விவசாயிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் ஆர்பாட்டம்

அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை எதிர்க்கவும், தில்லியில் விவசாயிகள் போர்க்குணத்தோடு நடத்திவரும் ஆர்பாட்டத்திற்கு ஆதரவளிக்கவும் இந்தியாவெங்கிலும் திசம்பர் 14,15 மற்றும் 16 தேதிகளில் ஆர்பாட்டங்களைத் தீவிரப்படுத்துமாறு பல்வேறு விவசாய சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன. இந்த அறைகூவலை ஏற்று தமிழ்நாடெங்கிலும் உள்ள விவசாய சங்கங்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்னர் போர்க்குணமிக்க காத்திருப்பு ஆர்பாட்டங்களை நடத்தினர்.

திசம்பர் 14 அன்று காலை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்னர் ஒன்று கூடினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பல பிற அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தைத் திட்டமிட்டு நடத்தினர். தத்தம் சங்கக் கொடிகளை ஏந்தியவாறு விவசாயிகள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். “விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தங்களுடைய முழு ஆதரவைத் தெரிவிப்பதாகவும் அறிவிக்கும் பொதுவான தட்டியை அவர்கள் ஏந்தியிருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் வெளியிலிருந்தும் இந்த ஆர்பாட்டத்திற்கு விவசாயிகள் வந்திருந்தனர். இந்த மறியல் போராட்டத்தில் பெண் விவசாய செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “விவசாய விரோத சட்டங்கள் ஒழிக”, ”எல்லா விவசாய விரோத சட்டங்களையும் ரத்து செய்”, “விவசாயிகளுடைய உரிமைகளை நசுக்காதே”, “பெரும் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் அரசாங்கம் ஒழிக”, “கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்”, ”தில்லியில் போராடும் விவசாயிகளைத் தாக்குவதை நிறுத்து”, “இன்குலாப் ஜிந்தாபாத்” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்பாட்டத்திற்கு அனைத்திந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்   தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளரான தோழர் நெல்லையா தலைமை தாங்கினார். அவர் இந்தியாவில் விவசாயிகளுடைய மோசமான நிலைமையையும், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எதிராக இருப்பதையும் விளக்கிக் கூறினார். அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட வேண்டிய உடனடித் தேவையையும் விவசாய விரோத சட்டங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து தோழர் கே.பி.பெருமாள் உரையாற்றினார். இலாப வெறி பிடித்த பெரும் நிறுவனங்களின் பேராசையை நிறைவேற்றுவதற்காக, இந்த விவசாய விரோத சட்டங்களைக் கொண்டு வந்துள்ள அரசாங்கத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார். இந்த விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக தில்லியிலும், நாடெங்கிலும் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தின் முன்னர் அமைதியாகப் போராடுவதற்காக நாம் திரண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட அமைதியான ஆர்பாட்டங்களைக் கூட காவல் துறையும் அதிகாரிகளும் அனுமதிக்க மறுப்பது மிகவும் அநியாயமானதாகும். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரின் சார்பாக, இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம் என்றும், இந்தச் சட்டங்களை அரசாங்கம் பின்வாங்கும் வரை கலைந்து போக மாட்டோம் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

விவசாயிகள் அங்கு கூடுவதற்கும், மறியல் செய்வதற்கும் எந்த அனுமதியும் இல்லையென்றும், காவல்துறை அவர்களைக் கைது செய்வதற்கு எவ்வித எதிர்ப்பும் இன்றி அவர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் காவல் துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவராகிய சரவண முத்துவேல் உட்பட எல்லா தலைவர்களையும், ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்களையும் கைது செய்து கொண்டு சென்றனர்.

விவசாயிகளுடைய மோசமான நிலையையும், அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் பாதிப்புகளையும் விளக்கி, இந்தச் சட்டங்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரி, தமிழக விவசாயிகள் சங்கமும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்களிடம் வினியோகிக்கப்பட்டது. அதை அவர்கள் ஆர்வத்தோடு படித்துப் பார்த்தனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திலும், தமிழகமெங்கும் நடைபெறும் விவசாயிகளுடைய பிற ஆர்பாட்டங்களிலும், இந்திய அரசாங்கத்தின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் தமிழக விவசாயிகளின் விடாப்பிடியான உறுதியைக் காண முடிந்தது. ஆர்பாட்டம் திட்டமிட்டவாறு 15 மற்றும் 16 ஆம் தேதிகளிலும் தீவிரமாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *