக்கை பேச்சாளர்கள் வன்மையாகக் கண்டித்தனர். தமிழ்நாடெங்கிலும் விவசாயிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையான நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கும், தஞ்சையில் நடைபெறும் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் மேலும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் பங்கேற்பதைத் தடுத்திருப்பதற்கும் தமிழக அரசை அவர்கள் கண்டனம் செய்தனர். தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டுமென்றும், இந்த விவசாய விரோத, மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.

இந்தச் சட்டங்களை அரசாங்கம் ரத்து செய்யும்வரை தில்லியில் போராடும் விவசாயிகளோடு சேர்ந்து தமிழக விவசாயிகளும் தங்களுடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்துவார்களென ஏஐகேஎஸ்சிசி-தநா வின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.பாலகிருஷ்ணன் அறிவித்தார். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக சென்னையில் தமிழக விவசாயிகள் அனைவரும் அணிதிரள்வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

காவல்துறையும், தமிழக அரசும் ஏற்படுத்திய தடைகளையும், ஒடுக்குமுறைகளையும் முறியடித்து பல்லாயிரக் கணக்கில் தஞ்சை திலகர் திடலில் அணி திரண்ட எல்லா விவசாயிகளுடைய முகத்திலும் கோபத்தையும், சட்டத்தை ரத்து செய்வதென்ற உறுதியையும் காண முடிந்தது. இந்த போர்க் குணமிக்க மாபெரும் பொதுக் கூட்டத்தின் மூலம், தமிழக விவசாயிகள் மோடிக்கும் அவருடைய கும்பலுக்கும், இந்தியப் பெரும் முதலாளிகளுக்கும் அநீதியான சட்டங்களையும், காட்டாட்சியின் நடவடிக்கைகளையும் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்களெனவும், அவற்றை உடனடியாகப் பின்வாங்க வேண்டுமென்றும் மிகவும் தெள்ளத்தெளிவான கடுமையான எச்சரிக்கையை அனுப்பியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *