வெற்றிகரமான தில்லி செல்வோம் (தில்லி சலோ) பரப்புரை – லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்தனர்

விவசாயிகளின் போர்க்குணமிக்க ஒற்றுமையைப் போற்றுவோம்!

இந்த நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வெற்றி நாளை 27-வது நவம்பர் 2020 குறிக்கிறது. கடந்த செப்டம்பரில் இந்திய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய எதிர்ப்பு மசோதாக்களையும், மின்சாரம் (திருத்தம்) மசோதா 2020 யும் ரத்து செய்யுமாறு மத்திய அரசை ஒன்றுபட்டு வலியுறுத்துவதற்காக அவர்கள் “தில்லி செல்லுவோம் – தில்லி  சலோ” என்ற எதிர்ப்பு பேரணியில் இறங்கினர். அவர்களின் விடாப்பிடியான எதிர்ப்பு மற்றும் உறுதியின் காரணமாக, விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவதற்கு தலைநகருக்குள் நுழைய அனுமதிக்குமாறு மத்திய அரசைக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

டெல்லி நோக்கி விவசாயிகள் முன்னேறி வருவதைத் தடுக்க மத்திய அரசு இரும்புத் தடைகளை அமைத்தல், அகழிகளைத் தோண்டுவது, தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் லட்சக்கணக்கான விவசாயிகளின் போர்க்குணத்தோடு அணிவகுத்து நாட்டின் தலைநகரில் திரள்வதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அநீதியான விவசாயச் சட்டம் குறித்து மிகவும் கொதித்துப் போயிருந்த விவசாயிகள், பஞ்சாப்-ஹரியானா எல்லையிலும் பின்னர் ஹரியானா-தில்லி எல்லையிலும் அனைத்து போலீஸ் தடைகளையும், தடியடிகளையும் மீறி நுழைந்தனர். இத்தகைய ஒன்றுபட்ட போர்க்குணமிக்க உறுதியை எதிர்க்க முடியாமல், தில்லிக்குள் விவசாயிகள் நுழைவதை ஒப்புக் கொள்வதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு சூலை மாதம், அமைச்சரவை விவசாயிகளுக்கு எதிரான அவசரச் சட்டங்களை கொண்டு வந்ததிலிருந்து, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தின் பதில் அப்பட்டமான பொய்களாக மட்டுமே இருந்து வருகின்றன. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லதல்ல என்று அவர்கள் நினைக்குமாறு தவறாக வழிநடத்தப்படுவதாக விவசாயிகளிடம் கூறப்பட்டது! மேலும், பெயருக்கான “பேச்சுவார்த்தைக்காக” அரசாங்கம் அவர்களை பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு பலமுறை வரச் செய்து ஏமாற்றியது. குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய தவறான வாக்குறுதிகளையும், பொய்யான பரப்புரையையும், கடந்த ஐந்து மாதங்களாகக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்ட விவசாயிகள் தலைநகருக்குள் அணிவகுக்க வேண்டுமென்ற இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை முடிவு செய்தனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைமையின் கீழ் விவசாயிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (ஏ.ஐ.கே.எஸ்.சி.சி), ராஷ்டிரிய கிசான் மகாசங் மற்றும் பாரதிய கிசான் யூனியனின் பல அங்கத்தினரும் இந்த எதிர்ப்பு பேரணியை முடிவெடுக்க கூடினர். 500-க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளுடைய ஆதரவு பெற்றுள்ள இந்த முன்னணி, நவம்பர் 19 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தில்லியை நோக்கி அணி திரள்வதென முடிவு செய்தது. நவம்பர் 26-27 தேதிகளில் ‘தில்லி செல்வோம் தில்லி  சலோ’ என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

30 க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பஞ்சாப் விவசாயிகள், லால்ரு, ஷம்பு, பாட்டியாலா-பெஹோவா, பத்ரான்-கானாயூரி, மூனக்-தோஹானா, ரதியா-ஃபதேஹாபாத், மற்றும் தல்வாண்டி-சிர்சா என பல வழிகள் வழியாக டெல்லியை நோக்கி வரத் தொடங்கினர். நவம்பர் 26 ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கிரேட்டர் நொய்டாவிலிருந்தும் டெல்லி நோக்கி நகரத் தொடங்கினர். மீரட், முசாபர்நகர், பாக்பத் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ‘தில்லி செலோ’ அணிவகுப்புக்கு ஒன்று திரண்டுவருமாறு பாரதிய கிசான் யூனியன் அழைப்பு விடுத்திருந்தது. உத்தரகாண்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் உ.பி-யில் கூடி ஒரு பிரதான நெடுஞ்சாலையை மறித்தனர். இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வழி நெடுக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

நவம்பர் 26, 27 களில் தில்லியில் நுழைவதற்கு விவசாயிகள் எல்லா வழிகளிலும் முயன்று முன்னேறினர். இந்த கடுங்குளிரில் தண்ணீர் பீரங்கிகளையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், முள்வேலிகளையும், லாரிகள் மற்றும் புல்டோசர்கள் மற்றும் பெருங் கன்டெய்னர்கள் தடைகளையும் மீறி அவர்கள் வந்தனர். போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முயன்ற ஆயிரக் கணக்கான காவல்துறையினரோடு முன்னேறி வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மோதல்களில் ஈடுபட்டனர். ஆளில்லா டிரோன் விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்ததையும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் புகை மண்டலத்தையும் வெகு தூரத்திலிருந்தும் காண முடிந்தது.

நவம்பர் 27 ஆம் தேதி காலையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகள் பிரதமருக்கு பின்வரும் கோரிக்கைகளை ஒரு கடிதத்தின் மூலம் அனுப்பினர்:

  • எந்தவொரு அசம்பாவித சம்பவம் நிகழாமலும், இதுவரை நாங்கள் கடைபிடித்து வந்த மிகவும் அமைதியான முறையை மாற்றிக் கொள்ள எங்களை நிர்பந்திக்காமலும், இருப்பதற்கு விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதற்கு எவ்வித தடைகளற்ற, பாதுகாப்பான வழியை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
  • நாங்கள் கூடுவதற்கும், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ராம்லீலா மைதானம் போன்ற ஒரு இடத்தை எங்களுக்கு ஒதுக்குங்கள்.
  • 3 விவசாய சட்டங்களையும், மின்சாரம் (திருத்த) மசோதா 2020 ஐயும் ரத்து செய்ய வேண்டுமென்ற எங்கள் கோரிக்கைகள் குறித்து உங்கள் அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களுடன் நேர்மையான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு விவசாயிகளின் அகில இந்திய மற்றும் பிராந்திய அமைப்புக்களை அழைக்கவும்.

இரண்டு நாட்களாக, காவல்துறையினரோடு விவசாயிகள் மேற்கொண்ட கடுமையான மோதல்களுக்குப் பிறகு, தில்லிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் இறுதியில் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், அது வட தில்லியின் ஒரு மூலையில் அமைந்துள்ள புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்திற்கு அவர்களை அனுப்பியது. இப்போது கூட, ஆபத்தான பல தடைகளைக் கடந்து நூற்றுக் கணக்கான மையில்கள் நடந்து இலட்சக் கணக்கான விவசாயிகள் வந்து சேர்ந்தும், மேலும் பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் தொடர்ந்து தில்லி நோக்கி வந்த வண்ணமும் உள்ளனர். புராரி மைதானத்தில் விவசாயிகள் ஒழுங்காக நடந்து கொள்வதைப் பொருத்தே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புக்களோடு பேச்சு வார்த்தை நடத்துவோமென கூறி டிசம்பர் 3-ஆம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளது!

விவசாயிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத, அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் திரண்டு வந்து குவிந்துள்ளனர். இந்த மசோதாக்களின் விளைவாக தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் அநீதியை எதிர்க்க வேண்டுமென்பதில் அவர்கள் உறுதியாக ஒன்றுபட்டிருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்கு இதுவே முக்கிய காரணமாகும். அவர்களைப் பிளவுபடுத்த முதலாளி வர்க்கமும், அதன் அரசியல் கட்சிகளும் பல்வேறு வழிகளில் முயன்ற போதிலும், விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ரத்து செய்யவும், அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவும் வேண்டுமென அரசாங்கத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு பொதுவான இந்த உடனடி திட்டத்தையொட்டி விவசாயிகள் ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கியுள்ளனர். நகரத்தின் ஒரு ஒதுக்குப்புறமான மூலையில் அவர்கள் தள்ளப்படுவதை ஏற்க மறுத்துவிட்டனர். அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக ராம் லிலா மைதானத்தில் கூடுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

விவசாயிகளின் செயல் ஒற்றுமைக்கும் போர்க்குணத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி வணக்கம் செலுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *