விவசாயிகளுக்கு எதிராக இந்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தில்லியிலும் மற்றும் நாடெங்கிலும் போராடி வரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்கள் தலைநகரில் கூடுவதையும் கூட இந்திய அரசு வன்முறையைக் கையாண்டு தடுக்க முயற்சிக்கிறது. இந்த நிலையில் போராடுகின்ற விவசாயிகள், டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய பாரத் பந்த் எனப்படும் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த கதவடைப்புப் போராட்டத்திற்கு நாடெங்கிலும் மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவளித்தனர். இந்த போராட்டத்தை ஆதரித்தும், கதவடைப்பு போராட்டத்தை ஆதரித்தும் கம்யூனிஸ்டு மற்றும் முற்போக்கு கட்சிகளும், தொழிற்சங்கங்களும் முற்போக்கு இயக்கங்களும் அழைப்பு விடுத்திருந்தனர். விவசாயிகள் மட்டுமின்றி, தொழிலாளர்களும், பொது மக்களும், மாணவர்களும், பெண்களும், இளைஞர்களும் இந்த கதவடைப்புப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர். மக்களுடைய இந்தப் பேரலையை ஒடுக்குவதற்காக நாடெங்கிலும் காவல்துறை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. எனினும் அரசுக்கு எதிரான மக்களுடைய எழுச்சியை அவர்களால் அடக்க முடியவில்லை.
தமிழகத்திலும் எல்லா நகரங்களிலும், ஊர்களிலும் விவசாயிகளும், தொழிலாளர்களும், மக்களும் திரண்டு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவையும், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசுக்கு எதிரான தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.
























