ஏகபோக முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுவதில் அரசாங்கம் விடாப்பிடியாக நிற்கிறது

தொழிலாளர்கள் – விவசாயிகளின் போராட்டம் ஒரு தர்ம யுத்தம் ஆகும்!

அதர்மத்தின் ஆட்சியை முறியடிக்க போராட்டத்தை முன்னே கொண்டு செல்வோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறைகூவல், 17 டிசம்பர், 2020

பாராளுமன்றம் அண்மையில் நிறைவேற்றிய விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று கோரி இந்தியாவின் தலைநகரை விவசாயிகளுடைய போராட்டம் முற்றுகையிட்டிருப்பது பற்றி உலகெங்கிலும் மக்கள் பேசி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் ஆர்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில் குவிந்து வருவதால் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து விவசாயிகள் வந்துள்ளனர். பல நூற்றுக் கணக்கான கி.மீ தூரத்திலுள்ள ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பிற இடங்களிலிருந்து அவர்கள் வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் வந்து சேர்ந்துள்ளனர். தொழிற் சங்கங்களும் மாணவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

மக்கள் தொகையில் பெரும்பான்மையாக தொழிலாளர்கள், விவசாயிகள் நாம் இருக்கிறோம். நாட்டின் செல்வத்தை நாம் உருவாக்குகிறோம், மக்களுக்கு உணவளித்து, அவர்கள் அணிந்து கொள்ள ஆடைகளை உற்பத்தி செய்து தருகிறோம். இருப்பினும் பாராளுமன்றத்தில் நம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறுபவர்கள் நமது விருப்பங்களுக்கு மதிப்பளிக்கவில்லை. நம்முடைய உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கவில்லை.

இன்று வரை அரசாங்கத்தின் முன்னணி செய்தித் தொடர்பாளர்கள், நாம் எதிர்க்கட்சிகளால் தவறாக வழிநடத்தப்படுவதாகக் கூறி விவசாயிகளுடைய போராட்டத்தை அவமதித்து வருகின்றனர். தேச விரோத சக்திகளும் பயங்கரவாதிகளும் நமது போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக பொய்யை மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அவர்கள், பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவான இந்த சட்டங்களை திருத்த முடியுமே ஒழிய ரத்து செய்ய முடியாது என்று அறிவிக்கிறார்கள்.

தில்லி எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களிடம் பேசுவது கூட முக்கியமல்ல என்று பிரதமர் கருதுகிறார். நம்முடைய எதிர்ப்பு ஆர்பாட்டம் 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், குஜராத் சென்றுள்ள பிரதமர், புதிய சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறுகிறார்.

அரசாங்கத்தின் நோக்கத்தில் நேர்மை இல்லை

புதிய சட்டங்களின் நோக்கமானது விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்று நமது நாட்டு மக்களை நம்ப வைக்க மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர்கள் முயற்சிக்கின்றனர். அது அவர்களின் உண்மையான நோக்கமானால், இந்த சட்டங்களை இயற்றுவதற்கு முன்னால் அவர்கள் ஏன் விவசாய அமைப்புகளுடன் எந்த விவாதத்தையும் நடத்தவில்லை?

ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்தச் சட்டங்களை முதன்முதலில் மசோதாக்களாக அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளிடமிருந்து மிகப் பெரிய அளவில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. நம்முடைய விருப்பத்திற்கு எதிராகவும், நம் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மோடி அரசாங்கம் மூன்று சட்டங்களை பாராளுமன்றத்தின் மூலம் திணித்திருக்கிறது. அரசாங்கத்தின் நோக்கத்தில் நேர்மை இல்லை என்பதை இது காட்டுகிறது. அரசாங்க செய்தித் தொடர்பாளர்கள் நம்முடைய நலன்களையே அவர்கள் நெஞ்சில் கொண்டுள்ளதாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய சொல்லும் செயலும் வெவ்வேறாக இருக்கின்றன.

2014 இல் பிரதமர் மோடி பொறுப்பேற்ற உடனேயே, தனது அரசாங்கம் அனைவருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தார். அவரது அரசாங்கம் சொத்து வரியை ரத்து செய்ததோடு, பெரும் நிறுவன வரி விகிதத்தை 2016-17 வரவு – செலவுத் திட்டத்தில் குறைத்தது. இவை அனைத்தையும் முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களை மேலும் கொழுக்கச் செய்வதற்காக அது செய்திருக்கிறது.

நவம்பர் 2016 இல் பண மதிப்பு நீக்கத்தை அறிவித்த பிரதமர், அதனுடைய நோக்கமானது வருமானம் மற்றும் செல்வத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதும், ஊழலுக்கு எதிராகப் போராடுவதும் ஆகும் என்று கூறினார். ஆனால், வருமானம் மற்றும் செல்வத்தின் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதோடு, ஊழல் முன்பு போலவே பரவலாக உள்ளது.

ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, 63 இந்திய பில்லியனர்களின் மொத்த செல்வம் 2018-19ல் 25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது அந்த ஆண்டு இந்திய அரசின் மொத்த செலவினத்தை விட அதிகமாகும். 2019 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகையில் 1 சதவீத மக்கள் கைகளில் இந்தியாவின் மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட 75 சதவீதத்தை வைத்திருந்தனர். மக்கள் தொகையில் மிகவும் ஏழ்மையான 5 சதவீதத்தினர் 2014 மற்றும் 2019 க்கு இடையில் 4.7 சதவீதம் மேலும் ஏழ்மையாகி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது

நடப்பு 2020 ஆம் ஆண்டில் பொது முடக்கத்தைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வேலை இழப்புகளையும், ஊதிய வெட்டுக்களையும் வருமான சரிவையும் சந்தித்து வருகின்ற நிலையில், பெரும் செல்வந்தர்கள் தொடர்ந்து தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொண்டு வருகின்றனர். நாட்டின் மொத்த வருமானம் 25 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இந்த பகாசூர கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தை 35 சதவீதம் அதிகரித்துள்ளனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவனான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான செல்வம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் ரூ. 3,00,000 கோடியாக இருந்தது, செப்டம்பரில் ரூ. 6,00,000 கோடி ரூபாயாக இருமடங்காக அதிகரித்திருக்கிறது.

பேச்சும், செயலும் நேரெதிராக நடத்தி வருவதில் நரேந்திர மோடி முதல் பிரதமர் அல்ல.. மன்மோகன் சிங் மனித நேயத்துடன் கூடிய முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்தார். ஆனால் 2004-14 காலகட்டம் டாடா-க்கள், ரிலையன்ஸ், பிர்லாக்கள் மற்றும் பிற ஏகபோக நிறுவனங்களின் மிக விரைவான உலகளாவிய விரிவாக்கத்தைக் கண்டது. மேலும் இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்கள் விவசாய சந்தைகளில் ஊடுருவுவதைத் தீவிரப்படுத்திய கால கட்டமும் இதுவாகும். இது விவசாய வருமானம் வீழ்ச்சியடைவதற்கும், கடன் சுமை அதிகரிப்பதற்கும், விவசாயிகளிடையே தற்கொலைகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது.

1991 இல் தாராளமய, தனியார்மயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே, அடுத்தடுத்து வந்த பிரதமர்கள் இழப்பீட்டை உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே தனியார்மயமாக்கப்படும் என்று கூறி வந்துள்ளனர். இது மக்களை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட பொய்யான பரப்புரையே தவிர வேறில்லை.

அரசாங்கத்திற்கு சொந்தமான பல நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்காக, அவை வேண்டுமென்றே நட்டத்தில் இயக்கப்பட்டன. இப்போது கோல் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட மிகவும் இலாபகரமான நிறுவனங்கள் கூட தனியார் இலாப வேட்டைக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன. அடுத்தடுத்த அரசாங்கங்கள் இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று அறிவித்தன. இப்போது மிகவும் இலாபகரமான தடங்கள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. தனியார்மயமாக்கலுக்கு முன்னோடியாக பல பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

முதலாளித்துவ வளர்ச்சி விவசாயிகளுடைய வருமானத்தை உயர்த்தாது

விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்குவதும் தனியார்மயமாக்குவதும் ஏகபோக பெரும் நிறுவனங்களின் திட்டமாகும். சந்தையில் “சுதந்திரமான போட்டியை” அனுமதிப்பது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பயனளிக்கும் என்ற மோசடியான கோட்பாட்டின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. முதலாளித்துவத்தின் விரைவான வளர்ச்சி, விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்க வழிவகுக்கும் என்ற பொய்யை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அரசின் எந்தக் கட்டுபாடும் இல்லாத ஒரு சுதந்திர சந்தை என்ற கருத்தானது, முதலாளித்துவம் இன்னும் அதன் ஏகபோக கட்டத்திற்கு வளர்ச்சியடையாத 19 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அந்த நேரத்தில், பொருட்களின் சந்தையில் பெரும் எண்ணிக்கையிலான விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் சந்தையில் ஒரு சிறிய பங்கு மட்டுமே இருந்ததால் அவர்களால் பொருட்களின் விலையில் எந்தச் செல்வாக்கையும் செலுத்த முடியவில்லை. 20 ஆம் நூற்றாண்டில் சந்தையிலுள்ள பெரும்பாலான பொருட்களுக்கான மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் பூதாகரமான ஏகபோக நிறுவனங்கள் தோன்றியதால் சந்தைகளின் தன்மை மாறியது.

நம் நாட்டில் வேளாண் பொருட்களுக்கான சந்தையில் தற்போது 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் 2 லட்சத்துக்கும் குறைவான வர்த்தகர்களுக்கு விற்று வருகிறார்கள். சமீபத்தில் இயற்றப்பட்ட மத்திய சட்டங்கள் விவசாய சந்தைகளில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான சமத்துவமற்ற உறவை மேலும் தீவிரப்படுத்தும். வால்மார்ட், அமேசான், ரிலையன்ஸ் ரிடெயில், ஆதித்யா பிர்லா ரிடெயில், டாடாவின் ஸ்டார் இந்தியா, அதானி வில்மார், பிக் பஜார் மற்றும் டி-மார்ட் உள்ளிட்ட ஒரு சில பூதாகரமான நிறுவனங்கள் சிறு வணிகர்களில் பெரும்பாலோரை வணிகத்திலிருந்து வெளியேற்றும்.

விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பயனளிப்பதற்கு மாறாக, விவசாய வர்த்தகத்தை தாராளமயம் தனியார்மயமாக்குவது இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும். விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விலைகளை இந்த ஏகபோக நிறுவனங்கள் தம் விருப்பம்போல தீர்மானிக்கவும், வேளாண் பொருட்களையும் பதுக்கி வைத்து அதிக சில்லறை விலையில் விற்கவும் முடியும்.

சனநாயகம் என்ற பெயரில் முதலாளி வர்க்க சர்வாதிகாரம்

நம் நாடு, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சனநாயக நாடு என்று அழைக்கப்படுகிறது. ஆனால், தங்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும் வழிமுறையிலிருந்து பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். நம்முடைய குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. தங்கள் உரிமைகளை விடாப்பிடியாகக் கோருகின்றவர்கள், தேச விரோதிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

தற்போது இருப்பது மக்களாலோ அல்லது மக்களுக்காகவோ நடத்தப்படும் ஆட்சி அல்ல. நமது நலன்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதில்லை. நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் மீது நமக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. பாராளுமன்றம் நம்முடைய நலன்களுக்கு முற்றிலும் எதிரான சட்டங்களை இயற்றுகிறது.

சுமார் 150 ஏகபோக குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறது. உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தின் முக்கிய உற்பத்தி சாதனங்களை அவர்கள் தம் உடமையாகக் கொண்டு, கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் தான் நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்க கொள்கை மற்றும் சட்டங்களின் போக்கைத் தீர்மானிக்கின்றனர். அவர்களுடைய இந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த எந்த கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அரசாங்க பொறுப்பை கொண்டிருக்கும் கட்சி, ஏகபோகக் குடும்பங்களின் தலைமையிலான முதலாளி வர்க்கத்திற்கான நிர்வாகக் குழுவாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற ஆரம்ப ஆண்டுகளில், இந்திய தொழில் நிறுவனங்களிடம், பெருவீத தொழில் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப் போதுமான மூலதனம் இல்லை. எனவே, பம்பாய் திட்டம் என்று அழைக்கப்படும் டாடா-பிர்லா திட்டத்தையொட்டி, ஒரு பொதுத் துறையை உருவாக்க அரசின் பொது நிதியைப் பயன்படுத்துவதென அவர்கள் முடிவு செய்தனர். இந்திய சந்தையில் தங்கள் சொந்த ஆதிக்கத்தை நிலைநாட்டுதற்காக, வெளிநாட்டு பொருட்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் இறக்குமதியை கட்டுப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர். இதை ஒரு சோசலிச பாணி சமுதாயத்தை உருவாக்குவதற்கான திட்டம் என்று அவர்கள் மக்களிடம் பரப்புரை செய்தனர்.

அரசு நிதியின் ஆதரவோடு முதலாளித்துவ வளர்ச்சியால் பயனடைந்த ஏகபோக முதலாளிகள் 1980 களில் அந்நியச் செலாவணி உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டனர். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குதல் காரணமாக, அவர்கள் அனைத்து சந்தைகளையும் வெளிநாட்டு மூலதனத்திற்கு திறந்து விடவும், மலிவான விலையில் பொதுச் சொத்துக்களை அபகரிக்கவும், வெளிநாட்டு சந்தைகளில் தங்கள் பங்கை விரிவுபடுத்தவும் முடிவு செய்தனர். உலகமயம், தாராளமயம் மற்றும் தனியார்மயமாக்கும் இந்தத் திட்டம், 1991 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. அது, வெளிநாட்டு முதலாளிகளோடு ஒத்துழைத்தும் போட்டி போட்டுக் கொண்டும், அனைத்துத் துறைகளிலும் ஏகபோக குடும்பங்களின் ஆதிக்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக விவசாயத்திற்கான அரசு பாதுகாப்பை அகற்றுவதும், உலகின் மிகப்பெரிய ஏகபோக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும், கொள்ளையடிப்பதற்கும் மிகப் பெரிய இந்திய விவசாய சந்தையை திறந்து விடுவதும் இருக்கிறது.

அரசாங்கத்தின் ஆட்சி அதிகார பொறுப்பில் இருக்கும்போது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏகபோக முதலாளிகளின் இந்த நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. அதிகாரத்திற்கு வெளியே இருக்கும்போது அவர்கள், ​​தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து ஆதரவையும் வாக்குகளையும் திரட்டுவதற்காக இந்த திட்டத்தை எதிர்ப்பதாக பாசாங்கு செய்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவர்கள் சொல்வது ஒன்றாகவும், செயலாக்க அதிகாரப் பொறுப்பில் இருக்கும் போது அதற்கு நேர்மாறாகவும் செயல்படுகிறார்கள்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்ற நமது போராட்டம் அதே நேரத்தில் முதலாளி வர்க்கத்தின் தற்போதைய சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமாகும். நாட்டின் தலைவிதியை நாம் தீர்மானிப்பதற்கான உரிமையைக் கைபற்றுவதற்கான ஒரு போராட்டமாகும் இது. உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் அதிகாரம் பெறுவதற்கான போராட்டமாகும் இது. இந்தியாவின் செல்வத்தை உற்பத்தி செய்யும் நாம் இந்த நாட்டினுடைய மன்னர்களாகவும் மாற வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் இந்த நோக்கத்தோடு, வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் நமது உரிமைக்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

தர்ம யுத்தம்

பாஜகவின் தலைவர்கள் இந்திய மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிப்பவர்கள் போல நடிக்கின்றனர். மேற்கத்திய மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டதற்காக காங்கிரஸ் கட்சியை அவர்கள் குறை கூறுகிறார்கள். ஆனால் தாராளமயமாக்கலும், தனியார்மயமாக்கலும் மற்றும் “குறைந்தபட்ச அரசாங்கம்” மற்றும் “அனைத்தையும் சந்தை சக்திகளுக்கு விட்டு விடுவது” போன்ற கருத்துக்கள் இந்திய மதிப்பீடுகளுக்கு அன்னியமானவையும் முரண்பாடானவையும் ஆகும். அவை ஆட்சி தர்ம கோட்பாடுகளின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகின்றன..

சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்ற கோட்பாட்டை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்த துணைக் கண்டத்தின் மக்கள் உயர்த்திப் பிடித்து வந்துள்ளனர். அது அரச நெறியாகக் கருத்தப்பட்டு வந்துள்ளது. மக்களைப் பாதுகாக்காமல் அவர்களை ஒடுக்கி வருகின்ற அரசன், கொடுங்கோன் குற்றவாளியாகக் கருதப்பட்டான். அப்படிப்பட்ட அநியாயமான நிலைமைக்கு ஒரு முடிவு கட்டுவதற்காக நீதிக்கான ஒரு போரை ஒரு தர்ம யுத்தத்தை நடத்த வேண்டியது மக்களுடைய உரிமையும் கடமையும் ஆகும்.

தனது கடமையை நிறைவேற்ற மறுக்கும் ஒரு அரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் உழைக்கும் மக்கள் நாம் இன்று திரண்டிருக்கிறோம். நம்முடைய வளமையையும் பாதுகாப்பையும் விலையாகக் கொடுத்து, ஒரு சில மிகப் பெரிய பணக்கார முதலைகளுக்கு அதிக பட்ச இலாபத்திற்கு உத்திரவாதமளிப்பதில் விடாப்பிடியாக இருக்கின்ற இந்த அரசின் அதர்மத்திற்கு எதிரானதாகும் நமது போராட்டம்.

நமது ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி, நமது விழிப்புணர்வையும் அமைப்பின் தரத்தையும் உயர்த்துவோம்! நமது ஒற்றுமையை உடைக்கவும், நமது போராட்டத்தை இழிவுபடுத்துவதற்கும், நம்மை ஒடுக்குவதற்காக ஆயுதப்படைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தீட்டிவரும் தீய சதிகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்போம்! தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளையும் மற்றும் அனைத்து மனித உரிமைகளையும் சனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதில் நாம் அமைதியாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் இருப்போம். அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது ஒரு புதிய இந்தியா பிறக்கும். அங்கு மக்கள் நாம் மன்னர்களாக இருப்போம். அந்த இந்தியாவில் அனைவரின் வளமைக்கும் பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் இருக்கும்.

தொழிலாளி – விவசாயிகளின் ஒற்றுமை ஓங்குக!

இன்க்குலாப் ஜிந்தாபாத்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *